திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?


திருப்பரங்குன்றம் மலை: 

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பகுதியில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம் மலை. சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் 3 கி.மீ சுற்றளவும், 1050 அடி உயரமும் கொண்ட அனற்பாறைகளிலான (Igneous Rock) குன்றாகும். அட்சரேகை, தீர்க்கரேகை 9.877188, 78.069965 என்கிற குறியீட்டு அச்சுதூராங்களில் மதுரை நகரில் இருந்து சுமார் கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பரங்குன்றம்  மலை. 

திருப்பரங்குன்றம் மலையின் வடக்குப்புறத்தில் தென்கால் கண்மாய், வடகிழக்கில் திருக்கூடல் மலை, கிழக்கில் தியாகர்யார் பள்ளி வளாகம், மேற்கில் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம், தென்மேற்கில் பானாங்குளம், தெற்கில் செவ்வந்திக்குளம், ஆரியங்குளம்  கண்மாய், பறையன்மலை ஆகியவை எல்லைகளாக அமைந்துள்ளன.

பரம் என்றால் உயர்ந்தது. குன்றம் என்றால் மலை. உயர்ந்தமலை என்னும் பொருளில் திருப்பரங்குன்றம் என்று பெயர் பெற்று இருக்கலாம். புராணங்கள் இம்மலைக்கான வெவ்வேறு காரணங்களை முன் வைக்கின்றனர். முருகப் பெருமானின் படை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம். சமணர்கள் வாழ்ந்த எண்பெருங்குன்றில் முதல் குன்றாக குறிப்பிடப்படுவதும் திருப்பரகுன்றமே.

திருப்பரங்குன்றம் மலைக் கோயில்கள்:

முருகன் வழிபாடு, கொற்றவை - தவ்வை உள்ளிட்ட தாய்த் தெய்வ வழிபாடு, நாட்டார் வழிபாடு, சமணம், சைவம், வைணவம், இசுலாம் உள்ளிட்ட பல்வேறு சமய மரபுகளை தாங்கி நிற்கும் சமூக நல்லிணக்கத்திற்கு சான்றாக  திருப்பரங்குன்றம் மலை விளங்குகிறது. இம்மலையில் இரண்டு குடைவரைக் கோயில்கள் உள்ளன.  

  • மலையின் வடக்குசரிவு அடிவாரத்தில் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி - சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இதுவொரு குடைவைக் கோயிலாகும். 
  • சுப்ரமணிய சுவாமி கோயிலில் இருந்து 500அடி தள்ளி மேற்குப்புறமாக மலையின் அடிவாரத்தில் பழனியாண்டவர் கோயில் உள்ளது. 
  • பழனியாண்டவர் கோயில் பின்புறமுள்ள பாறையில் மகாவீர் சிற்பங்களும் சுனையும் உள்ளது. 
  • திருப்பரங்குன்றம் மலையின் மேற்குபகுதியில் மலையின் மேலே தமிழிக் கல்வெட்டுகளும், சமணர் கற்படுக்கைகளும் காணப்படுகிறது. 
  • மலையின் தெற்கு பகுதியில் 300அடி உயரத்தில் காசி விஸ்வநாதர் கோயிலும், கோயிலுக்கு முன்பு உள்ள பாறையில் பார்சுவநாதர் சிற்பங்களும், சுனையும் அமைந்துள்ளது. 
  • மலையின் தெற்கு பகுதி அடிவாரத்தில் உமையாண்டார் குடைவரை கோயில் அமைந்துள்ளது. துவொரு குடைவைக் கோயிலாகும். 
  • சுப்ரமணிய கோயிலில் இருந்து கிழக்கே ஆறுமுக நயினார் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் எதிரே சரவணா பொய்கை என்னும் தடாகம் உள்ளது. 
  • ஆறுமுக நயினார் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பாறை நக்கீரர் சிவனை வழிபட்ட பஞ்சராட்சை பாறை என்றும், நக்கீரர் தங்கியிருந்த குகை என்றும் அழைக்கப்படுகிறது. 
  • மலையின் தெற்கு பகுதியில் மரத்தடியில் கன்னிமார் கோயில் ஒன்று உள்ளது.  
  • திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் சிக்கந்தர் தர்காவும், அதில் இருந்து 50அடி கீழே நெல்லித்தோப்பும் உள்ளது. 
  • இவை போக பல்வேறு நாட்டார் தெய்வங்களின் கோயில்கள் மலையின் அடிவாரத்தில் உள்ளது.  இவ்வாறாக ஒவ்வொரு வழிபாட்டு தளமும் தனித்தனியே யாருக்கும் எந்தவித இடையூறும் இல்லாமல் திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ளது. 


திருப்பரங்குன்றம் மலையில் இன்று நிலவும் பிரச்னை என்ன?

  • சிக்கந்தர் தர்கா நிர்வாகத்துடன் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கும் கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேல் தகராறு இருப்பதாக தெரிகிறது. குன்றின் உச்சியில் சிக்கந்தர் தர்காவும் அதன் தென்மேற்கு பக்கவாட்டில் காசி விஸ்வநாதர் கோயிலும் அமைந்துள்ளது. 
  • முன்பு காசி விஸ்வநாதர் கோயில் அருகேயுள்ள காசிச்சுனையில் தர்காவின் தேவைக்காக நீர் எடுத்தும் சென்று இருக்கிறார்கள். காசிச்சுனையை வழிபடும் மக்களுக்கும் தர்காவை வழிபடும் மக்களுக்கும் அடிக்கடி சண்டைச் சச்சரவுகள் ஏற்பட்டுள்ளன. இவை ஆங்கிலேயர் காலத்தில் உயர்நீதிமன்றம் (Privy Council) வரை சென்றுள்ளது. ஆகவே காசிச்சுனைக்கு முகமதிய மக்களின் வரவை தடுக்கும் பொருட்டும், இதை ஒரு தனியான கோயிலாக புனிததன்மை மிக்க இடமாக அமைக்கும் எண்ணத்திலும்தான் பிற்காலத்தில் காசி விஸ்வநாதர் கோயில் என்ற கோயில் இம்மலையில் கட்டப்பட்டுள்ளது. (வேற்கோட்டம் - பக் 204) 
  • முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த திருமிகு. P.G. ராம ஐயர் அவர்கள் 25.08.1923இல் வழங்கியத் தீர்ப்பில் நெல்லித்தோப்பு மற்றும் அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசலும் கொடிமர கம்பமும் அமைந்துள்ள மலையுச்சி முகமதியர்களின் உரிமையான சொத்து எனவும், இவை தவிர்த்து மலையின் மற்ற இடங்கள், கிரிவல பாதை முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்டது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து தேவஸ்தானம் சார்பாக ஆங்கிலேயே அரசின் உயர்நீதிமன்றத்தில் (Privy Council) தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி P.G. ராம ஐயர் அவர்கள் வழங்கியத் தீர்ப்பை மீண்டும் 12.05.1930 இல் உறுதி செய்தது உயர்நீதிமன்றம். 
  • அதன் பிறகு தர்காவை சேர்ந்தவர்கள் காசிச்சுனையில் தண்ணீர் எடுப்பதை தடுக்கும் நடவடிக்கைகள் நடந்திருக்க வேண்டும். அதனையொட்டி தர்காவிற்கு பாத்தியப்பட்ட கொடிமரத்தின் அருகேயுள்ள இடத்தில் சுனைக் கட்டும் மராமத்து பணியை மேற்கொண்டு இருப்பதாக தெரிகிறது. தர்கா நிர்வாகத்தினர் சுனையை மராமத்து செய்யும் பணியை தடுத்து நிறுத்த கோரியும், அந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என அறிவிக்க கோரியும் மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பாக 1975ஆம் ஆண்டு வழக்கு (O.S No. 506/1975) தொடரப்பட்டது. இந்த வழக்கிலும் தர்கா நிர்வாகத்திற்கு சாதகமான தீர்ப்பே வெளியானது. 
  • அதன் பிறகு திருப்பரங்குன்றம் மலையுச்சியில் தர்கா இடத்திற்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து பகத் சன சபையின் தலைவர் V.தியாகராஜன் சார்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1994இல் வழக்கு (WP No 18884/1994) தொடரப்பட்டது. அந்த வழக்கிலும் தர்கா நிர்வாகத்திற்கு சொந்தமான இடம், அதில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்க முடியாது என 24.11.1994 அன்று தீர்ப்பு வெளியானது.
  • நெல்லித்தோப்பு பகுதியில் பக்ரீத் தொழுகையை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக 2023ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு (WP MD No 15565 of 2023) தொடர்ந்துள்ளது. அந்த வழக்கில் எவ்வித இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது என 23.06.2023 அன்று உத்தரவு வெளியானது. அந்த வழக்கின் விசாரணை இன்னும் தொடர்கிறது.     
  • அறுபடை வீடுகளில் முதற்படி வீடான மதுரை திருப்பரங்குன்றம் கந்தர்மலையை சிக்கந்தர்மலையாக மாற்ற தொடர்ந்து ஒரு கும்பல் முயற்சி செய்வதாக 01.02.2025 அன்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அறிக்கை வெளியிட்டார். (https://tamil.hindustantimes.com/tamilnadu/madurai-thiruparankundram-issue-senior-bjp-leader-h-raja-called-the-dmk-a-taliban-government-131738680539353.html) 
  • கடந்த 26.12.2024 அன்று ஆடு மற்றும் இரண்டு சேவல்களுடன் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் வந்துள்ளார். ஆனால், ஆடு, சேவல் மலைக்கு எடுத்துச் செல்ல, பலியிட அனுமதியில்லை எனக் கூறி காவல் துறையினர் தடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, சேவல் பலியிடுவது, அசைவம் உணவும் கூடாது. இதை நாங்கள் எதிர்க்கிறோம் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் கூறுகிறார். (https://www.bbc.com/tamil/articles/cpql11x75qeo)
  • சிக்கந்தர் தர்காவின் உள்ளே உள்ள மண்டபம் கற்தூண்களுடன் பார்ப்பதற்கு ஒரு கோயில் போன்றே உள்ளது. கோயில் இருந்த இடத்தை ஆக்கிரமித்து தர்கா கட்டப்பட்டுள்ளது என்கிற அவதூறான கருத்தையும் இந்து முன்னணி முன்வைத்துள்ளது. 

    

அண்மையில் திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவை முன்வைத்து நடக்கும் இந்த பிளவுவாத அரசியலை  செய்வது திருப்பரங்குன்றம் பகுதி வாழ் மக்களோ, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகமோ இல்லை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். மதநல்லிணக்கத்தை சீர்குலைத்து, பதட்டத்தை உருவாக்க வேண்டுமென்று திட்டமிட்டு இவ்வாறு போலியான குற்றச்சாட்டுகளை திட்டமிட்டு மதஅடிப்படைவாதிகள்  பரப்புகின்றனர். பின்னுள்ள அரசியலை, உண்மைகளை ஒவ்வொன்றாக அறிந்து கொள்வோம். 


திருப்பரங்குன்றமா? சிக்கந்தர் மலையா? 

    திருப்பரங்குன்றம் மலையின் பெயரை சிக்கந்தர்மலையாக மாற்ற முயற்சிப்பதாக பொய்யான குற்றசாட்டுகளை இந்துமத அடிப்படைவாதிகள்  முன்வைக்கின்றனர். வரலாற்றில் திருப்பரங்குன்றம் மலைக்கு வழங்கப்பட்ட பெயர்களை முதலில் அறிந்து கொள்வோம். 

 

    பரங்குன்றம், தண்பரங்குன்றம் என்று அகநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி உள்ளிட்ட தமிழின் தொன்மையான சங்க நூல்கள் திருப்பரங்குன்றத்தை குறிப்பிடுகின்றன. பரங்குன்றம், திருப்பரங்குன்றம் என்று தேவாரம், திருக்கோவை, பெரியபுராணம், கல்லாடம், திருப்புகழ் உள்ளிட்ட பக்தி இலக்கிய நூல்களும் பிற்கால இலக்கியங்களும் திருப்பரங்குன்றத்தை குறிப்பிடுகின்றன. திருப்பரங்கிரி, சத்தியகிரி, கந்தமலை, கந்தமாதனம், பரமசினம், சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரி, விட்டணுதுருவம் என பல பெயர்களை திருப்பரங்குன்றத்திற்கு புராணங்கள் வழங்குகின்றன. சமணர் கற்படுக்கைகள் அமைந்துள்ள மலைகளை பஞ்சபாண்டவர் மலை என அழைக்கும் வழக்கமுள்ளது. அதன் நீட்சியாக மேற்கு பகுதியில் உள்ள சமணர் படுக்கை அமைந்த பகுதியை பஞ்ச பாண்டவர் மலை என அழைக்கின்றனர். 


    சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவர்கள் அடக்கமாகியிருக்கும் மலை என்பதால் சிக்கந்தர் மலை என்று இசுலாமிய மக்கள் அழைக்கின்றனர். இவ்வாறாக பல பெயர்கள் இம்மலைக்கு வழங்கப்பட்டாலும், இன்று திருப்பரங்குன்றம் என்றே அழைக்கப்படுகிறது. 


