தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்


இந்த இதமான மண்ணை,ஆகாயத்தினை எப்படி வாங்கோ விற்கவோ முடியும்? இது உண்மையில் எங்களிற்கு வியப்பாக உள்ளது.
இந்த இதமான காற்றும், மின்னித்தெறிக்கின்ற நீரும் எங்களிற்கு மட்டும் சொந்தமில்லை. எங்களிற்கு மட்டும் சொந்தமில்லாத ஒன்றை எவ்வாறு நாங்கள் விற்கமுடியும். எமது நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எமது மக்களால் புனிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மண் புனிதமானது. எமது முன்னோர்களின் ஒப்புயர்வற்ற தியாகத்தாலும், உழைப்பாலும் எமக்கு வழங்கப்பட்டது. இங்குள்ள ஆறுகளில் ஓடுகின்ற நீர் வெறும் நீரல்ல எமது முன்னோர்களின் குருதி. நாங்கள் இந்த நிலங்களை உங்களிற்கு (அமெரிக்க வெள்ளையர்களுக்கு) விற்றால் இந்த மண்ணின் புனித தன்மையினை நீங்கள் உங்கள் குழந்தைகளிற்கு கற்பிக்க வேண்டும். இங்கு ஓடுகின்ற ஆறுகளிலுள்ள நீர் எமது முன்னோர்களின் ஞாபகங்களை சுமந்த வண்ணமே செல்கின்றன. இந்த ஓடும் நீரின் ஓசை எமது பாட்டனாரின் குரல்.
இந்த ஆறுகள் எமது சகோதரர்கள், இவைகள் எமது தாகத்தினை தீர்கின்றன. இந்த ஆறுகளிலே எமது வள்ளங்கள் சுமக்கப்படுகின்றன. எமது குழந்தைகளிற்கு நீரினை வழங்குவதும் இவைகளே. இப்படிப்பட நிலத்தினை நாங்கள் உங்களிற்கு தந்தால் இவைகள் எங்களதும் உங்களதும் சகோதரர்கள் என்று உமது குழந்தைகளிற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
---- செவ்விந்திய பழங்குடி மக்களின் தலைவன் 'சியாட்டில்'

ஆறும் பேரும்:
ஆறும், அதன் நீரும் மக்களிடம் கொண்டுள்ள உறவை, தொடர்பை, பண்பாட்டை, வரலாற்றை பற்றிய உரையாடலை நிகழ்த்தவே இந்நூல் எத்தனிக்கிறது. முதலில் ஆறு என்றால் என்னவென்பதை அறிவோம். ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. உற்பத்தியாகி சிறு தொலைவிலேயே ஆவியாகி அல்லது வறண்டு போகும் ஆறு சிற்றாறு. மழை காலத்தில் திடீரென ஒருசில நாட்கள் மட்டும் ஓடும் ஆறு காட்டாறு ஆகும். ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர்நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும் சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது. மலைக்காடுகளில் இருந்தோஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, மலை பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். மலைக்காடுகளில் அல்லது பனிமலை உருகி என தனக்கென ஒரு உற்பத்தியிடம் அல்லது பிறப்பிடம் கொண்ட ஒரு ஆறு கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு தானாக தோன்றும் ஒரு ஆறு மற்றொரு ஆற்றுடன் கலந்தால் அதை துணையாறு (Tributary) என்பர். நிலமைப்புக்கு ஏற்றவாறு ஒரு ஆற்றிலிருந்து தனியாக அல்லது கிளையாக பிரிந்து பயணிக்கும் ஆற்றை கிளையாறு (Distributary) என்பர். ஆண்டுமுழுதும் நீரோடும் ஆற்றை வற்றாத ஆறு (perennial river) என்றும், சில காலங்கள் மட்டும் நீர் ஓடும் ஆற்றை பருவக் கால ஆறு (Non-perennial river) என்றும் கூறுவார்.
கால்வாய் மற்றும் வாய்க்கால் மனிதனால் கட்டப்பட்டது அல்லது வெட்டப்பது. ஒரு ஆற்றின் அல்லது நீர்நிலையின் வாயில் இருந்து இன்னொரு ஆற்றுக்கோ நீர்நிலைக்கோ நீர் கொண்டு செல்லும் காலை கால்வாய் என்பர். ஆற்றின் காலிலிருந்து இன்னொரு நீர்நிலையின் வாய்க்கு செல்வதை கால்வாய் என்று பொருள்பட கூறியிருக்கலாம். ஒரு நீர்நிலையிருந்து அல்லது ஆற்றிலிருந்து வயல்வெளிக்கு பாசன நீரை கொண்டு செல்லும் காலை வாய்க்கால் என்பர்.
ஆறு என்ற சொல்லே தமிழ் வழக்கு. ஆறு என்றால் வழி என்று பொருள். ஆற்றுப்படுத்துதல் என்றால் வழிப்படுத்துதல் ஆகும். வரல் + ஆறு வரலாறு என்பதை கவனிக்க வேண்டும். நதி தமிழ்ச் சொல்லல்ல அது சமஸ்கிரதச் சொல். ஆறுகளுக்கு பெயரிட்ட பன்டைய மக்கள் ஆற்று நீரின் தன்மை, அது உற்பத்தியாகுமிடம், அது கலக்குமிடம், அது செல்லும் ஊர் பெயர்கள் ஆகியவற்றை கொண்டு பெயரிட்டுள்ளனர். குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் பொன்னியாறு என்று பெயரிட்டனர். பின்னாளில் அது காவேரி ஆறு என்று மாற்றப்பட்டது. பால் போன்ற வெண்ணிறமுடைய நீரோடுவதால் பாலாறு என்று பெயரிட்டுள்ளனர்.  நொய்யல் என்கிற ஊர் அருகே பொன்னியாற்றில் கலக்கும் ஆற்றை நொய்யல் என்று பெயரிட்டுள்ளனர். காரியாறு பொருநையாற்றோடு கலக்குமிடத்தில் இருந்த ஊர் காரியாறு. அடையாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு. இந்த ஊரில் பாய்வதால் ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றதா என்பது  ஆய்வுக்குரியதே. ஒரே ஆற்றுக்கு மக்கள் பயன்படுத்தும் பல்வேறு பெயர்களும் உண்டு. ஆற்றுநீரின் சுவையைக் கொண்டு உப்பாறு என்று பல ஆறுகளுக்கு பெயர் சூட்டியுள்ளனர். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் உப்பாறு வெவ்வேறு பெயர்களால் அது செல்லும் ஊர்களின் பெயராலோ அல்லது வேறு பெயர்களாலோ அழைக்கப்படுகிறது. அதனை சிலம்பாத்தோடை, பதினெட்டங்குடி ஓடை, உப்பாறு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதே போல மதுரை திருமங்கலம் பகுதியில் பாயும் குண்டாறுக்கு அசுவமா நதி, குதிரையாறு, கோம்பையாறு, தெற்காறு , மட்டாறு என்று செல்லுமிடம் பொறுத்து மக்களால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உப்பாறு, மணிமுத்தாறு, பாலாறு, குண்டாறு, மலையாறு, மஞ்சளாறு, வெள்ளாறு, சிற்றாறு என்ற பெயர்களை கொண்ட ஆறுகளை தமிழகத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.

நிலத்திற்கு முன்பே தோன்றியது கடல் நீர் என்பதை குறிக்க ‘முந்நீர்’ என்றும், ஆற்று நீரை ‘நன்னீர்’ என்றும், குடிநீரை ‘இன்னீர்’ என்றும் தமிழிலக்கியங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சங்க கால அரசர்கள் ஏரி, குளங்கள், கண்மாய், நீர்நிலைகள் மாசுபடாமல் இருப்பதற்காக, ‘முந்நீர் விழவு’ என்ற விழாவை எடுத்து நீர்நிலைகளை பாதுகாத்துள்ளனர்.

"ஆறுகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு ஆற்றின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால ஆறுகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம ஆறான பஃறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது. பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் ஆற்றின் கிளையாறாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli) என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்பரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினைவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது" (கடலியல் ஆய்வாளர் ஒரிசா பாலு)

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் தமிழ் பெயர்கள் சமஸ்கிரத மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அல்லது சமஸ்கிரத்தில் பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஆறுகளை புனிதமாக்கி, தீர்த்தம், தீட்டு கற்பித்தது அதை திராவிடர்களிடம் இருந்து பறித்து, நீராதாரத்தின் மீதான பார்ப்பனிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் செயல் பல ஆண்டுகளாக அரங்கேறியுள்ளது.

காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் - புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றை பொன்னியாறு என்றும் கூறுவர். காவிரி என்ற சொல்லின் பொருள் 'தோட்டங்களின் வழியாகப் பாய்ந்து வருவது' என்பதாகும். இதன் வடமொழி வடிவம் காவேரி ஆகும். தற்போது தாமிரவருணி என்று அழைக்கப்பெறும் ஆற்றின் தமிழ் பெயர் பொருநை என்பதாகும். இந்த ஆற்றை  வடமொழி மகாபாரதமும், வால்மீகி ராமாயணமும் தாமிரபரணி என்றே குறிக்கிறது. காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் பண்டைய பெயர் ஆண்பொருனை என்பதாகும். கொடைக்கானல் மலைப்பகுதியை பழனி மலைத்தொடர் என்று அழைப்பர். அம்மலையில் உற்பத்தியாகும் ஆறு பழனியாறு. காலப்போக்கில் அதை பன்னியாறு என்று மருவி, சமஸ்கிரப்படுத்தும் போது அதை வராகநதி என்று மாற்றிவிட்டனர். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் சிலம்பாறு நூபுர கங்கை என்று சமஸ்கிரத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசுவமா நதி, கமண்டல நதி, அர்ஜுனா நதி, வசிட்ட நதி, சண்முகா நதி என்று சமஸ்கிரதமயப்படுத்தப்பட்ட ஆறுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஆறுகளின் பழைய தமிழ் வழக்கு பெயர்களை மக்களே மறந்துவிட்டனர். ஆறுகளை மீட்டெடுப்பது என்பது இழந்த அதன் இயற்கை சூழலை மட்டுமல்ல. அதன் வரலாற்றையும்தான்.

குமரிக் கண்டத்து ஆறுகள்:
சங்க இலக்கியம் பஃறுளி மற்றும் குமரி என்னும் இரண்டு ஆறுகளின் பெயரை சுட்டுகிறது. அழிந்து போன குமாரி கண்டத்தில் அந்த இரு ஆறுகளும் மேரு மலை அல்லது பாவாணர் சுட்டும் குமரி மலைத்தொடரில் உற்பத்தியாகின என்று ஊகிக்கப்படுகிறது. இந்த கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள முதலில் அழிந்து போன குமரிக் கண்டம் உண்மையானது என்று நிறுவுவதற்கு தேவையான ஆதாரங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். குமரிக்கண்டம் அல்லது லெமூரியா கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள தமிழத்தின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்குக் கீழ் அமைந்திருந்ததெனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் கிடைக்கின்றன. குமரிக் கண்டம் அறிவியல்பூர்வமாக நிறுவப்படவில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மை அறிவியல்பூர்வமாக குமரிக் கண்டத்தை மறுக்கவுமில்லை. குமரிக்கண்டம் என்ற கண்டம் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் பற்றி பார்ப்போம்.

1960 ஆம் ஆண்டு இந்து மாக்கடலில் கடற்தள ஆராய்ச்சியாளர் செய்த ஆராய்ச்சியில் தமிழகத்தின் கன்னியாகுமரிக்குத் தெற்கே இரண்டு கண்டங்கள் இருந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாகச் சொல்கிறார்கள். முதலாகக் கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் [Ultra-Sonic Probing] தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். 1960-1970 ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட இந்து மாக்கடல் கடற்தள வரைபடங்களில், குமரிக் கண்டத்தின் பூர்வீக அமைப்பு நிலை காணப்படுகிறது. அகிலத்திரட்டு அம்மானை என்னும் அய்யாவழி மதத்தினரின் புத்தகத்தில் குமரி 152 மைல்கள் தெற்காக விரிந்திருந்தது என்றும் அதில் 16008 வீதிகள் இருந்ததென்றும் கூறப்பட்டிருக்கிறது. தற்போதுள்ள இயற்பியல் பூகோள வரைபடங்களில் கி.மு.30000 குமரிக்கண்டமிருந்த இடத்தில் பெருமளவு கடலின் ஆழம் 200அடி வரை இருக்கிறது. சில இடங்களில் 2000அடி வரை இருக்கிறது. இப்பகுதிகள் தற்போது குறைவான ஆழம் கொண்டுள்ளதால் இங்கு குமரிக்கண்டம் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். கடைச்சங்கத்தில் குமரியாறு மற்றும் பஃறுளியாறு உற்பத்தியான மேருமலை இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் சீன பழங்கதைகளில் (CHRONICLES) கூட தென்படுகின்றன. பாண்டிய மன்னனொருவன் தங்க சுரங்கங்களை தோண்ட சீன அடிமைகளை பயன்படுத்தினான். அவர்களை பொன் தோண்டி எறும்புகள் என இலக்கியம் கூறுகிறது. மேருவைச் சேர்ந்த காகமும் பொன்னாம் என்ற பழமொழியுமுண்டு. குமரிக்கண்டத்தில் வசித்ததாக கருதப்படும் மயன் பற்றியும் வைசம்பாயனம் மற்றும் ஐந்திறம் போன்ற நூல்களிலும் காணப்படுகின்றன. அதனால் குமரிநாடும் அதன் எல்லைகளும் சங்கம்-முச்சங்கம் பற்றிய செய்திகளும் உறுதிப் படுத்தப்படுகின்றன.  மெகஸ்தெனஸ் என்ற கிரேக்க அறிஞர் இலங்கையை தாப்பிரபனே என்பதுடன் அஃது இந்தியாவிலிருந்தொர் ஆற்றினால் பிரிக்கப்பட்டுள்ளதென்கிறார். இதிலிருந்து தாமிரபரணி என்ற பொருநை கடலுள் மூழ்கிய நிலத்தின் வழியாக இலங்கையூடு சென்றிருக்கும் என்றேபடும்.

