ஒரு பறவையின் சிலுவை

.......ஒரு பறவையின் சிலுவை.......

இறைவன் மலிவாய்ப் போன
இந்த பிரபஞ்சத்தில்
இரையை தேடி
ஒரு தாய் பறவை
வான் வீதிகளில்
வலம் வருகிறது..

பால் சுரக்கும் மார்பில்லாததால்
பசித்திருக்கும் குஞ்சுகளுக்கு
பரிமாற
உணவை தேடி
ஊரெங்கும்
உலா போகிறது...

மனிதர் கண்ணில் பட்டுவிட்டால்
மரணத்திற்கு பின்
தன் மேனியில்
மசாலா தடவபடலாம்.
தன்னை நம்பியிருக்கும்
அலகு முளைக்காத
அக்குஞ்சுகள் அனாதையாகிவிடலாம்
அச்சத்தில் வருகிறது
அன்னை பறவை.

அப்பாவை அறிமுகபடுத்தும்
அவசியம் இல்லை.
கூட்டில் கிடக்கும் குஞ்சுகளுக்கு
அம்மாவைவிட்டால் உறவுயில்லை.

நேரம் தவறினால்
நேர்மை மனிதர்கள்
நெடுஞ்ச்சாலைக்காக
கூடு கட்டிய மரத்தை
கூறு போட்டுவிடுவார்கள்.

தன் குஞ்சுகள்
பாம்புகளுக்கு பலியாகிவிடலாம்.
கழுகுகள் களவாடிவிடலாம்.
பயத்தில் பறவை பட படக்கிறது.

தற்பொழுது
தன் சாயலுடைய
எந்த பறவையும்
தரிசிக்க முடியவில்லை
தன் இனம் அழிவதை
தாய் பறவை உணர்கிறது.
வம்சம் காக்கவாது
பிள்ளைகளை
வளர்க்க வேணும்
இடைவிடாமல்
இரை தேடுகிறது.

மாமிசம் இல்லாவிடில்
மனிதர்கள் உண்ண சைவமிருக்கு.
மாண்டு போகும் எம் இனம்
காக்க ஒரு தெய்வமிருக்கா?

பதில்லில்லா கேள்வியொன்றை
பறவை கேட்கிறது.
பறந்து பறந்து
சிறகு வலிக்கிறது.

கிழிந்த ரெக்கைகளோடு
கிழட்டு பறவை
கிழக்கை நோக்கி பறக்கிறது.

மழை பெய்தால்
கூட்டுக்கு மேல் கூரையில்லை
மர இலைகள் இருப்பதால்
இதைப்பற்றி கவலையில்லை.

தண்ணீர் பந்தல்லில்லாத
மேக வீதிகளில்
வேகம் பிடிக்கிறது.
தாகம் எடுக்கிறது.

மனசுமையை மற்றவரிடம்
பகிர்ந்திட ஒரு மொழியில்லை
வாழ்ந்தே ஆகா வேண்டும்
வேறு வழியில்லை.

பல தடைகளை கடந்து வந்த
பறவைக்கு தெரிகிறது......
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

இனமழியும் பறவை
இறுதியாக இருப்பிடம்
வந்தடைகிறது.
நிகழ்ந்ததை கண்டு
நெஞ்சமுடைகிறது.

அடித்த புயலில்
ஆலமரம் அடியோடு
மண்ணில் மல்லாந்து கிடக்கிறது.
தன் நான்கு குஞ்சுகளில்
இரண்டு
இறந்து கிடக்கிறது.

சிரமங்கள் சிறகாகிறது
சிறகுகள் சிலுவையாகிறது.

மறித்து போன இரு குஞ்சுகள்
இனி
உதயமாகும் செடிக்கு
உரமாகட்டும்.
வரும்காலத்தில்
வாடும் பறவைகள்
வாழ
அது மரமாகட்டும்.

பல தடைகள் கடந்த
பறவைக்கு தெரிகிறது........
வலிகள் நம்மிடம் வாலாட்டும்
வாழ்க்கை ஒரு போராட்டம்.

மனிதரைப்போல்
துயரம் தாங்காமல் தூக்கு போடவும்
தடைகளை கண்டு தற்கொலை செய்யவும்
தெரியாத
தன்னம்பிக்கை பறவை
தன் குஞ்சுகளை சுமந்து
வேறு மரம் செல்கிறது...
வேதனையும் வாழ்க்கையும்
நீள்கிறது........................


......தன்னம்பிக்கையோடு..............
-------தமிழ்தாசன்--------

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?