    முருகன் என்போருக்கு திருப்பரங்குன்றமாகவும், கந்தன் என்போருக்கு கந்தமலையாகவும், சத்தியகிரிஈஸ்வரர் (சிவன்) என்போருக்கு சத்தியகிரியாகவும், பரங்கிரிநாதர் (சிவன்) என்போருக்கு திருப்பரங்கிரியாகவும், வாயுதேவன் வீசியெறிந்து கந்தமாதனமலையின் ஒரு சிறு துண்டு இம்மலை என்போருக்கு கந்தமாதனமலையாகவும், சமண நெறிகளை ஏற்போருக்கு சமண மலையாகவும், அதை பாரத கதைகளோடு ஏற்போருக்கு பஞ்ச பாண்டவமலையாகவும், சுல்தான் சிக்கந்தரை வேண்டுவோருக்கு சிக்கந்தர் மலையாகவும் திருப்பரங்குன்றம் விளங்குகிறது. பன்மைத்துவம்தான் ஜனநாயகத்தின் பண்பாடு. 

1991  ஆண்டில்  ஒரு மிக  முக்கியச்  சட்டம் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தது பிளேசஸ் ஆஃப் ஒர்ஷிப் ஸ்பெசல் புரொவிசன்ஸ் ஆக்ட் 1991 (Places of worship special provisions Act 1991) என்ற வழிபாட்டுத் தலங்களுக்கான சிறப்புச்சட்டம் அரசியலமைப்புச் சட்ட விரோதிகளால் பாபர் மசூதி இடிக்கப்படுமுன் அதன்  முந்தைய வருடம் இயற்றப்பட்டது.அச்சட்டப்படி 15.08.1947 ஆம் நாளில் ஒரு வழிபாட்டுத்தலம் என்னவாக இருந்ததோ அதே நிலையில் அது இருக்க வேண்டும் அதை இன்னொரு வழிபாட்டுத் தலமாக மாற்ற முயற்சிப்பது மூன்று வருட தண்டனைக்குரிய குற்றமென எட்டு பிரிவுகளைக் கொண்ட அச்சட்டம் கூறுகிறது. 

இந்தியாவில் பாபர் மசூதிக்கு மட்டுமே அச்சட்டத்திலிருந்து விதி விலக்கு வழங்கப்பட்டிருந்தது. கடந்த 12.12.2024 ஆம் நாள் இதே போன்று ஐந்து மசூதிகள் தொடர்பான  வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை ஒன்றை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்தியா முழுமையிலும் ஒரு வழிபாட்டுத் தலத்தை மாற்ற எவ்வித வழக்குகளும் தாக்கல் செய்ய இயலாது அவ்வாறு ஏற்கனவே நிலுவையிலுள்ள வழக்குகளில் சொல்லப்பட்ட உத்தரவுகளும் செல்லாது. சுருக்கமாகச் சொன்னால் சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து  எல்லா வழிபாட்டுத் தலங்களும் உள்ளது உள்ளபடி தொடர வேண்டும். (வழக்கறிஞர் லஜபதிராய், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை)


கந்தரா? சிக்கந்தரா? 

    கந்தனுக்கான கோயில் தனியாக மலையின் அடிவாரத்திலும், சிக்கந்தருக்கான தர்கா மலையின் உச்சியிலும் என மலையின் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளது. கந்தர சிக்கந்தரா? என்பதோடு சேர்த்து தமிழ்க் கடவுளர்ககளுக்கு இன்று வழங்கப்படும் பெயர்கள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.  

    திருப்பரங்குன்றம் மலையின் வடக்குச் சரிவில் உள்ள குடைவரைக் கோயிலில் சிவன், திருமால், திருமகள், கொற்றவை, தவ்வை ஆகிய தெய்வங்களுக்கு தனியாக கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 

    முருகன், செவ்வேள், சேயோன், செந்தில், வேலன், குமரன் ஆகியவை முருகனுக்கு வழங்கப்பட்ட பண்டைய தமிழ்ப் பெயர்களாகும். திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று சுப்பிரமணிய சுவாமி என்ற வடமொழி பெயரில் வழிபாடுகள் நடக்கிறது. மால், சேயோன் ஆகிய தமிழ்ப் பெயர்களால் அழைக்கப்பட்ட திருமாலுக்கு பவளகனிவாய் பெருமாள் என்ற பெயரில் வழிபாடுகள் நடக்கிறது. பரங்குன்றநாதருக்கு (சிவன்) இன்று சத்தியகிரிஈஸ்வரர் என்ற வடமொழி பெயரில் வழிபாடுகள் நடக்கிறது. பண்டைய தமிழ் இலக்கியங்கள் காட்டும் தாய் தெய்வமான கொற்றவைக்கு துர்கை என்ற வடமொழி பெயரில் வழிபாடுகள் நடக்கிறது. தவ்வை, திருமகள் உள்ளிட்ட தெய்வங்கள் இன்று முறையே ஜோஷ்டாதேவி, கஜலட்சுமி என்ற வடமொழி பெயரால் அழைக்கப்படுகிறார்கள். 

    ஸ்கந்தன், சண்முகன், சரவணன், சுப்பிரமணியன், தண்டாயுதபாணி என்ற வடமொழி பெயர்களில் தமிழக் கடவுள் முருகனுக்கு இன்று ஆகம கோயில்களில் வழிபாடுகள் நடக்கிறது. இன்றைய தமிழ்க் கடவுளின் நிலையை விடுங்கள். அரபு நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன உறவு?


உலகத்தோடு தமிழர்களின் தொடர்பு:

பழங்காலத்துத் தமிழர் தரை வழியாகவும் கடல்வழியாகவும் பாரதநாடு முழுவதும் சென்று வாணிகம் செய்தார்கள், உஞ்சை (உச்சயினி), கலிங்கப்பட்டினம், காசி (வாரணாசி), பாடலி (பாடலிபுரம்) முதலான இடங்களிலும் கடல் கடந்த நாடுகளாகிய காழகம் (பர்மா) அருமணவன் (Rāmañña), தக்கோலம் (Takkolas), கிடாரம் (கடாரம்), சாவகம் (கிழக்கத்தியத் தீவுகள்) முதலான இடங்களுக்கும் சென்று வாணிகஞ் செய்தனர். தமிழ்நாட்டு வாணிகர் அயல் நாடுகளுக்குச் சென்று வாணிகஞ் செய்தார்கள், மேற்கே இத்தாலி, கிரேக்கதேசம் (யவன நாடு) முதல் கிழக்கே சாவக நாடு (கிழக்கத்தியத் தீவுகள்) பர்மா, மலாயா வரையிலும் தெற்கே கன்னியாகுமரி முதல் வடக்கே கங்கைக்கரைப் பிரதேசம் வரையிலும் அக்காலத்துத் தமிழர் வாணிகம் நடந்தது. தமிழ் நாட்டின் மூன்று பக்கங்களிலும் கடல் சூழ்ந்திருந்தபடியால் தமிழர் இயற்கையாகவே கடற்பிரயாணஞ் செய்வதிலும் கப்பல் வாணிகம் செய்வதிலும் தொன்று தொட்டு ஈடுபட்டிருந்தார்கள். அயல் நாடுகளுக்குத் தரை வழியாகச் சென்று வாணிகஞ் செய்த சாத்தர் கழுதைகள், எருதுகள், வண்டிகள் ஆகியவற்றில் வாணிகப் பொருள்களை ஏற்றிக்கொண்டு கூட்டமாகச் சென்றார்கள். 


தமிழ் நாட்டுக்கு வடமேற்கிலிருந்து வந்த அராபிய வாணிகர் சேர நாட்டின் முசிறித் துறைமுகத்துக்கு வந்து வாணிகஞ் செய்தார்கள். யவனர் சிலர் தமிழ்நாட்டிலே தங்கித் தொழில் செய்தார்கள். அவர்கள் தச்சுத் தொழிலில் தேர்ந்தவர்கள், யவனத் தச்சர் என்று மணிமேகலை (19:108)


பாண்டி நாட்டின் தலைநகரான மதுரை அக்காலத்தில் கோட்டை மதிலுக்குள் இருந்தது. கோட்டை. வாயில்களில் யவன வீரர்கள் காவல் இருந்தனர். கோவலன் மதுரைக்குச் சென்றபோது கோட்டை வாயிலை யவன வீரர்கள் காவல் காத்திருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.


'கடிமதில் வாயில் காவலிற் சிறந்த

அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு'


(சிலம்பு, ஊர்காண். 66-67)


பாண்டியனுடைய பாசறையில் யவன வீரர்கள் இருந்ததை முல்லைப்பாட்டு கூறுகிறது. முழங்கால் வரையில் குறுகிய பாவாடை போன்ற ஆடை (வட்டுடை) அணிந்து உடம்பில் மெய்ப்பை (சட்டை) அணிந்து குதிரையோட்டும் பாத்திகையை (சம்மட்டியை)க் கையில் வைத்திருந்தனர். அவர்களுடைய தோற்றம் அச்சஞ்தருவதாக இருந்தது.


'மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை

மெய்ப்பை புக்கு வெருவருந் தோற்றத்து

வலிபணரி யாக்கை வன்கண் யவனர்'


என்று முல்லைப் பாட்டு (அடி, 59-61) கூறுகிறது.


தமிழகத்துக்குக் கிழக்கே நெடுந்தூரத்தில் ஆயிரம் மைலுக்கப்பால் கிழக்கிந்தியத் தீவுகள் (இந்தோனேசியா) உள்ளன. அந்தத் தீவுக் கூட்டத்தில் மிகப் பெரியவையும் சிறியவையும் மிக நுண்மையுமான தீவுகள் ஆயிரத்துக்கு மேற்பட்டவையுள்ளன. சங்க காலத் தமிழர் அக்காலத்தில் அந்தத் தீவுகளுக்குக் கடல் கடந்துபோய் வாணிகஞ் செய்தார்கள், அவர்கள் அந்தத் தீவுகளுக்குச் சாவக நாடு என்று பெயரிட்டிருந்தார்கள், மணிமேகலை காவியம் சாவக நாட்டைக் கூறுகிறது. சோழ நாட்டிலிருந்தும் பாண்டி நாட்டிலிருந்தும் அக்காலத் தமிழ் வாணிகர் சாவக நாட்டுக்குச் சென்று வாணிகஞ் செய்தது போலவே , சாவகத் தீவிலிருந்த சாவக வாணிகரும் தமிழ் நாட்டுக்கு வந்து வாணிகம் செய்தனர் என்பதில் ஐயமில்லை என்கிறார் மயிலை சீனி வேங்கடசாமி அவர்கள் (பழங்காலத் தமிழர் வாணிகம்: NCBHவெளியீடு 1978).


அரபு நாட்டுக்கும் தமிழ்நாட்டுக்கும் என்ன உறவு?:

    அரபு நாட்டவர் சங்க காலதிற்கு முன்பிருந்தே தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர். சங்க இலக்கியம் வெளிநாட்டு வணிகர்களை யவனர்கள் என்று குறிப்பிடுகிறது. நபிகள் நாயகம் காலத்திற்கு பின்  திருமறையை பரப்ப உலகெங்கிலும் இறைத்தூதர்கள் பயணித்தார்கள். அவ்வகையில் வணிக நோக்கிலும் திருமறையை பரப்பும் நோக்கிலும் தமிழகம் வந்தனர். அவர்கள் சோனகர், துருக்கர் என்றும் அழைக்கப்பட்ட செய்தியை கம்பராமாயணம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் குறிப்புகள் உள்ளன.  சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார், யவனர் என்ற சொல்லுக்கு யவனத்துருக்கர் என்று பொருள் கூறுகிறார். கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி, குலோத்துங்கச் சோழன் பிள்ளைத்தமிழ் ஆகிய இலக்கியங்களில் முஸ்லிம்கள் 'துருக்கர்' எனக் குறிக்கப்பட்டுள்ளனர். வரலாற்றின் பக்கங்களில் வடஇந்தியாவில் இஸ்லாமிய படையெடுப்பு நடந்து கொண்டு இருந்தது. ஆனால் தென்னிந்தியாவை பொருத்தவரை, கடல்வழியாக வந்த பெரும்வணிகர்களான இஸ்லாமியர்கள், உள்ளூர் அரசாங்கம் மற்றும் பொதுமக்களின் ஆதரவை பெற்றனர்.  

அரபியர்களும் தமிழர்களைப் போல பழைய நாகரிகத்தின் வழிவந்தவர்கள். எனவே இசுலாமிய சமயத்திற்கும் தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்கும் கொள்வதற்கும் சில உண்மைகளும் நெறிகளும் இருந்தன. யுனானி என்னும் மருத்துவமுறையும், அல்வா, பிரியாணி போன்ற உணவு வகைகளும் இசுலாமியர் வழித் தமிழ்நாட்டிற்கு வந்தவையாகும். படைப்போர், கிஸ்ஸா (கதை), முனாஜாத் (வாழ்க்கைச்  சரிதம்) நாமா (போற்றிப்பாடல்) முதலிய இலக்கிய வகைமைகளும் தமிழுக்கு இசுலாத்தின் பங்களிப்பே. (தொ. பரமசிவன் - அறியப்படாத தமிழகம் 2014 வெளியீடு பக் 77-79)


தமிழ்நாட்டிற்கும் அரபு நாடுகளுக்கும் இடையில் கடந்த இருபது நூற்றாண்டுகளுக்கு மேலாக வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. ஆதலால் வணிகத்தை தொடர்ந்து, இசுலாம் தோன்றிய ஏழாம் நூற்றாண்டு முதல் இசுலாமிய சமயச் சான்றோர்களும் தொண்டர்களும் தமிழ்நாடு வந்தனர். அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவரகளது நெருங்கிய நண்பர்களான தமீம் -உல்- அன்சாரி, முகம்மது பந்தர் ஆகியோர்களது இறுதி வாழ்க்கை, சமயத் தொண்டிற்காகவே, தமிழகத்தில் அர்ப்பணிக்கப்பட்ட இருப்பதும், அதற்கு சான்றாக அவர்களது அடக்கவிடங்கள் (தர்கா) முறையே பரங்கிப்பேட்டையிலும், கோவளத்திலும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. குமரி மாவட்டத்தில் கோட்டாறு நகரில், ஈராக் நாட்டு கர்சிம் (வலி) தர்கா உள்ளது. அதில் ஹிஜ்ரி 4 என (கிபி 624) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் கோதரிசா மலையில் உள்ள அப்துல் ரஹ்மான் (வலி) தர்காவில் ஹிஜ்ரி 8 (கிபி 628) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் அண்ணல் நபிகளார் காலத்திலேயே திருமறையை பரப்ப தமிழகம் வந்த இறைநேசர்களின் முதல் அணியை சேர்ந்தவர்கள் என்று கருதலாம். இதே காலகட்டத்தில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கட்டப்பட்ட பழைய ஜும்மா பள்ளிவாசல் (கிபி 628-30) தான் தமிழ்நாட்டின் பழமையான தொழுகை பள்ளியாக கருதப்படுகிறது.   

    சோழர் ஆட்சியின் போதே 'அஞ்சுவண்ணம்' என்ற வணிக குழு இருந்திருக்கிறது. முதலாம் இராசராசன் கல்வெட்டில் 'சோனகன் சாவூர் பரஞ்சோதி' என்பவன் குறிக்கப்பெறுகிறான். 'சோனகச் சிடுக்கின் கூடு' என்ற காதில் அணியும் நகை ஒன்றும் அவனது கல்வெட்டில் குறிக்கப்படுகின்றது. 

சோழர்களின் தலைநகராக விளங்கிய உறையூரில் ஹாஜி அப்துல்லா பின் முகமது என்பவரால் அமைக்கப்பட்ட தொழுகை பள்ளியான மக்கா பள்ளிவாசல் திருச்சியின் பழமையான பள்ளிவாசலாக கருதப்படுகிறது. அதன் காலம் கிபி 734 ஆகும். தற்போது திருச்சி கோட்டை ரயில் நிலையம் அருகில் உள்ளது. திருச்சியில் உள்ள ஹஸ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்கா கிபி 10ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பள்ளிவாசல் ஆகும். 

    கீழக்கரை பள்ளிவாசலை 17ம் நூற்றாண்டில் கிழவன் சேதுபதி காலத்தில், அமைச்சராக இருந்த வள்ளல் சீதக்காதி திராவிட கட்டிடக்கலை பாணியில் அமைத்துள்ளார். வள்ளல் சீதக்காதி ராமநாதபுர மன்னர் கிழவன் சேதுபதியின் அரண்மனையை கட்டுவதற்கு பொருளாதார ரீதியாக உதவினார் என தமிழக தொல்லியல் துறையின் அறிக்கை கூறுகிறது. அதேபோல பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு பல ஏக்கர் நிலங்களை மன்னர் சேதுபதி கொடையாக வழங்கியுள்ளார் என்பதும் பதிவாகியுள்ளது

    வணிகம், சமயம் உள்ளிட்ட நோக்கங்கள் மட்டுமல்லாமல், உலகில் பல்வேறு தேசங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகளும் அரபு நாடுகளில் இருந்து வந்தனர். இபுனு குர்தாப்பே (கிபி 844-48), இபுனு பக்சி (கிபி 902), இபுனு குஸ்தா (கிபி 903), அபு செய்யது (கிபி 950) மசூதி (கிபி 943-55), யாக்கத் (கிபி 1179) வஸ்ஸாப், ரஷிமுத்தீன், திமிஸ்கி (கிபி 1325), இபுனு பத்தூதா (கிபி 1355) ஆகியோர்களின் பயணக்குறிப்புகளில் இருந்து தமிழ்நாட்டைப்  பற்றிய வரலாற்று செய்திகள் கிடைக்கின்றன.  

    மேற்சொன்ன செய்திகளின் அடிப்படையில் இசுலாம் தமிழ்நாட்டிற்கு வந்து சுமார் 1400 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று கூறலாம். 


தமிழ் மண்ணோடு கலந்த இசுலாம்: 

இந்தியாவின் மிகப்பெரிய வழிபாடான திருமால் நெறியின் வளர்ச்சியில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் தன் பங்கைச் செலுத்தியுள்ளது. வாங்க நாடு திருமாலோடு ராதையை இணையாக சேர்த்தது. தமிழ்நாட்டு வைணவம் ஆண்டாளைத் திருமாலோடு இணையாக சேர்த்தது. 

இசுலாத்தின் செல்வாக்கால் தமிழ் வைணவத்தில் 'துலுக்கநாச்சியார்' கதை பிறந்தது. மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவில் அழகர் கோயில் அழகரைப் பற்றிய கதை ஒன்று வழங்கி வருகிறது. 'தன் தங்கை மீனாட்சி திருமணத்தை கணவரும் அழகர் கோபித்துக் கொண்டு தன் காதலி துலுக்கநாச்சியார் வீட்டில் தங்குகிறார்' என்பது அக்கதையாகும். உண்மையில் அவ்விடத்தில் துலுக்கநாச்சியார் கோயில் என்று எதுவும் இல்லை. ஆனால் கதை மட்டும் வலிமை உடையதாக விளங்குகிறது. 


இசுலாமியர் அல்லாத பிற சமயத்தவரும் நாகூருக்கு சென்று வழிபடுவது அனைவரும் அறிந்ததே. விருதாச்சலத்தை அடுத்து ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோயிலில் நெடுங்காலமாக இசுலாமியர்கள் வழிப்பட அனுமதிக்கப்படுகிறார்கள். இக்கோயில் இறைவன் கடலாட செல்லும்போது கிள்ளை என்னுமிடத்தில் அமைந்துள்ள தர்காவுக்கு கோயில் மரியாதையாக மாலை தருகிறார்கள். (தொ.பரமசிவன் - அறியப்படாத தமிழகம்)

    ஐயப்பனை காண விரதமிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வாவர் மசூதி முன்பு பேட்டை துள்ளல் ஆடும் நடனம் சிறப்பு வாய்ந்தது. இராமநாதபுரம் பரமக்குடியில் உள்ள சௌந்தர நாயகி சமேத நாக நாத சுவாமி திருக்கோயில் பள்ளியறை அருகே இஸ்லாமியர்கள் அமர்ந்து  தொழுகை செய்வதை காண முடியும். இக்கோயில் மூலவரை அவர்கள் "நைனா முகமது" என்று அன்புடன் அழைக்கின்றனர். 

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களநாயகி உடனுறை பாலாண்ட ஈஸ்வரர் சுவாமி திருக்கோயில் கும்பாபிசேகம் விழாவிற்கு ஆவணம் மற்றும் காசிம்புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள் பூ,பழம், இனிப்புகள் அடங்கிய தட்டுதாம்பழங்களை கையில் ஏந்தியபடி சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாகச் கொண்டு வருவது வழக்கம். இராமநாதபுரம் சாயல்குடி பகுதியில் உள்ள அரகாசு அம்மன் ஜீவ சமாதியில்  ஒவ்வோர் ஆண்டும் புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறையில் கொடியேற்றத்துடன் சந்தனக்காப்பு கந்தூரி திருவிழாவை இசுலாமியர்களும், இந்து மக்களும் சேர்ந்து கொண்டாடி வருகின்றனர். 


தர்கா என்னும் வழிபாட்டு முறையினையும், ஏகஇறைவன் ஒருவனைத் தவிர வேறு எந்த உருவ வழிபாட்டையும் ஏற்பதில்லை என்கிற குரல்கள் இசுலாம் மதத்தில் நீண்ட காலமாகவே எழுந்து வருகின்றன. தங்கள் வேண்டுதல் நிறைவேற்றும் ஆற்றல்களை வழிபடும் எளிய மக்களும் இசுலாம் உட்பட அனைத்து மதத்திலும் இருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. 


இந்து கோயிலை போன்றே தர்கா இருப்பது ஏன்?

    பழமையான தர்கா மற்றும் பள்ளிவாசல்கள்  திராவிட கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டு இருப்பதை வெகு இயல்பாக தமிழ்நாட்டில் காண முடியும். இந்தியாவில் உள்ள பல்வேறு பழமையான கட்டடங்கள் ஆசிய, அரேபிய, ஐரோப்பா, சிரியா, பெர்சிய, சீன கட்டடக்கலையின் மரபை கொண்டிருக்கும். அவ்வகையில் இந்தியாவில் இசுலாமியர்களின் கட்டடக்கலையில் அரேபிய மற்றும் இந்திய கட்டடக்கலை மரபின் தாக்கம் ஒருசேர பிரதிபலிப்பதை பார்க்க முடியும். 


காயல்பட்டினத்தில் உள்ள பெரிய குத்பா பள்ளிவாசல் பாண்டியன்‌ மாறவர்மன்‌ குலசேகரனது பேரவையில்‌ முக்கிய அலுவலராக விளங்கிய பெருவணிகர்‌ சுல்தான்‌ ஜமாலுத்தின்‌ என்பவரால்‌ கிபி 1366இல் கட்டப்பட்டது. அவர்‌ அரபு நாட்டில்‌ இருந்து காயல்பட்டினத்தில்‌ குடியேறியவரானாலும்‌, அப்பொழுதைய நடைமுறையில்‌ இருந்த மூரிஸ்‌ கட்டட முறையை பின்பற்றி இந்தப்‌ பள்ளியை அமைக்காமல், கற்தூண்கள் எழுப்பி முழுவதும் கல்லால் பள்ளி கட்டப்பட்டுள்ளது. சதுர வடிவில்‌ உள்ள இந்தப் பள்ளியில்‌ வளைவுகளோ, குவிமாடங்களோ, மினார்களோ இல்லாமல்‌தான் இருந்தது. இன்று இப்பள்ளி விரிவாக எடுத்து கட்டப்பட்டுள்ளது. 


தமிழக இசுலாமிய பள்ளிவாசல்களின் கட்டடக்கலைக்கு சிறந்த சான்றாக விளங்கும் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜாமியா பள்ளிவாசலை இங்கே குறிப்பிட்டு சொல்ல வேண்டும். நீண்ட சதுர வடிவில் நான்கு சுவர்களும், இருப்பது நான்கு தூண்களும், தூண்களில் இசுலாமிய கோட்பாட்டிற்கு ஏற்ப உருவங்கள் இல்லாமல் கொடிகள், மலர்கள் வடிக்கப்பட்டிருக்கும். குவி மாடம் முழுதும் வெள்ளைப்பாறை கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.  கோயில்களில் காணப்படும் திருச்சுற்றாலை போன்று இப்பள்ளி கட்ட்டப்பட்டுள்ளது. கீழக்கரையில் பல தொழுகை பள்ளிகள் இருந்தும் வரலாற்று சிறப்புமிக்க கட்டுமான கலைச் சிறப்பை கொண்டிருப்பது ஜாமியா பள்ளிதான். இந்த கலைப் படைப்பை இசுலாமிய உலககிற்கு தந்தவர் இராமநாதபுரம் மன்னன் கிழவன் சேதுபதி விசய இரகுநாதத் தேவர் அவர்களால் 'விசயரகுநாதப் பெரியதம்பி' என அழைக்கப்பட்ட வள்ளல் சீதக்காதி என்ற சேக் அப்துல் காதர் மரைக்காயர் மற்றும் அவரது இளவல் பட்டத்து அபூபக்கர் மரைக்காயர் ஆவர். கற்தூண்கள் கொண்ட பள்ளிவாசல்  தொழுகைக்கூட கட்டுமானங்களை காஜிமார் பள்ளி, சுங்கம் பள்ளி, சிக்கந்தர் தர்கா, கோரிப்பாளையம் தர்கா உள்ளிட்ட பல்வேறு இசுலாமிய வழிபாட்டு தளங்கள் மதுரையில் உள்ளன. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல தர்கா மற்றும் பள்ளிவாசல்கள் தமிழ்நாட்டில் காணப்படும் கோயில் மண்டபங்கள் போன்றே அமைக்கப்பட்டிருப்பதை காண முடியும். 

கோயில் போன்று கற்தூண்களை கொண்ட தர்கா மற்றும் பள்ளிவாசல்களை முதல்முறை பார்ப்பவர்களுக்கு இது இந்துக் கோயிலா அல்லது இசுலாமியர் பள்ளிவாசலா? என்ற ஐயம் ஏற்படுவதில் வியப்பில்லை. இதை புரிந்து கொள்ள பள்ளிவாசல் மற்றும் தர்கா கட்டுமானங்கள் குறித்த சில அடிப்படைகளை தெரிந்து கொள்வது அவசியம்.

மினார், உளூ செய்யுமிடம், முஸலாஹ், மிஹ்ராப் உள்ளிட்ட கட்டுமான உறுப்புகளை கொண்டு பள்ளிவாசல் கட்டப்படுகிறது. கட்டுமான உறுப்புகள் ஒவ்வொன்றாக பார்க்கலாம். இசுலாமியர்கள் தொழுகைக்கு செல்லும் முன்னர் கை, கால், முகத்தை தூய்மைப்படுத்திக் கொள்வதை உளூ என்று அழைப்பர். உளூ (Wudu) செய்வதற்கு வசதியாக ஒவ்வொரு பள்ளிவாசல் வளாகத்திலும் குளம் அல்லது நீர்தொட்டி அமைத்திருப்பார். பள்ளிவாசலின் வெளியே காணப்படும் கோபுரம் போன்ற அமைப்பு மினார் (Minar) என்று அழைக்கப்படுகிறது. மினார்கள் பள்ளிவாசல் கட்டிடத்துடன் இணைந்தோ அல்லது தனியாகவோ அமைந்திருக்கும். இசுலாமிய கட்டடத்தை தனித்து காட்டக்கூடிய வடிவமாக மினார்கள் விளங்குகின்றன. பள்ளிவாசலின் மையப்பகுதியில் உள்ள தொழுகை கூடம் முஸல்லா (Musallah) என்று அழைக்கப்படுகிறது. பழமையான பள்ளிவாசல்கள் மற்றும் தர்காவில் உள்ள முஸல்லா என்கிற தொழுகைக் கூடம் திராவிட கட்டடக்கலை பாணியில் கோயில் மண்டபங்களைப் போன்றே கற்தூண்களை கொண்டிருப்பதை தமிழ்நாட்டில் இயல்பாக காண முடியும். கல்லால் கட்டப்பட்ட பள்ளிவாசலை கல்லுப்பள்ளி என்றும் அழைப்பார்கள். மக்காவின் காபா எனும் பள்ளிவாசலை நோக்கித் தொழும் திசையே கிப்லா (Qibla) என்பர். தொழுகை கூடத்தின் உள்ளே முகப்பு (கிப்லா) சுவரில் மினார் வடிவில் அலங்காரமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் பகுதியை மிஹ்ராப் (Mihrab) என்று அழைப்பார்கள். தொழுகை கூடத்தின் முன்பகுதியில் எழுப்பட்டிருக்கும் மேடையை மிம்பர் (Mimbar) என்பர். இந்த மேடையில் ஏறி பள்ளிவாசலின் இமாம் (Imam) அவர்கள் தொழுகையை கற்றுத்தருவர் அல்லது வழிநடத்துவார். திருக்குரானை தாங்கிப் பிடிக்கும் மரத்திலான அமைப்பை ரிஹால் (Rihal) என்று அழைப்பார்கள். மண்டபத்தின் அல்லது மினாரின் உச்சியில் காணப்படும் குவிமாடம் போன்ற கூரைப் பகுதி டோம் (Dome) என்று அழைக்கப்படுகிறது. இவை அரைக்கோள வடிவில் அல்லது வெங்காய வடிவில் அமைந்திருக்கும். 

தெய்வம், விலங்குகள், கற்பனை பாத்திரங்கள், புராண பாத்திரங்கள்  என கோயில் கற்தூண்களில் பல்வேறு உருவங்கள் சிலைகளாக, சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். ஆனால் இசுலாம் உருவங்களை ஏற்பதில்லை. கோயில் கற்தூணும், பள்ளிவாசல் கற்தூணும் ஒரே போன்று இருந்தாலும், பள்ளிவாசல் கற்தூணில் உருவங்கள் வடிக்கப்பட்டிருக்காது. அதிகபட்சம் மலர், கொடி, பிறை உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். இந்த வேறுபாட்டை இவ்விரு சமய  கற்தூண்களின் அமைப்பிலும் காண முடியும். 

கற்தூண்களை கொண்டு பள்ளிவாசல் தொழுகைக் கூடம் ஏன் அமைத்தார்கள் என்று ஊகிக்கிற போது, கீழ்காணும் கருதுகோள்களை முன்வைக்க தோன்றுகிறது. 

இந்து சமூகத்தில் இருந்து இசுலாம் மதம் வந்தவர்கள் தாங்கள் ஏற்கனவே பார்த்த வழிபாட்டு தளத்தின் பிரதிபலிப்பை பள்ளிவாசலில் செய்து இருக்கலாம். இந்து வர்ண அமைப்பில் இருக்கும் பொழுது தாங்கள் அனுமதிக்கப்படாத வழிபாட்டு தளத்தை இசுலாம் மார்க்கத்திற்கு வந்த பிறகு அதே வடிவில் கட்டி நுழைய முற்பட்டு கட்டி இருக்கலாம். ஏற்கனவே செல்வாக்கு பெற்று இருந்த கோயில் அமைப்பை பள்ளிவாசலில் கட்டுமானத்திற்குள் கொண்டு வந்து இருக்கலாம். இங்கே கிடைக்கும் கட்டுமான பொருட்கள் மற்றும் கோயில் கட்டுமான கலைஞர்கள் கொண்டு பள்ளிவாசல் கட்டும் பணிகளை செய்ய வேண்டி இருந்ததால் பள்ளிவாசல்கள் கோயில் மண்டபம் போன்ற வடிவங்களை அடைந்திருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. 


திருப்பரங்குன்றத்தில் இசுலாம்: 

    மேற்சொன்ன வரலாற்று மற்றும் பண்பாட்டு பின்னணியில் இருந்து  திருப்பரங்குன்றத்தில் இசுலாமிய வழிபாட்டு தளத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். சங்க கால முருகன் வழிபாடு, சைவம், வைணவம், சமணம், நாட்டார் வழிபாடு, இசுலாம் உள்ளிட்ட பல்வேறு சமய மரபுகள் சங்கமிக்கிற இடமாக திருப்பரங்குன்றம் மலை விளங்குகிறது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா அமைந்துள்ளது. அண்ணல் நபிகள் வழியில் இஸ்லாம் மார்க்கத்தின் திருமறையை பரப்ப வந்த இறைநேசர்கள் அடக்கமாகியிருக்கும் கல்லறையை தர்கா என்று அழைக்கின்றனர். பள்ளிவாசல் என்பது தொழுகை செய்யும் கூடம். எனவே பள்ளிவாசலுக்கு தர்காவிற்கும் வேறுபாடு உள்ளது. சிக்கந்தர் தர்காவில் தொழுகை பள்ளியும் தனியே எழுப்பப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பில் கல்மண்டபம் காணப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பழமையான இசுலாமிய வழிபாட்டு தளங்கள் திராவிட கட்டடக்கலையை பிரதிபலிப்பதை போன்றே சிக்கந்தர் தர்கா கட்டப்பட்டுள்ளது. 


யாரிந்த சிக்கந்தர்?

         கிபி 1185- 86இல் அரபு நாட்டு கடற்கரை பட்டினமாகிய ஜித்தா நகரின் அதிபராக இருந்த ஹஜ்ரத் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா அவர்கள் செய்யது இப்ராஹிம் தலைமையில் இசுலாம் சமயம் பரப்ப புறப்பட்ட குழுக்களுடன் இணைந்து கேரளா கொல்லம் துறைமுகத்த்தில் வந்து இறங்கினார். செய்யது இப்ராஹிம் ஏர்வாடி தர்காவில் அடக்கமாகியிருக்கும் இறைநேசர் ஆவர். அவரை பற்றிய வரலாற்று குறிப்புகள் பரவலாக கிடைக்கிறது. கொல்லம் வந்த முகமதிய சமய குழுவினர் பாண்டிய மன்னர்களின் இசைவோடு அங்கிருந்து நெல்லை வழியாக மதுரைக்கும், இராமநாதபுரத்திற்கும் சென்றனர். மதுரையை ஆட்சி செய்த வீரபாண்டியனுக்கும் சமயம் பரப்ப வந்த முகமதியர்களுக்கும் போர் நடைபெறுகிறது. அதில் செய்யது இப்ராஹிம் வீரபாண்டியனை வெற்றி கொண்டு சிக்கந்தர் பாதுஷா அவர்களை மதுரை நகரின் ஆளுநகராக அமர்த்திவிட்டு இராமநாதபுரம் சென்றுவிடுகிறார். கிபி 1190இல் பெரும்படையுடன் வந்த வீரபாண்டியன் சிக்கந்தர் பாதுஷாவை வெற்றிக் கொள்கிறான். போரில் தப்பித்து திருப்பரங்குன்றத்தில் பதுங்கி இருந்த சிக்கந்தர் பாதுஷாவும் அவரது பாதுகாவலர்களான் லுக்மான், சிக்கந்தர் தர்வேஸ், ஹக்கீம் பாலமஸ்தான் உள்ளிட்ட அனைவரும் கிபி 1195ஆம் ஆண்டு வீரபாண்டியனின் இளவல் குலசேகரன் திரட்டி வந்த பெரும்படையால் கொல்லப்படுகின்றனர். திருப்பரங்குன்றம் மலையின் மேலே நெல்லித்தோப்பு பகுதியில் சிக்கந்தர் பாதுஷா அவர்களின் பாதுகாவலர்களுக்கு கல்லறை எழுப்பப்பட்டுள்ளது. 


சிக்கந்தர் தர்கா வரலாற்று தரவுகள்: 

    பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்னும் சித்தர் 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இவர் எழுதிய போகர் ஏழாயிரம் (சப்த காண்டம்) நூலில் திருப்பரங்குன்றம் நூலை சிக்கிந்தர்மலை என்றும் சிக்கிந்தரிஷி சமாதியை கண்டதாகவும் குறிப்பிடுகின்றார். கிபி 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முருக பக்தரான அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம் உள்ளிட்ட முருக பெருமானைப் போற்றும் நூல்களை படைத்தார். அவர் எழுதிய கந்தர் அலங்காரம் என்ற நூலில் முருகனை ராவுத்தர் என்று பாடியுள்ளார். ராவுத்தர் இசுலாமியர்களை குறிக்க பயன்படுத்தும் சொல். 


கொடுஞ்சூரன் நடுங்கவெற்பை

இடிக்கும் கலாபத் தனிமயில்

ஏறும் ராவுத்தனே” 


- கந்தர் அலங்காரம் (50) 

    ஏர்வாடி தர்காவில் அடக்கமாகியிருக்கும் இறைநேசர் செய்யது இப்ராஹிம் கிபி 1176 ஆம் ஆண்டில் ஆட்சி செய்தவர் என்கிற குறிப்புகள் கிடைக்கின்றன. சமயம் பரப்பும் நோக்கோடு அரபு நாட்டில் இருந்து வந்த குழுவினருக்கு தலைமை தாங்கியவராக செய்து இப்ராஹிம் அறியப்படுகிறார். அவரின் குழுவில் ஒருவராக திருப்பரங்குன்றம் மலையுச்சியில் அடக்கமாகியிருக்கும் சுல்தான் சிக்கந்தர் என்கிற இறைநேசர் அறியப்படுகிறார். இந்தியாவிற்கு இசுலாம் மதம் பரப்ப வந்த அரேபியர் வரலாற்றை 'ஷஹாதத் நாமா' என்ற பெயரில் கிபி 16ஆம்  நூற்றாண்டில் பாரசீக நாட்டைச் சேர்ந்த அப்பாஸ் பின் அப்துல்லா அவர்கள் தொகுத்தார். அதில் ஏர்வாடி தர்காவில் அடக்கமாகியிருக்கும் செய்யது இப்ராஹிம் குறித்தும், திருப்பரங்குன்றம் மலையில் அடக்கமாகியிருக்கும் சுல்தான் சிக்கந்தர் குறித்தும் வரலாற்று குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. ஏர்வாடி தர்காவின் அறங்காவலர் மு.வா.வ. சய்யிது இப்ராஹிம் லெப்பை அவர்கள் 'ஷஹாதத் நாமா' நூலை தமிழாக்கம் செய்து 1960ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அதில் அரபு நாட்டின் ஜித்தா நகரின் ஆளுநராக இருந்த சிக்கந்தர் அவர்கள் செய்யது இப்ராஹிம் சமயம் பரப்பும் குழுவினருடன் தமிழகம் வந்தார் என்றும், பாண்டிய நட்டான் மீது போர் தொடுத்து மதுரை சுல்தானாக ஆட்சி செய்தார் என்றும் குறிப்பிடப்படுகிறது. 

    ஏர்வாடி செய்யது இப்ராஹிம் வரலாறு குறித்து மீசல் வண்ணக் களஞ்சிய புலவர் கிபி 1820இல் எழுதப்பட்ட தீன் நெறி விளக்கம் என்னும் நூலும் மேற்சொன்ன வராலாற்று செய்திகளை  ஆறாம் படலத்தில் பதிவு செய்கிறது. திருப்பரங்குன்றம் தல வரலாறு நூல் திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தால் 1960ஆம் ஆண்டு வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு தொல்லியல்துறையில் பணிபுரிந்த கல்வெட்டாய்வாளர் திரு. செ. போசு அவர்கள் எழுதிய திருப்பரங்குன்றம் என்னும் நூல் 1981ஆம் ஆண்டு வெளியிடப்படுகிறது. அந்நூல்களில் மலையுச்சியில் சிக்கந்தர் தர்கா இருப்பது குறிப்பிடப்படுகிறது. 


    திருப்பரங்குன்றம் மலையில் அடக்கத்தலமாக விளங்கிய சிக்கந்தர் தர்காவிற்கு கான்சா சாகிப் (கிபி 1756-64) காலத்தில் கட்டுமானங்கள், படிக்கட்டுகள் கட்டித் தரப்பட்டது. ஆற்காட்டு நாவப் ஆட்சி காலத்தில் முகம்மது அலி கான் வாலாஜா (1717-1795) அவர்களால் சிக்கந்தர் தர்காவிற்கு தனக்கன்குளம், முள்ளாங்குளம் என்ற இரு கிராமங்கள் மானியமாக வழங்கப்பட்டது. இதற்காக வழங்கப்பட்ட சாசனம் 1960ஆம் ஆண்டு இனாம் கமிஷனால் கையகப்படுத்தப்பட்டது. இந்த விபரம் 1815 ஆம் ஆண்டு முதல் காணப்படும் மானிய பதிவேடு, இனாம் பதிவேடு உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்களில் தெளிவாக உள்ளது. எஸ்.சி.ஹில் தனது யூசுப் கான் தி ரெபல் கமாண்டன்ட் என்ற 1914  ஆம் ஆண்டு  நூலில் பக்கம் 56 இல்  சிக்கந்தர் என்ற பெயருடைய பக்கிரி சிக்கந்தர் மலையில் வாழ்ந்து மடிந்ததாகவும் அவ்விடத்திற்கு  இந்துக்களும் இஸ்லாமியர்களும் செல்வார்கள் எனவும்   குறிப்பிடுகிறார். அவ்விடத்தில் யூசுப் கானால் மசூதி ஒன்று கட்டப்பட்டதென பாதர் ஸ்வார்ட்ஸ் குறிப்பிட்டதையும் ஹில் பதிவு செய்துள்ளார் . 


 சுமார் 35ஆண்டுகளுக்கு முன் திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்பட்டது. பின்னாளில் சிக்கந்தர் மலை பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் என்ற தொன்மையான பெயரே மீண்டும் வழங்கப்பட்டது.   1920 முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடந்த நீதிமன்ற வழக்குகளும், தீர்ப்புகளும் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இசுலாமியர்களுக்கு உரிமையானது என உறுதி செய்துள்ளது.



சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம்?

    பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்னும் சித்தர் 12-13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இவர் எழுதிய போகர் ஏழாயிரம் (சப்த காண்டம்) நூலில் திருப்பரங்குன்றம் நூலை சிக்கிந்தாமலை என்றும் சிக்கிந்தரிஷி சமாதியை கண்டதாகவும் குறிப்பிடுகின்றார். திருப்பரங்குன்றம் மலை வருவாய்துறைக்கு சொந்தமா அல்லது திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமா என்று 1920ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் சிக்கந்தர்மலை, கந்தன்மலை என்று இருபெயர்களும் குறிப்பிடப்படுகிறது. 1868ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் வெளியிடப்பட்ட மதுரை கெஜட்டீயில் (Madura country manual J H nelson Gazettee 1868) ஸ்கந்த மலை மேல் இஸ்லாமியத் துறவியின் அடக்கத்தலம் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. நாட்டுப்புற பாடல்களில் சிக்கந்தர் மலை என்ற குறிப்புகள் கிடைக்கிறது. தமிழ்நாடு தொல்லியல்துறையில் பணியாற்றிய கல்வெட்டாய்வாளர் திரு. செ. போசு என்ற தொல்லியல் அறிஞர் 1981ஆம் ஆண்டு எழுதிய 'திருப்பரங்குன்றம்' நூலிலும், திரு. நாகப்பா. நாச்சியப்பன் அவர்கள் 1989ஆம் ஆண்டு எழுதிய வேற்கோட்டம் நூலிலும் சிக்கந்தர் தர்கா மற்றும் சிக்கந்தர் மலை பற்றியும் குறிப்பிடப்படுகிறது. நாகப்பா நாச்சியப்பன் தன் நூலில் பதிவு செய்துள்ள நாட்டுப்புற பாடல் ஒன்றில் சிக்கந்தர் மலை குறிப்பிடப்படுகிறது. 


'மலையே மலையழகு

மலையைச் சுற்றித் தோப்பழகு 

சிக்கந்தர் மலையழகு

திருப்பரங்குன்றத்து தெருவழகு' 

(கருப்பாயி - திருப்பரங்குன்றம் 28.10.1982 இல் பதிவு செய்யப்பட்டது)


    சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்பட்டது. பின்னாளில் சிக்கந்தர் மலை பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் என்ற தொன்மையான பெயரே மீண்டும் வழங்கப்பட்டது. இதுவரை எந்த இசுலாமியர்களும் திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்ற வேண்டுமென்று கோரிக்கை வைக்கவில்லை. 

    

ஒருமலைக்கு இத்தனை பெயர்கள் எப்படி சாத்தியம்?

    ஒரு இடத்தினை குறிக்க பல பெயர்கள் வழக்கில் இருப்பது இயல்பாகும்.  இந்த பெயரைத்தான் இனி எல்லோரும் அழைக்க வேண்டும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒரு மலைக்குன்றுக்கு பல பெயர்கள் வழங்கப்படும் உதாரணங்களை மதுரையிலேயே நாம் பார்க்க முடியும். உதாரணமாக அரிட்டாபட்டியில் சமணர் குகைத்தளம் அமைந்துள்ள பாறையில் காணப்படும் கிபி 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு திருப்பினையான்மலை என்கிறது. ஊர் மக்கள் கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். அம்மலையில் உள்ள ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது. இசுலாமியர்கள் இம்மலையை ஓவாமலை என்று அழைக்கின்றனர். யானைமலையில் காணப்படும் தமிழிக் கல்வெட்டு இவக்குன்றம் என்கிறது. இவம் என்றால் பிராகிருதத்திலும், சமஸ்கிருதத்திலும் யானையைக் குறிக்க வழங்கும் சொல். திருவானைமலை என்று நரசிங்கம் கோயில் பிற்பாண்டியர் காலத்து குறிப்பிடுகிறது. நரசிங்கம் கோயிலில் கிபி 1519 ஆம் ஆண்டில் கிருஷ்ணதேவராயர் காலத்து  சமஸ்கிரத கல்வெட்டு யானைமலையை கஜகிரி என்று குறிப்பிடுகிறது.  கொங்கர் புளியங்குளம் மலையைத் தமிழிக் கல்வெட்டுகள் புளியங்குன்று என்கிறது.  ஆனால் மக்கள் அதனை இன்று பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கின்றனர். ஊரின் பெயர் புளியங்குளம் என்று வழங்கப்படுகிறது.


சங்க இலக்கியமான பரிபாடல் இன்றைய அழகர்மலையை இருங்குன்றம், மாலிருங்குன்றம், ஓங்கிருங்குன்றம், ஐயிருங்குன்றம் என்று அழைக்கிறது. பக்தி இலக்கியங்கள் சோலைமலை, மாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலை, தென்திருமாலிருஞ்சோலை என குறிப்பிடுகிறது. அழகரந்தாதி விடைமலை என்று குறிப்பிடுகிறது. விடைமலை என்ற பெயர் சமணர்களால் இம்மலைக்கு இடப்பட்டிருக்கலாம். அழகர் கோயில் தலபுராணமான விருஷபாத்ரி மகாத்மியம் இம்மலையை விருஷபாத்ரி என குறிப்பிடுகிறது என்கிறார் தொ.ப (அழகர் கோயில் நூல் பக் 41-43) இவ்வாறாக ஒரு மலைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் புழக்கத்தில் இருப்பது தமிழ்நாட்டில் காணப்படும் வழக்கம் ஆகும்.   


திருப்பரங்குன்றம் மலையில் அசைவம் சாப்பிடுவது சரியா?

    மதுரையில் நாடறிந்த வைணவ கோயிலான அழகர் கோயில், சைவ கடவுளான பாண்டிக்கோயில் இங்கேயெல்லாம் நேர்த்திக்கடனாக கிடா வெட்டி விருந்து வைக்கும் நிகழ்வு நெடுங்காலமாக நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ளது சிக்கந்தர் தர்கா. மலையின் அடிவாரத்தில் உள்ளது முருகன் கோயில். இரண்டுக்கும் வெவ்வேறு பாதைகள் உள்ளது. சிக்கந்தரை வேண்டிக் கொண்டு ஆடு, சேவல் பலியிட்டு விருந்து வைக்கும் சடங்கு இந்து சமூகத்தை சார்ந்தவர்களாலும், இசுலாமியர்களாலும் நிகழ்த்தப்படுகிறது. முருகன் கோயிலின் முன்பு அக்கோயில் வளாகத்திலோ யாரும் அசைவ உணவு படைக்கவில்லை, உண்ணவில்லை. சிக்கந்தர் தர்காவிலும், அதற்க்கு செல்லும் பாதையிலும் தான் அசைவ உணவுகள் படைக்கப்படுகிறது. அதுவும் பல காலமாக நடக்கிறது. திருப்பரங்குன்றம் மலையடி கருப்பு கோயில், நாகம்மாள் கோயில், வெயிலுக்குந்த அம்மன் கோயில் உள்ளிட்ட வழிபாட்டு தளங்களில் அசைவ உணவு என்பது நெடுங்கால வழக்கமாக இருக்கிறது. 


தேரோட்டம் எந்த தடையுமின்றி சிறப்பாக நடைபெற வேண்டுமென்பதற்காக இரத்த பலிக் கொடுத்து தேரை தேரோட்டத்திற்கு தயார்படுத்துகிற வழக்கம் தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் காணப்படும் வழக்கமாகும்.  

மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலையில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு 16 வகை அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் காலை 6 மணியளவில் கோயிலிலிருந்து புறப்பாடாகி அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளுகிறார். பின்னர் தீபாராதனைக்குப்பின் காலை 6.30 மணிக்குள் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்குகிறது. 


தேரடி கருப்பணசாமி கோயில், சோணை முத்தையா சிலையும்  திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் முன்மண்டத்தில் அமைந்துள்ளது. தேரோட்டம் துவங்குதற்கு முன்பு சோணை முத்தையாவுக்கு கிடா வெட்டி இரத்த பலிக் கொடுக்கப்படுகிறது. சில காலம் முன்பு வரை கிடா வெட்டும் நிகழ்வு தேரடி கருப்பசாமி கோயில் அருகே பெரிய ரத வீதியில் நடைபெற்றது. இப்போது கிழக்கு பெரிய ரத வீதியில் உள்ள வாலகுருநாத அங்காள ஈஸ்வரி கோயில் முன்பு நேர்த்தி கிடாவை இரத்த பலி கொடுத்துவிட்டு, தேரோட்டம் நிகழுகிறது. 


தமிழ்நாட்டில் 97% மக்கள் அசைவ உணவு பழக்கமுடைவார்கள் என கடந்த 2022ஆம் ஆண்டு இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இந்திய மக்களின் உணவு பழக்கம் குறித்த கணக்கெடுப்பு (NFHS-5)  அறிக்கை கூறுகிறது. தமிழ்நாட்டு மக்கள் வணக்கும் குலசாமிகளுக்கும் அசைவ உணவே படைக்கப்படுகிறது. அசைவ உணவு கூடாது என்பது உணவு உரிமை மற்றும் வழிபாட்டு உரிமைக்கு எதிரானது.  


மலைக்காட்டினுள் கிழங்கெடுத்து, தேனெடுத்து, வேட்டையாடி வாழும் குறிஞ்சி நிலத்து மக்களின் கடவுள் முருகன் என தொல்காப்பியம்  வரையறுக்கிறது. குறிஞ்சி நிலத்து கடவுளுக்கு படைக்கப்பட்ட உணவு என்ன என்பதை அறிந்து கொள்வது இங்கே அவசியமாகிறது. முருகனோடு தொடர்புடைய விழாக்களில் ஒன்று வேலன் வெறியாட்டு.

வேலன் வெறியாட்டு:   

முருகு என்கிற அணங்கு ஆட்கொண்டுள்ள பெண்களுக்காக வேலன் வெறியாட்டு நிகழ்த்தப்படுவதாக சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெறியாடல் களவுக் காதலில் ஈடுபட்டு அதன் விளைவாக மெலிவு ஏற்பட்ட பெண்களுக்கு நிகழ்த்தப்படுவது. முருகனின் பூசாரியாக வேலன் என்பவனை சங்க பாடல்கள் குறிப்பிடுகின்றன. முருகன் தலைவியை அணங்கி (பற்றி) யுள்ளான் என்று வேலன் கூறுவான். தலைவியின் தாய் வேலனைக் கொண்டு வெறியாடுதலுக்கு ஏற்பாடு செய்வாள். களம் அமைத்து அதில் தினை அரசி மற்றும் மலர்களை தூவி களத்தை வேலன் ஏற்பாடு செய்வான். இசை வாத்தியங்கள் முழங்க ஆட்டினை  (மறி) பலி கொடுப்பர். பலிகொடுத்த ஆட்டின் குருதியில் தினை அரிசியை கலந்து  வீடேயெங்கும் வேலன் தூவுவான். இதனை வெறியாட்டு என்கிறார் காமக் கண்ணியார் (அகம் 22). 


எட்டுத்தொகையுள் (கலித்தொகை, பரிபாடல் தவிர்த்து) 36 பாடல்கள் வெறியாடல் நிகழ்வினைச் சுட்டியுள்ளன. அவற்றுள் மூன்று பாடல்கள் காமக் கண்ணியார் என்கிற பெண்பாற் புலவரால் பாடப் பட்டது. ஒரு பாடலை நல்வெள்ளியார் என்ற பெண் புலவர் பாடியுள்ளார். (அ. மோகனா கீற்று இணையதளம் 21.03.2018)


வேலன் வெறியாடல் தொடர்பாக நற்றிணை 173, 268, 282, ஐங்குறுநூறு 245, 247, 248, 249, மதுரை காஞ்சி 610-617,உள்ளிட்ட பல சங்கப்பாடல்கள் கூறியுள்ளன. (சங்க நூல்களில் முருகன் - பில்.சாமி 1990)


பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார்

அரும் கடி வேலன் முருகொடு வளைஇ

அரி கூடு இன் இயம் கறங்க நேர்நிறுத்து

கார் மலர் குறிஞ்சி சூடி கடம்பின்

சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ

மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும்

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ

வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி (மதுரை காஞ்சி 610-617)


சிறிய தினை அரிசியைப் பூக்களோடு கலந்து, மறியை (ஆடு) அறுத்து, பழமுதிர்சோலையில் முருகனை வழிபட்டதை, திருமுருகாற்றுப்படை விளக்கமாக ''சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து'' என்கிற 218வது பாடலில் நக்கீரர் விரிவாக விவரிக்கிறார். 

வட கேரளத்தில் (மஹி) வேலன் என்கிற பழங்குடி (S.Tribes) சமூங்கத்தினர் நிகழும் தெய்வ வழிபாட்டில் சடங்கினை நேரில் சென்று ஆய்வு செய்து திருமுருகாற்றுப்படை கூறும் வேலன் வெறியாட்டு நிகழ்வோடு ஒத்திருப்பதை தன் 'சங்க நூலகளில் முருகன்' நூலில் பதிவு செய்து இருக்கிறார். இந்த வேலன்மார்கள் வடகேரளத்தில் (North Malabar) பூசாரிகளாக உள்ளனர். அவர்கள் தெய்வங்களை சாந்தப்படுத்தும் பொருட்டு பிற சமூகத்தினரால் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் களம் அமைத்து வழிபடுகின்றனர். வேடம் பூண்டு அவர்கள் ஆடும் ஆட்டம் தெய்யாட்டம் என அழைக்கப்படுகிறது. 


வடமலையாளத்து வேலன் செந்நிற ஆடை அணிந்து, வாழைமட்டையால் களம் அமைத்து, செந்நிற பூக்கள் தூவி, மந்திரம் ஓதி, சேவல் ஒன்றை முருகனுக்கு பலியிடுகிறார். பலியிட்டு சேவலின் இரத்தத்தை நீரின் நிறைந்த பாத்திரத்தில் வடித்து, காப்பரிசி, பொரி, செக்கி மலர், மல்லிகை பூ ஆகியவற்றை சேவல் ரத்தம் நிறைந்த பாத்திரத்தில் கலக்கி, களத்தின் மீது தெளிக்கிறார் என பி.எல். சாமி தான் மாவட்ட ஆட்சியராக இருந்த மாஹி (Mahe) பகுதியில் நேரில் பார்த்த வேலன் வெறியாட்டை பதிவு செய்கிறார். கடம்ப மலர், சந்தனம், மஞ்சள் ஆகியவை வேலனது வெறியாட்டு பயன்படுத்தப்பட்டு ஆடு பலியிட்டதை திருமுருகாற்றுப்படை குறிப்பிடுகிறது. 


சங்க கால நூல்களுக்கு பிறகு பன்னிரெண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்லாடம் என்ற நூல், வேலனாட்டுச் சடங்கை விரிவாக விவரித்துள்ளது. உறவினர்கள் கூடியிருக்கும் முற்றத்தில் முருகனது மஞ்சைக் கொடி நடப்பட்டது. தரையெங்கும் வெட்சி மலர்கள் பரப்பப்பட்டன. தேக்கு இலைகளில் இரத்தம் கலந்த தினை மாவு படைக்கப்பட்டது. நான்கு திசைகளை நோக்கி இவ்விலைகள் வைக்கப்பட்டவுடன் ஆட்டுக் குட்டியை பலியிடுகிறார். ஈச்ச இலைகளால் வடிகட்டின கள்ளை வேலன் குடிக்கிறான். ''பொருப்பு வளன் வேண்டி மழைக் கண்திறப்ப'' என்று துவங்கும் கல்லாடம் 24வது பாடல் குறிப்பிடுகிறது.


முருகனுக்கு ஆடு, சேவல் நேர்த்தி கொடுக்கும் வழக்கத்தின் நீட்சியாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் சென்று ஆடு, சேவலை விட்டுவிட்டு வரும் வழக்கம் இன்றும் தொடர்கிறது. நேர்த்திக்கடன் கொடுத்தோருக்கு சான்றாக கோயில் நிர்வாகம் ரசிது கொடுக்கிறது. இவை போக திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் உள்ள மலையடி கருப்பு கோயில், நாகம்மாள் கோயில், வெயிலுக்குந்த அம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் ஆடு, சேவல் பலியிடும் வழக்கம் இன்றும் தொடர்ந்து நடைப் பெற்று வருகிறது. ஆடு, சேவல் பலியிட்டு வழிபடுவது புதிய நடைமுறையல்ல. அனைத்து சமூகத்தினராலும் திருப்பரங்குன்றம் மலைப்பகுதியில் ஆடு, சேவல் பலி கொடுக்கும் நிகழ்வு காலம் காலமாக நடைபெற்று வருகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும். 

  

     உணவு என்பது அவரவர் விருப்பம். ஒருவர் இதைத்தான் சாப்பிட வேண்டும் என்பது கட்டாயப்படுத்துவம் ஜனநாயகத்திற்கு எதிரானது. அசைவ உணவு கூடாது என்பது பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது. 


திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்?

    திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம் என்பதை புரிந்து கொள்ள அது தொடர்பாக இதுவரை தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற வழக்குகள், வெளியான தீர்ப்புகள் அனைத்தும் நமக்கு உதவுகின்றன. சிக்கந்தர் தர்கா அமைந்துள்ள மலையுச்சி மற்றும் நெல்லித்தோப்பு பகுதிகள் தர்கா நிர்வாகத்திற்கு திருப்பரங்குன்றம் மலையின் இதர பகுதிகள் முருகன் கோயில் நிர்வாகத்திற்கும் உரியது என்பதை உறுதி செய்கின்றன. அதனை விரிவாக கீழே கொடுத்துள்ளேன். 

 

வழக்கு 1:

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1920இல் திருப்பரங்குன்றம் மலையை  கையகப்படுத்தும் முயற்சிகளை வருவாய்த்துறை மேற்கொள்கிறது. வருவாய்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேவஸ்தானம் கீழமை     நீதிமன்றத்தில் வழக்கு (O.S No. 4/1920) தொடுக்கிறது. அந்த வழக்கில் தர்கா நிர்வாகமும் மனுதாரராக இணைக்கப்படுகிறது. 

இந்த வழக்கில் கீழமை நீதிமன்றத்தின் முதன்மை கூடுதல் நீதிபதியாக இருந்த திருமிகு. P.G. ராம ஐயர் அவர்கள் 300க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து, 21 சாட்சிகளை விசாரித்து 25.08.1923இல் தீர்ப்பு வழங்கினார். அத்தீர்ப்பில் நெல்லித்தோப்பு மற்றும் அதில் உள்ள புதிய மண்டபம், நெல்லித்தோப்பிலிருந்து பள்ளிவாசல் வரை உள்ள படிக்கட்டுகள், பள்ளிவாசலும் கொடிமர கம்பமும் அமைந்துள்ள மலையுச்சி முகமதியர்களின் உரிமையான சொத்து எனவும், இவை தவிர்த்து மலையின் மற்ற இடங்கள், கிரிவல பாதை முருகன் கோயில் தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்டது என தெளிவாக கூறப்பட்டுள்ளது. 


வழக்கு2:

கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வருவாய்த்துறை சார்பாக உயர்நீதிமன்றம் சென்றிருக்க வேண்டும். அந்த வழக்கில்  வெளியான தீர்ப்பு வருவாய்துறைக்கு சாதகமாக வந்திருக்க வேண்டும். அந்த வழக்கு மற்றும் தீர்ப்பு பற்றிய விபரம் நமக்கு கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லண்டன் மாநகரில் உள்ள அன்றைய உச்சநீதிமன்றமான பிரிவி கவுன்சிலுக்கு (Privy Council) கோயில் நிர்வாகம் மேல்முறையீடு வழக்காக இதனை எடுத்து சென்று இருப்பதாக அறிய முடிகிறது. 


வழக்கு 3:

    உயர்நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து அன்றைய உச்சநீதிமன்றமான பிரிவி கவுன்சிலில் (PRIVY COUNCIL) முருகன் கோயில் நிர்வாகம் சார்பாக மேல்முறையீடு வழக்க தாக்கல் செய்யப்படுகிறது. மேல்முறையீட்டு (P.C Appeal No. 5/1930) வழக்கினை மாண்புமிகு நீதிபதிகள் Lord Thankerton, lord Mac Millan, lord George lowndes & Sir Dinshah Mulla ஆகியோர் அமர்வு விசாரித்து 25.08.1923 இல் திருமிகு. ராம ஐயர் அவர்கள் வழங்கிய தீர்ப்பினை உறுதி செய்து 12.05.1930 அன்று உத்தரவிட்டது. 


வழக்கு 4:

    திருப்பரங்குன்றம் மலையுச்சியில் உள்ள தர்காவிற்கு பாத்தியப்பட்ட கொடிமரத்தின் அருகேயுள்ள இடத்தில் சுனை கட்டும் மராமத்து பணியை தடுத்து நிறுத்த கோரியும், அந்த இடம் கோயில் நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட இடம் என அறிவிக்க கோரியும் மதுரை மாவட்ட சார்பு நீதிமன்றத்தில் கோயில் நிர்வாகம் சார்பாக 1975ஆம் ஆண்டு வழக்கு (O.S No. 506/1975) தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதியரசர் K.சுப்பிரமணியன் அவர்கள் முந்தைய  (O.S No. 4/1920) வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் வழக்கில் குறிப்பிட்டுள்ள இடம் தர்காவிற்கு சொந்தமானது, எனவே தடை விதிக்க இயலாது என 22.11.1978 அன்று உத்தரவிட்டார். 


வழக்கு 5:

    திருப்பரங்குன்றம் மலையுச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்து பகத் சன சபையின் தலைவர் V.தியாகராஜன் சார்பில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் 1994இல் வழக்கு (WP No 18884/1994) தொடரப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த நீதியரசர் J.கனகராஜ் அவர்கள் திருப்பரங்குன்றம் மலையின் பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது குறித்து O.S No. 4/1920 வழக்கின் தீர்ப்பே இறுதியானதாகும். அந்த தீர்ப்பை ஏற்று மதித்து நடக்க வேண்டும் என்றும், காவல்துறை மூலம் திருப்பரங்குன்றம் நகர் மற்றும் மலையுச்சியில் உள்ள தர்கா ஆகிய பகுதிகளுக்கு மிக கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும் என்றும் 24.11.1994 அன்று உத்தரவிட்டார். 


வழக்கு 6:

    நெல்லித்தோப்பு பகுதியில் பக்ரீத் தொழுகையை தடை செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பாக 2023ஆம் ஆண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு (WP MD No 15565 of 2023) தொடரப்பட்டது. அந்த வழக்கில் எவ்வித இடைக்கால தடை உத்தரவும் பிறப்பிக்க இயலாது என 23.06.2023 அன்று உத்தரவு வெளியானது. அந்த வழக்கின் விசாரணை தொடர்கிறது. 


இவ்வாறாக 1920 முதல் 2023 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற பல்வேறு வழக்குகளில் சிக்கந்தர் தர்கா, பள்ளிவாசல், கொடிக்கம்பம் அமைந்துள்ள மலையுச்சி, நெல்லித்தோப்பு உள்ளிட்ட பகுதிகள் இசுலாமியர்களுக்கு உரிமையான தர்கா நிர்வாக சொத்து என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் அனைத்தும் இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வலியுறுத்துகிறது. இந்த உண்மைகளை, ஆதாரங்களை அறிந்தும் தொடர்ச்சியாக மத அடிப்படைவாதிகள் இசுலாமியர்களுக்கு எதிரான அவதூறான பரப்புரையை செய்து வருகின்றனர்.  



திருப்பரங்குன்றம் கோயில்கள்:

        சுப்ரமணியசுவாமி (முருகன்) கோயில், சத்தியகிரிஈஸ்வரர் (பரங்கிரிநாதர்) கோயில், ஆவுடைநாயகியம்மன் கோயில், உமையாண்டார் கோயில், சமண குகை தளம், மகாவீரர், பார்சுவநாதர் சிறபங்கள், பழனியாண்டவர் கோயில், தீபத்தூண், காசி விஸ்வநாதர் கோயில், ஆறுமுக நயினார் கோயில், சொக்கநாதர் கோயில், பால்சுனை கண்ட சிவன் கோயில், தவ்வை கோயில், பத்திரகாளியம்மன் கோயில், பேச்சியம்மன் கோயில், இருளப்ப சாமி கோயில், வீர ஆஞ்சிநேயர் கோயில், சப்த கன்னிமார் கோயில், மலையடி கருப்பு, நாகம்மாள் கோயில், வெயிலுக்கு உகந்த அம்மன், சத்தியகிரி முத்தையா கோயில், சிக்கந்தர் தர்கா உள்ளிட்ட முருகன், சைவம், வைணவம், சமணம், இசுலாம், நாட்டார் என பல்வேறு சமய மரபுகளை  மலையிலும் மலையடிவாரத்திலும் திருப்பரங்குன்றத்தில் காண முடிகிறது.


சங்க இலக்கியத்தில் திருப்பரங்குன்றம்:

    ஈராயிரமாண்டுகளுக்கும் மேல் பழமையான சங்க இலக்கியங்களான திருமுருகாற்றுப்படை, அகநானூறு, கலித்தொகை, மதுரைக்காஞ்சி, பரிபாடலில் திருப்பரங்குன்றம் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. சங்க இலக்கிய பாடல்களில் பல இடங்களில் தண்பரங்குன்றம் என்றே திருப்பரங்குன்றம் அழைக்கப்படுகிறது.  

    திருமுருகாற்றுப்படை ‘மாடம் மலி மறுகின் கூடல் குடவயின்’ (71) என்றும், அகநானூறு திருப்பரங்குன்றத்தை 'முருகன் தண் பரங்குன்றத்து' (59:11) என்றும், பரிபாடல் 'சேய்மாடக்‌ கூடலும்‌ செவ்வேள்‌ பரங்குன்றும்‌' என்றும்  ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (149)  என்றும், மதுரைக் காஞ்சி ‘ தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (264) என்றும் கூறுகிறது. பரிபாடல் பரங்குன்றின் முருகனைப் பற்றி விவரிக்கையில், குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. மேற்சுட்டிய சங்கப் பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியது என்றே சான்று பகர்கின்றன. இன்றைய திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிறந்த தலமாக அன்றைய இலக்கியங்கள் கூறியதற்கு ஏற்ப சிறப்புடன் திகழ்கின்றது. ஆனால் சங்க காலத்தில் எடுக்கப்பட்ட முருகன் கோயில் என்ன ஆயிற்று என்பது தெரியவில்லை. அது இங்குதான் இருந்ததா என்பது நமக்கு தெரியவில்லை என திருப்பரங்குன்றம் நூலை எழுதிய தொல்லியல் அறிஞர் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் செ. போசு அவர்கள் அந்நூலில் (பக் 5) குறிப்பிடுகிறார். 


பக்தி இலக்கியத்தில் திருப்பரங்குன்றம்: 

    பக்தி இலக்கியங்கள் கி.பி. 6 முதல் கி.பி. 9ம் நூற்றாண்டு வரை இயற்றப்பட்டன. பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில் பக்தி இலக்கியங்கள் பெருமளவில் தோன்றின. சங்க காலத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பக்தி இயக்க அடியவர்களால் சிவனுக்கு மாற்றம் செய்யப்பட்டது. 

‘அங்கமோராறும் அருமறை நான்கும் அருள்செய்து

பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்துத்

திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்தோன் தேன்மொழி

பங்கினன்மேய நன்னகர் போலும் பரங்குன்றே’

என்று ஞான சம்பந்தர் பாடி இருப்பதில் இருந்து  சிவன் முதன்மை கடவுளாகக் காட்டப்படுவதை அறியலாம். 


    அப்பர் திருஞானசம்பந்தர், சுந்தரர், நாவரசர் பாடிய தேவாரம்; மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார், சேக்கிழார் பாடிய பெரியபுராணம், அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ், கல்லாடர் பாடிய கல்லாடம் உள்ளிட்ட பக்தி இலக்கியங்களும் திருப்பரங்குன்றம் குறித்து பாடுகிறது.

    கந்த புராணம், திருவிளையாடற்புராணம், திருப்பரங்கிரி புராணம், சத்தியகிரி மகாத்மியம் உள்ளிட்ட புராணங்களில் திருப்பரங்குன்றம் பற்றி குறிப்பிடுகிறது.  


குடைவரை கோயில்கள்: 

    திருப்பரங்குன்றில் வடக்குச் சரிவில் ஒன்றும் தெற்குச் சரிவில் ஒன்றுமென இரண்டு குடைவரைக் கோயில்கள் காணப்படுகின்றன. இரண்டு குடைவரைக் கோயில்களில் இன்று வழிபாட்டில் இருக்கும் முருகப்பெருமான் கோயில் கிபி 8ஆம் நூற்றாண்டில் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் ஆறாவது ஆட்சியாண்டில் அவனுடைய சாமந்த பீமனாகிய சாத்தன் கணபதி என்பவனால் தோற்றுவிக்கப்பட்டது. இங்கு காணப்படும் கிரந்தக் கல்வெட்டில் இக்குடைவரை கோயில் சிவபெருமானுக்காக தோற்றுவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சாந்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி துர்கா தேவிக்கும், ஜேஷ்டா தேவிக்கும் கோயில் எடுத்தையும் இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. சிவன், துர்கை, திருமால், முருகன், விநாயகர் ஆகிய ஐவர்களின் சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இரண்டு குடைவரைக் கோயில்களிலும் முருகப் பெருமான் துணைக் கடவுள்களாத்தான் காட்டப்பட்டுள்ளார்.


    திருகாமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் ஆவுடைநாயகி அம்மனுக்கென்று கிபி 12ஆம் நூற்றாண்டில் தனிக்கோயில் ஒன்று எடுக்கப்பட்டு இருக்கிறது. அதனால் அந்த நூற்றாண்டும் அதற்குப் பிற்பட்டச் சில ஆண்டுகள் வரையிலும் இக்கோயில் சிவன்கோயிலாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். கிபி 13ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, கொஞ்சங்கொஞ்சமாக மீண்டும் சங்ககாலச் சிறப்பெற்று முருகப் பெருமான் சன்னதியாக இது மாற தொடங்கியிருக்கலாம். குறிப்பாக திருமலை நாயக்கர் காலத்தில் முருக பெருமானின் கோயிலாக இது மீண்டும் ஏற்றமடைந்து இருக்கலாம். திருமலை நாயக்கர் தன் மனைவியோடு முருகனை வணங்கிய நிலையில் உள்ள சிற்பம் இக்கருத்துக்கு வலுவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது. 


    வடக்கு நோக்கியுள்ள இக்கோயிலில் சிவபெருமான் கருவறை கிழக்கு நோக்கியும், திருமால் கருவறை மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. இங்கு துர்காதேவி, இலக்குமி, ஜேஷ்டா தேவி ஆகிய மூவர்க்கும் கோயில்கள் எடுக்கப்பட்டுள்ளன. துர்கா தேவி கோயிலுக்கு மேற்புறம் கஜலெட்சுமியின் குடைவிக்கப்பட்ட கருவறை உள்ளது. திருப்பரங்குன்றம் குடைவரையில் பல்வேறு சிற்பங்களும் காணப்படுகிறது. இக்குடைவரை சிவா பெருமானுக்காக தோற்றுவிக்கப்பட்டிருந்தாலும், பிற கடவுளர்கள் துணைக் கடவுள்களாக காட்டப்பட்டுள்ளனர்.


    மலையின் தெற்குச் சரிவில் ஒரு குடைவரை உள்ளது. அதனை உமையாண்டார் கோயில் என்று அழைக்கின்றனர். இது கிபி எட்டாம் நூற்றாண்டை சார்ந்த சமணக் குடைவரை கோயிலாகும். நான்கு தூண்களுடன் முன்மண்டபத்துடன் காணப்படும் இக்குடைவரை இக்கோயில் கிபி 1223இல் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் இக்குடைவரை கோயில் சிவன் கோயிலாக மாற்றம் பெற்றது. சுந்தரபாண்டிய ஈஸ்வரமுடையார் கோயில் என இங்குள்ள கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. கருவறையில் அர்த்தநாரீஸ்வர காணப்படுகிறார். சுவரில் நடராசர், சிவகாமசுந்தரி, ஹேரம்ப கணபதி, முருகன், வள்ளி, தெய்வானையுடன் வில்லேந்திய நிலையில் வேலன், கணபதி, பிரசன்ன தேவர், அவர் மாணவர், மாணிக்கவாசகர், ஞான சம்பந்தர், அப்பர், கரியகஞ்சுகனான பைரவர் ஆகியோரின் சிற்பங்கள் இக்குடைவரையில் காணப்படுகிறது.   


தொல்லியல் ஆய்வாளர் வேதாச்சலம் அவர்களுடைய புகழ்பெற்ற எண்பெரும்குன்றம் நூலில் தென்பரங்குன்றம் உமையாண்டார் கோவில்  அர்த்த நாரீஸ்வரர் சிற்பமானது சமண தீர்த்தங்கரரது உருவத்தை அழித்து அர்த்த நாரீஸ்வரர் உருவாக்கப்பட்டிருந்தாலும்  அக்குகைக் கோவிலில் தீர்த்தங்கரரது அடையாளமான சுருள் சுருளான அசோக மரத்தின் கிளைகளை அர்த்த நாரீஸ்வரரின் தலை மீது இன்றும்  காண முடியும் என்கிறார்.


எண்பெருங்குன்றம்: 

மதுரையை சுற்றி அமைந்துள்ள மலைக்குன்றுகளில் எட்டு குன்றுகள் சமணர்களின் முக்கிய தளமாக இருந்துள்ளது. அதனை எண்பெருங்குன்றம் என்று இலக்கியங்கள் அழைக்கின்றன. கி.பி. பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கல விருத்தியுரையில் மேற்கோள்காட்டப்பட்ட பாடல் ஒன்றில் எண்பெருங்குன்றத்தில் முதல் குன்றாக திருப்பரங்குன்றம் குறிப்பிடப்படுகிறது. 


பரங்குன்ற ஒருவகம் பப்பாரம் பள்ளி

யருங்குன்றம் பேராந்தை யானை - இருங்குன்றம்

என்றெட்டு வெற்பும் எடுத்தியம்ப வல்லார்க்குச்

சென்றெட்டு மோபிறவித் தீங்கு.


    பெரியபுராணம் (கிபி 1133-1150) "எண்பெருங்குன்றத்தில் எண்ணாயிரம்" சமணர்கள் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகின்றது. தக்கயாகபரணியிலும் (128) எண்பெருங்குன்றம் பற்றிய குறிப்பு வருகின்றது.


திருப்பரங்குன்றத்தில் சமணம்: 

    சுமார் 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சமண சமயத்தின் அறநெறிகளை பரப்பும் சமணத்துறவிகள் திருப்பரங்குன்றம் மலையில் வாழ்ந்து இருக்கிறார்கள். சமணம் சமயம் கிபி 10ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் செல்வாக்கு செலுத்தி இருக்கிறது. அதற்க்கு சான்றாக திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தின் எதிரே மலைக்குன்றின் மேலே  காணப்படும் இயற்கையான குகைத்தளத்தில் கிமு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஐந்து தமிழிக் கல்வெட்டுகளும், 20க்கும் மேற்பட்ட சமணர் கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. 

    பழனியாண்டவர் கோயில் பின்புறம் உள்ள பாறையில் கிபி 10ஆம் நூற்றாண்டைச் மகாவீரர், பார்சுவநாதர், பாகுபலி, தரணேந்திரன் என்ற இயக்கன், பத்மாவதி இயக்கி, உள்ளிட்ட இயக்கர், மாந்தர் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. சிற்பம் செதுக்கியவரின் பெயர் வட்டெழுத்துக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயில் எதிரே உள்ள பாறையில் பார்சுவநாதர் மற்றும் கோமதீஸ்வரர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. 

    அரிட்டநேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என கூறப்படும் வடக்கிருந்து நோன்பு இருந்து உயிர்நீத்த செய்தியை கூறும் 1000 ஆண்டுகள் பழமையான நிசிதிகை கல்வெட்டு சிக்கந்தர் தர்காவின் பின்புறமுள்ள பாறையில் காணப்படுகிறது. 


காசி விஸ்வநாதர் கோயில்: 

    திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ளது. மேற்கு நோக்கியுள்ள கருவறையில் சிவலிங்கம் வழிபடப்படுகிறது. காசி விஸ்வநாதர் கோயில் பின்புறம் மச்சமுனி சன்னதியுள்ளது. மச்சமுனி அருகேயுள்ள சுனையில் தமிழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. முதல் வரிக்கு அருகில் சூலம் போன்ற குறியீடு செதுக்கப்பட்டுள்ளது. சுனையின் பாறையில் சிவலிங்கம், முருகன், விநாயகர் வடிக்கப்பட்டுள்ளது. இப்பாறையில் புடைப்பு சிற்பங்களாக இருந்த சமண உருவங்களும், கல்வெட்டுகளும் பிற்காலத்தாரால் அழிக்க பெற்றிக்க வேண்டுமென கல்வெட்டாய்வாளர் திரு. செ. போசு அவர்கள் கருதுகிறார்.  


பழனியாண்டவர் கோயில்: 

    திருப்பரங்குன்றம் மலையின் வடதிசை அடிவாரத்தில் நாயக்கர் கால கட்டிட மரபை கொண்டு விளங்குகிறது பழனியாண்டவர் கோயில். கோயில் சன்னதியில் நின்ற நிலையில் பழனியாண்டவர் காட்சி தருகிறார். இங்கு அர்த்தமண்டபத்தில் திருமலை நாயக்கர் மற்றும் அவரது மனைவியின் உருவமும் காணப்படுகிறது. பழனியாண்டவர் கோயிலில் இருந்து மலைக்கு மேலே ஏறினாள் தீபத்தூணை அடையாளம். தீபத்தூணில் நாயக்கர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. 


கன்னிமார் கோயில்:

மலையின் தெற்குப் பக்கத்தில் மரத்தினடியில் கன்னிமார் கோயில் என்று ஏழு கன்னியர்கள் உள்ள ஒரு கற்பலகை உள்ளது. கன்னிமார் வழிபாடு பழங்காலத்தில் இறப்புப் பெற்றிருந்து இடைக்காலத்தில் வழக்கொழிந்தது, அண்மையில் 35 ஆண்டுகளாக இங்கு மீண்டும் புத்துயிர் பெற்றுப் புதுவிமாக்களுடன் நடைபெற்று வருகிறது. இக்கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் மக்கள் பெருந்திநளுடன் வருகிறார்கள். பொங்கல் இடுவது, குறிகேட்பது, வழிபாடு முடித்து அனைவரும் கூடியிருந்து உண்டு பின்னர்த் திரும்புவது வழக்கமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் பெளர்ணமியன்று பாற்குடம், தீச்சட்டி எடுப்பதும், ஆடி மாதம் பதினெட்டாம் பெருக்கன்று காவடி எடுப்பதும் இங்கு நடைபெற்று வருகின்றன. இங்குப் பலியிடும் வழக்கம் இல்லை. எலுமிச்சம் பழத்தை அரிந்து, குங்குமம் தோய்த்து எறியும் வழக்கமும், வாழைப் பழத்தைச் சூறையிடும் வழக்கமும் உள்ளன.

 

திருப்பார்க்குன்றமா? சிக்கந்தர் மலையா?:


    திருப்பரங்குன்றம் மலையின் பெயர் சிக்கந்தர் மலை மாற்ற முயற்சிப்பதாக பொய்யான குற்றசாட்டுகளை இந்து முன்னணியினர் வைக்கின்றனர். இதுவரை எந்த இசுலாமியர்களும் அப்படி கோரிக்கை வைக்கவில்லை. திருப்பரங்குன்றம் மலைக்கு பரங்குன்றம், தண்பரங்குன்றம், தென்பரங்குன்றம், திருப்பரங்கிரி, முருகன் மலை, சத்தியகிரி,  கந்தமலை, கந்தமாதனம், பரமசினம், சிக்கந்தர் மலை என பல பெயர்கள் இம்மலைக்கு உண்டு. தமிழின் தொன்மையான இலக்கியமான சங்க இலக்கியம் தண்பரங்குன்றம், பரங்குன்றம் என்றே திருப்பரங்குன்றை குறிப்பிடுகின்றன. எனினும் இன்று திருப்பரங்குன்றம் என்றே அழைக்கப்படுகிறது.  

    பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்னும் சித்தர் 12-13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்று வரலாற்று ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இவர் எழுதிய போகர் ஏழாயிரம் (சப்த காண்டம்) நூலில் திருப்பரங்குன்றம் நூலை சிக்கிந்தர்மலை என்றும் சிக்கிந்தரிஷி சமாதியை கண்டதாகவும் குறிப்பிடுகின்றார். நாட்டுப்புற பாடல்களில் சிக்கந்தர் மலை என்ற குறிப்புகள் கிடைக்கிறது. 

மலையே மலையழகு
மலையைச் சுற்றித் தோப்பழகு 
சிக்கந்தர் மலையழகு
திருப்பரங்குன்றத்து தெருவழகு 

(கருப்பாயி - திருப்பரங்குன்றம் 28.10.1982)


    சுமார் 30ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பரங்குன்றம் பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம் சிக்கந்தர் மலை என்றே அழைக்கப்பட்டது. பின்னாளில் சிக்கந்தர் மலை பெயர் மாற்றம் செய்யப்பட்டு திருப்பரங்குன்றம் என்ற தொன்மையான பெயரே மீண்டும் வழங்கப்பட்டது. முருகனை வழிபடுவோருக்கு திருப்பரங்குன்றமாகவும் சிக்கந்தர் தர்காவை வழிபடுவோருக்கு சிக்கந்தர் தர்காவாகவும், சமஸ்கிரத வழிப்பாட்டை ஏற்போருக்கு சத்தியகிரியாகவும் இம்மலை விளங்குகிறது. பன்மைத்துவம் தான் நமது பண்பாடு. இங்கு மட்டுமல்ல ஒரே மலைக்கு பல பெயர்கள் வைத்து அழைக்கும் எல்லா இடங்களிலும் உண்டு. உதாரணமாக அரிட்டாபட்டியில் சமணர் குகைத்தளம் அமைந்துள்ள பாறையில் காணப்படும் கிபி 10ஆம் நூற்றாண்டு வட்டெழுத்துக் கல்வெட்டு திருப்பினையான்மலை என்கிறது. ஊர் மக்கள் கழிஞ்சமலை என்று அழைக்கின்றனர். அம்மலையில் உள்ள ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது. இசுலாமியர்கள் இம்மலையை ஓவாமலை என்று அழைக்கின்றனர். யானைமலையில் காணப்படும் தமிழிக் கல்வெட்டு இவக்குன்றம் என்கிறது. இவம் என்றால் பராகிருதத்திலும், சமஸ்கிருதத்திலும் யானையைக் குறிக்க வழங்கும் சொல். கொங்கர் புளியங்குளம் மலையைத் தமிழிக் கல்வெட்டுகள் புளியங்குன்றம் என்கிறது  ஆனால் மக்கள் அதனை இன்று பஞ்சபாண்டவர் மலை என்று அழைக்கின்றனர். இவ்வாறாக ஒரு மலைக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பெயர்கள் புழக்கத்தில் இருப்பது தமிழ்நாட்டில் காணப்படும் வழக்கம் ஆகும்.   

இரத்த காணிக்கை: 

மதுரையில் கருநாடக நவாப்புகளின் ஆட்டு கி. பி, 1740 முதல் 1801) வரை நடைபெற்றது. அப்பொழுது கி. பி, 1793-இல் முகம்மதலி வாலாஜா ஆர்க்காட்டு நவாப் ஆக திருச்சிராப் பள்ளியிலிருந்து ஆட்டி செய்து கொண்டிருந்த காலத்தில் மதுரைச்சீமை அவர் மகன் நூருள்மூல்க் என்பவன் பொறுப்பில் விடப்பட்டிருந்தது. அப்போது திவானாகக் கோபாலராயர் என்பவர் இருந்தார். அச்சமயத்தில் கர்னல் பேயர்டு என்பவன் 700 படை வீரர்களோடு இிருப்பரங்குன்றத்தில் வந்து தங்கினான். படைவீரர் தங்குவதற்கு 40 சத்திரங்கள் ஒதுக்கப்பட்டன. நோயுற்றிருந்த படை வீரரைக் கோயிலுக்குள் தங்க வைக்கத் திட்டமிட்டான் கர்னல் பேயர்டு, இதனை ஊரார் ஒன்று இரண்டு முழுமூச்சாய் எதிர்த்தனர். இதனால் கோயிலின் தூய்மை கெட்டு திருவிழாக்கள் நின்று தலமும் ஊரும் அழிந்து பட்டுப்போகும் என்பதால் சுந்தரபட்டர், தெய்வேந்திரபட்டர், குட்டிபட்டர் , சிதம்பரம்பிள்ளை, விழுப்பாதராயர், ஆறு நிருபாகக்காரர், நாட்டாண்மை முத்துக்கருப்பபிள்ளை காவல் ஆறுகரைப்பேர் உள்ளிட்டாரும் கூடி வயிராவி முத்துக்கருப்பன் என்பவருடைய மகன் குட்டியைக் கோபுரத்திலேறிக் கீழே விழச் செய்தனர்.  குட்டியின் குடும்பத்திற்கு இரத்தக் காணிக்கையாக நிலம் அளிக்கப்பட்டது. குட்டியின் நினைவுச் சிலை கையில் வயிராலி ஆயுதத்துடன் திருப்பரங்குன்றத்தில் (தற்பொழுது தியாகராசர் குடியிருப்பு மனைகள் உள்ள இடத்தில்) உள்ளது.   மேலும் கோயிலில் இருந்து நாடோறும் அரைப்படி அரிசிச் சோறும் கொடுக்க வேண்டும் என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது. (இன்றும் இக்கோயிலில் பணிபுரியும் வயிராவியின் சந்ததியார்க்கு, திருவிழாக் காலங்களில் வெற்றிலை மரியாதை செய்யும் பொழுது ''சாவான்'' என்று கூறித் தனியே மரியாதை செய்கிறார்கள்)

2. எல்லப்ப முதலியின் மகன் அண்டராபரண முதலியென்பவன் கோயிலுக்கு விடப்பட்ட நிலத்தில் ஏற்பட்ட முறைகேடுகளைக் களைந்து உரிமைகளை நிறுவுவதற்காக இக்கோயில் கோபுரத்திலிருந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டான். இவன் சந்ததியாருக்கு ஒரு பாளையம் இரத்தக் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுள்ளது. (இன்றும் இக்கோயிலில், பணிபுரியும் சீர்பாதம் என்னும் முதலியார் வகையினர்க்குத் திருவிழாக் காலங்களில் வெற்றிலை மரியாதை செய்யும்பொழுது ''சாவான்'' என்று கூறித் தனியே மரியாதை செய்கிறார்கள்)


 

ஆதாரம்:

மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு: 2005 வெளியீடு 

திருப்பரங்குன்றம்: செ. போசு, கல்வெட்டாய்வாளர், 1981 வெளியீடு  

திருப்பரங்குன்றம் கோயில் வேற்கோட்டம் - நாகப்பா நாச்சியப்பன், 1989 வெளியீடு

சுல்தான் சிக்கந்தர் பாதுஷா ஷஹீத் வரலாறு - 2014 வெளியீடு 

சங்க நூல்களில் முருகன் - பி.எல். சாமி 1990

ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன், ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான்  சம்சுதீன் அவுலியாக்கள் தர்கா - வாழக்கை வரலாறு: ஏப்ரல் 2022 வெளியீடு 

https://www.bbc.com/tamil/india-44930287 

https://timesofindia.indiatimes.com/city/ahmedabad/Oldest-Indian-mosque-Trail-leads-to-Gujarat/articleshow/55270285.cms 

https://tamil.news18.com/news/lifestyle/travel-muslimsworshipping-the-hindu-lord-shiva-interesting-islamic-shivan-temple-in-paramakudi-raman-881191.html

https://tamil.oneindia.com/news/pudukottai/pudukkottai-islam-people-gift-to-sivan-temple-festival/articlecontent-pf709834-462642.html

https://www.youtube.com/watch?v=QV-yPxxO8qo
https://www.facebook.com/share/v/1Cth5nQFjw/

இசுலாமிய பெயர் கொண்ட தெரு மற்றும் ஊர்:

தாசில்தார் பள்ளிவாசல் தெரு 9.922095, 78.122223

துலுக்கர் பூக்காரத் தெரு 9.922423, 78.123249

காஜிமார் தெரு  9.913181, 78.113184

மதர்கான் தபேதார் தெரு 9.916224, 78.118073 

கான்சா மேட்டுத் தெரு 9.915737, 78.117485

காயிதே மில்லத் தெரு 9.923408, 78.125586

காஜா தெரு 9.909614, 78.116033

சிராஜ் தொகாடியா தெரு 9.919939, 78.132996

கான்பாளையம் 9.917753, 78.130870

கான்சாபாளையம் 

மகபூப்பாளையம் (மாபாளையம்)

சிக்கந்தர் சாவடி 

சி(சு)லைமான் 

பிபி குளம் (பீவி குளம்)

முல்லாமலை 10.154036, 78.345692

வாலா சாகிபு நகரம் (வி.எஸ். நகரம்) 10.102125, 78.316562

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்: