சோமகிரி மலை - பறம்பு நாடு
தமிழ்நாட்டில் பெருங்கற்காலம் என்பது கிமு 1000 முதல் கிபி வரை 200 இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் ஈமக்குழிகளை பெரிய பெரிய கற்களை கொண்டு அமைத்ததன் அடிப்படையில் பெருங்கற்காலம் என அழைக்கப்பட்டது. முதுமக்கள் தாழி, கற்பதுக்கை, கற்திட்டை, நெடுங்கல், கல்வட்டம், கற்குவை என பல வகை பெருங்கற்கால சின்னங்கள் தமிழ்நாட்டில் காணப்படுகிறது. கற்திட்டை (Dolmen), கற்பதுக்கை (Cist), கல்வட்டம் (Stone Circle), நெடுங்கல் (Menhir) உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மேலவளவு ஊராட்சியில் உள்ள மேலவளவு, ராசினாம்பட்டி, கைலம்பட்டி ஆகிய ஊர்களில் 50 ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது. ராசினாம்பட்டி சோமகிரி கோட்டைபகுதியில் காணப்படும் நெடுங்கல் ஒன்றை முனியாண்டி என்றும், கற்பதுக்கை ஒன்றை பட்டசாமி என்றும் மக்கள் வழிபாட்டு வருகின்றனர். இக்கோயில்களில் அருகில் கல்வட்டம், கற்பதுக்கையின் பலகை கற்கள் சில சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. விவசாயத்திற்கு இடையூறாக இருப்பதால் பெருங்கற்கால சின்னங்களின் தொன்மை மற்றும் முக்கியத்துவம் அறியாமல் பல இடங்களில் மக்கள் அகற்றிவிட்டனர். கைலம்பட்டி குதிரோடு பொட்டல் பகுதியில் காணப்பட்ட பெருங்கற்கால சின்னங்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டு இருக்கிறது. தொல்லியல் அறிஞர் திரு. இரா. ஜெகதீசன் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் உள்ள பெருங்கற்கால சின்னங்களை கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
மேலவளவு கிராமத்தில் சோமகிரிமலை குன்றுக்கும், முறிமலை குன்றுக்கும் இடையில் உள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது பறம்பு கண்மாய். அதன் கலிங்கு பகுதி அருகேயுள்ள பாறையில் இரண்டு கல்வெட்டுகள் காணப்படுகிறது. பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பறம்பு கண்மாய் வெட்டி அதற்கு கலிங்கு அமைத்து கொடுத்த செய்தியை கிபி 1238 ஆம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. அதன் பின் கிபி 1415 ஆம் ஆண்டு விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருப்பாச்சிராயரின் கல்வெட்டில் திருநாராயண சம்பான் என்பவன் கண்மாய் பராமரிப்புக்காக கொடுத்த காணிக்கை பற்றி குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டுகளில் இவ்வூர் வடபறப்பு நாட்டு அழகர் திருவிடையாட்டம் பறம்பான திருநாராயண மங்கலம் என்று குறிப்பிடப்படுகிறது. இவ்வூரின் பெயர் திருநாராயண மங்கலம் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது.
சோமகிரி மலையடிவாரத்தில் உள்ள மலையபீர் தர்காவில் காணப்படும் நாவல் மரத்தின் அடியில் கிபி 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சுல்தானின் காசு ஒன்றும் கிடைத்துள்ளது. சோமகிரி மலையின் உச்சியில் 200 முதல் 300 ஆண்டுகள் பழமையான கோட்டைச் சுவர்கள், கோயில் மண்டபங்கள் காணப்படுகின்றன. சில ஆண்டுகள் முன்பு வரை மலை உச்சியில் முருகன் கோயில் இருந்துள்ளது. கோயிலில் இருந்த முருகப் பெருமானின் வெண்கலச் சிலை பலமுறை காணாமல் போய் மீட்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணத்திற்க்காக சுப்ரமணிய முருகன் கோயில் மேலவளவு கிராமத்திற்குள் புதிதாக கட்டியெழுப்பப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் சோமகிரி மலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெறுகிறது. மேலவளவு சோமகிரி கருப்பு கோயில் திருவிழா, மஞ்சுவிரட்டு மேலூர் பகுதியில் மிகவும் புகழ் பெற்ற நிகழ்வுகளாகும்.
Dinamalar 14.01.2025 |
https://ebird.org/checklist/S213153754
தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை
Comments
Post a Comment