கடலுக்கடியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்திய சோவியத் விஞ்ஞானி அலெக்சாந்தர் கோன்ட்ரதேவ் எழுதிய மாக்கடல் மர்மங்கள் என்ற நூலில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
"உலகின் ஆரம்பகால நாகரிகங்களைப் பற்றி ஆராயும்போது நம்மால் விடை காண முடியாத ஏராளமான புதிர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இந்த புதிர்களை விடுவிக்க வேண்டுமெனில் லெமூரியக் கண்டத்தையும் அதில் வாழ்ந்த மக்கள் மிக உன்னத நாகரிக நிலையில் இருந்தனர் என்பதையும் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.
570 - 510 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கோண்டுவானா கண்டம் என்பது இன்றைய ஆப்பிரிக்கா, கடகத் திருப்பத்திற்கு தெற்கில் உள்ள இந்தியத் துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அண்டார்க்டிக்கா, மடகஸ்கார், அரேபியா ஆகிய பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருந்தது. கோண்டுவானா நிலத்தின் பல பகுதிகளில் உள்ள விலங்கினங்களின் கூடுகளையும் தாவர வகைகளையும் ஒப்புநோக்கிப் பார்க்கும் பொழுது பல ஒற்றுமைகளைக் காணமுடிகிறது. கூடுகள் மட்டுமல்ல; வெப்பத்தை நாடும் மண்புழு இனங்கள் ஒரே மாதிரியாக தென் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் காணப்படுகின்றன. இந்திய பெருங்கடலின் வழியாக இம்மண்புழுக்கள் ஊர்ந்து சென்றிக்க முடியாது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒரு காலத்தில் ஒரு நிலப் பாலத்தால் அல்லது பெரிய நிலப்பரப்பினால் இணைக்கப்பட்டிருக்கலாம். உயிரிகளும் தாவரங்களும் பரவுவதற்கு லெமூரியா அல்லது குமரிக் கண்டம் ஒரு பாலமாக இருந்திருக்கலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வேறொரு தவாரவியல் வல்லுனரான எர்னஸ்ட் ஹெக்கல் மனிதனின் தோற்றத்தை பற்றி அதுவரை வெளியான எல்லாப் புள்ளிவிபரங்களை நண்டு பயின்று, ஆதிக் குரங்கு நிலைக்கும் ஹோமோசேபியன் நிலைக்கும் இடையே உள்ள சங்கிலித் தொடர் போன்ற உறவு அறுபட்டுப் போயிருப்பதனை நோக்கி, அந்த விடுபட்ட நிலையிலிருந்த உயிரினம் லெமூரியாவில் தோன்றி வடகிழக்கில் இந்தியாவுக்கும் தென் கிழக்கு ஆசியாவுக்கும், மேற்கு ஆப்பிரிக்காவுக்கு பரவியிற்று என்ற முடிவுக்கு வந்தார். உடனடியாக ஹெக்கல் கொள்கை உண்மை என்று உறுதிப்படுத்தும் வண்ணம் டச்சு உடற்கூறு வல்லுனரான யுஜென்துபாய் என்பவர் பித்தகேந்தர்ப்பஸ் மனிதனுடைய எலும்புகளை ஜாவா தீவில் கண்டெடுத்தார். பிறகு, ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் குரங்கு மனிதனின் எலும்புகளை கண்டெடுத்தார். உலக பண்டைய நாகரிகங்களில் குறைந்தது மூன்றில் இரண்டு திராவிட மொழிகளை பேசிய இனங்களோடு தொடர்புடையன என்பது குறிபிடித்தக்கது. "
கடலியல் ஆய்வாளர்கள் கி.மு. 10,000 முதல் கி.மு.2000 வரை பனி உருகியதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டே வந்தது என்று கூறுகிறார்கள். இவ்வாறு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலோர நிலப்பகுதிகள் கடலுக்குள் மூழ்கின. கி.மு. 2000 -ல் கடல் மட்டம் மிக அதிக அளவு உயரந்தது (Jospeh Weisberg & Howard parish - Indroductory Oceanography). இந்த அறிவியல் ஆய்வுகள் குமரிக் கண்டத்தின் பகுதிகள் கடலுக்குள் ஆழ்ந்ததாக சான்று கூறுகின்றன

மேலுள்ள சான்றுகளின் வழியே திராவிட மொழி பேசும் அல்லது தமிழ் மொழி பேசும் தொல்குடி மானுட சமூகம் வாழ்ந்த பெரும் நிலப்பரப்பு கடல்கோள்களால் மூழ்கி இருக்க முடியும் என்பதை கருத முடிகிறது. அதனடிப்படையில் சங்க இலக்கியம்  காட்டும் வரிகளை சான்றுகளாக எடுத்துக் கொள்ள முடிகிறது.

"பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கொடும் கொடுங்கடல் கொள்ள"  (சிலப். 11:17-22)

"செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே" (புறம் 9)

தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்"
"குமரியம் பெருங்துறை யயிரை மாந்தி" (புறம் 6:67)

"வட வேங்கடந் தென்குமரி யாயிடைத் 
தமிழ்கூறு நல்லுலகம்” 

னத் தொல்காப்பியத்திற் பாயிரம் சுட்டுகிறது. 

இன்றுள்ள காவிரியும், பாலாறும், பொருநை, வையை ஆகிய ஆறுகள், அதனையொட்டி நடைபெற்ற அகழாய்வுகள், அதன் வழி பெறப்பட்ட தொல்லெச்ச சான்றுகள், தமிழ் சமூக வரலாற்றை இராயிரமாண்டுகளுக்கு பின் இட்டு சென்று இருக்கிறதென்றால்சங்க இலக்கியம் சுட்டும் அழிந்து போன பஃறுளி ஆறும், குமரி ஆறும் எத்தகைய நாகரிக சமூகத்தை வளர்த்தெடுத்திருக்க கூடும் என்பதை கற்பனை செய்து பார்க்கையில் வியப்பே மேலிடுகிறது. சங்க இலக்கியம் பதிவு செய்யாத அழிந்து போன மலைக்காடுகள், ஆறுகள் என்னென்ன இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. குமாரியாறு கன்னியெனவும் சிலப்பதிகார கானல் வரிப்பாடலில் குறிப்பதாக பாவாணர் கூறுகிறார். கப்பலில் சென்று ஒலிச்சமிக்ஜை அனுப்பி உளவு செய்ததில் தென்பகுதிக் கடலடியில் நீண்ட மலைத்தொடர் ஒன்று இருப்பதைக் கண்டார்கள். இச்சான்றுகளை கொண்டு பஃறுளியாரும், குமரியாரும் உற்பத்தியாக கூடிய மலைத்தொடர்களும் கடலில் மூழ்கின என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. வேட்டையாடிக் கொண்டிருந்த நம்மை நாகரிக சமூகமாக வளர்த்தெடுத்த ஆறுகளை மீட்பதென்பது நம் எதிர்கால தலைமுறையை மீட்கும் முயற்சியாகும். 

சங்க இலக்கியத்தில் ஆறுகள்: 
சங்க இலக்கியத்தில் ஏறக்குறைய 20 ஆறுகளின் பெயர்கள் குறிக்கப்பட்டுள்ளது. அயிரியாறு, அரிசில் ஆறு, பொருநை ஆறு, கங்கை, காப்பியாரு, காரியாறு, காவிரி ஆறு, குமரி ஆறு, சிலம்பாறு, சுள்ளியம் ஆறு, சேயாறு, சோணை ஆறு, பஃறுளி ஆறு, பெண்ணை ஆறு, பேர்யாறு, பொறையாறு, வாட்டாறு, வானி ஆறு, வையை ஆறு உள்ளிட்ட ஆறுகளின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காண முடிகிறது. 

அயிரியாறு: 
அயிரியாறு தற்போது ஹாரங்கி ஆறு என்று அழைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் புஸ்பகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகி, கர்நாடக குசால்நகர் அருகே காவிரியில் கலக்கிறது. 

வடுகர் பெரு மகன்,
பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை
அயிரி யாறு இறந்தனர்ஆயினும் (அகநானூறு 253)

பைங் கொடிப் பாகற் செங் கனி நசைஇ,
கான மஞ்ஞைக் கமஞ்சூல் மாப் பெடை
அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும்
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் (அகநானூறு 177)


அரிசில் ஆறு:

அரிசில் ஆறு காவிரி ஆற்றின் கிளையாறு ஆகும். தற்போது இது அரசலாறு என்று அழைக்கப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் சத்தியமங்கலம் அருகே காவிரி ஆறில் இருந்து பிரிந்து கும்பகோணம் வழியே பாய்ந்து காரைக்கால் அருகே வங்கக்கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் பெயரை கொண்ட அரிசில் கிழார் என்ற சங்க கால புலவரை பற்றியும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. அரிசிலாற்றங்கரையில் அமைந்துள்ள சங்க கால நகரான அம்பர் புகழ் பெற்ற ஊராகும்.  அரிசில் ஆறு பற்றி நற்றிணை (141) மற்றும் ஞானசம்பந்தரின் மூன்றாம் திருமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




தமிழர் பண்பாட்டில் ஆறும் நீரும்:
உலகில் எல்லா ஆறுகளும் பண்பட்ட சமூதாயங்களையும் நாகரிகங்களையும் உருவாக்கிடவில்லை. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் உணவு உற்பத்தியில் மனிதன் ஈடுபடுவதற்குச் சில சாதகமான இயற்கைச் சூழல் தேவைஅதனால் தான் நீர்வளம் மிகுந்த அமேசான், மிசிசிபி, கங்கை போன்ற ஆற்றங்கரையில்  பகுதியில் கி.மு. 1000 ஆண்டில்தான் வேளாண்மை தொடங்கியது. அப்போது சிந்து சமவெளி நாகரிகத்தின் அடிசுவடுகள்கூட அழிந்துவிட்டன. இவ்வாறு 6000 ஆண்டுகளுக்கு முன்னாள் தன் நாடோடி வாழ்கையை விட்டுவிட்டு மனிதன் ஓரிடத்தில் நிலைபெற்று வாழத் தொடங்கிய போது அவனுக்கும் ஆற்றுக்கும் இடையே இருவிதமான போராட்டங்கள் இருந்தன. முதலாவதாக வெள்ளத்திலிருந்தும்  அதன் அழிவிலிருந்தும் தன்னைக் காக்க வேண்டிய போராட்டம். இரண்டாவதாக, குடிப்பதற்கும், வேளாண்மைக்கும் பயனுள்ள வகையில் இந்த தண்ணீரைக் கொண்டு சேர்ப்பதன் மூலமே வாழ முடியும். இந்த போராட்டங்களில் இருந்து பாசனம் பற்றிய பட்டறிவுகளை வளர்த்து கொண்டான்.

மழை தொடர்பான வானியல் அறிவு, நீரியல், கோட்பாடுகள், ஏரிகள் அமைப்பதில் தேர்ந்த தொழில்நுட்பம், மணற்பாங்கான ஆறுகளில் அணை கட்டும் வடிவமைப்பும், நீரியல் வடிவமைப்புகளும் தமிழர் தம் பொறியியல் வல்லமையைக் காட்டுகின்றன.

தண்ணீர் உலகில் முதலில் தோன்றியது. கடலின் அடித்தளத்திலிருந்து தண்ணீர் உற்பத்தியாகிறது. நிலத்தில் உள்ள மண் தண்ணீரை உறிஞ்சுகிறது. அது மண்ணின் ஊடுருவி, மலை உச்சிகளில் ஆறுகளாக வெளிப்படுகிறது என்கிறார் தத்துவஞானி தேல்ஸ். குளிரும் கால நிலையில் காற்று உறைந்து மழையாவதாக அரிஸ்டாட்டில் விளக்குகிறார். எனவே மேலை நாடுகளில் கி.மு. 600 முதல் கி.பி.1500 ஆண்டு வரையிலும்கூட நீரியல் கோட்பாடுகளுக்கு ஆதாரமாக இருந்தவை தத்துவஞானிகள் தேல்ஸ் மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரின் விளக்கங்கள்தான்ஆனால் சூரிய வெப்பத்தில் கடல்நீர் ஆவியாகி, மேகமாகத் திரண்டு உள்நாட்டில் மழையாக பொழிகிறது. இப்படிப் பெய்யும் மழைநீர், ஆறுகளில் ஓடி மற்றும் ஒரு பகுதி நிலத்திற்குள் ஊடுருவி என்று பல வழிகளில் மீண்டும் கடலைச் சேருகிறதுஇதுவே 'நீரியல் சுழற்சி' என்று அழைக்கப்படும். இதனை

"வான் முகந்த நீர் மழைப் பொழியவும் 
மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்" என்ற வரிகளின் வழியாக  இந்த அறிவியலை பட்டினப்பாலையில் உருத்திரங்கண்ணார் கூறுகிறார்

நீரியல் சுழற்சியில் பொதிந்துள்ள மற்றோர் அறிவியல் உண்மை, உலகில் உள்ள நீரின் அளவு நிலையானது என்பதே. உலகில் தண்ணீர் தோன்றிய போது எவ்வளவு நீர் இருந்ததோ அதே அளவு நீர்தான் இப்போதும் இருக்கிறது. இந்த உண்மையை இவ்வுலகின் சிறப்பாக வள்ளுவர் "மாறாநீர்' என்று கூறுகிறார்.

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி - குரல் 701

உலகின் பிற பகுதிகளில் நீரியல் சுழற்சி பற்றிய தெளிவற்ற சிந்தனைப் போக்குகள் இருந்த போது, சங்க காலத்திலேயே தமிழர்களிடயே நீரியல், மழை, பற்றிய தெளிவான அறிவியல் கருத்துகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது
ஆறுகளில் இருந்து தொடர் சங்கிலி பாசன ஏரிகள் மூலம் தண்ணீர் பெறபட்டு வேளாண்மை நடைபெற்றது. கடைமடை கண்மாய்களின் உரிமை பல்வேறு பண்பாட்டு நடைமுறைகள் மூலம் பாதுகாக்கப்பட்டது. பெரும்பாலும் கடைசிக் குளம் கோவில் குளமாக இருக்கும். கடைசி கோவில் குளம் நிரம்பி அந்த தண்ணீரை கொண்டு தெய்வத்திற்கு அபிசேகம் செய்யப்பட்ட பிறகே தலைமடை முதல் கடைமடை வரை வேளாண் பணிகளைத் தொடங்குவதென்று நடைமுறையில் இருந்ததுபழையாற்றின் கடைசி குளம் கன்னியாகுமரி குளம். பொருநை ஆற்றின் கடைசி குளம் திருச்செந்தூர் குளம். ஒவ்வொரு நீர்நிலையின் கரையிலும் காவல்தெய்வங்கள் வீற்று இருக்கும். அதனால் கரைகளில் நீர்நிலைகளில் காலில் செருப்பு அணிந்து மக்கள் செல்வதில்லை. மதுரையில் சிறுதூர் ஊரிலுள்ள கண்மாய் மீது வெளியாட்கள் யார் காலில் செருப்போடு நடந்தாலும், மக்கள் உடனடியாக அவர்களை தடுத்து, கண்மாயை கடக்கும் வரை கையில் செருப்பை எடுத்துக் கொண்டு நடக்கும்படி வற்புறுத்துவார்கள்.

தமிழர்கள் நீரின் மீது கொண்டிருந்த பண்பாட்டு தொடர்பை பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அழகாக விளக்குகிறார்
தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுவது வியப்புக்குரியதல்ல. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள் நீருக்கு உண்டு. எனவே 'தமிழ்' என்னும் மொழி பெயர்ப்புக்கு  விளக்கம் தரவந்தவர்கள் இனிமையும், நீர்மையும் தமிழ் என்னால் ஆகும் எனக் குறிப்பிட்டனர். குளிர்ச்சியினையுடையது என்பதனால் நீரைத் 'தண்ணீர்' என்றே தமிழர்கள் வழங்கி வருகின்றனர். நீரினால் உடலைத் தூய்மை செய்வதனை குளிர்த்தல் (உடலை குளிர்ச்சி செய்தல்) என்றும் குறித்தனர். இது வெப்ப மண்டலத்து மக்களின் நீர் பற்றிய வெளிப்பாடாகும்.
நீர் என்பது வானத்திலிருந்து வருவது என்பதனால் அதனை 'அமிழ்தம்' என்றே வள்ளுவர் குறிப்பிடுபவர். நீர்நிலைகளுக்குத் தமிழர்கள் வழங்கி வண்ணத்தை பெயர்கள் பல. சுனை, கயம், பொய்கை,ஊற்று என்பன தானே நீர் கசிந்த நிலப்பகுதிகளாகும். குட்டை மழை நீரின் சிறிய தேக்கமாகும்.  குளி(ர்)ப்பதற்காக பயன்படும் நீர்நிலை குளம் என்பதாகவும், உண்பதற்காக பயன்படும் நீர்நிலை ஊருணி எனவும், எர்த் தொழிலுக்கு பயன்படும் நீர்நிலை ஏரி என்றும், வேறு வகையாலன்றி மழை நீரை மாட்டும் ஏந்தி நிற்கும் நிலையினை ஏந்தல் என்றும், கண்ணாறுகளை உடையது கண்மாய் என்றும் தமிழர்கள் அழைத்தனர்.
மலைக்காடுகளில் உள்ள சுனைகளில் சூர்மகள், அரமகள் என்னும் அணங்குகள் (மோகினிகள்) வாழ்கின்றனர் என்பது பழைய நம்பிக்கை. அது போலவே தெய்வங்களின் இடப பெயர்ச்சிக்கு நீர் ஓர் ஊடகமாக அமைகின்றது என்பதும் ஒரு நம்பிக்கையாகும். விழாக்காலங்களில் சாமியாடுபவர்களின் தலையில் ஏற்படும் நீர் கிரகத்துக்கு சாமியின் அருளாற்றல் கலந்திருப்பதாக மக்கள் நம்புகின்றனர். நிலத்துக்கும் நீருக்கும் உள்ள உறவு பிரிக்க முடியாதது நீரின் சுவை அது பிறக்கும் நிலத்தால் அமையும். நிலத்தால் திரிந்து போன நீரின் சுவையை மேம்படுத்தத் தமிழர்கள் நெல்லியினை ஒரு மருந்தாக பயன்படுத்தினர். கிணற்று நீர் உவராக இருந்தால் அதனுள் நெல்லி மரத்தின் வேர்களை போட்டு வைப்பதும், கலங்கிய நீரினுள் தேத்தா மர காய்களை போட்டு தெளிய வைத்து குடிப்பதும், ஊரணி கரைகளிலே நெல்லி மரங்களை நட்டு வைத்து அதற்கு நெல்லிக்காய் ஊருணி என்று பெயரிடத்துவதும் தமிழ் மக்களின் வழக்கம். நெல்லிக்காய் தின்று தண்ணீர் குடித்தால் இனிப்புச்சுவையாக தெரியும். இச்செய்தி சங்க இலக்கியத்தில் ஓர் உவமையாகவும் எடுத்தாளப்பட்டுள்ளது.
இயற்கையின் பேராற்றலில் ஆரியர் நெருப்பினை முதன்மைப்படுத்தியது போலவே திராவிடன் நீரினை முதண்மைப்படுத்தினர். தெய்வ வழிபாட்டுச் சடங்குகளிலும் நீர் சிறப்பிடம் பெறுகின்றது. செம்பு நீரில் அல்லது குவளை நீரின் மேல் பூக்களையோ, பூவிதழ்களையோ இட்டு வழிபடுவது எல்லாச் சாதியரிடமும் காணப்படும் வழக்கம். நாட்டார் தெய்வங்களின் வாகனம் பெரும்பாலும் நீர்தான். சாமியாடிகள் தலையிலே கரகம் வைத்து ஆடுகிறபோது அந்த காரகத்துக்குள்ள இருக்கிற தண்ணீரிலே அந்த தெய்வத்தினுடையே ஆன்மா (Spiritual Essence) அடங்கி இருப்பதாக நம்பிக்கை. தண்ணீரெல்லாம் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிற ஆறுகளின் வழியாக நமக்கு கிடைக்கின்றன. எனவே, தெய்வங்கள் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்தன என்ற நம்பிக்கையும் உருவானது. கோடைக்கு காலத்தில் நீர் பந்தல் அமைப்பது ஒரு அறச்செயலாக கருதப்பட்டது. இயற்கையல்லாத முறையில் நெருப்பில் சிக்கி இறந்தவர்கள் நீர் வேட்கையோடு இறப்பது இயல்பாகும். எனவே, அவ்வாறு இறந்தவர்களின் நினைவாக நீர்பந்தல் அமைப்பது தமிழர்களின் வழக்கம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அல்லது அந்நியர்களுக்கு உபசரிப்பாக தண்ணீர் குடிக்க கொடுப்பதும் வழக்கம்.
நீரை மையமிட்ட பழமொழிகளும் மரபுத் தொடர்களும் தமிழர்களிடத்தே உண்டு. 'நீரடித்து நீர் விலகாது', 'நீர்மேல் எழுத்து', 'தண்ணீருக்குள் தடம் பிடிப்பவன்', தாயை பழித்தாலும், தண்ணீரை பழிக்காதே' என்பவை அவற்றுள் சில.
நீராடுவதே ஒரு சடங்காகவும் தமிழர்களால் கருத்தப்பட்டதற்கு பரிபாடல், திருப்பாவை போன்ற இலக்கியங்கள் சான்றாக அமைகின்றன. சுனையிலும் அருவியிலும் ஆற்றிலும் கடலிலும் நீராடலை தமிழ் இலக்கியங்கள் பலப்பட பேசுகின்றன. நீராடல் வேறு, நீர் விளையாட்டு வேறு. குளித்தல் என்ற சொல்லுக்கு உடம்பினை தூய்மை செய்தல் அல்லது அழுக்கு நீக்குதல் என்பதல்ல பொருள். வெப்பமடைந்த உடலைக் 'குளிர வைத்தல்' என்பதே அதன் பொருளாகும். குளிர்த்தல் என்ற சொல்லையே நாம் குளித்தல் எனது தவறாகப் பயன்படுத்துகிறோம்.
மணமகளை அலரிப்பூவும் நெல்லும் இட்ட நீரால் மகப்பேறுடைய பெண்கள் நால்வர் நீராட்டும் வழக்கத்தினை அகநானூறு (86) குறிப்பிடுகின்றது. பெண்ணின் பூப்பு நீராட்டு, அரசர்களின் வெற்றி நீராட்டு, இறந்ததற்கு ஊரறிய நீர்மாலை எடுத்து வந்து நீராட்டுதல் என்பனவெல்லாம் தமிழரின் வாழ்வியல் அசைவுகளாகும். தென்மாவட்டங்களில் புதுமணமக்கள் மலையாடுதல் அல்லது கடலாடுதல் என்பது ஒரு சடங்காக பின்பற்றப்படுகிறது.
பூவந்தி, திரிபலை, கருங்காலி, நாவல், முதலிய பாத்துக்க துவர்ப்புப் பொருட்களை ஊறவைத்த நீர் ஆடுமகளின் தோல் வனப்புக்காக; கோட்டம், அகில், சந்தனம் முதலிய மணப் பொருட்கள் உடல் நறுமணத்திற்க்காக; இலவங்கம், கச்சோலம், இலாமிச்சம், தான்றி, புன்னைத்தாது போன்ற முப்பத்திரண்டு வகை மூலிகைகள் ஊறிய நீர் நோயற்ற உடல் நலத்துக்காக என மூவகை நீராடலை நுட்பமாக ஆடுமகள் மாதவி குளிர்த்த முறையினை இளங்கோவடிகள் விளக்குகிறார். தமிழர்களின் மருத்துவ அறிவினைக் காட்டும் இலக்கிய பகுதி இது. ஆனாலும்ம் பெரும்பாலும் பெண்கள் மஞ்சள் மட்டும் தேய்த்துக் குளிர்பதனையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
கலவியாடலை 'சுனையாடல்' ன்ற குறிப்புச் சொல்லால் சுட்டுவது தமிழ் உரையாசிரியர்கள் வழக்கு. கருவுற்ற பெண்ணைக் 'குளியாமல் இருக்கிறாள்' எனக் குறிப்பால் உணர்த்துவது நாட்டார் பேச்சு வழக்காகும். பழந்தமிழ் மரபில் 'மஞ்சள் நீராட்டு' என்ற சொல் பூப்பு நீராட்டினை மட்டும் குறிப்பதன்று. போர்க்களம் செல்லுக்கும் வீரர்கள் மஞ்சள் நீராட்டு செய்வது அல்லது மஞ்சள் உடை உடுத்துச் செல்லுவர். அது இறப்பினை எதிர்கொள்ளும் வீரவுணர்வினையும் தியாக உணர்வினையும் குறிக்கும். இவ்வழக்கத்தின் தொல்லெச்சமாகவே அரக்கனை அழிக்கச் செல்லும் தாய்த் தெய்வத்தின் 'சாமியாடி' (பிரதிநிதி) மஞ்சள் நீராடி உடை உடுத்திச் செல்கிறார்.
ஆறாட்டு (தீர்த்தவாரி) பெரும்பாலும் தைப்பூச நாளிலும் மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன. அழகர்கோவில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் தலையருவித் திருவிழாவில் இறைத்திருமேனியை அருவி நீரில் அமர வைத்து நீராட்டுகின்றனர். தமிழக நாட்டார் தெய்வங்களும் ஆறாட்டு செய்வதுண்டு. பெருந்தெய்வக் கோவில்களின் ஆறாட்டு ஆடம்பர நிறைந்த விழாவாகும். தாய்த் தெய்வ கோவில்களில் அது 'சினம் தீர்ந்த' கதையாகும்.
ஒரு காலத்தில் தமிழகம் முழுதும் பரவியிருந்த சமண மதம் கரைந்ந்து போனதற்குப் பண்பாட்டளவிலான காரணங்கள் பல உண்டு. அவற்றுள் ஒன்று கடுந்துறவு நெறியினை மேற்கொண்ட சமணத் (திகம்பரத்) துறவிகள் நீராடுவதில்லை என்பதாகும்.
தமிழ பாசன வரலாறு - கோமதி நாயகம்; அறியப்படாத தமிழகம், விடுபூக்கள், மானுடவாசிப்பு - தொ.பரமசிவன்
திணைகளில் ஆறும் நீரும்:
பல்வேறு பண்டைய நாகரிகங்களில் மக்கள் கூட்டத்தை இயக்குகின்ற கூறுகளாக சடங்குகளும் பூசனைகளுமாக இருக்கின்றன. சடங்குகளில் இருந்து கட்டி எழுப்பப்பட்ட குமுகங்களாக அவை இருந்துள்ளதை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் பண்டைத் தமிழ்க் சமூகம் இயற்கையின் உறவாடலில் தனது குமுக உறவை அமைத்துக் கொண்டுள்ளது. தனது வாழ்வியலை இயற்கை மீது கொண்ட உறவின் வழியாக நடத்திக் கொண்டு வந்துள்ளது.
'நிலம் தீ நீர் வளி விசும்போடைந்தும் கலந்த மயக்கம் உலகம்' (தொல்:பொரு:635) என்று பூதியலை (Physics) வகுத்து கொடுக்கின்றது. இதை இன்னும் விளக்கமாக புறநானூறு வரைகின்றது.

"மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய  விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை" - புறநானூறு

தமிழர்கள் தங்களது வாழ்விடத்தை இயற்கையின் கூறுகளாகவே வகுத்துள்ளனர். இது வேறு எந்த பண்டை நாகரிகங்களிலும் காணக்கிடைக்காத ஒன்றாகும். வாழும் சூழலை அறிவியல் முறைபப்டி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று வகுத்துக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு திணையின் அமைவுக்கும் மானுட சமூக இயங்கியல் கூறுகளும்உற்பத்தி பண்பாட்டுக்கும் நீரின் இருப்பும் தன்மையும்தான் அடிப்படை காரணமாக இருக்கிறது. குறிஞ்சி நிலத்தின் நீராதாரம் அருவியும் சுனையும் ஆகும்.இது மலையும் மலை சார்ந்த இடமாகவும் இருப்பதால் நல்ல மண் வளம் இருக்கும். இங்கு உழுது வேளாண்மை செய்ய வேண்டிய தேவை இல்லை. குறிஞ்சி நிலத்தில் மழைநீரைச் சேர்த்து வைத்து வேளாண்மை செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை. ஏனெனில் அவர்களுக்கு அருவி நீரும் சுனை நீரும் எப்போதும் குறைவின்றிக் கிடைத்து வந்தன. அது மட்டுமல்லாது அவர்களது வேளாண்மை முறையான்னது மழைப் பாசனத்தை அடிப்படையாகக் கொண்டது அருவி நீரை அடிப்படையாக கொண்டது. காட்டுப் பன்றிகள் நிலத்தை உழுத பின்பு அதில் விதைத்துச்  சாகுபடி செய்யும் முறையை புறநானூறு (168) குறிப்பிடுகிறது. குறிஞ்சி நில மக்கள் அருவியின் நீரை பயன்படுத்தி ஐவனம் என்றொரு வகை நெல்லை விளைவித்ததை பற்றியும் இருள் கூடும் மலைப் பக்கத்தில் அருவியின் நீரைக் கொண்டு ஐவனம் என்ற நெல்லை விதைக்கும் தலைவனைப் பற்றியும்  குறுந்தொகை கூறுகிறது. மலைத் தொடரின் பக்கத்தே விளைந்த ஐவன நெல்லை குன்ற நாட்டைச் சேர்ந்த தலைவன் கொண்டு சென்றதைக்  ஐங்குறுநூறு பாடல் குறிக்கின்றது. மூங்கிலில் இருந்து கிடைக்கும் நெல் குறிஞ்சி நில மக்களுக்கு உணவானது. இது பயிர் செய்யாமல் இயற்கையாக கிடைப்பது. சமைப்பது சற்றுக் கடினமானது. குறிஞ்சி நில மக்கள் இந்நெல்லைப் பயன்படுத்துவர். இதனை வெண்ணெல் என்ற அகநானூற்று பாடல் குறிக்கிறது. ஆண்டு முழுதும் சுரக்கும் சுனையும் அருவி நீரும் உள்ளதால் குறிஞ்சி நில மக்கள் மழைநீரை சேமித்து வைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை. குறிஞ்சி நிலத்தின் விலங்குகளாக சுட்டப்படும் புலி, யானை, கரடி ஆகிய பேருயிர்கள் வாழ்வதற்கு தேவையான நீரும் சூழலும் குறிஞ்சி நிலத்தில் இருந்தது. அக்காட்டில் வாழும் உயிரினங்களும் பழங்குடி மக்களும் காட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். காடு அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. காப்பு காடுகள் என்று சொல்லி அவர்கள் காடுகளில் இருந்து விரட்டப்பட்டனர். தேயிலை தோட்டங்கள் குறிஞ்சி நிலத்தை பச்சை பாலைவனமாக மாற்றிவிட்டது. காடுகள் அழிக்கப்பட்டது. ஒரு சில நாட்கள் பெய்யும் மழைநீரை தன்னகத்தே தேக்கி வைத்துக் கொண்டு சமவெளியில் ஆண்டு முழுக்க நீரோடும் ஆறுகளாக மாற்றும் தன்மையை குறிஞ்சி நிலம் இழந்துவிட்டது. குறிஞ்சி நிலம் அழிக்கப்பட்டால் ஆறுகளில்லை, பாசனமில்லை. உணவுக்கு எதோ ஒரு நிறுவனத்தை சார்ந்திருக்க வேண்டிய நிலைமைக்கு சமவெளி மக்கள் தள்ளப்படுவார்கள். இப்போதே அந்த நிலைக்கு வந்துவிட்டோம்.  இதனால் முல்லை, மருதம், நெய்தல் என அனைத்து திணைகளும் பாலையாகும் நிலையில் உள்ளது. குறிஞ்சி நிலத்தில் உள்ள அருவிகள், சுனைகள் பல இப்போது வற்றி போய்விட்டது. அடுத்ததாக முல்லை திணை

முல்லை நிலத்தின் நீராதாரம் குறுஞ்சுசுனை மற்றும் காட்டாறு ஆகும். முல்லை திணை என்றவுடன் நாம் எதோ அடர்ந்த காட்டை மனதில் நினைத்துக் கொள்கிறோம். குறிஞ்சி நிலம் போல அடர் காடுகளை கொண்டதில்லை முல்லை. முல்லை நிலத்தின் விலங்காக சுட்டப்படும் மான், முயல் வாழ்வதற்கான சின்ன சின்ன குன்றுகளை, புதர்காடுகளை உள்ளடக்கிய ஒரு மானாவாரி நிலப்பகுதியாகும். அதாவது புஞ்சை நிலம். இன்னும் சொல்லப்போனால் முல்லை திணையில் காடு என்பது மானாவாரி காட்டை குறிப்பதாகவும் உள்ளது. இன்றும் வரகு, சோளம், குதிரைவாலி போன்ற தவசங்களை விதைக்கும் வேளாண்மையில் ஈடுபடும் மக்கள் வேலைக்கு போவதை ‘காட்டுக்கு போகிறோம்’ என்றே கூறுகின்றனர். வயலை வயக்காடு என்கிறோம். முல்லை நிலத்தின் தொழில் கால்நடை மேய்ப்பது. பட்டிக்காடு என்பது முல்லை நிலத்தை குறிக்கிறது. ஆடுகளை நிலங்களில் அடைத்து வைக்கும் இடத்திற்கு பட்டி என்று பெயர். காடு என்பது சோளம், கம்பு, சாமை போன்ற தவசங்கள் விளையும் காடு. முல்லை நிலத்தின் விளைதவசங்களான தினை பற்றி சங்க இலக்கியம் 73 இடங்களில் குறிப்பிடுகிறது. திணைக்கு இறடி, ஏனல், இருவி என்ற பெயர்களும் உண்டு. வரகு என்ற தவசம் பற்றி சங்க இலக்கியம் 29 இடங்களில் குறிக்கப்படுகிறது. மக்களிடம் இன்று புழக்கத்தில் உள்ள குதிரைவாலி பற்றி சங்க இலக்கியம் பதிவு செய்ததாக தெரியவில்லை. காட்டாறு மருத நிலத்தில் உள்ளது போன்ற வற்றாத ஆறு அல்ல. காட்டாறு ஆண்டின் சில  நாட்கள் மட்டுமே தண்ணீரை கொடுக்கும். அதனால் முல்லை நிலத்தில் ஆண்டுமுழுதும் நெல்லை விளைவிக்க முடியாது. எனவே உணவுக்கும், பாலுக்கும் கால்நடைகளை சார்ந்து வாழ வேண்டிய தேவை அவர்களுக்கு ஏற்பட்டது. அதற்கேற்ற பொருளுற்பத்தியில் மக்கள் ஈடுபட்டார்கள். ஆடுகளையும் அதன் ஆவினங்களையும் மேய்த்து, அதன் பயனாய் வரும் பொருட்களை துய்த்தும், விற்றும் வாழும் வாழ்க்கையைக் கொண்ட ஆயர்கள் முல்லை நிலத்தின் மக்களாவர். பாலோடு வந்து கூழோடு பெயரும்' அதாவது பசுக்களின் பாலைக் கொண்டுவந்து வீட்டிலே கொடுத்துவிட்டு வீட்டில் இருந்த சோற்றைக் கொண்டு செல்லுவதை குறுந்தொகை கூறுகிறது.  முல்லை நிலம் அரசாட்சியின் தொடக்க இடம் என்று கூறலாம். தமிழில் 'கோன்' என்ற சொல் அரசனை குறிக்கும். கோல் என்பதே அதாவது கால்நடைகளை மேய்க்கும் கோல் என்பதே கோன் என்று ஆனது. கோன்மை என்றால் ஆட்சி செய்தல் என்று பொருளாகும். தமிழகத்தில் அதிகம் அழிக்கப்பட்டு இருப்பது முல்லை நிலத்து காட்டாறுகள்தான். மதுரை மாவட்டத்தில் மட்டுமே ஏறக்குறைய 10-க்கும் மேற்பட்ட காட்டாறுகள் உள்ளன. ஆனால் அவையாவும் அழிவின் விளிம்பில் உள்ளன. நகரத்து மக்களுக்கு அவை ஆறுகளென்றே தெரியாத வண்ணம் ஆக்கிரமிக்கப்ட்டுள்ளது.
மருத திணையில் ஆறும் நீரும்:
மருத நிலத்தின் நீராதாரம் ஆற்றுநீர் மற்றும் கிணற்று நீராகும். நீர்வளம் மிகுந்த பகுதி மருத நிலம்.  கல்லணை உள்ளிட்ட பண்டைய நீரியல் கட்டுமானங்கள் அதிகம் மருத நிலத்தின் ஆற்றில்தான் கட்டப்பட்டன. ஆண்டு முழுதும் நீரோட்டம்  உள்ள வற்றாத ஆறுகளை உடையது மருத நிலம். அந்த ஆற்றை நம்பி வலுவான பாசன அமைப்பை உருவாக்க முடிந்தது. ஆண்டு முழுதும் நீரோடுவதால் நிலத்தடி நீரின் வளமும் அதிகமிருந்தது. அதனால் ஏரி, குளம், கிணறு வெட்டி, பாசனம் செய்தார்கள். நெல் விளையும் பூமி. தமிழகத்தில் நெல் மிகப் பழமையான பயிர். இவற்றில் பல சீரினங்கள் இருந்துள்ளன. இவை பசுமை புரட்சிக்குப் பின்னர் வேகமாக மறைந்து வருகின்றன. முதலில் அடிபப்டையான இரண்டு வகைகள் உள்ளன. அவை செந்நெல் என்றும் வெண்ணெல் என்றும் பிரித்தரியப்பட்டுகின்றன. வெண்ணெல் எனப்படுவது நஞ்சை நிலத்தில் உறுதியான பாசன வசதியில் செய்யப்படுகிறது. செந்நெல் வானவாரியாக அதாவது மழையை மட்டும் நம்பி புஞ்சை நிலத்தில் செய்யபப்டுகிறது. பொதுவாக பண்டைத் தமிழகத்தில் குறிஞ்சியிலும், முல்லையிலும் செந்நெல் பயிராகியது.  சில இடங்களில் மருத நிலப் பகுதியிலும் பயிராகியுள்ளது.
பெரிய எருமையான பகடு எனப்படும் காளைகளை வைத்து போரடித்துக் குவித்த செந்நெல்லை அம்பணம்  எனப்படும் மரக்கால்களைக் கொண்டு அளந்து குவிப்பார்கள் என்று பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. செந்நெல் விளைந்த வயலில் நிறைய பறவைகளை காணப்படும் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது.
மருத மற்றும் நெய்தல் நிலத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு சாகுபடி முறையே பழனம் ஆகும். மீனும் நெல்லும் சாகுபடி செய்யப்படும் வயலுக்கு பழனம் என்று பெயர். மதுரை காஞ்சி, மலைபடுகடாம், குறுந்தொகை, பதிற்றுப்பத்து, அகநானூறு உள்ளிட்ட இலக்கிய பாடல்களில் பழனம் பற்றிய பதிவுகள் காணப்படுகின்றன.
ஆண்டு முழுதும் நீராடிய வற்றா ஆறுகள் பல இன்று வற்றிவிட்டன. நன்னீர் உயிரினங்கள் முற்றாக அழிந்துவிட்டது. கெண்டை, கெளுத்தி, குரவை, விரால், ஆரா, வெளிச்சி, உழுவை, அயிரை, விலாங்கு என பல்வேறு மீனினங்கள் இன்று நமது ஆறுகளிலில்லை. மருத நிலத்தின் விலங்காக சுட்டப்படும் நீர்நாய் இப்போது பவானி சாகர் அணையின் முகத்துவார பகுதிகளில் மட்டுமே காணமுடிகிறது. பசுமை புரட்சி, நகரமயமாக்கல், ஆற்றுமணல் கொள்ளை, தனியார் தண்ணீர் நிறுவனங்கள், சிறப்பு பொருளாதார மண்டலங்கள், கழிவுநீர் பெருக்கம் இதை அத்தனையும் அனுமதிக்கும் அரசின் கொள்கை என பல்வேறு காரணங்களால் மருத நிலம் இன்று அழிவை சந்தித்து வருகிறது. இன்று வாழத் தகுதியற்ற இடங்களாக இத்திணை மாறிவருகிறது.
நெய்தல் திணையில் ஆறும் நீரும்:
நெய்தல் நிலத்தின் நீராதாரம் உவர்நீர் கேணியாகும். சமவெளியின் மத்தியில் இருக்கும் மக்களால் அதிகம் பேசப்படாத நிலம் நெய்தல். மற்ற திணைகளை போல நெய்தல் நில மக்களின் வாழ்வியலும் பண்பாட்டு சிதைவும் அதிகம் பேசப்படவில்லை.
ஆறுகளின் முகத்துவாரங்கள், உப்பங்கழிகள், ஆற்றங்கால்கள், சதுப்புநிலங்கள், உப்புநீர் ஏரிகள் என பல்வேறு சூழலியல் தகவமைப்பை கொண்ட கடலோரத்தில் உவர் தன்மை கொண்ட பகுதிகளில் அலையாத்திக் காடுகள் வளருகின்றன. பொன்னி (காவிரி) ஆறு கடலில் சேரும் முகத்துவாரமான முத்துப்பேட்டையிலும் பிச்சாவரத்திலும் அலையாத்திக் அதிகளவில் காடுகள் உள்ளன. அதுபோல பொருநை (தாமிரவருணி)ஆறு கடலில் கலக்கும் தூத்துக்குடி மாவட்டத்தின் புன்னைக்காயல் பழையகாயல் பகுதிகளிலும் அலையாத்திக் காடுகள் இருக்கின்றன. தூத்துக்குடி, வைப்பாரு பகுதியிலும், வைகை ஆறு சேருமிடமான இராமநாதபுரம் மாவட்டத்தின் தேவிப்பட்டினம், மூக்கையூர் பகுதியிலும் கண்டல் காணப்படுகின்றன. பொருநை (தாமிரவருணி) ஆற்றின்  துணை ஆறான பழையாறு கடலில் சேரும் மணக்குடிப் பகுதியிலும், புதுச்சேரி சங்கராபரணி ஆறு கடலில் கடலில் கலக்கும் தேங்காய் திட்டு, வம்பாகீரப்பாளையம் பகுதிகளிலும் அலையாத்திக் காடுகள் உள்ளன. ஆறு கடலில் சேரும் இடத்தின் உயிர்சூழல் மிக செழிப்பானது. ஆறு வீணாக கடலில் சேருகிறது என்கிற பொதுபுத்தியின் கற்பிதத்தால் நெய்தல் திணையின் வாழ்வும் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளது. வைகை கடலில் சென்று கலக்காத கன்னி ஆறு என்பார்கள். வைகை இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆற்றங்கரை என்ற இடத்தில் வங்ககடலில் கலக்கிறது. 'நாரை பறக்க முடியாத நாற்பத்தியெட்டு மடை கண்மாய்' என்று அழைக்கப்படுகிற இராமநாதபுரம் பெரிய கண்மாயில் இறுதியாக வந்து சேரும்வரை வைகையின் நீர் பாசனத்திற்க்காக பல நீர்நிலைகளை நிரப்புகிறது. எனவே அது கடலில் போய் சேர முடியவில்லை. வைகை கடலில் சேராததால் அதன் முகத்துவார பகுதியில் இருந்த அலையாத்திக் காடுகளும் அதன் உயிர்ச்சூழலும் அழிந்து போய்விட்டது.
முல்லையும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கம் அலையாத்திக்காடுகள். உவர்நீர் சதுப்புநிலம் என்று இன்று அழைக்கப்படுவதை சங்க இலக்கியத்தில் 'கண்டல்' என்ற ஒரே சொல்லால் அன்றே குறித்து இருக்கிறார்கள்.
"கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை
முண்டகம் வேய்ந்த குறியிறைக் குரம்பைக்
கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென"
- நற்றிணை: 207
கடலின் மழைக்காடுகள், கண்டல், அலையாத்திக் காடுகள், சுரபுன்னை காடுகள், கண்ணா காடுகள், தில்லை காடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. வடகோளத்தில் அலையாத்திக் காடுகளே கிடையாது. இது வெப்பமண்டலத்தில் மட்டுமே அதுவும் குறிப்பாக நிலநடுகோட்டை ஒட்டி காணப்படும் காடு. மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகத்தில் வீசும் புயற்காற்றைக் கூட கரையிலேயே தடுத்து, அதன் வேகத்தை தடுக்கும் ஆற்றல் உடையது அலையாத்திக் காடுகள். புயல் காற்றினால் தரையை மோத வரும் கடல் அலைகளின் சீற்றத்தை ஏறத்தாழ 90 விழுக்காடு அளவுக்கு குறைத்துவிடுவதால் இதனை 'அலையாத்திக் காடுகள்' என்று அழைக்கின்றனர்

அலையாத்திக் காடுகளின் உப்பங்கழிகள் அல்லது காயல்கள்தான் பெரும்பாலான கடல்வாழ் உயிரினங்களின் தொட்டில்.
அணு உலைகள், தாது மணல் கொள்ளை, தூத்துக்குடி ஆள்காலிக் கெமிக்கல்ஸ், ஹெவி வாட்டர் பிளான்ட், ஸ்டெர்லைட் காப்பர் வேதி ஆலை, கடல்நீரை நன்னீராக்கும் ஆலை, கடல் உணவு பதப்படுத்தும் தொழற்சாலை, நகர கழிவு, உயிகொல்லி நஞ்சு உரப் பயன்பாடு, இறால் பண்ணைக் கழிவுகள், ஆலைக் கழிவுகள், மணல் கொள்ளை, உப்பு உற்பத்தியாளர்களின் ஆக்கிரமிப்பு, தனியார் நிறுவன ஆக்கிரமிப்பு,புவி வெப்பமயமாதல், உலகமயம் நெய்தல் நில மக்களின் வாழ்வும் சூழலும் கேள்விக்குறியாகியுள்ளது.
அலையாத்தி காடுகளும் அனல்மின்நிலையங்களும் – நக்கீரன்
"இயற்கையின் சமன்பாடுகளும் பிணைப்புகளுமே உயர்க்கோளத்தை முன்னகர்த்திச் செல்கின்றன. சற்றொப்ப முன்னூறு கோடி ஆண்டு காலமாக இயற்கை தனதளவில் இப்பெரும்பனியில் சருக்கலின்றி இயங்கி வந்திருக்கிறது. உயிர்களை தன் மடியில் தாங்கி, ஊட்டிப் பராமரிக்கும் பூமித்தாயின் இயக்கமானது திணையால், காலத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது. வள ஆதாரங்களும் பயன்பாட்டுக்கும் இடையே தொழிற்படும் மெல்லிய சமன்பாட்டினை ஆதிக்குடிகள் நாடி பிடித்துத் தெரிந்து வைத்திருந்தன. இயற்கைக்கும் உயிர்களுக்கும் இடையிலான இப்புனித உடன்படிக்கை நாகரிக மனிதர்களால் மீறப்பட்டது. சமவெளி மனிதனை பொறுத்தவரை கடல் வெறும் வெள்ளக்காடு, பரந்த நீர்பரப்பு மட்டுமே.
காடும் மண்ணும் கடலும் பூர்வத் திணைக்குடிகளின் வசம் இருந்தவரை எந்த கவலையும் இல்லாதிருந்தது. காட்டில் இருந்து பூர்வக்குடிகள், வேளாண் பூர்வகுடிகள், மீனவ பூர்வகுடிகள் விரட்டடியடிக்கபட்டு, தாராளமய சந்தைக்கு மலிவு விலை கூலிகளாக மாற்றப்பட்டனர்மலைவாழ் குடியை சேர்ந்தவன் காட்டில் தேனெடுக்கும் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. ஒரு விவசாயி தன் வீட்டில் விளைந்த காய்கறியை சந்தையில் விற்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அறுவடை செய்த மீனை தலையில் சுமந்து விற்கும் நிலை இனி கிடையாது. குளிரூட்டப்பட்ட கண்ணாடி மாளிகைகள் கவர்ச்சியான படங்களுடன் பொருட்களை விற்கும் "மால்" போன்றவற்றில் மட்டுமே சந்தைப்படுத்த முடியும்.
இனி போராட்டமும் போராட்டம் சார்ந்த வாழ்க்கையுமே ஐந்திணைக் குடிகளுக்கும் உரிய அடையாளமாய் எழுந்துவரும் சூழலை நாம் விளங்கிக் கொள்ள வேண்டிய தருணமிது. " (வறீதையா கான்ஸ்தந்தின்: 2012)
ஆறும் அதன் பல்லுயிரிய சூழலும்:
ஆறுகளும், ஆறுகள் சார்ந்த நீர்நிலைகளும், கால்வாய்களும் ஆற்றங்கரையோரக் காடுகளும், முதலைகள், மீன்வகைகள், ஆமைகள், தண்ணீர் பாம்புகள் என எண்ணிலடங்கா உயிர்களுக்கு வாழ்விடங்களாக அமைகின்றன. மயில் கொண்டை (மாஷீர்) என்ற ஒரு வகை மீன் இன்று தமிழ்நாட்டு ஆறுகளில் இல்லை. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இவை பவானி மற்றும் அமராவதி ஆறுகளில் ஏராளமாக இருந்ததுண்டு.
ஒரு ஆற்றின் முகத்துவாரம் பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக இருக்கிறது. கடலின் உப்புநீரும், ஆற்றின் நன்னீரும் கலந்திருக்கும் சதுப்பு நிலப்பரப்பு, புழு, நண்டு, நத்தை போன்ற பல உயிரினங்கள் பல்கி பெருகும் இடமாகிறது. ஆயிரக்கணக்கில் வரும் நீர்ப்பறவைகளுக்கும், கரையில் வாழும் கீரிப்பிள்ளை போன்ற உயிரினங்களுக்கும் வாழ்விடமாகிறது. கடல் பாம்புகளையும், மீன்களையும் உண்டு வாழும் கடல் ஆலா (White-bellied Sea Eagle) எனும் பறவையும் கடற்கரை முகத்துவாரங்களில் காணலாம். ஓதத்தினால் கடல்மட்டம் குறையும் போது வெளிப்படும் நிலப்பரப்பில் இரைத் தேட வரும் பறவைகள் ஏராளம். உவர்ப்பு நீருடைய சதுப்பு நிலப்பரப்பில் மட்டுமே வாழும் நுண்ணுயிர்கள் சில உண்டு. அதில் Plankton எனப்படும் நுண்ணுயிரே பூநாரைக்கு உணவு. கழிமுகத்திற்க்கு வெளிநாடுகளிலிருந்து பல வகையான புள்ளினங்கள், அக்டோபர் முதல் மார்ச் வரை வருகின்றன. அங்கு கடுங்குளிரில் நிலம் பனியால் மூடப்படும் பருவத்தில், இரைத் தேடி, கூட்டம்கூட்டமாக பறவைகள் வெப்பமண்டல பகுதிகளுக்கு இடம்பெயர்கின்றன. சங்கபுலவர்கள் இவைகளை 'புலம்பெயர் புட்கள்' என்று வர்ணித்திருக்கிறார்கள்.
சுமார் 1105 கி.மீ நீளமுடைய தமிழகக் கடற்கரை ஏராளமான உயிரினங்களுக்கு உறைவிடம். உயரின பல்வகைமை கொண்டமையால் மன்னார் வளைகுடா பகுதி பாதுகாக்க்கபட்ட உயிர்க்கோளப் கடற்பகுதியாக ஐநாவால் அறிவிக்கப்பட்டுள்ளது. பவளத் திட்டுகளைச் சுற்றி வாழக்கூடிய பல உயிரினங்களை மன்னார் வளைகுடா பகுதியில் காணலாம். பவளத் திட்டுகள், கடலடி வாழத் தாவரங்கள் நிறைந்த இந்த நீர்ப்பகுதி ஆவுளியா எனும் அறிய கடல்வாழ் பாலூட்டியின் (Dugong) வாழ்விடம்.கடலின் ஆழமற்ற பகுதிகளில் அங்குள்ள கடலடிப் புற்களை மேய்ந்து வாழ்கிறது
ஓங்கில் என்று மீனவர்களால் குறிக்கப்படும் மூன்று வகையான டால்பின்கள் கூட்டம் கூட்டமாக நம் கடற்பகுதியில் வாழுகிறது. ஐந்து வகைக் கடலாமைகள் தமிழகக் கடற்கரையருகே காணப்படுகின்றன. பங்குனி ஆமை (olive Ridley), பேராமை (Green Turtle), அழுகாமை (Howksbill), பெருந்தலையாமை (Loggerhead) மற்றும் தோணியாமை (Leatherback) போன்றவற்றில் பிகப் பெரியது 1.5 மீட்டர் நீளமும், 500 கிலோ எடையும் கொண்ட தோணியாமையே. காண்பதற்கு அரியது பேராமையே. அதிகம் காணக்கூடியது பங்குனி ஆமை. இந்த ஆமைகள்தான் கூட்டம் கூட்டமாக முட்டையிட கடற்கரைக்கு வருகிறது. நிலத்தில் வாழும் ஆமைகளும் உண்டு. நாம் எளிதாகக் காணக்கூடியது ஏரிகளும் ஆற்றங்கரையோரங்களிலுள்ள மன்ணாமை. நட்சத்திர ஆமை வறண்ட பகுதியில் வாழும் ஒரு வகை நில ஆமை.
(சு.தியடோர் பாஸ்கரன்: 2006)


ஆலவாய் நகரின் ஆறுகள்:
மதுரை மாவட்டத்தில் உள்ள சில கண்மாய்கள் கி.பி. 300க்கு முன்பே சங்க கால பாண்டிய அரசாட்சியில் உருவாக்கபட்டுவிட்டன. மதுரை அருகே திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி செல்லும் வழியில் உள்ள உறப்பனூரில் மிகப் பெரிய ஏரியுள்ளது. இதன் உள்வாய்ப் பகுதியில் அமைந்துள்ள கல்மடையொன்றில் வீரநாரயணன் மற்றும் ஸ்ரீகரிவரமல்லன் என்றும் பொறிக்கப்பட்டுள்ளன. எனவே இக்கண்மாய் கி.பி. 866 - 911 காலத்திற்கு உரியது அல்லது முந்தியது எனலாம்.  

மதுரை வைகைக் கரையில் கிடைத்துள்ள தமிழ்க் கல்வெட்டில் மன்னன் செழியன் சேந்தன் (கி.பி.620-630) வைகை ஆற்றில் மதகு கட்டியதையும், கால்வாய் வெட்டியதையும் குறிக்கிறது.சோழவந்தான் தென்கரை கண்மாய், அதற்க்கு வைகையில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்களை அமைத்ததும் இம்மன்னனின் ஆட்சியில்தான். முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் குருவித்துரைக்கும் தென்கரைக்கும் இடையே வைகையின் தென்புறம் வெட்டப்பட்ட பெரிய கால்வாய், மேலக்கால், நாகமலை புதுக்கோட்டை, வழி சென்று மாடக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கியது. சமண மலையிலுள்ள முற்கால பாண்டியர் கல்வெட்டுகளில் இந்த கால்வாயை 'நாட்டாறு' எனக் குறிப்பிடப்படுகிறது. இதே போல தமிழக கல்வெட்டுகளில் வைகை போன்ற ஆறுகளை பேராறு என்றும் அதிலிருந்து பிரிகின்ற கால்கள் ஆறுகள் போன்று பெரியதாக இருந்ததால் பராக்கிரம பேராறு, ஸ்ரீ வல்லப பேராறு, அரிகேசரி ஆறு, நாட்டாறு என்று அழைக்கப்பட்டதை காணலாம். உறப்பனூர் கிராமம் 'நாட்டாற்றுப்புறத்து உறப்பனூர்' என்று குறிப்பிடபடுகிறது. நாட்டாறு என்பது மன்னன் செழியன் சேந்தன் ஆட்சியில் வெட்டப்பட்ட மாடக்குளம் கண்மாய்க்கு செல்லும் கால்வாயை குறிக்கிறது.
இலக்கிய காலத்தில் இருந்தே பாண்டிய நாட்டில் நடைபெற்று வந்திருக்கிறது என்பது திண்ணம்.

"புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீ ரேரியும்
காய்க்குலைத் தேங்கும் வாழையும் கமுகும்"
என்று சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் மதுரையின் அன்றைய நீர்ச் செழுமையை அழகாய் விளக்கிறார். அவர் குறிப்பிடும் தெங்கு, வாழை, கமுகு, ஆகிய மூன்று மரங்களும் நீர் வளம் அதிகமுள்ள பகுதிகளில் மட்டுமே வளரும். வளமான ஆற்றங்கரையோரங்களில்தான் பழம் பண்பாடும் நாகரிகமும் தழைத்துச் செழித்திருக்கிறது எனபது மானுடவியலார் கருத்து. அதனடிபப்டையில் வைகை கரையோரம் வாழ்ந்த மக்கள் நீரின் தேவையை உணர்ந்து, முறையாக பயன்படுத்தி பாசனம் செய்து வாழ்ந்துள்ளனர் என்பதை கலித்தொகை, பரிபாடல், திருவிளையாடற்புராணம் போன்ற நூல்கள் பாடல்களாய்ப் பதிவு செய்துள்ளன. ஆண்டில் பலமாதங்களில் வைகையாற்றின் இருமருங்கும் நீர் நிறைந்து சென்று இருக்கிறது. பாண்டிய மண்ணின் கோட்டைச் சுவர்களில் வைகையின் அலைகளின்றி வேறு எவரால் மோத இயலும் என்று வைகையின் நீரோட்டம் குறித்து இளங்கோவடிகள் பாடியிருக்கிறார்.

தண்ணீர் அரசியல்:
காசு கொடுத்து வாங்கும் நீர்தான் தூய்மையானதா? பாதுகாப்பானதா?

இங்கிலாந்து நாட்டு அரசு அலுவலகங்கள் எதிலும் புட்டிநீர் பயன்பாடு கூடாது என 2008 முதல் பிரதமர் கார்ட்ன உத்தரவு. அமெரிக்காவின் கான்கார்ட் நகரத்தில் எந்தவொரு கடையிலும் புட்டிநீரை விற்பது சட்டவிரோதம் என்று தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்க்கோ, சியாட்டில் ஆகிய நகரங்களிலும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் அரசு துறைகள் அனைத்திலும் புட்டிநீரை வாங்கக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியிலுள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் நடுவம் (CSE) புட்டிநீரில் பூச்சிக்கொல்லிகளின் படிவங்கள் இருந்ததை அம்பலப்படுத்தியுள்ளது.  இதுபோன்ற பல எடுத்துக்காட்டுகள் உள்ளன. புட்டிநீர் பாதுகாப்பானது எனில் உலகின் முன்னணி நாடுகள் ஏன் அதை தடை செய்ய வேண்டும்?

சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் (WHO)' தாது நீக்கம் செய்யப்பட்ட நீர் குடிப்பதற்கு பாதுகாப்பானது அல்ல' என்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. தாது நீக்கம் செய்யப்பட்ட நீரென்பது வீட்டில் நீரை தூய்மைப்படுத்த பயன்படும் R.O. போன்ற கருவிகளோடு சில புட்டிநீர் மற்றும் சில கலன்நீரையும் உள்ளடக்கியதேயாகும். இந்நீரை அருந்துவதால் ஏற்படும் முதல் பாதிப்பு என்னவெனில் நம் குடலானது உடல் ஏற்கனவே சேமித்து வைத்துள்ள எலெக்ரோலைட்டை பிடிங்கி இந்நீரோடு சேர்த்துவிடுவதால் உடலில் எலக்ட்ரோலைட்டின் செறிவு குறைக்கப்பட்டு நீர் சமநிலை பாதிக்கப்படுவதே. தவிர உடலின் வளர்சிதைமாற்றமும் பாதிப்புக்குள்ளாகிறது. வழக்கமான குடிநீரை அருந்துபவர்களைவிட தாதுநீக்கப்பட்ட இந்நீரை தொடர்ந்து அருந்துபவர்களுக்கு கால்சியம் மற்றும் மக்னீசியம் பற்றாக்குறை ஏற்பட்டு இதயநோயினால் ஏற்படும் மரணத்துக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பி அதிகமிருப்பதாக மேலும் குழந்தைகளிடம் எலும்பு முறிவையும், பெரியவர்களிடத்து எலும்பு அடர்த்திக் குறைவையும் ஏற்படுத்துகிறதாம் என இந்த அறிக்கை எச்சரிக்கிறது. அப்படியானால் தாது நீக்கம் செய்யப்பட்ட நீர் தூய்மையானதுமில்லை பாதுகாப்பானதுமில்லை. அமெரிக்கவில் புட்டிநீர் எங்கிருந்து எடுக்கப்படுகிறது என்கிற விபரம் அதன் உரையில் அச்சிடப்பட்ட வேண்டும் என்கிற விதிமுறையை கட்டாயமாக்கியயதும் பெப்சி, அக்வாபீனா, கோக் நிறுவனத்தின் டசானி உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களுடைய நீர் உள்ளூர் குழாய் நீரிலிருந்தே பெறப்படுவதாக தங்கள் உரைகளில் அச்சிட்டன. அப்படியானால் அந்த குழாய் நீரை நாம் குடித்தால் மட்டும் என்ன இழுக்கு வந்துவிடப் போகிறது ? அமெரிக்கவின் NRDC அமைப்பு 103 வணிக முத்திரைகள் கொண்ட 1000 புட்டிநீர் மாதிரிகளை எடுத்துக் கொண்டு நான்காண்டு காலம் அவற்றின் தரம் குறித்து ஆய்வு நடத்தியது. அவ்வாய்வின் முடிவு குழாய் நீரைவிட புட்டிநீர் சிறந்ததல்ல என அறிவித்தத்து. அமெரிக்காவிலே நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது இந்தியாவில் என்ன நிலைமை என்று சொல்லவா வேண்டும். உண்மையில் மூடி உரையிடப்பட்டிருக்கும் நீரைவிட திறந்த நிலையில் இருக்கும் நீரில் ஆக்சிஜனேற்றம் நடைப்பெற்று நீரிலுள்ள நச்சுப் பொருள்களின் வீரியம் குறையும் என்பதுதான் பொதுவான அறிவியல் நடைமுறை. இப்போது எது சிறந்தது என்பதை உங்கள் அறிவுக்கு விட்டுவிடுகிறேன். காசு இருந்தால்தான் தண்ணீர் கிடைக்குமென்றால் காக்கை, குருவி என்ன செய்யும்? நமது வாழ்வாதார உரிமையாக இருந்த நீர் எப்படி பண்டமாக மாறியது. அதன் அரசியலை அறிந்துக் கொள்ளவது மிக அவசியம்.
உலகமயமும் அதன் நுகர்வு கலாச்சாரமும் காசு கொடுத்தால்தான் தரமான பொருட்கள் கிடைக்கும் என்ற மனநிலைக்கு மக்களை இட்டு வந்துவிட்டது. ஆனால் மற்றப் பொருட்களை போல தண்ணீர் ஒரு விற்பனை சரக்கல்ல. அதை எந்த தொழிற்சாலையிலும் தயாரிக்க முடியாது. எந்த முதலாளியாலும் உற்பத்தி செய்ய முடியாது. அது இயற்கை நமக்கு வழங்கியிருக்கும் மாபெரும் சொத்து. அது ஏழைக்கும் பணக்காரனுக்கும் அனைவருக்கும் சொந்தம். சொல்லப்போனால் புல் பூண்டு முதல் விலங்குகள், பூச்சிகள் வரையிலும் இந்த பூமியின் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மீது சம உரிமை இருக்கிறது. அந்த தண்ணீரை விலை வைத்து விற்பனை செய்வது இயற்கைக்கு எதிரான மாபெரும் சுரண்டல். காசு உள்ளவனுக்கு நல்ல தண்ணீர், காசு இல்லாதவனுக்கு தரமற்ற தண்ணீர் என்பது இரக்கமற்றக் கொடுஞ்செயல். அந்த கொடுஞ்செயலைத் தான் நமது அரசுகள் பெரும் விருப்பத்தோடு செயல்படுத்துகின்றன.
தேசிய நீர் கொள்கை என்னும் மோசடி வரைவு அறிக்கையை கடந்த 2012ஆம் ஆண்டு  மத்திய அரசு கொண்டு வந்தது. அதில் நிலத்தடி நீரும் ஒரு கனிம வளம்தான். ஆகவே உங்கள் வீட்டுக்குக் கீழ் இருக்கும் நிலத்தடி நீரும் அரசுக்குத்தான் சொந்தம் என்றது. நாளை தேசிய காற்று கொள்கை வரலாம். சுவாசிக்கும் காற்றுக்கு நம்மிடம் காசு கேட்கும் வரை பொறுத்திருக்கவே போகிறோம்.

தண்ணீர் ஒரு பண்டமாக, ஒரு விலையுள்ள பொருளாக மாறியதற்கு பின்னுள்ள அரசியலை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 1992 ஆம் ஆண்டு அயர்லாந்து தலைநகரில் ஐ.நா. மாநாடு ஒன்று நடந்தது. உலகம் முழுதும் இருந்து 100 நாடுகளை சேர்ந்த அரசு அதிகாரிகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். தண்ணீர் என்பது, அதன் அனைத்து அம்சங்களிலும் பொருளாதார மதிப்பை பெற்றுவிட்டது ஆகவே 'தண்ணீரை ஒரு பொருளாதார பண்டமாக அறிவிக்க வேண்டும்' என்று இந்த மாநாடு கேட்டுக் கொண்டது. தண்ணீர் என்பதை மனிதனின் உயிராதாரமாக சொன்ன ஐ.நா., தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய பண்டம் என்று சொன்னதுடன் நிற்கவில்லை. 'தண்ணீரை பணம் கொடுத்து வாங்காததால் மக்கள் அதை வீணடிக்கிறார்கள். அதனால் எதோ ஒரு வகையில் உபயோகிக்கக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்' என மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் கூறியதை ஐ.நா. ஏற்றுக் கொண்டது. அதன் பிறகு 1996 ஆம் ஆண்டு உலகின் மிகப் பெரிய தண்ணீர் நிறுவனங்கள் ஒன்று கூடி உலகத் தண்ணீர் சபை (World Water Council- WWC) என்ற அமைப்பை உருவாக்கின.
அவர்களின் நோக்கம் மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்கும் பொறுப்பில் இருந்து அரசாங்கங்களை கழற்றிவிடுவது. தனியார் தண்ணீர் நிறுவனத்திற்கு ஆதரவு லாபி செய்வது. இப்போது இந்த அமைப்பில் 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. உலகின் பணபலம் கொண்ட அமைப்புகளில் இதுவும் ஒன்று. ஐ.நா.சபையை ஆட்டுவிக்கும் இந்தத் தண்ணீர் சபை, அதன் பல திட்டங்களுக்கு நிதி உதவி செய்கிறது. இந்த உலக தண்ணீர் சபையில், ஐ.நா-வின் பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராக இருக்கிறது. ஐ.ந-வின் பல அமைப்புகள், உலகத் தண்ணீர் சபையில் உறுப்பினர்களாக உள்ளன.  இப்படி 'செம்புலப் பெயல் நீர்போல' கலந்திருக்கும் இவர்கள், ஏழைகள் ஒரு செம்பு நீருக்கு தவிப்பது குறித்து சிந்திப்பார்களா என்ன?

இதே உலக தண்ணீர் சபை, 2000-ம் ஆண்டில் நெதர்லாந்து நாட்டின் தி ஹோக் நகரில் இன்னொரு கூட்டத்தை நடத்தியது. உலகம் முழுதும் இருந்து 5,700 பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டை உலக வங்கியும் தனியார் தண்ணீர் நிறுவனங்களும் இணைந்து நடத்தின. தண்ணீர் வெறும் தேவையா? அல்லது அடிப்படை உரிமையா? என்பது தலைப்பு. 140 நாடுகளின் அமைச்சர்கள், ஐ.நா. சபை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டு கடைசியில், 'தண்ணீர் அடிப்படை உரிமை அல்ல; அது வெறும் தேவை மட்டும்தான் என்ற முடிவுக்கு வந்த்தனர். இதைத் தொடர்ந்து தண்ணீர் தனியார்மயத்திற்கு ஆதரவுக் கருத்துகள் அசுர வேகத்தில் பரப்பப்பட்டன; படுகின்றன.

மறுபக்கம் உலக வங்கி ஒரு கந்துவட்டிக்காரனைப் போல உலக நாடுகளை மிரட்டுகிறது. மூன்றாம் உலக நாடுகளுக்கு 'தண்ணீர் தனியார்மயமாக்குவது' என்ற நிபந்தனையின் கீழ்த்தான் கடன் தருகிறது. உலகம் முழுவதும் வளரும் நாடுகளில் 300-க்கும் அதிகமான குடிநீர் திட்டங்களில் உலக வங்கி முதலீடு செய்துள்ளது. '90 சதவீத நாடுகள் தனியார்மயத்திற்கு உத்தரவாதம் அளித்துள்ளன. 62 சதவிகிதம் நாடுகள், குறிப்பாக தண்ணீரை தனியார்மயமாக்க உறுதி அளித்துள்ளன' என்று குறிப்பிடுகிறது. ஆக எழுதி வாங்கி கொண்டுதான் கடன் தருகிறது உலக வங்கி.

காட்ஸ் ஒப்பந்தம் (GATS - The General Agreement on Trade in Services), 'தண்ணீர் ஒரு பண்டம்' எனத் தெளிவாக வரையறுக்கிறது. இது தண்ணீரை ஏற்றுமதி செய்யவும் இறக்குமதி செய்யவும் உள்ள தடைகளை திறந்துவிடுகிறது. நாடாளுமன்றத்திற்கே தெரியாமல் இந்திய அரசு 1994-ல் காட் எனும் சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதை நிறைவேற்ற அமைக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம் (WTO) என்ற பன்னாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கான அமைப்பு. இந்த அமைப்பின் ஒரு அங்கம்தான் சேவைத்துறைகளை வர்த்தகமாக்கும் காட்ஸ் ஒப்பந்தம். தண்ணீர், கல்வி என்பது உரிமையல்ல; அது ஒரு பண்டம் என்பது ஒப்பந்தம். காட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுள்ள நாடுகள், ;தண்ணீர் எங்கள் உரிமை; பாரம்பரிய சொத்து' என்றெல்லாம் சொல்ல முடியாது. சுற்றுச்சூழல் மாசுபடும், வாழ்வாதாரம் பறிபோகும் என தண்ணீர் ஏற்றுமதிக்கு அனுமதி மறுக்க முடியாது. மற்றப் பொருட்களை போல தண்ணீரும் ஒரு விற்பனைப் பொருளே என ஏற்றுக் கொண்ட பிறகு, மற்ற பொருட்களுக்கு சந்தையில் என்ன விதிமுறைகள் உள்ளன்னவோ... அவை தண்ணீருக்கும் பொருந்தும். இதில் முக்கியமானது, காட்ஸ் ஒப்பந்தம் என்பது ஒருவழிப் பாதை. இதில் கையெழுத்துப் போட்டுவிட்டு பிறகு, 'நாங்கள் எங்கள் மக்களுக்கு குழாய் தண்ணீரை கொடுத்துக் கொள்கிறோம்' என ஒரு நகராட்சிக்கு கூட பின் வாங்க முடியாது. அதற்க்கு இதில் கையெழுத்திட்டுள்ள 140 நாடுகளிடம் சம்மந்தம் பெற வேண்டும். இப்படி ஒரு நச்சு வலையில் நம் நாட்டை சிக்க வைத்திருக்கும் மத்திய அமைச்சர்கள், இந்த மரண பாதையை சொர்க்கத்தின் திறவுகோல் என்கிறார்கள்.

ஒரு நாட்டில் செய்யப்பட்ட தன் முதலீட்டை எந்த நஷ்டமும் இல்லாமல் திரும்ப பெற்றுக் கொள்ளும் உரிமை ஒரு பன்னாட்டு தண்ணீர் கம்பெனிக்கு உண்டு. ஆனால் தன் நாட்டு மக்களின் நாளுக்காக, ஒரு கம்பெனியை வெளியேறச் சொல்லும் உரிமை அரசாங்கத்திற்கு இல்லை. இதை நாம் தெளிவாக புறிந்து கொள்ள வேண்டும். நம் ஊரில், நம் வரிப்பணத்தில் சலுகைகளை பெற்று தொழில் நடத்தும் இந்த நிறுவனங்களை, நம் அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. அவர்களின் கட்டுப்பாட்டில்தான் நம் அரசாங்கம் உள்ளது. அதே நேரம் உலக வாங்கியோ, பன்னாட்டு நிறுவனங்களோ வீழ்த்த முடியாத விஸ்வரூப படைப்புகள் அல்ல. உலகம் எங்கும் எத்தனையோ நாடுகளில் மாபெரும் மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்துக்க கொண்டுதான் இருக்கின்றன. பொலிவிய நாட்டு மக்கள் போராட்டம் பகாசுர பெக்டெல் நிறுவனத்தை விரட்டியடித்து இருக்கிறது.

உங்க சுகாதார நிறுவனம் (WHO), ஒரு மனிதனுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 150 லிட்டர் நீர் வழங்க வேண்டுமென்று வரையறுத்துள்ளது. இந்த அளவு தண்ணீர் முழுமையாக கிடைப்பது அமெரிக்க மக்களுக்கு மட்டும்தான். அமெரிக்காவில் ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 700 லிட்டருக்கு ஐரோப்பிய  நாடுகளில் 200 லிட்டருக்கு வழங்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலோ 10 லிட்டர் கிடைப்பதே அரிது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நகரங்களில் சராசரியாக 70 லிட்டர் வழங்கப்படுகிறது. 2013 இல் இது 50 லிட்டருக்கு கீழே சென்றுவிட்டது. அப்படியானால் அமெரிக்கர்களுக்கு ஐரோப்பியர்களுக்கு மட்டும் எப்படி தண்ணீர் கிடைக்கிறது? அதை விடுங்கள். தமிழகத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியின் அறைக்கு நாள் ஒன்றுக்கு 1500 லிட்டர் முதல் 2000 லிட்டர் வரை தண்ணீர் செல்வாவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பணக்கார விளையாட்டுகளான கோல்ப் மைதானம், கிரிக்கெட் மைதானம் ஆகியவற்றை பராமரிக்க ஒரு நாளைக்கு 60 லட்சம் லிட்டர் தண்ணீர் செலவாகிறது. நிலைமை எப்படி இருக்க அரசும், தொண்டு நிறுவனங்களும் மக்களை பார்த்து தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என்று அறிவுரை சொல்வது எவ்வளவு பெரிய வன்கொடுமை. காலியான குடங்களோடு தண்ணீருக்காக மக்கள் அலைந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது இவ்வளவு தண்ணீர். காலியான குடங்களோடு மக்கள் அலையும் அதே சாலையில் செல்லும் தண்ணீர் லாரிகளுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது தண்ணீர். ஒரு அமெரிக்கர் நாளொன்றுக்கு 700 லிட்டர் நீரை பயன்படுத்துகிறார். ஆனால் ஆப்பிரிக்காவின் ஜாம்பியா நாட்டு குடிமகனோ நாளொன்றுக்கு நான்கு லிட்டர் தண்ணீருக்கு அலைந்து கொண்டு இருக்கிறார். அப்படியானால் ஜாம்பியா நாட்டில் ஒட்டுமொத்தமாக 175 பேர் பயன்படுத்தும் நீரை, ஒரே ஒரு அமெரிக்கர் பயன்படுத்துகிறார். அப்படியானால் நிலவுகிற பிரச்சனைக்கு தண்ணீர் பற்றாக்குரை, பெருகும் மக்கள் தொகை என்று சொல்வது எவ்வளவு அபத்தம் என்று யோசித்து பாருங்கள். இதை மறை நீர் (Virtual Water) கருத்தாக்கத்தோடு நாம் பொருத்தி பார்க்க வேண்டும்.

கோதுமை மணிகளை விளைவிப்பதற்கு நீர் தேவைப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் கோதுமை மணி விளைந்தவுடன் அதை உருவாக்குவதற்கு பயன்பட்ட நீர் அதில் காணப்படுவதில்லை. அதே சமயம் அந்த நீர் அந்த கோதுமை மணிக்குள் உட்பொதிந்துள்ளது அல்லது மறைந்துள்ளது என்பது உண்மைதானே? அந்த நீர்தான் மறை நீர் (Virtual Water) என்கிறார் லண்டனை சேர்ந்த புவியியலாளர் டோனி ஆலன். பெருமளவு தண்ணீர் தட்டுப்பாடும், பற்றாக்குறையும் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் ஏன் தண்ணீர் பிரச்சனை அல்லது அதற்க்கான போர் நடைபெறுவதில்லை என்றால் தமக்கு தேவையான உணவு பொருட்களை இறக்குமதி செய்து கொண்டாலே போதும். அது அவர்களுக்கு தேவையான நீரை நேரடியாக இறக்குமதி செய்து கொள்வதைவிட இது கொள்ளை மலிவு. எடுத்துக்காட்டாக ஒரு டன் கோதுமையை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளும் போது அயல்நாட்டு 1300 கே.மீட்டர் நீரையும் இலவசமாக இறக்குமதி செய்து கொள்கிறது அல்லது 1300 க.மீட்டர் அளவுக்கு தனது சொந்த நீரை சேமித்து கொள்கிறது என்று பொருள். ஒரு தோராயமான கணக்கீட்டின்படி ஒரு டன் தவசம் (தானியம்) 1000 டன் நீருக்கு சமம் என புரிந்து கொள்ளலாம். இப்படி நம் நாட்டில் இருந்து ஏற்றுமதி செய்யும் ஒவ்வொரு உற்பத்தி பொருளில் அடங்கியுள்ள மறைநீர் என்னவென்பதை கணக்கிட்டால் நமது நீர்வளம் எவ்வளவு கொள்ளை போகிறது என்பதை நாம் உணரமுடியும்.

சென்னையை இந்தியாவின் 'டெட்ராய்ட்' என்று பெருமையுடன் அழைத்து கொள்கிறோம். இந்த பெருமைக்கு பின்னே காணப்படும் கார் தயாரிப்பில் உள்ள மறைநீரின் அளவைக் கணக்கிட்டோம் எனில் தலை சுற்றிவிடும். 1.1 டன் எடையுள்ள ஒரே ஒரு காரின் மறைநீர் அளவு நான்கு இலட்சம் லிட்டர். இந்த அளவானது இரண்டாயிரம் மக்கள் தொகைக்கு கொண்ட 5 கிராமங்களின் ஒரு நாள் புழுணங்குநீர் அளவுக்கு சமமாகும்.ஒரு ஆண்டுக்கு இலட்சக்கணக்கில் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யபப்டும் திருப்பூர் ஆடைகள் சாயப்பட்டறை அலைகளால் நமது நொய்யல் ஆற்றின் கதியை யோசித்து பாருங்கள். இப்போது நமது நீர்வளம் எவ்வளவு கொள்ளை போகிறது என்று நீங்களே யோசித்து பாருங்கள். ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்கும் போது, ஏழு லிட்டர் கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேறும் ஒவ்வொரு லிட்டர் நீரும் மேலும் எட்டு லிட்டர் நிலத்தடி நீரை நஞ்சாக்குகிறது. ஆக ஒரு லிட்டர் குளிர்பானம் தயாரிக்க 56 லிட்டர் நல்ல நீர் அழிக்கப்படுகிறது. நமது நீர்வளத்தை ஒரு லிட்டர் குளிர்பானமே இவ்வளவு சுரண்டுகிறதென்றால், நமது ஊர்களில் அமைந்துள்ள ஒரு குளிர்பான நிறுவனம் ஊரின் ஒட்டுமொத்த நிலத்தடி நீரையே அழித்துவிடும். அப்படிப்பட்ட குளிர்பான நிறுவனத்தை விரட்டுவது மனு கொடுத்து, கோரிக்கை வைத்து தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. மக்கள் போராட்டம் மூலமே இவர்களை விரட்ட முடியும். தங்கள் நீர்வளத்தை காலி செய்த ஒரு குளிர்பான நிறுவனத்தை கேரளாவின் பிளாச்சிமடா மக்கள் விரட்டியடித்து நமக்கு முன்னுதாரணமாக திகழுகிறார்கள். பகாசுர பெக்டெல் (Bechtel)  நிறுவனத்தை விரட்டியடித்து, தண்ணீர் தனியார்மயத்திற்கு எதிராக எப்படி போராடுவது என்பதற்கு பொலிவியா நாட்டு மக்கள் உலகத்துக்கே வழிகாட்டியாக உள்ளனர்.
விண்கலங்களை, ஏவுகணைகளை என அதிதொழில்நுட்பமும் கொண்ட அமெரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு கார், உள்ளாடை தயாரிக்க தெரியாதா? ஏன் அவர்கள் இங்கே வந்து கடை போடுகிறார்கள்? அவர்களுக்கு கதவு திறந்துவிட்டது யார்? இந்த இடத்தில் இருந்துதான் உலகமயம், தாராளமயம் பற்றி நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, உலக முதலாளிகளுக்கு கடை போட கதவு திறந்துவிட்ட நமது அரசுகள் யார் நலன் சார்ந்து செயல்படுகிறது  என்று நாம் புரிந்து கொள்ள முடியும். கதவு திறந்த பொழுதிலும் உலகமயத்திற்கு நமது தற்சார்பு உற்பத்தி கலாச்சாரம் பெரிதும் சவாலாக இருந்தது. நிலம் - நீர்நிலை அடிப்படை.  அதைக்கொண்டு வேளாண்மை, உணவு, உடை, பானை, கட்டில் என ஒரு ஊருக்கு தேவையான அனைத்து உற்பத்தியும் அங்குள்ள மக்களால் நிகழ்த்தப்பட்டது. பசுமை புரட்சி நிலத்தை அழித்தது, உலகமயம் நீர்வளத்தை, மக்கள் உழைப்பை சுரண்டியது. உலகமயத்திற்கு எதிராக இருந்த நமது தற்சார்பு உற்பத்தி பண்பாட்டை உடைத்தார்கள். நீரே தேவைப்படாத பனையிலிருந்து வெல்லத்தை எடுத்து தேனீரோ, காப்பியோ தயாரித்து குடித்து வந்த சமூகம் முழுக்க முழுக்க மது தயாரிக்கும் பீர் கம்பெனிகளுக்கு தேவைப்படும் வெள்ளை சீனிக்கு மாற்றப்பட்டு இருக்கிறோம். ஒரு கிலோ சீனியிலும் 1653 லிட்டர் நீர் மறைந்துள்ளது. நிலவுகிற ஒவ்வொரு மக்கள் பிரச்சனையிலும் உலகமயத்தையும், மக்களுக்காக செயல்படாத அரசுகளையும், அதன் கொள்கைகளையும் கேள்வி கேட்க்காமல், எதிர்க்காமல் நமக்கு விடிவு பிறக்காது.

எடுத்துக்காட்டாக ஆக்கிரமித்தோ அல்லது சட்டப்படி ஆக்கிரமித்தோ ஒரு பொறியில் கல்வி நிறுவனம் நம் ஊரில் உள்ள ஒரு நீர்நிலையில் கட்டிடங்களை காட்டுகிறது என்றால் அதை நாம் எப்படி புரிந்து கொள்வது. உலகமயம் என்னும் கள்ள கதவு வழியே நம் நாட்டுக்குள் நம்மை கொள்ளையடிக்க வந்த உலக கொள்ளையர்களான அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சொற்ப கூலியில் வேலை பார்க்க பணியாட்கள் தேவை. அந்த பணியாட்களை உருவாக்கி தரும் வேலையை உள்ளூர் கொள்ளையர்களான  கல்வி நிறுவனங்கள் செய்து கொண்டு இருக்கிறது. இப்போது நாம் நீர்நிலை ஆக்கிரமிப்பை எப்படி பார்க்கிறோம். அது எதோ மாவட்ட நிர்வாகத்தின் குற்றமாகவோ அல்லது கல்வி நிறுவனத்தின் குற்றமாகவோ பார்க்கிறோம். ஆனால் அப்பிரச்சனையின் வேர் உலகமயத்தோடும், அதனை அனுமதித்த நமது அரசாங்க கொள்கையோடும் பின்னி பிணைந்திருப்பது நமது கண்களுக்கு தெரிவதில்லை. உலகமயமும் தாராளமயமும் பாரம்பரியமாக வேளாண்மை, மீன்படி, மேய்ச்சல் ஆகியவற்றில் ஈடுபட்ட மக்களை கூலிகளாக மாற்றி இருக்கிறது. கூலிகளாக மாற்றப்பட்ட எளிய மக்களை அள்ளிப் போகவே போக்குவரத்துகள் அதிகரித்தன. அதன் விளைவாக கண்மாய்க்குள் பேருந்து நிலையங்கள் முளைத்தன. இப்படி இயற்கை வளங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு பேரழிப்பு திட்டங்களின் வேர்களை தேடினால் அது உலகமயத்தின் தான் போய் முடியும். நீர்நிலை பாதுகாப்பு என்கிற பெயரில் நாம் தொடர்ந்து பிரச்சனையின் கிளைகளை வெட்டவே முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். வளர்ச்சி என்ற பெயரில் நம்மை சுற்றி நிகழுகிற நிகழ்த்தப்படுகிற ஒவ்வொரு பிரச்சனையிலும் உலகமயமும், அதனை அனுமதிக்கிற அரசின் அமைப்புமுறையும் வேராக வளர்ந்து கொண்டு இருக்கிறது. அதை எதிர்க்காமல் அல்லது புரிந்து கொள்ளாமல் ஒரு மக்கள் இயக்கமாக உருவெடுத்து குளத்தை தூர்வாருவதோ, சுத்தப்படுத்துவோ என்பது நம்மை நாமே திருப்திபடுத்திக் கொள்கிற அல்லது மக்களை மாற்றத்தை நோக்கி நகர்த்துகிறோம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிற செயலாகும். என்னதான் தூர்வாரி வைத்தாலும் ஆலை மற்றும் குடியிருப்பு  கழிவுகளை நாம் தூர்வாரி வைத்து இருக்கிற குளங்களும் ஏரிகளும்தான் சுமக்க போகிறது. நமது வரிப்பணத்தையும், நம்மை ஆளுகிற அதிகாரத்தையும் அரசு என்கிற அமைப்பிடம் நாம் கொடுத்திருக்கிறோம். அவர்களை மக்களுக்காக வேலை பார்க்க வைப்பதும், அதற்கான கொள்கைகளை செயல்படுத்த வைப்பதும்தான் ஒவ்வொரு குடிமகனின் சமூக கடமை. அதற்க்கு மக்கள் போராட்டம் ஒன்றே தீர்வு.

நாம் என்ன செய்ய வேண்டும்:
பண்டைய காலம் தொட்டு பல படையெடுப்புகள், போர்கள் நடைபெற்று இருக்கிறது. வெற்றி பெற்ற மன்னன் தலைநகரை எரித்தனர். கோட்டைகள் தரைமட்டமாக்கபட்டன. ஆனால் எப்போதும் எந்த போரிலும் பாசனக் கட்டுமானங்களையோ அல்லது நீர்நிலைகளையோ இடிக்கவில்லை. தலைமுறை தலைமுறையாக நீரியல் கட்டுமானங்கள் பாதுக்காக்கப்பட்டு இருக்கிறது. இன்று நமது நீராதாரங்கள் அழிக்கப்படுகிறது என்றால் என்ன பொருள், நம்மீது தாக்குதல் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம்.
ஆறுகளை, நீர்நிலைகளை மீட்பது, பாதுகாப்பது அல்லது பராமரிப்பது என்பது எதோ அரசின் துணையோடு குப்பைகளை அகற்றுவது, தூர்வாருவது, நெகிழி பயன்பாட்டை குறைப்பது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது, கரைகளை வலுப்படுத்துவது போன்ற ஒரு தன்னார்வ முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. இதற்க்கென மாணவர்கள், பல்துறை தொழிலாளர்கள் திரட்டுவது போன்ற நடவடிக்கைகள் அதில் அடங்கும். ஆறுகளை, நீர்நிலைகளை ஓரீரு நாட்கள் சுத்தம் செய்வது போன்று ஒளிப்படங்களை எடுத்துக் கொள்ளுபவர்கள் அப்பணிக்கு அரசிடமோ, தனியாரிடமோ விருதுகளை பெறுகிறார்கள். ஆனால் காலம் காலமாக துப்புரவு பணியில் ஈடுபடும் தொழிலார்கள் நிலை இச்சமூகத்தில் என்னவாக இருக்கிறது என்பதை பற்றி நமக்கு எந்த கவலையுமில்லை. சரி பன்னெடுங்காலமாக நல்ல நிலையில் இருந்த ஆறுகளும், நீர்நிலைகளும் எதனால் அழிவின் விளிம்பிற்கு வந்தன? அதற்க்கு என்ன காரணம் ? இத்தனை காலமாக இந்த நீராதாரங்கள் யாரால் பாதுகாக்கப்பட்டது? எப்படி பாதுகாக்கப்பட்டது? என்பதை ஆய்வு செய்து, கண்டறிந்து, பின் திட்டம் போட்டு வேலை செய்யாமல், வெறும் குப்பைகளை அகற்றுவதால் மட்டுமே நமது நீராதாரங்களை மீட்டுவிடலாம் என்று சொல்வது ஏமாற்று வேலைதானே.

இன்று ஆறுகள், நீர்நிலைகள் ஆகியவற்றுக்கு ஏற்பட்டு இருக்கும் சிக்கல் என்னவென்பதை ஆராய்வோம். மழைநீர் தேக்கமாக இருக்கும் நீர்நிலைகள் தவிர்த்து ஆறுகளோடு கால்வாய்களின் வழி ஒவ்வொரு நீர்நிலையும் இணைக்கப்பட்டிருக்கிறது. நீர்நிலைகளுக்கு நீராதாரமாக இருக்கும் ஆறுகளை மீட்பதே நீர்நிலைகளை மீட்க்கும் முதன்மை பணியாக இருக்கிறது. தென்னிந்தியாவை பொறுத்தமட்டில் அனைத்து ஆறுகளும் மலைக்காடுகளிலிருந்தே உற்பத்தியாகின்றன. எனவே ஆறுகளை மீட்பதென்பது நமது மலைக்காடுகளையும் அதன் பல்லுயிரிய சூழலையும் மீட்பதிலிருந்தே துவங்குகிறது. இத்தனை பெரிய பணியை யார் செய்ய முடியுமென்றால் அரசுகள்தான் செய்ய முடியும். அதை செய்வதற்கான வல்லமையும், அதிகாரமும், நமது வரிப்பணத்தை கொண்ட பொருளாதார ஆற்றலும் நாம் தேர்ந்தெடுத்த அரசுகளுக்கே மக்களாகிய நாம் வழங்கி இருக்கிறோம். ஆனால் நமது அரசுகள் ஏன் இதை செய்ய மறுக்கிறது என்பதை புரிந்து கொண்டு அரசை நமக்காக செயல்பட வைப்பதற்கு நாம் போராட வேண்டும்.

ஆறுகளின் உற்பத்தியிடமாகிய மலைக்காடுகள் தேயிலை தோட்டங்களுக்காகவும், தாது சுரங்களுக்காகவும், சுற்றுலா மற்றும் சொகுசு விடுதிகளுக்காகவும், தேக்கு மரங்களுக்காகவும் வெட்டி அழிக்கப்படுகிறது. சுனைகள், ஊற்றுகள் அதன் தன்மையை இழக்கிறது. தமிழகத்தில் ஒரு சில நாட்கள் பெய்யும் மழையை இந்த அடர் காடுகள்தான் தன்னகத்தே தேக்கி வைத்துக் கொண்டு ஆண்டு முழுக்க ஆறுகளில் தண்ணீரை ஓட செய்கிறது. அக்காட்டில் வாழும் உயிரினங்களும் பழங்குடி மக்களும் காட்டை உயிர்ப்புடன் வைத்திருந்தனர். காடு அவர்களை உயிர்ப்புடன் வைத்திருந்தது. தண்ணீரை தேக்கி வைக்கும் பசுமைக்காடுகள் உலகமயத்தின் விளைவால் மொட்டையடடிக்கப்படுகிறது. ஏற்றுமதியாகிற ஒவ்வொரு கோப்பை தேனீருக்குள்ளும் அழிக்கப்பட்ட நமது உயிர்ச்சூழல் காட்டின் குருதி கலந்திருக்கிறது.

அடுத்தாக ஆற்று மணல் கொள்ளை. தமிழகத்தை விட அதிகமான ஆறுகள் கேரளத்தில் ஓடுகிறது. ஆனால் எந்த ஆற்றிலும் மணல் அள்ளுவதற்கு அங்கு அனுமதியில்லை. இருகரைகள் தொட்டு நீராடுவது மட்டுமே ஒரு ஆறின் சிறப்பாகிவிடாது. எப்போதும்  நீரோட்டம் இருப்பது மட்டுமே ஆற்றின் அளவுகோல் இல்லை. நீரோட்டத்தோடு, ஆற்றின் கரைகள், அக்கரைகளையொட்டி வளர்ந்திருக்கும் தாவர வகைகள், ஆற்றினுள் வளர்ந்து நிற்கும் புல் வகைகள், ஆற்று நீரில் கண்ணுக்குத் தெரியாமல் இருந்துவரும் நுண்ணுயிரிகள், அவற்றை உண்டு வாழும் மீன்கள் என இவையெல்லாம் சேர்ந்துதான் ஒரு நதியை உயிரோட்டமிக்கதாக வைத்திருக்கிறது ஆற்று மணலை அடியோடு அள்ளுவதால் மட்டும்தான் அப்பகுதியின் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படும் என்றில்லை. மணலை அள்ளும்பொழுது ஆற்றின் கரைகளுக்குச் சேதம் ஏற்பட்டு, அவை பலவீனப்படும்பொழுது, ஆற்றின் கொள்ளளவு குறைந்து அதன் காரணமாகவும் மணல் அள்ளும் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பாதிப்படையும். ஆற்றில் ஓடிவரும் நீரை மணல்தான் பிடித்து வைக்கிறது.  கட்டாந்தரை தெரியும் அளவிற்கு, களிமண் வரும் வரையிலும் மணல் சுரண்டப்பட்டுவிட்டால், நீரை தேக்கிவைத்து நிலத்தடி நீரை பெருக்கும் ஆற்றலை ஆறு இழந்துவிடுகிறது.  அதன் பிறகு, ஆறும் சிமெண்ட் சாலையும் ஒன்றுதான். ஓடிவரும் நீரை விரைவாகக் கடலுக்குள் கொண்டு சேர்த்துவிடும். இன்று தமிழகத்தில் மணல் அள்ளப்படாத ஆறுமில்லை, நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாத ஊருமில்லை.
ஏரியை அல்லது ஊரை சுத்தப்படுத்துகிறோம் என்ற பெயரில் நன்னீர் தாவரங்களையும், சில நாட்டு செடி, கொடிகளையும் இப்போது அகற்றிவிடுகிறார்கள். சுத்தம் என்கிற மேட்டுக்குடிகளின் கோட்பாடு நமக்கு கொடுத்திருக்கும் ஒரு கேடான சிந்தனை இது. சுத்தமான சூழலில் இருப்பதற்கும், ஆரோக்கியம்மான சூழலில் வாழ்வதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. புல்வெளிகள், மரங்கள், பட்டாம்பூச்சிகள், பறவைகள், அணில்கள் இவைகளுடன் வாழ்வது ஆரோக்கியமான சூழல் (Healthy Environment). சிமெண்ட் தரை, பளிங்கு கற்கள் அமைத்து சூழலை உயிரற்ற சுடுகாடாக பளபளவென வைத்திருப்பது சுத்தமான சூழல் (Clean environment). எது நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் சிறந்தது என்று நாம் முடிவு செய்து கொள்வோம்.
உலகமயத்தின் விளைவாக நகரமயக்கமாக்கம். தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் பெருக்கம், தொழிற்சாலைகளுக்கு தேவையான நீர் என எல்லாம் ஒரு குறுகிய பகுதியில் குவிக்கப்பட்டு இருப்பதால் நகரின் நிலத்தடி நீர் முற்றிலும் வற்றிவிடுகிறது. போதாக்குறைக்கு நகரின் எல்லா நீர்நிலைகளும் ஆக்கிரமிக்கப்பட்டு அரசு அலுவலகங்களாகவும், மனைகளாகவும் மாறிவிட்டன. நிலத்தடிநீரை சேமிக்கும் வாய்ப்பு அல்லது ஏற்பாடு எல்லாவற்றையும் நகரம் காவு வாங்கிவிட்டது.  பல்வேறு தனியார் தண்ணீர் நிறுவனங்கள் புறநகரில் ஆற்றங்கரையோரமாக அல்லது ஏரிகளின் அருகில் தங்கள் நிறுவனத்தை அமைத்து, நிலத்தடி நீரை ஒரு துளிவிடாமல் உறிஞ்சி எடுத்துவிடுகின்றனர். இதனால் புறநகர் மற்றும் கிராமங்களின் நிலத்ததடி நீரும் குறைத்துவிட்டது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் வரை இயற்கை வளங்கள் மொத்தத்தையும் சுரண்டிக் கொண்டு இருக்கிறது அரசுகள் உருவாக்குகிற நகரம். நகரம் என்பதை விட உலக முதலாளிகளின் சரக்கை உற்பத்தி செய்வதற்கும்  விற்பதற்கான சந்தை என்று சொல்லலாம். நாமெல்லோரும் மக்கள் என்பதை விட நுகர்வோர் சொல்லலாம்.  நாம் நீரை குடிப்பதில்லை நுகருகிறோம். மற்றொரு பக்கம் நகரத்தில் பெருகும் தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு கழிவுகளை மறுசுழற்சி செய்யமுடியாமல் ஒவ்வொரு மாநகராட்சியும் ஆற்றிலும், ஏரிகளிலும் கழிவுநீரை கொட்டுகிறது அல்லது கழிவுநீர் கால்வாயை அவைகளோடு இணைத்துவிடுகிறது. நகரத்தின் வழியே போகும் ஆறுகள் சாக்கடையாகவும், நகரத்தில் இருக்கும் ஏரிகள் கழிவுநீர் தேக்கமாகவும் மாற்றப்பட்டுவிட்டது. அதனால் நிலத்தடிநீர் மாசுபட்டு, அந்த நீரை பாசனத்திற்கும், இதர பயன்பாட்டுக்கும் உபயோகிக்கும் மக்கள் பல்வேறுவித நோய்களுக்கு மக்கள் ஆளாகிறார்கள். தொழிற்சாலைகள் கழிவுகள், வேளாண்மை உயிர்கொல்லி நச்சுக்குகள் கலந்த நிலத்தடி நீரை எந்த வகையில் சுத்தப்படுத்தினால் குடிப்பதற்கு உகந்ததாக மாற்ற முடியாது. பெரும்பாலும் தனியார் தண்ணீர் நிறுவனங்கள் இந்த நிலத்தடி நீரை எடுத்துதான், நமக்கு குடிநீராக தருகிறார்கள்.

நீராதாரங்கள் அழிப்பும், கழிவுநீர் பெருக்கமும், வேளாண்மையில் பயன்படுத்தப்பட்ட வேதியியல் நச்சு மருந்துகளுக்கும் பல்லுயிர்சூழலின் சமநிலையை சீர்குழைத்துவிட்டது. ஒன்றையொன்று சார்ந்து வாழும் நன்னீர் தாவரங்கள், நுண்ணுயிர்கள், தும்பிகள், மீன்கள், தவளைகள், பாம்புகள், பறவைகள், நீர்நாய் என ஒரு உயிர்சங்கிலி அறுபட்டுவிட்டது. நீர்நிலைகள் அழிக்கப்பட்டுவிட்டதால் கொசுக்களின் முட்டைகளை உண்டு அதன் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் தவளைகள், தட்டான்கள் போன்ற உயிரினங்கள் அழிந்துவிட்டது. கொசுக்களின் பெருக்கத்தால் பல்வேறு நோய்களால் நாம் சிரமப்படுகிறோம். பாம்புகள், ஆந்தைகள் போன்ற உயிரினங்களின் வாழ்விட சூழல்  அழிக்கப்பட்டதால் எலிகளின் பெருக்கம் அதிமாகின. நீர்நிலைகளின் அழிவு அல்லது அதன் உயிர்ச்சூழலின் அழிவு என்பது மனிதயினத்தின் அழிவோடு இணைந்திருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே ஆறுகளை, நீர்நிலைகளை மீட்கும் நடவடிக்கை என்பது வெறும் குப்பை அள்ளுகிற செயலோ, சீமை கருவேலம் மரங்கள் அகற்றுகிற செயலோடு முடிந்து போகிற விசயமில்லை. பல்லுயிர்ச்சூழலை, மக்களை பாதுகாப்பது ஒரு அரசின் கடமை, அதற்க்கான அதிகாரமும், பொருளாதார சக்தியும், மானுட ஆற்றலும் நமது அரசிடம்தான் இருக்கிறது. நல்ல வழியில் மக்களை வழிநடத்தும் முதன்மை பொறுப்புணர்வு அரசிடமே உள்ளது. சரியான வழியில் மக்களை வழிநடத்த அரசு தவறுகிறபோதுபோராட்டங்களின் வழி மட்டுமே அரசை நெறிப்படுத்த முடியும், மக்களுக்கான அரசை உருவாக்க முடியும். வரலாறு நமக்கு அதைத்தான் கற்றுக் கொடுத்து இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஒரு தொண்டு நிறுவனம் அழியும்நிலையில் உள்ள நீர்நிலையில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்து, சீமை கருவேல மரங்களை அகற்றி, தூர்வாரி, நீர்நிலையை சுற்றிலும் குப்பை தொட்டி வைத்து, சிறந்த முறையில் ஒரு நீர்நிலையை மீண்டும் புதுப்பிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தொழிற்சாலையின் கழிவுநீர் நீர்நிலையில் கலக்கிறது அல்லது ஒரு லாரி மணல் அள்ளுகிறது என்றால் தொண்டு நிறுவனங்களால் சட்டப்படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய முடியாது. அதை அரசுதான் செய்ய முடியும். அதிகாரம் அரசிடம்தான் இருக்கிறது. அதற்காக நாம் போராடித்தானாக வேண்டும். அழியும் நிலையில் உள்ள கண்மாய் எதோ ஒரு தனியார் அமைப்பால் புதுப்பிக்கப்படுகிறதே என்று நாம் ஆறுதலடையலாமே தவிர மகிழ்ச்சியடைய முடியாது. எல்லாவற்றையும் தனியார் நிறுவனங்களே செய்யுமென்றால் நாம் எதுக்கு வரி கட்டணும், ஒட்டுப் போடணும். ஏரியை தூர்வாரி சீரமைத்தோம் என்ற பெயரில் இந்த தனியார் தொண்டு நிறுவனங்கள் எவ்வளவு நிதி யாரிடமிருந்தெல்லாம் பெறுகிறார்கள் என்று நமக்கு தெரியாது. அதே சமயம் இந்த மாதிரி மக்கள் பணிகளை செய்ய வேண்டிய அதிகாரம், பொருளாதாரம், மானுட ஆற்றல் கொண்ட அரசாங்கம் தூங்கி கொண்டு இருக்கிறது. மணல் குவாரிகளை, ஆக்கிரமிப்புகளை அரசே அனுமதித்தால் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்ய முடியும்? அரசை மக்களுக்காக செயல்பட வைக்கிற மக்களின் போரட்டம் ஒன்றே தீர்வு.

நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கு முன் வரலாற்றில் மக்களுக்கும் நீர்நிலைக்குமான வாழ்வியல் பண்பாட்டு தொடர்பு, உறவு எவ்வாறு இருந்தது, இன்று அது இவ்வாறு உருப்பெற்று இருக்கிறது என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டும். மானுட வாழ்வின்  தொடர்ச்சிக்கு உணவு முக்கியமாகும். உயிரினங்கள் அனைத்தும் உணவை கண்டடைவதையும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதையும் வாழ்க்கையாக கொண்டிருக்கிறது. வேட்டை சமூகம், வேளாண்மைக்குள் நுழைந்து நாகரிக சமூகமாக மாறியது உணவை உற்பத்தி செய்து கொள்ளும் முறையை கண்டறிந்த பிறகுதான். உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்கிறது புறநானூறு. நிலத்தையும் நீரையும் மேலாண்மை செய்ய கற்றுக் கொண்ட பிறகே நாடோடி சமூகம் குடிகளாக ஓரிடத்தில் அமர்கிறது. ஒரு ஊரை கட்டியமைப்பதற்கு நீர்நிலைகளையும் அது சார்ந்த கட்டுமான தொழில்நுடப்ங்களை அமைப்பதும்தான் முதன்மை தேவை. முல்லை நிலத்தில் மழையை மட்டுமே நம்பி வேளாண்மை செய்ய நீர்நிலைகள் கட்டப்பட்டது. மருத நிலத்தில் ஆற்றிலிருந்து கால்வாய் கட்டி நீர்நிலை அமைக்கப்பட்டது.

ஓர் ஊரில் ஊருணி, ஏரி, கண்மாய், குளம், குட்டை, தாங்கள், ஏந்தல் என ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் பல்வேறு நீர்நிலைகள் இருந்தன. பாசனத்திற்கு எரியும், கண்மாயும், குடிநீருக்கு ஊருணியும், குளிப்பதற்கு குளமும், துவைப்பதற்கு, கால்நடைகளை குளிப்பாட்டுவதற்கு குட்டையும், கழிப்பறையாக ஏரிக்கரைகளும், பொட்டல்காடுகளும் இருந்தன. நீர்நிலைகளில் மனிதனால் ஏற்படும் கழிவுகளை அங்குள்ள நுண்ணுயிரிகள் துவங்கி மீன்கள், வண்டுகள் வரை அனைத்துயிர்களும் உட்க்கொண்டு நீர்நிலையின் சமநிலையை பாதுகாத்து வந்தன. அதனால் கழிவுநீரை மேலாண்மை செய்ய வேண்டிய தேவை அக்கால மக்களுக்கு ஏற்படவில்லை எனலாம்.

நீரோடு இருக்கும் நீரில்லாத வறண்டு கிடக்கும் போதும் ஒரு நீர்நிலை மக்களின் வாழ்வியலில் கலந்தே இருந்தது. நீர் நிறைந்திருக்கும் ஒரு நீர்நிலை உழவர்களுக்கு  பாசன நீராகவும், மீனவர்களுக்கு மீன்பிடி ஏற்பாடாகவும், இடையர்களுக்கு கால்நடைகளை குளிர்விக்கும் அமைப்பாகவும், முளைப்பாரி கரைக்க, கரகம் எடுக்க, நீர்மாலை எடுக்க என தெய்வ நம்பிக்கையோடு தொடர்புடையதாகவும், துணி துவைக்க, நீச்சலடிக்க அனைத்து மக்களுக்குமான பயன்பாட்டு நீராகவும் மக்களுடன் ஒரு நீர்நிலை உறவு கொண்டிருந்தது. அதுவே நீர் குறைந்து சகதியாக இருக்கும் போது மீன்பிடித் திருவிழா நிகழ்த்தவும், பானை செய்வதற்கு மண்ணெடுக்குமிடமாகவும், சிறுவர்களுக்கு களிமண் பொம்மை செய்து விளையாடுவதற்கும், புரவி எடுப்பதற்கும், வெள்ளரி விதைப்பதற்கும் என மக்களோடு சகதியாக இருக்கும் நீர்நிலை உறவு கொண்டு இருந்தது.நீரற்று வறண்டுகிடக்கும் நீர்நிலை மேய்ச்சல் நிலமாகவும், வண்டல் மண் எடுப்பதற்கும், வெள்ளரி தோட்டமாகவும், இளவட்டங்களுக்கு விளையாட்டு திடலாகவும், சல்லிக்கட்டு போன்ற திருவிழா நடைபெறும் இடமாகவும் விளங்கியது. ஒரு ஊரின் சிறுவர் முதல் பெரியவர் வரை, அனைத்து சமூக மக்களோடும் நீர்நிலை தொடர்பில் இருந்ததால் காலம் காலமாக நீர்நிலை மக்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது. நடையாளர் பாதை உருவாக்குதல், பறவை காணுதல் என்பது இன்றைய மக்கள் கொண்டிருக்கும் புதிய பண்பாட்டு உறவாகும். மக்களோடு உறவில் இருக்கும் நீர்நிலையை யாரும் ஆக்கிரமிக்கவோ, அழிக்கவோ முடியாது. நீர்நிலையை நம்பி கடைசி உழவன் இருக்கும்வரை அந்த நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக தொடர்ந்து போராடுவான், மனு போடுவான், நீதிமன்ற படிகளை ஏறுவான்.

நீர்நிலையை உருவாக்குவது, பாதுகாப்பது, பராமரிப்பது போன்று காலம் காலமாக மக்களிடமிருந்து உரிமை, அதிகாரம் பறிக்கப்பட்டு அரசின் பொதுப்பணித்துறை வசம் ஆங்கிலேயர்கள் காலத்தில் ஒப்படைக்கப்பட்டது. வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்று சொல்லி மக்களின் வசமிருந்த ஏரிகளை கட்டிடங்கள் கட்டி ஆக்கிரமித்து கொண்டார்கள்.  ஆனால் எல்லா இடங்களிலும் அப்படி ஆக்கிரமிக்க முடியவில்லை. தெய்வமாகவும், வாழ்வாதாரமாகவும் மக்களோடு கலந்திருக்கும் நீர்நிலையை ஆக்கிரமிக்கும் முயற்சிக்கு எதிராக உழவர்கள், மீனவர்கள், இடையர்கள், குயவர்கள் என அனைவரும் போராட துவங்கினார்கள். மக்களின் பண்பாட்டு தொடர்பு உலகமயத்தின் போக்கிற்கு எதிராக, சவாலாக இருந்தது. உடனே  பசுமை புரட்சி என்று சொல்லி உழவர்களை வெளியேற்றினார்கள். வரத்துக் கால்வாயை அடைத்து நீர்நிலையை வறண்டு போக செய்து மீனவர்களை, இடையர்களையும் வெளியேற்றினார்கள்.  படித்தபுதிய தலைமுறையினரை வேலைவாய்ப்பு என்று சொல்லி பட்டணம் நோக்கி இழுத்தார்கள். படிக்காதவர்களுக்கு மதுக்கடைகளை திறந்தார்கள்.  விளைநிலங்கள் விலைநிலங்களாக மாறியது. பூர்வக் குடிகள் வெளியேற்றப்பட்டு கிராம் நகரமாக மாற்றப்பட்டது. கிராமத்தின் பூர்வக் குடிகள் நகரத்து கூலிகளானார்கள். அவர்களுக்கும் நீர்நிலைக்கும் உள்ள பாரம்பரிய பண்பாட்டுத் தொடர்பு அறுக்கப்பட்டது. கிராமம் நகரமானது. நீர்நிலைகள் கேட்பாரற்று அனாதையானது. நீர்நிலைகள் மூடப்பட்டு கட்டிடங்கள் முளைத்தன. போராடுவதற்கு அதன் உறவுக்காரர்கள் யாருமில்லை. நகரத்து மக்களுக்கும் நீர்நிலைக்கும் உள்ள ஒரே தொடர்பு நிலத்தடி நீர், குடிநீர் மட்டும்தான். அதையும் குழாய் வழியாகும் லாரி மூலமாகவும் கொடுத்துவிட்டால் நீர்நிலையை யாரும் கண்டுக் கொள்ளமாட்டார்கள். அதற்காக யாரும் போராட்ட மாட்டார்கள். நல்ல நிலைமையில் இருக்கும் ஒருசில நீர்நிலைகளையும் கழிவுநீர் தேக்கமாக மாற்றிவிட்டால், அதை மூடச் சொல்லி மக்களே கோரிக்கை வைப்பார்கள். பிறகென்ன அதை அப்படியே ஆக்கிரமித்துக் கொள்ளலாம். மேலும் வறட்சி காலங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி வீடுகளில் இல்லாததால்தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறதென்று சிந்தனையை உருவாக்கி மக்கள் மீது குற்றம் சுமத்திவிட்டால் போதும்.  தண்ணீரென்றால் குழாயில் வரும், பாலென்றால் பாக்கெட்டில் வரும் என்றுதான் அடுத்த தலைமுறையினருக்கு தெரியும். உண்மையில் மண்ணும் நீரும், காற்றும் இயற்கையின் கொடை. அதை பாதுகாத்தால் தான் நாமும் நம் தலைமுறையும் உயிர்வாழ முடியும் என்ற நெருக்கடி நிலை வரும் போது பாதுகாப்பதற்கு நம் கையில் எதுவும் இருக்காது. ஆறுகளை மீட்பது, நீர்நலையை மீட்பதென்பது உலகமயத்திற்கு எதிர்க்க இருந்த நமது பண்பாட்டை மீட்ருவாக்கம் செய்ய வேண்டும். அதிலுள்ள சாதிய அடுக்குகளை, ஆணாதிக்கத்தை களைந்து, தற்சார்பு உற்பத்தி கலாச்சாரத்தை மீட்ருவாக்கும் போது, இயற்கை பாதுகாப்பு நடவடிக்கை என்பது எந்த விழிப்புணர்வு பிரச்சாரம், மேடை பேச்சுகள் இல்லாமலே தன்னால் நடக்கும். எனவே ஆற்றை அல்லது நீர்நிலையை மீட்பதென்பது அதன் பிறப்பிடத்தை, வரத்து கால்வாயை, பல்லுயிரிய சூழலை பாதுகாக்க வேண்டும். மணல் கொள்ளை, கழிவு நீர் கலப்பு, கரையோர மரங்கள் அழிப்பு, ஆக்கிரமிப்பு ஆகிய நடவடிக்கைகளை தடுக்க வேண்டும். வண்டல் மண்ணெடுக்கும் உரிமை, நீர்நிலைகளை பராமரிக்கும் உரிமை உள்ளிட்ட உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். முதன்மையாக வேளாண்மை, மீன்பிடி உள்ளிட்ட நீராதாரங்கள் மீது மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு உறவை, உலகமயத்திற்கு எதிரான தற்பசார்பு பொருளாதாரத்தை கட்டியமைக்கும் தற்சார்பு உற்பத்தி கலாச்சாரத்தை, கூட்டு வாழ்வின் அறத்தை, பொதுவுடைமை அரசமைப்பை உருவாக்கம்  அல்லது மீட்ருவாக்கம் செய்ய வேண்டும். அதை செய்வதற்கான மக்கள் இயக்கங்களையும் அரசியல் கட்சிகளையும் அடையாளம் காண வேண்டும் அல்லது உருவாக்க வேண்டும். அதற்கு நமது மக்களை தயார்ப்படுத்துவோம். 

Comments

  1. மிக ஆழமான கருத்துகள் அமைந்த பதிவு. எவ்வளவ அருமையான செய்திகள்..... அருமை ஐயா!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை