மக்களுக்காக

சரித்திரம் படைக்காமல்
சவப்பெட்டிக்குள் - என்
சடலம் சமாதிகொள்ளாது
என்றொரு
சத்தியம் செய்து கொண்டவன் நான்...

காதல் கவிதைகள் பல எழுதி
சலித்துவிட்ட
கால கட்டத்தில்...

என் சிந்தனை குளத்தில்
சிறியதாய் ஒரு
கூழாங்கல் விழுந்து
குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

காதல் கவிதைகள் எழுத
பல காதலர்கள் கவிஞர்கள்
இருக்கும்
கலியுகத்தில்.....

தீராத சிக்கலுக்குள்
சிதைந்து கிடக்கும்
மக்களுக்காக
யார் எழுதுவது..
மயக்க ஊசி இட்டதை போல்
போர்வைக்குள்
போலியாக உறங்கும் இவர்களை
யார் எழுப்புவது...

கொச்சை வார்த்தைகளை
கோசமிட்டு பழகிய
இளைஞர்களுக்கு - நல்ல
கொள்கைகளை
யார் கற்று கொடுப்பது...

பட்டினி சாவை ஒழிப்பதாய் சொல்லி
நம் உண்ணாவிரதத்தை
ஊக்குவிக்கும்
அரசியல் அயோக்கியர்களை
யார் அடையாளம் காட்டுவது...

ஈம சடங்குகளுக்கு வழியில்லாது
ஈக்கள் மொய்க்கும் சடலங்கள்
தெருவில் கிடக்க
இறைவன் உருவ பொம்மைகள்
பல்லக்கில் பவனி வருகிறதே என
யார் பகுத்தறிவு பேசுவது...

மரங்கள் செழித்த தேசத்தில்
நீங்கள் இளைப்பாறதான்
நிழல்களை கடன் வாங்கினோம் என
கணக்கு காட்டும்
அமைச்சர்களின் கண்ணத்தில்
யார் அறைவது...

சிறையில் கொலை குற்றவாளி
இயற்கை மரணம் அடைந்த பிறகு
தூக்கு உறுதியாகும் தீர்ப்பின்
தாமத தண்டனையை
யார் தட்டி கேட்பது...

வாக்காளர்களை
இலவசம் வாங்கும்
வாடிக்கையாளர்களாய் மாற்றிய
மூத்த தலைவர்களின்
முகத்தை யார் கிழிப்பது...

ஆண் தாகத்தை தீர்த்துக்கொள்ள
ஆன்மீகத்தை பயன்படுத்தும்
போலி சாமியார்களின்
புற-முதுகெலும்பை
யார் உடைப்பது..

இறைவன் பிறப்பற்றவன் என்று
இன்றுவரை நம்பப்படும்
இந்த உலகுக்கு
என்னைப்போல்
விந்தணு சேர்க்கையில்
வந்து பிறந்த ஒருவன்
எப்படி இறைவன் ஆகமுடியும்
என்ற கேள்வியை
யார் கேட்பது..

காதல் கவிதைகள் பல எழுதி
சலித்து விட்ட
காலகட்டத்தில்

என் சிந்தனை குளத்தில்
தெரியாமல் விழுந்த கல்லொன்று
தெளிவை தருகிறது...

மனிதம் இல்லா காட்டில்
மழை பெய்வது போல
ரசிக்க ஆள் இல்லை எனினும்
ஒருபோதும் என் பேனா
ஓடிங்கிவிடாது....

இனி
பசித்திருக்கும் மக்களுக்காக
என் பேனா
பால் சுரக்கும்...
பூக்கவிருக்கும் எல்லா
புதுகவிதைகளிலும்
புரட்சி வெடிக்கும்...

............தன்னம்பிக்கையோடு
-- தமிழ்தாசன்...

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?