டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்

தமிழரின் தொன்மை சின்னங்களும்   டங்ஸ்டன் சுரங்கமும்




        மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள அ. வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், எட்டிமங்கலம் உள்ளிட்ட ஊர்களை உள்ளடக்கிய 2015 ஹெக்டேர் அதாவது சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பை ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஸிங் நிறுவனம் (Hindustan Zinc) டங்ஸ்டன் (Tungsten) கனிமம் சுரங்கம் அமைப்பதற்கான ஏலத்தை எடுத்து இருக்கிறது.

மதுரை மாவட்டம் மேலூரில் டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு ஆய்வுடன் இணைந்த சுரங்க குத்தகை உரிமம் வழங்குவதற்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி, மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை வெளியிட்டது.


கடந்த 07.11.2024 அன்று சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் மேம்பாடு & ஒழுங்குமுறை சட்டத்தின் (Mines and Minerals Development and Regulation Act 1957) கீழ் நடத்தப்பட்ட நான்காவது ஏலத்தில் மதுரை மேலூர் நாயக்கர்பட்டி பகுதி டங்ஸ்டன் சுரங்கம் ஏலத்தை இந்துஸ்தான் ஜிங்க் (Hindustan Zinc Limited) நிறுவனம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டு அரசுக்கு இதில் நேரடியாக எந்த பங்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் 7ஆம் தேதி வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் (Hindustan Zinc) நிறுவனத்தைத் தகுதியான நிறுவனமாக மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்தது. ஆந்திரா மாநிலம் பாலேபாளையம் மற்றும் தமிழ்நாட்டில் மதுரை நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் கனிமம் எடுக்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.


பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான அழகர்மலைக்கும் பெருமாள்மலைக்கும் இடைப்பட்ட நிலப்பரப்பில் தான் இந்த டங்ஸ்டன் சுரங்கத்திற்க்கான 5000 ஏக்கர் ஏலம் நடந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


        அட்ச ரேகை, தீர்க்க ரேகை எல்லைகள் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் அறிவிப்பு வெளியான MECL அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. அதை அடிப்படையாக கொண்டு கூகுள் வரைப்பட உதவியுடன் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்டுள்ள 5000 ஏக்கர் பரப்பின் கீழ் வருகிற மக்கள் வாழிடம், வரலாற்று சிறப்பிடங்கள், பல்லுயிரிய பெருக்கமுள்ள பகுதிகள் உள்ளிட்ட கீழே பட்டியலிட்டுள்ளேன்.

குடியிருப்பு வீடுகள் கொண்ட பகுதி மற்றும் ஊர்கள்:

அ. வல்லாளப்பட்டி பேரூராட்சி -------------------------- - அ. வல்லாளப்பட்டி - அரியப்பன்ப்பட்டி - செட்டியார்பட்டி - கூலானிப்பட்டி - சண்முகநாதபுரம் - சிங்காரதோப்பு
- நாயக்கர்பட்டி
- சிலிப்பியபட்டி அரிட்டாபட்டி ஊராட்சி --------------------- - அரிட்டாபட்டி - இளம்நாயகியம்மன்புரம் - பட்டி - பசும்பொன்நகர் மீனாட்சிபுரம் ஊராட்சி ---------------------- - காந்திநகர் - மீனாட்சிபுரம் எட்டிமங்கலம் ஊராட்சி ------------------ - வீரபுத்திரன்பட்டி
- மஞ்சம்பாறை - முத்துவேல்பட்டி (எட்டிமங்கலம்)
சென்னகரம்பட்டி ஊராட்சி ---------------- - முத்துவேல்பட்டி (கவட்டையம்பட்டி)

கிடாரிப்பட்டி, தெற்குதெரு ஊராட்சியில் உள்ள தரிசு மற்றும் வேளாண் நிலங்கள் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க அறிவிக்கப்பட்டுள்ள 5000 ஏக்கர் நிலப்பரப்பிற்குள் வருகிறது.

தமிழ்நாடு தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள்: • மாங்குளம் தமிழிக் கல்வெட்டு & சமணர் படுகை • அரிட்டாபட்டி தமிழிக் கல்வெட்டு & மகாவீரர் சிற்பம் • அரிட்டாபட்டி சிவன் குடைவரை கோயில் (7ஆம் நூற்றாண்டு) தமிழ்நாடு வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதி: • பெருமாள் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி தமிழ்நாடு பல்லுயிரிய வகைமை வாரியத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதி: • அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம்
தமிழ்நாடு தொல்லியல் துறை, வனத்துறை, பல்லுயிரிய வகைமை வாரியம் ஆகிய மூன்று துறைகளால் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் இந்த 5000 ஏக்கர் டங்ஸ்டன் சுரங்கம் பகுதிக்குள் வருகிறது.




தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள்

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள 5000 ஏக்கர் பரப்பளவில் உள்ள வரலாற்று மற்றும் பல்லுயிரிய சிறப்பிடங்களை அறிந்து கொள்வோம். 

பெருங்கற்கால சின்னங்கள்:
-------------------
அரிட்டாபட்டி காமன்குளம் கண்மாயில் 3500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்திட்டைகள், கற்பதுக்கைகள் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்கள் காணப்படுகிறது.


தமிழிக் கல்வெட்டு:
--------------------
  • 2300 ஆண்டுகள் தொன்மையான மாங்குளம் தமிழிக் கல்வெட்டு மீனாட்சிபுரம் ஒவா மலை என்று அழைக்கப்படும் கழுகுமலையில் அமைந்துள்ளது. மாங்குளம் கல்வெட்டு என்றும் மீனாட்சிபுரம் கல்வெட்டு என்றும் இங்கு கண்டறியப்பட்ட தமிழிக் கல்வெட்டு அழைக்கப்படுகிறது. இங்கே நான்கு குகைத்தளத்தில் மொத்தம் ஆறு தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
  • மாங்குளம் தமிழிக் கல்வெட்டில் சங்க கால பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் பொறித்த இரண்டு கல்வெட்டுகளும், அதில் செழியன், வழுதி போன்ற பாண்டியர் குடிப் பெயர்களும், பட்டப் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாங்குளம் கல்வெட்டு 

  • தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரத்தை பெற்று தந்தது இந்த கல்வெட்டுகள் தாம். இதுவரை குகைத்தளங்களில் கிடைக்கப்பெற்ற தமிழிக் கல்வெட்டுகளில் மாங்குளம் கல்வெட்டுதான் காலத்தால் பழமையானதாகும்.
  • இதே போல அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் உள்ள குகைத்தளத்தில் ஈரமாயிரமாண்டுகள் தொன்மையான இரண்டு தமிழிக் கல்வெட்டு காணப்படுகிறது.
சமணர் படுக்கை:
--------------------
மீனாட்சிபுரம் ஓவா மலையில் உள்ள நான்கு குகை தளத்தில் 50க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும், அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் 10க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.



சமணர் பள்ளி: மீனாட்சிபுரம் ஓவாமலை உச்சியில் சுமார் 60 பேர் அமரும் வகையிலான குகை அமைந்துள்ளது. இவ்விடம் சமணர் பள்ளியாகவும் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாங்குளம் அகழாய்வு: மாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் ஓவாமலையில் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பாக அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. மீனாட்சிபுரம் ஓவாமலையின் உச்சியிலும், வடகிழக்குச் சரிவிலும், மீனாட்சிபுரம் கிராமத்தின் வடகிழக்கு பகுதியிலும் என மூன்று இடங்களில் குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வுகள் நடைபெற்றது. அந்த அகழாய்வில் நுண்கற்கால சின்னங்கள், பிற்கால பாண்டியர் நாணயங்கள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், செங்கற்கள், இரும்பிலான கருவிகள் கண்டறியப்பட்டன. கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 14ஆம் நூற்றாண்டு வரை வாழிடமாக கொண்டு இப்பகுதியில் தொடர்ந்து தமிழர்கள் வாழ்ந்து வந்திருப்பது கண்டறியப்பட்டது. கீழடி அகழாய்வுக்கு முன்பே தமிழர்கள் வாழிடம் அகழாய்வு மூலம் முதன்முதலில் கண்டறியபட்டது மாங்குளம் அகழாய்வில் தான்.

மகாவீரர் சிற்பம் & வட்டெழுத்து கல்வெட்டு:
-----------------
அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் கிபி பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன் கீழே தமிழ் வட்டெழுத்து கல்வெட்டும் காணப்படுகிறது.

                                            

குடைவரைக் கோயில்:
-----------------
அரிட்டாபட்டி கழிஞ்ச மலையில் சுமார் 1300 ஆண்டுகள் பழமையான குடைவரை கோயில் அமைந்துள்ளது. கிபி. எட்டாம் நூற்றாண்டில் முற்கால பாண்டியர்களால் மலைகளை குடைந்து உருவாக்கப்பட்ட கோயில் இதுவாகும். பாசுபத சமயத்தை சேர்ந்த இலகுலீசரரின் சிற்பம் இங்கே செதுக்கப்பட்டுள்ளது.




மேலே குறிப்பிடபட்டுள்ள மீனாட்சிபுரம் ஓவா மலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும், அரிட்டாபட்டி கழிஞ்சமலை தமிழிக் கல்வெட்டு சமணர் கற்படுக்கைகள் கொண்ட குகைத் தளமும் மகாவீரர் சிற்பமும், முற்கால பாண்டியர் குடைவரை சிவன் கோயிலும் Ancient and Historical Monuments and Archaeological Sites and Remains Act, 1966 சட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்டு, பராமரிக்கபட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

முற்கால பாண்டியர் கோயில்: அ. வல்லாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட கூலானிபட்டியில் கன்னிமார் பாறையில் உள்ள கன்னிமார் கோயிலில் முற்பாண்டியர் கால தவ்வை சிலை காணப்படுகிறது. கிபி ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலைகளும், பிற்பாண்டியர் கால ஆவுடை பாகங்களும், நந்தி சிலையும் இக்கோயில் காணப்படுகிறது.




பிற்கால பாண்டியர் சிவன் கோயில்:
--------------------
கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த விக்கிரம பாண்டிய மன்னர் காலத்து சிவன் கோயில் அரிட்டாப்பட்டியில் உள்ளது. அதில் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன. சிதைந்த நிலையில் இருந்த கோயில் அண்மையில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.


அரிட்டாபட்டி பெரியகுளம் கண்மாயின் கிழக்குப்புறத்தில் கோனார் தோப்பு என்ற இடத்தில் சிதிலமடைந்த கோயில் தூண்கள், சிற்பங்கள் காணப்படுகிறது. இக்கோயிலை காராளன் கோயில் என்று அழைக்கின்றனர். மேட்டுக்கார தோப்பு பகுதியில் ஒரு சிவன் கோயில் இருந்தாக ஊர் பெரியவர்கள் கூறுகிறார்கள். மேட்டுக்கார தோப்பில் பழைய நந்தி சிலையும், உடைந்த கற்தூணும் காணப்படுகிறது.

பெருமாள்மலை கல்வெட்டு:
நரசிங்கம்பட்டி பெருமாள்மலையின் மேலே ரெட்டைக்கல் என்ற இடத்தில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டில் கிபி 12ஆம் நூற்றாண்டில் சிவன் கோயில் ஒன்றுக்கு நிலக்கொடை அளித்த செய்தியும், அந்த நிலத்திற்கு எல்லையை குறிக்கும் விதமாக முத்தலை சூலம் ஒன்றையும் கல்வெட்டின் கீழே செதுக்கியுள்ளனர். 




தொன்மையான கண்மாய்:
-------------------
அரிட்டாபட்டி கழிஞ்சமலை அடிவாரத்தில் ஆனைகொண்டான் கண்மாய் அமைந்துள்ளது. இக்கண்மாயில் 700 ஆண்டுகள் பழமையான இரு மடைதூண்கள் உள்ளன. வல்லாளப்பட்டி பேரூராட்சியில் உள்ள புலிக்கண்மாய், மூழிக்கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களிலும் மடையில் கல்வெட்டுகள் இருந்தன என்றும், அது பராமரிப்பின்றி அகற்றப்பட்டு விட்டதாகவும் ஊர் மக்கள் தெரிவித்தனர். நீர்நிலைகள் என்ற தலைப்பில் அப்பகுதியில் உள்ள நீர்நிலைகள் பட்டியல் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.


கோட்டை:
மருத நாயகம் என்று அழைக்கப்படும் முகமது யூசுப்கான் 1757இல் மதுரை ஆளுநராக ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் நியமிக்கப்பட்டார். மருத நாயகம் 1764 ஆம் ஆண்டு வரை மதுரைப் பகுதியை ஆட்சி செய்தார். மருத நாயகம் ஆட்சி காலத்தில் மேலூர் பகுதியிலும், வல்லாளப்பட்டியிலும் கோட்டை ஒன்றை காட்டினார் என்று ஆங்கிலேயே ஆவணங்கள் (Madura Country Manual J H Nelson Gazettee 1868) கூறுகிறது. பிற்கால படையெடுப்பில் கோட்டைகள் தகர்த்தப்பட்டு இருக்கலாம். இன்றைய வல்லாளப்பட்டி பகுதியில் கோட்டைகள் இருந்த சுவடுகள் காணமுடியவில்லை. வல்லாளப்பட்டியில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ள மேலவளவு சோமகிரிமலையில் பழமையான கோட்டை சுவர்கள், கோட்டை வாசல் இன்றும் காண முடிகிறது. இன்றைய மேலூர் பகுதியில் கோட்டைகள் இருந்ததற்கான சுவடுகள் காண முடியவில்லை. மேலூரில் இருந்து கருங்காலக்குடி செல்லும் வழியில் கோட்டைமலை உள்ளது. கோட்டைமலையில் பழமையான கோட்டைகள் அதன் எஞ்சிய கோட்டைச் சுவர்கள் இன்றும் காண முடிகிறது.

சோமகிரிமலை 

சோமகிரிமலை 

சோமகிரிமலை 

கோட்டைமலை 

கோயில்கள்:
---------------
ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது 30 முதல் 50 நாட்டார் தெய்வங்கள், காவல் தெய்வங்கள், கோயில்கள் அமைந்துள்ளது. அதில் பலநூறு கோயில்கள் டங்ஸ்டன் சுரங்கம் திட்டத்தில் காணாமல் போகும். அதில் குறிப்பிடத்தக்க சில கோயில்களின் பட்டியலை கீழே கொடுத்துள்ளேன்.




வல்லாளபட்டி வெள்ளிமலையாண்டி கோயில், பெரிய அய்யனார் கோயில், சின்ன அய்யனார் கோயில், நொண்டி சாமி, கூலானிப்பட்டி கன்னிமார் கோயில், கட்டகுடுமி அய்யனார் கோயில், செகுட்டு அய்யனார் கோயில், கந்தனழகி அம்மன் கோயில், ஹயக்ரீவர் கோயில், காமாட்சியம்மன் கோயில், வட முகத்து கருப்பு, நாகம்மாள் இளமைநாயகி அம்மன், சண்டிவீரன் கோயில், பூலாமலை கருப்பு, சின்னையன் கோயில், சண்முகநாதபுரம் வேலாயுதம் கோயில், செல்லியம்மன் கோயில், கரும்பாள் அம்மன், மீனாட்சிபுரம் புளியடி அய்யனார் கோயில், சன்னாசி அய்யனார் கோயில், செட்டியார்பட்டி வளநாட்டு கருப்பு கோயில், எட்டிமங்கலம் செந்தலை அய்யனர் கோயில், அரிட்டாபட்டி இளம்நாயகி அம்மன் கோயில், சின்னடைக்கி அம்மன் கோயில், காமாட்சியம்மன் கோயில், பத்திரகாளியம்மன் கோயில், வளநாடு கருப்பசாமி கோயில், கழிஞ்சமலைச்சாமி, மலட்டு அழகி அம்மன், சின்னையன், குடுமிக்கரை அய்யனார், காமிக்கரை அய்யனார், பாண்டிச்சாமி, மந்தத்து அய்யனார், கருத்தங்கரை அய்யனார் கோயில் உள்ளிட்ட கோயில்கள் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட 5000 ஏக்கர் எல்லைக்குள் அமைந்து இருக்கிறது.

பழமையான தர்கா & பள்ளிவாசல்:
-----------------
மாங்குளம் நோட்டக்காரர் வகையறாவுக்கு உட்பட்ட பழமையான தர்கா இப்பகுதியில் உள்ளது. கழிஞ்சமலையின் வடக்கு முனையில் 200 ஆண்டுகள் பழமையான ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது. அதேபோல குடவரை சிவன் கோயில் செல்லும் வழியில் மம்மலை கூடு தர்கா உள்ளது. வல்லாளப்பட்டி பள்ளிவாசலும் சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.



பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம்:
1. மீனாட்சிபுரம் தமிழிக் கல்வெட்டுகள் குகைத்தளம், சமணர் கற்படுக்கைகள், 2. அரிட்டாபட்டி குடைவரை சிவன் கோயில்,
3. அரிட்டாபட்டி தமிழிக் கல்வெட்டுகள் குகைத்தளம், சமணர் கற்படுக்கைகள், மகாவீரர் சிற்பம், வட்டெழுத்துக் கல்வெட்டு ''மெட்ராஸ் புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1966'' படி மேலே குறிப்பிட்டுள்ள மூன்று இடங்களும் ''பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக'' தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு புராதன மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் இடங்கள் மற்றும் எச்சங்கள் விதி 1971ன் படி விதி 32இல் உப விதி (2) ன் கீழ் பாதுகாக்கப்பட்ட எல்லையிலிருந்து அனைத்து பக்கங்களில் இருந்தும் 100 மீட்டர் வரையிலும் அல்லது சுற்றுப்பட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் வரன்முறைக்கு உட்பட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெருமாள் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி:
-----------------------
வெள்ளரிபட்டி - நரசிங்கம்பட்டி - பெருமாள்பட்டி - அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு இடையில் பெருமாள்மலை வனப்பகுதி அமைந்துள்ளது. சுமார் 5.5 கி.மீ நீளமும் ஆயிரம் ஏக்கர் பரப்பளவும் கொண்ட பெருமாள்மலை - புள்ளிமான், மிளா மான், தேவாங்கு, காட்டு பூனை, மரநாய் உள்ளிட்ட பல்வேறு காட்டு விலங்குகளின் வாழிடமாக பெருமாள்மலை விளங்குகிறது. பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியின் மேற்குச் சரிவும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் பகுதிக்குள் வருகிறது.




அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம்:
-------------------------
சூழலியல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சிபுரம் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 53.580 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும், அரிட்டாபட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 139.635 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மலைக்குன்றுகளையும் உள்ளடக்கிய மொத்தம் 193.215 ஹெக்டேர் (477.4 ஏக்கர்) பரப்பை கடந்த 22.11.2022 அன்று தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக (Biodiversity Heritage Site) அறிவித்தது தமிழ்நாடு அரசு. பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்கப்பட்ட கழிஞ்ச மலை, நாட்டார் மலை, ராமாயி மலை, அகப்பட்டான் மலை, கழுகு மலை (ஓவா மலை), தேன்கூடு மலை, கூகைக்கத்தி மலை உள்ளிட்ட மலைகளும் இந்த 5000 ஏக்கர் சுரங்கம் ஏலம் விடப்பட்ட பகுதியில் வருகிறது. நூறுக்கும் மேற்பட்ட பறவைகள், இருபதுக்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டு விலங்குகள், இருபதுக்கும் மேற்பட்ட ஊர்வன வகை என பல்வேறு காட்டு விலங்குகளின் புகழிடமாக உள்ள மலைக்குன்றுகள் இவை என்பது குறிப்பிடதக்கது.

அரிட்டாபட்டி கழிஞ்சமலை 

பல்லுயிரிய வகைமை:
அத்தி, ஆத்தி, இச்சி, ஈச்சம், உசில் உள்ளிட்ட 142 வகை தாவரங்களும்; புள்ளிமான், மிளா மான், முள்ளம்பன்றி, காட்டுப்பன்றி, சாம்பல் நிற தேவாங்கு, காட்டுப்பூனை, மரநாய் உள்ளிட்ட 24 பாலூட்டி வகை காட்டு விலங்குகளும்; லகுடு வல்லூறு, இராஜாளி பருந்து, பெரும்புள்ளிக் கழுகு, கொம்பன் ஆந்தை, கள்ளிப்புறா, செங்குருகு உள்ளிட்ட 181 வகை பறவைகளும், வெந்த வரியன், சிவப்புடல் அழகி, கரும்புல் நீலன், மஞ்சாடை உள்ளிட்ட 43 வகை வண்ணத்துப்பூச்சிகளும்; மலைப்பாம்பு, வெள்ளிக்கோல் வரையன், உடும்பு, பச்சோந்தி, மரப்பல்லி, உடுத்திரள் ஆமை உள்ளிட்ட 47 வகை ஊர்வன உயிரிகளும்; அயிரை, கெளுத்தி, குரவை, விரால், உழுவை உள்ளிட்ட 24 வகை நன்னீர் மீன்களும் அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளத்தில் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.


பண்பாட்டு நிகழ்வுகள்
மலைக்கோயில் திருவிழா கார்த்திகை தீபம்:
நரசிங்கம்பட்டி மலைக்கோயில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு பெருமாள் மலையில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. நரசிங்கம்பட்டி, (முன்னமலை), மீனாட்சிப்பும், அரிட்டாபட்டி, தெற்குத்தெரு உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் பெருந்திரளாக பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு பவுர்ணமி நாளன்றும் தீபம் ஏற்றும் நிகழ்வு பெருமாள் மலையில் நடைபெற்று வந்து இருக்கிறது. வனத்துறை கட்டுப்பாட்டின் காரணமாக இப்போது கார்த்திகை மாதம் மட்டும் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பெருமாள் மலை மீது கொண்டைக்கல் என்னுமிடத்தில் மாலை 6 மணி அளவில் ஜோதி தீபம் ஏற்றப்படுகிறது. அதன் பின்னரே பெருமாள் மலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கார்த்திகை விளக்குகள் ஏற்றுகின்றனர். அரிட்டாபட்டி கழிஞ்சமலையின் உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது.
அரிட்டாபட்டியில் உள்ள கழிஞ்சமலையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. இவை தவிர மேலூர் பகுதியில் கிடாரி மலை, மூக்காண்டி மலை, புலிமலை, சோமகிரி, அருவிமலை, முள்ளாமலை, முறிமலை உள்ளிட்ட மலைக்குன்றுகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. பச்சைக்குத்தி பாறை: கார்த்திகை மாதம் மலைக்கோயில் திருவிழாவில் பெருமாள்மலை அடிவாரத்தில் உள்ள பச்சைக்குத்தி பாறையில் மாதவிடாய் சுழற்சி நின்று போன வயதான பெண்கள் மாசி மாதம் அறுவடை செய்த கதிர்களை தொம்பரையில் இருந்து எடுத்து வந்து பெருமாள்மலை வைத்து இடித்து பொங்கல் வைத்து வழிபடுகிறார்கள். வல்லாளப்பட்டி குதிரை எடுப்பு திருவிழா: பெரிய அய்யனார், சின்ன (செகுட்டு) அய்யனார், கன்னிமார் - நொண்டிசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒருமுறை குதிரை எடுப்பு திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குதிரை செய்யும் பிடிமண் சின்னாண்டி கண்மாயில் எடுத்து செய்வது இத்திருவிழாவின் மரபாகும்.


பால்குடம் & முளைப்பாரி திருவிழா: வல்லாளப்பட்டியில் உள்ள செட்டியார்பட்டி நாகம்மாள் கோயில், வலையர் தெரு காளியம்மாள் கோயில், நாகம்மாள் கோயில் பால்குடம் - முளைப்பாரி எடுக்கும் திருவிழா சித்திரை மற்றும் வைகாசியில் நடைபெறுகிறது. செட்டியார்பட்டி புலிகண்மாயிலும் வல்லாளப்பட்டி புதுக்குளம் கண்மாயிலும் முளைப்பாரி கரைக்கப்படுகிறது. அரிட்டாபட்டி இளமநாயகியம்மன் கோயில் திருவிழா முளைப்பாரி கோயில் ஊருணியில் குறைக்கபடுகிறது. காமங்குளம் கண்மாய் புரவி: அ. வல்லாளப்பட்டி பெரிய அய்யன் - சின்ன அய்யன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவிற்கு சின்னாண்டி கண்மாய் உள்ளிட்ட கண்மாய்களில் மண் எடுத்து குதிரை செய்யப்படுகிறது. அரிட்டாபட்டி தேன்மலைக்கும் பெருமாள் மலைக்கும் இடையில் அமைந்துள்ளது காமங்குளம் கண்மாய். சுத்துப்பட்டு ஊரில் உள்ள அய்யனார் கோயில், அம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவிற்கும் காமாங்குளம் கண்மாயில் வந்து மண் குதிரைகள் செய்ய மண் எடுத்து செய்யப்படுகிறது. ''காமாங்குளம் நண்டு குஞ்சு பொரிச்சு கரிச்சாப்பல'' என்பது ஊர் பெரியவர்களின் சொலவடையாகும். காமங்குளம் கண்மாயில் பெருங்கற்கால சின்னங்களான கற்பதுக்கைகள் காணப்படுகின்றன. தருமம்: புனித நீராடுவது, கரகம் நீர் எடுப்பது உள்ளிட்ட கோயில் தொடர்பான காரியங்களுக்கு அரிட்டாபட்டி தருமம் குளத்தில் நீர் எடுக்கபடுகிறது. ரெட்டைக்கல் அவுலியா கந்தூரி: அரிட்டாபட்டி கழிஞ்சமலையில் ரெட்டைக்கல் அவுலியா தர்கா அமைந்துள்ளது. கதிர் அறுப்பு அறுவடைக்கு பின் தை மாதம் கந்தூரி விழா நடைபெறுகிறது. மாங்குளம், வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கல்லம்பட்டி உள்ளிட்ட ஊர்களில் இருந்து அனைத்து சமூக மக்களும் பங்கேற்கும் இந்த விழாவிற்கு இந்து மதத்தை சார்ந்த இதர சமூக மக்களும் கிடாவை காணிக்கையாக கொடுப்பது வழக்கம். ரெட்டைக்கல் தர்கா முதல் மொட்டை: மாங்குளம், வல்லாளப்பட்டி பகுதியில் உள்ள இஸ்லாமியர்கள் தங்கள் குழந்தைக்கு முதல் மொட்டையடிக்கும் நிகழ்வை ரெட்டைக்கல் அவுலியா தர்காவில் நிகழ்த்துகின்றனர். அந்நிகழ்வில் அனைத்து சமூக அழைத்து கிடா வெட்டி விருந்து வைக்கின்றனர்.



நீர்நிலைகள்

அரிட்டாபட்டி என்கிற ஒரு ஊராட்சியில் மட்டும் ஏரி, கண்மாய், குளம், ஊரணி, தெப்பம் என 72 நீர்நிலைகள் இருக்கிறது. இவ்வாறாக வல்லாளப்பட்டி பேரூராட்சி, எட்டிமங்கலம் ஊராட்சி, மீனாட்சிபுரம் ஊராட்சி என பலநூறு நீர்நிலைகள் இப்பகுதியில் உள்ளன. அதில் 5000 ஏக்கர் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்பட்டுள்ள பகுதிக்குள் அடங்கும் குறிப்பிடத்தக்க சில நீர்நிலைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன்.

எட்டிமங்கலம் ஊராட்சி: - வாழப்பன் கண்மாய் - சூரக்குடி - முடிச்சான் சூரக்குடி - குண்டன்குளம் - தட்டான்குளம் வல்லாளப்பட்டி பேரூராட்சி:
- மருதங்குடி கண்மாய் - சிறுவாளை கண்மாய் - புதுக்கண்மாய் - பிரமன்குடி கண்மாய் - சின்ன பிரமன்குடி கண்மாய்
- ஆமணக்கு கண்மாய் - சவுடி கண்மாய் - செல்லியம்மன் ஊரணி - கரும்பாள் அம்மன் ஓடை ஏந்தல் - குண்டன்குளம் - சிறுவாளை கண்மாய் - பீக்கன்குளம் - சின்ன பீக்கன்குளம் - மாரணி கண்மாய் - வயித்துபிள்ளான் கண்மாய் (தெக்கு கண்மாய் ) - நல்லி கண்மாய்
- மூலி கண்மாய் - நந்திராகுடி கண்மாய்
- புலி கண்மாய்



அரிட்டாபட்டி ஊராட்சி:
- ஆனைகொண்டான் கண்மாய்
- பெரியக்குளத்து கண்மாய்
- பீக்கன்குளம் - காமங்குளம் கண்மாய் - மலட்டழகி அம்மன் தருமம் - மேல தருமம்
- முறியவேட்டி
- புதுஏந்தல் (சேர்வாரன் கண்மாய்)
- மேல் கொல்லன்குளம் - கீழ் கொல்லன்குளம்
- இளமாத்தான் ஊரணி
- கருத்தான்குளம்
- ஆடபிச்சான்குளம்
- முத்தையா சமுத்திரக்குளம்
- நொச்சியேந்தல்
- அழுதகண்ணாதிக்குளம்
- புதுக்குளம்
- தருமம்
- கேசவன்குளம், - நாச்சியூத்து
- சென்னவீரன்குளம்
- இளமை நாயகி செங்கை
- அம்பலக்குண்டு
- காரிக்கண்மாய், - சின்ன காரிக்கண்மாய்
- கட்ராங்குளம்
- மத்தமடை ஊரணி
- காக்கா ஊரணி
- வையாபுரி கண்மாய்
- இலுக்கக்கோடி
மீனாட்சிபுரம் ஊராட்சி : - மீனாட்சிபுரம் கண்மாய்
உப்பாறு வடிநிலம்: அழகர்மலையில் தோன்றுகிறது உப்பாறு. உப்போடைபட்டி, கிடாரிப்பட்டி, அரிட்டாபட்டி, தெற்குத்தெரு, திருவாதவூர், கிளாதரி வழியாக பாய்ந்து மானாமதுரை அருகே வைகையாற்றில் கலக்கிறது. உப்பாறு வைகையாற்றின் துணையாறு ஆகும். கிடாரிப்பட்டி - வல்லாளப்பட்டி - அரிட்டாபட்டி இடையில் செல்லும் உப்பாறு, சுரங்கம் பகுதிக்குள் வருகிறது. உப்பாறு வடிநிலக்கோட்டத்தில் வாயிலாக பயன்பெறும் மதுரை மாவட்டம் மேலூர் ஒன்றியம், கொட்டாம்பட்டி ஒன்றியம், மதுரை கிழக்கு ஒன்றியம், சிவகங்கை மாவட்ட சிவகங்கை ஒன்றியம் உள்ளிட்ட பல நூறு பாசன கண்மாய்கள், வரத்து கால்வாய்கள், பாசன நிலங்கள் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தின் மூலம் பாதிக்கப்படும்.




வைகை பெரியார் பாசன கால்வாய்: 
வல்லாளபட்டி பேரூராட்சி, மாங்குளம், மீனாட்சிபுரம் ஊராட்சிகள் ஊடக பாயும் பெரியார் முதன்மை கால்வாய் (Periyar Main Canal) நேரடியாக பாதிக்கப்படும். இதனை சார்ந்துள்ள பாசன கண்மாய்களும், பாசன நிலங்களும் பாதிப்புக்குள்ளாகும். மதுரை கள்ளந்திரியில் இருந்து மேலூர் வரை பெரியார் பாசன கால்வாயில் இருந்து ஒரு போக பாசனம் திட்டம் வழியாக சுமார் 83,000 ஏக்கர் வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது. 

வைகையாற்றின் குறுக்கே தேனி மாவட்டம் சி.அணைப்பட்டியில் பேரணை 1882 ஆம் ஆண்டு கட்டடப்பட்டது. பேரணை வைகையாற்றின் இடது கரையில் இருந்து பிரிந்து செல்லும் பெரியார் முதன்மை கால்வாய் விளாம்பட்டி, தா.வாடிப்பட்டி, அலங்காநல்லூர், வாவிடைமருதூர், காஞ்சிரம்பேட்டை, கள்ளந்திரி, வழியாக புலிப்பட்டி, மேலூர் பகுதிகளுக்கு பாசனம் வழங்குகிறது.  பெரியார் முதன்மை கால்வாய் 1896ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பின் பேரணை வைகையாற்றின் வலது கரையில் இருந்து பிரிந்து செல்லும் திருமங்கலம் முதன்மை கால்வாய் கட்டப்பட்டது. பெரியார் முதன்மை கால்வாயில் கள்ளந்திரி மற்றும் புலிப்பட்டி ஆகிய இரண்டு இடங்களில் நீரின் போக்கை கட்டுப்படுத்தும் மதகணை கட்டப்பட்டுள்ளது. பெரியார் முதன்மை கால்வாயில் இருந்து பிரிந்து செல்லும் 12 கிளை கால்வாய்களும், 64 துணை வாய்க்கால்களும் கட்டப்பட்டுள்ளது. பெரியார் முதன்மை கால்வாய் 58 கி.மீ நீளம் கொண்டது. இதன் வழியாக 57,900 ஹெக்டேர் (143074.02 ஏக்கர்) வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது. திருமங்கலம் முதன்மை கால்வாய் 27 கிமீ நீளம் கொண்டது. இதன் வழியாக 5,300 ஹெக்டேர் (13096.59 ஏக்கர்) வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது. பெரியார் முதன்மை கால்வாய் மற்றும் திருமங்கலம் முதன்மை கால்வாய் வழியாக 63,200 ஹெக்டேர் (1,56,170.6 ஏக்கர்) வேளாண் நிலம் பாசனம் பெறுகிறது. பெரியார் முதன்மை கால்வாய் வழியாக சராசரியாக சுமார் 30 ஹெக்டேர் (74 ஏக்கர்) வேளாண் நிலமும் அதிகபட்சமாக 100 ஹெக்டேர் (247 ஏக்கர்) நிலமும் பாசனம் பெறுகிறது. பேரணைக்கு பிறகு ஆண்டிபட்டி - பெரியகுளம் இடையே  வைகை அணை 1959 ஆம் ஆண்டு கட்டப்படுகிறது. வைகை அணையில் இருந்து பேராணை வரை 30 கி.மீ நீளத்திற்கு பெரியார் முதன்மை கால்வாய் நீட்டிக்கப்படுகிறது. 

மலைகள் & பாறைகள்: 
வல்லாளபட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, புலிப்பட்டி, சோமகிரி, அருவிமலை, கருங்காலக்குடி என மேலூர் பகுதியில் வரலாற்று மற்றும் பல்லுயிரிய முக்கியத்துவம் வாய்ந்த மலைக்குன்றுகள் உள்ளன. ஒவ்வொரு மலையிலும் ஆண்டிச்சாமி, கருப்பு, முனியாண்டி, கன்னிமார், அழகியம்மன் என நாட்டார் தெய்வங்கள் உறைக் கொண்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் மலைகளை கனிமங்கள் கிடைக்கும் சுரங்கமாக பார்க்கிறது. மக்களோ தங்கள் வாழ்வாதாரம் செழிக்க காரணமாக இருக்கும் தெய்வமாக மலைகளை வழிபடுகின்றனர். மலைகளில் தங்கள் காவல் தெய்வம் வீற்று இருப்பதால் எந்த மலைகள் மீதும் இங்குள்ள செருப்பணிந்து செல்வதில்லை. மலைத் தெய்வங்கள் அனைத்தும் துடிப்பான சாமி என்கிற நம்பிக்கை மக்களிடம் நிரம்பி இருக்கிறது. டங்ஸ்டன் சுரங்கம் பகுதிக்குள் வருகிற மலைப்பாறைகளை கீழே பட்டியலிட்டுள்ளேன். 




வல்லாளபட்டி பேரூராட்சி 

  • சீட்டிப் பாறை - வளநாட்டு கருப்பு 
  • மதனம்பு பாறை - அய்யனார் 
  • கன்னிமார் பாறை - கன்னிமார் கோயில் 

மீனாட்சிபுரம் ஊராட்சி:
  • கழுமலை / ஓவாமலை 
  • தேன்கூடு மலை 
  • படுக்கத்தான் பாறை - அய்யனார் & சன்னாசி

அரிட்டாபட்டி ஊராட்சி:
  • கழிஞ்சமலை - கழிஞ்சமலை சாமி 
  • நாட்டார் மலை 
  • ராமாயி மலை 
  • ஆகப்பட்டான் மலை 
  • கூகைக்கத்தி மலை 
மேற்சொன்ன குடியிருப்பு பகுதிகள், கோயில்கள், மலைகள், நீர்நிலைகள், வரலாற்று மற்றும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் அனைத்தும் டங்ஸ்டன் சுரங்கத்திற்க்கு ஏலம் விடப்பட்டுள்ள 5000 ஏக்கர் பகுதிக்குள் வருகிறது. சுரங்கம் அமைக்க ஏலம் விடப்பட்ட 5000 ஏக்கர் எல்லைக்குள் வருகிற நிலப்பரப்புக்குள் வாழுகிற மக்கள், அவர்களின் வீடுகள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்டவற்றின் நிலை என்ன என்பதையும்; ஈரமாயிரமாண்டு தொன்மையான தமிழிக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள், மகாவீரர் சிற்பம், குடைவரை கோயில், பிற்கால பாண்டியர் கோயில், தொன்மையான ஆனைகொண்டான் கண்மாய் உள்ளிட்ட ஒட்டு மொத்த தமிழ் மக்களின் வரலாற்று சின்னமாக இருக்கிற தொல்லியல் சின்னங்களின் நிலை என்ன என்பதையும்; பல்லுயிர்களின் வாழிடமாக உள்ள பெருமாள்மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, அரிட்டபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளம் ஆகியவற்றின் நிலை என்ன என்பதையும் தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் விளக்க வேண்டும்.

இந்தியாவில் டங்ஸ்டன் இருப்பு கண்டறியப்பட்ட மாநிலங்கள்:
இந்திய கனிமவள செயலகம் (Indian Bureau of Mines) அறிக்கையில் 1.4.2015 ஆம் நாள் நிலவரப்படி இந்தியாவில் கீழ்கண்ட மாநிலங்களில் டங்ஸ்டன் கனிமம் இருப்பு கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. - ஆந்திரா - கோதாவரி மாவட்டம் - அரியானா - பிவானி மாவட்டம் - கர்நாடகா - கடக், கோலார், ராய்ச்சூர் மாவட்டங்கள் - மகாராஷ்டிரா - நாகப்பூர் மாவட்டம் - ராஜஸ்தான் - நாகூர், சிரோஹி மாவட்டங்கள் - தமிழ்நாடு - மதுரை மாவட்டம் - உத்திரகாண்டு - அல்மோரா மாவட்டம் - மேற்கு வங்கம் - பங்குரா மாவட்டம்

இந்திய புவியில் ஆய்வு 2006: (Geological Survey of India - PART VI – TAMIL NADU AND PONDICHERRY) 
 
இந்திய புவியில் ஆய்வு நிறுவனம் 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் செய்யப்பட்ட கனிமங்கள் குறித்தான ஆய்வுகளை ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதில் கடினத் தன்மையுள்ள கரும்பாறைகள் மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் கிடைப்பதாக குறிப்பிடுகிறது. 

பளிங்கு கல் (Quartzite):
மதுரை மாவட்ட அழகர் மலை பகுதியில் அழகிய வளைகோடுகளை கொண்ட பளிங்கு கற்கள் (quartzite of Khondallite Group shows well-preserved ripple marks as seen in the Alagarmalai Hills) கிடைப்பதாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது.


மண்ணியம் (Silicate):
ஈயம் (Lead), செம்பு (Copper) துத்தநாகம் (Zinc) உள்ளிட்ட கனிமங்களை கொண்ட  மண்ணியம் (சிலிகேட் - Silicate) வகை பாறைகள் திருமங்கலம் வட்டம் கரடிக்கல் - ஜோசியர் ஆலங்குளம் பகுதியில் கிடைப்பதாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தாங்குதன் (Tungsten):
தகரம் (Tin) - தாங்குதனிமம் (Tungsten)  உள்ளிட்ட தனிமங்களை கொண்ட கரும்பாறைகள் (Granite) கருங்காலக்குடி, கம்பாளிப்பட்டி, சோமகிரி, ராயர்பட்டி, ராசினாம்பட்டி ஆகிய மதுரை மாவட்ட மேலூர் பகுதியில் கிடைப்பதாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது.  

கரும்பாறை (Granite):
காஷ்மீர் வெள்ளை (Kashmir White) என்று குறிப்பிடப்படும் தரமிக்க கரும்பாறைகள் மேலூர் பகுதியில் பரவலாக கிடைப்பதாகவும், அதில் புலித்தோல் வரி (Tiger Skin) கொண்ட தரமிக்க பாறைகள் மேலூர் செக்கடிபட்டியில் கிடைப்பதாகவும் ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது. 

காரியம் (Graphite):
காரியம் கனிமம் நிறைந்த பாறைகள் சிவகங்கை மாவட்டம் பூவந்தி, மதுரை மாவட்டம் திருமங்கலம், பொன்னமங்கலம் பகுதிகளில் கிடைப்பதாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது. 


சுண்ணாம்பு கற்கள் (Limestone):
மதுரை எலியார்பத்தி, திருமால் ஆகிய பகுதிகளில் சுண்ணாம்பு கற்கள் கிடைப்பதாக ஆய்வு செய்து அடையாளம் காணப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை 2019 - மதுரை :

குவாட்டனேரி (Quaternary) காலம்:
நாம் வாழும் இன்றைய காலத்தில் இருந்து பின்னோக்கி சென்றால் சுமார் 25.8 லட்சம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தினை குவாட்டனேரி காலம் என்று வரையறை செய்கின்றனர். இந்த காலத்தில் உருவான வண்டல் (Quaternary alluvium) மற்றும் செந்நிற களிமண் (Laterite and soil) மதுரை மாவட்டத்தில் காண முடிகிறது. 

ப்ரொட்டெரோசோயிக் (Proterozoic) யுகம்:
சுமார் 25.8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் 54.1 கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தினை ப்ரொட்டெரோசோயிக் யுகம் என்று வரையறை செய்கின்றனர். இக்காலத்தில் உருவான அனல்குழம்பு பாறைகள் (Acid intrusives & Grey Migmatite) மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. 

அர்ச்சயென் (Archaean Eon) யுகம்: 
சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பும் 400 கோடி ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தினை அர்ச்சயென் யுகம் என்று வரையறை செய்கின்றனர். இந்த யுகத்தில் தான் முதன் முதலாக உயிரிகள் உலகில் தோன்றின. கண்டத்திட்டுகள் (Widespread plate tectonics) அர்ச்சயென் யுகத்திற்கும் ப்ரொட்டெரோசோயிக் யுகத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் உருவானது. இக்காலத்தில் உருவான (Charnockite Group and Khondalite Group) பாறைகள் மதுரையில் காணப்படுகிறது. 

பாறை வகைகள்:
காசுமீர் வெள்ளை - Kashmir White (Garnetiferous quartzo-feldspathic granulite), புலித்தோல் - Tiger Skin (Pink migmatite / Augen gneiss), வஞ்சிநகரம் இளஞ்சிவப்பு  - Vanjinagaram Pink (Pink medium grained granite) ஆதி பட்டு - Raw Silk (Pink granite gneiss) உள்ளிட்ட நான்கு வகை பாறைகள் மதுரை மாவட்டத்தில் காணப்படுகிறது. கோமேதகம் என்கிற கனிமம் திருச்சி மற்றும் மதுரை மாவட்டத்தில் கிடைப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. மதுரையில் பாறை படிமங்களில்  இக்கனிமம் காணப்படுகிறது. இக்கனிமம் கிடைக்கும் பாறை வகைகளை மேலூர் வெள்ளை (Melur White) என்று வணிக பெயரில் அழைக்கப்படுகிறது. 

மேலூர் பகுதியில் பரவலாக காசுமீர் வெள்ளை (Kashmir White) வகை பாறைகள் காணப்படுகிறது. கருங்காலக்குடி பகுதியில் வஞ்சிநகரம் இளஞ்சிவப்பு (Vanjinagaram Pink) பாறைகள் காணப்படுகிறது. திருவாதவூர் - வரிச்சூர் இடைப்பட்ட 2 கிமீ பரப்பில் ஆதி பட்டு (Raw Silk) வகை பாறைகள் காணப்படுகிறது. புலித்தோல் (Tiger Skin) வகை பாறைகள் செக்கடிபட்டி பகுதியில் காணப்படுகிறது. 

மதுரை மாவட்டத்தில் 1.43 கோடி கன மீட்டர் கடும் பாறைகளும் (Rough Stone), 4.73 லட்சம் கன மீட்டர் சரளை கனிமங்களும் (Gravel Minerals) சுரங்க நடவடிக்கை மூலம் வெட்டியெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு ஆவணங்கள் (2019) கூறுகிறது. 

நீல மாழை (Blue Metals) & சரளை கற்கள் (Gravel):
நீல மாழைக் கற்கள் (Blue Metals) சரளை கற்கள் (Gravel) உள்ளிட்ட கற்கள் மேலூர், சேடப்பட்டி, கொட்டாம்பட்டி, உசிலம்பட்டி பகுதிகளில் கிடைப்பதாக தமிழ்நாடு அரசு புவியில் மற்றும் சுரங்கத்துறை 2019 ஆம் ஆண்டு வெளியிட்ட மதுரை மாவட்ட கடும்பாறைகள் தொடர்பான அறிக்கை தெரிவிக்கிறது. 


கண்ணாடி மற்றும் பீங்கான் (Ceramic) தொழிற்சாலை பயன்பாட்டுக்காக சோழவந்தான் மேற்கேயுள்ள கல்லூத்து பகுதி அருகே (White quartz veins and K-Feldspar rich pegmatite veins) படிக பாறைகள் வெட்டியெடுக்கும் குவாரிகள் இயங்கி வந்து இருக்கிறது. 

சிமெண்ட் தொழிற்சாலைக்கு பயன்பட கூடிய படிகத்தன்மையிலான சுண்ணாம்பு கற்கள் (Crystalline limestone) உசிலம்பட்டியில் வடமேற்கு பகுதியில் காணப்படுவதாக தமிழ்நாடு அரசு புவியில் மற்றும் சுரங்கத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.


வண்டல் (Quaternary alluvium):
வைகை ஆற்றின் இரு கரைகளிலும் குவாட்டனேரி காலத்தை சேர்ந்த வண்டல் மணல்கள் பரவலாக காணப்படுவதாக தமிழ்நாடு புவியில் மற்றும் சுரங்கத்துறை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

செம்மணல் பரப்பு (Red Soil): 
கொட்டாம்பட்டி, கரடிக்கல், தோப்பூர், வெள்ளாகுளம் உள்ளிட்ட பகுதிகள் செம்மண் பூமியாக விளங்குகிறது. 

கரிசல் மண் (Black Soil):
எழுமலை, சின்ன கட்டளை, சமயநல்லூர், ஆனையூர், தும்பைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கரிசல் மண் பரவலாக காண முடிகிறது. 



இந்திய கனிமங்கள் ஆண்டிதழ் 2019 அறிக்கை: 

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தில் உள்ள கம்பாளிப்பட்டி - ராயர்பட்டி - ராசினாம்பட்டி உள்ளடக்கிய 24,700 ஏக்கர் (100 Sq.km) பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் மற்றும் அதனோடு தொடர்புடைய இதர கனிமங்கள் குறித்து மறைமுகமாக ஆய்வு (Reconnaissance Survey) நடத்தப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் புலிப்பட்டி - கருப்புக்கோயில், கண்மாய்பட்டி - பறக்குடி (பால்குடி), ராயர்பட்டி - வஞ்சிநகரம், மற்றும் கம்பாளிபட்டி பகுதிகள் உள்ளிட்ட நான்கு முக்கிய கனிம மண்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதே போல மேலூர், தெற்குத்தெரு, முத்துவேல்பட்டி, கூலானிபட்டி, கிடாரிப்பட்டி, எட்டிமங்கலம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டி, சிலிப்பியபட்டி, செட்டியார்பட்டி, நாயக்கர்பட்டி உள்ளிட்ட மேலூர் வட்டத்தில் உள்ள 24,700 ஏக்கர் (100 Sq.km) பரப்பளவில் டங்ஸ்டன் கனிமம் குறித்து மறைமுகமாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று இந்திய கனிமவள துறை அமைச்சகம் வெளியிட்ட இந்திய கனிமங்கள் ஆண்டிதழ் 2019 பகுதி ஒன்று குறிப்பிடுகிறது. டங்ஸ்டன் கனிமங்கள் இந்த பகுதியில் சீலைட் (Scheelite) வடிவில் கிடைப்பதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.     

இந்த ஆய்வுகளின் அடிப்படையில்தான் தற்போது முதற்கட்டமாக அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி, அரிட்டாபட்டி, எட்டிமங்கலம், மீனாட்சிபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய சுமார் 5000 ஏக்கர் பரப்பளவை இந்திய அரசின் கனிமவளத்துறை ஏலம் நடத்தி டங்ஸ்டன் சுரங்கம் அமைத்து கொள்ள ஸ்டெர்லைட் புகழ் ''வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் சிங்க் நிறுவனத்திற்கு'' குத்தகைக்கு கொடுத்துள்ளது. அடுத்தகட்ட அறிவிப்புகளில் கிடாரிப்பட்டி, புலிப்பட்டி, சோமகிரி கருப்புக்கோயில், கண்மாய்பட்டி, அருவிமலை பால்குடி, ராயர்பட்டி, ராசினாம்பட்டி, வஞ்சிநகரம், மற்றும் கம்பாளிபட்டி பகுதிகளை உள்ளடக்கிய இன்னும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவு டங்ஸ்டன் சுரங்கத்திற்கு ஏலம் விடுபடலாம் என்கிற அச்சம் சூழலியல் ஆய்வாளர்களிடம் நிலவுகிறது.

ஆக, மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே கிரானைட், டங்ஸ்டன், காரியம் உள்ளிட்ட கனிமங்களை கண்டறியும் சோதனை ஆய்வுகள் மறைமுகமாக நடைபெற்று வந்திருக்கிறது என்பது தெளிவு. மேற்சொன்ன கனிமங்கள் தொடர்பான ஆய்வுகள் அனைத்தும் மறைமுகமாகவே நடத்தப்பட்டுள்ளது என்பதனை இவ்வறிக்கைகள் நமக்கு தெரிவிக்கின்றன. இந்திய அரசின் கனிமவளத்துறை வாயிலாக நடைபெற்ற கனிமங்கள் ஆய்வு குறித்தோ, டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் குறித்தோ மதுரை மாவட்ட மக்களுக்கு எவ்வித தகவலும், அறிவிப்பும் தரப்படவிலை. இதையெல்லாம் தொகுத்து பார்க்கையில் டங்ஸ்டன் சுரங்கம் 5000 ஏக்கர் பரப்போடு நிற்கப் போவதில்லை என்று புலப்படுகிறது. எனவே, டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். மதுரை மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வாழும் சூழல் பாதுகாக்கபட வேண்டும்.

தமிழர்களின் பண்பாட்டு அடிப்படையிலும் பல்லுயிரிய சூழல் அடிப்படையிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக மேலூரில் உள்ள மலைகளும், கோயில் காடுகளும், நீர்நிலைகளும், பாசன வெளிகளும் விளங்குகின்றன. தமிழ் மக்களின் தொன்மை, வரலாறு மற்றும் பல்லுயிரிய வளத்தை சீரழிக்கும் டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்க்கான அனுமதியை வழங்க கூடாது என தமிழ்நாடு அரசிடம் மதுரை மக்கள் சார்பாக கோருகிறேன். அதுவே ஸ்ட்ரெலைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட ஈகியர்களுக்கு நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் கனிமங்கள் இருப்பு குறித்து மேற்கொள்ளபட்ட ஆய்வுகள் குறித்து கீழே கொடுக்கப்பட்டுள்ள்ளது.

பழுப்பு நிலக்கரி (Lignite): ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திருப்புல்லாணி ஊராட்சியில் களரி என்கிற கிராமத்தின் நிலத்தடியில் சுமார் 5414 மீட்டர் (1772 அடி) ஆழம் துளையிட்டு செய்யப்பட்ட ஆய்வில் பழுப்பு நிலக்கரி கண்டறியப்பட்டுள்ளது. அதில் கிடைத்த 5 மாதிரிகள் பழுப்பு நிலக்கரி (Lignite) ஆய்வுக்கும், 2 மாதிரிகள் நிலக்கரி (Coal) ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு இருக்கிறது. கடலூர், நெய்வேலி, மன்னார்குடி பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரியின் தரத்தில் இப்பகுதியில் நிலக்கரி கிடைப்பதாக இந்திய கனிவள அறிக்கை 2019 தமிழ்நாடு ஆய்வு தெரிவிக்கிறது. நிக்கல், தாமிரம்: கன்னியாகுமரி மாவட்டம் அருமநல்லூர், கீரிப்பாறை பகுதியில் 100 சதுர கி.மீ (24710 ஏக்கர்) பரப்பில் நிலத்தடியில் உள்ள 100 பாறைதிட்டுகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிக்கல் (Nickel), தாமிரம் (Copper) கண்டறியப்பட்டுள்ளது. அசம்பு வனப்பகுதி, வேளிமலை வனப்பகுதி, பெருஞ்சாணி அணை அமைந்துள்ள பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம்: திருவண்ணாமலை மாவட்டம் தென்பண்ணையாற்றின் கரையில் அமைந்துள்ள எடத்தனூர் பகுதியில் 100 சதுர கி.மீ (24710 ஏக்கர்) பரப்பில் தங்கம் மற்றும் அதனோடு தொடர்புடைய கனிமங்கள் குறித்து ஆய்வுகள் நடைபெற்றுள்ளது. அந்த ஆய்வில் நாட்டு பாறைகளுக்கு குறுக்காக துருத்திப்பாறை (Basic Dyke) ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. புவியில் அமைப்பில் துருத்தி பாறை (Basic Dyke) என்கிற பாறை இடுக்குகளில் தங்கம் (Gold) மற்றும் அதனோடு தொடர்புடைய கனிமங்கள் கிடைக்கின்றன. எடத்தானூர் அருகில் சாத்தனூர் அணையும் பொண்ணையூர் வனப்பகுதியும் அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கன உலோக கனிமங்கள்: கன உலோக கனிமங்கள் (Heavy Minerals) இருப்பு குறித்து அறிய செங்கல்பட்டு மாவட்டம் கடற்கரை (Continental Shelf) பகுதியில் 1590 சதுர கி.மீ (392897.6 ஏக்கர்) பரப்பளவில் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. அதே போல நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரை கடற்கரை பகுதியில் 1560 சதுர கி.மீ (385484.4 ஏக்கர்) பரப்பளவிலும், கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை கடற்கரை பகுதியில் 60 சதுர கி.மீ (14826.3 ஏக்கர்) பரப்பளவிலும் ஆய்வு நடத்தப்பட்டு இருக்கிறது. இவை பல்லுயிரிய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு:

21.11.2024 தேதி செய்தியாளர்களிடம் கூறிய வனத்துறை அமைச்சர் பொன்முடி, அவர்கள் "டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம் வரவில்லை. அப்படியே அனுமதி கேட்டு வந்தாலும் அதை நிராகரிப்போம்," என்றார். மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும், சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க ஏலங்களை மேற்கொள்ள கூடாது எனவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு 28.11.2024 அன்று கடிதம் வழியாக வலியுறுத்தியுள்ளார். இது போன்ற சுரங்க தொழிலை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் நடக்கிற சட்டமன்ற கூட்ட தொடரில் டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார் என்பது வரவேற்கதக்கது. தமிழ்நாட்டில் உள்ள ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் மதுரை மேலூர் பகுதியில் அறிவிக்கப்பட்டிருக்கும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார்கள் என்பது இத்திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. ஆனால் மத்திய அரசும், தமிழ்நாடு பாஜக கட்சியும் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என்பதை போன்றே பேசி வருகிறார்கள். டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை: ஒன்றிய அரசே! • மேலூர் பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல அறிவிப்பை திரும்ப பெறு! • தமிழர் வரலாற்றையும் இயற்கை வளங்களையும் அழிக்கும் எந்த திட்டத்தையும் தமிழ்நாட்டில் திட்டமிடாதே! • முல்லை பெரியார் - வைகை பாசனம் பெரும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! • மதுரை மாவட்டத்தை தமிழர் பண்பாட்டு நகரமாக அறிவித்திடு தமிழ்நாடு அரசே! • மதுரை மேலூர் பகுதியில் உள்ள மலைகள், காடுகள், வேளாண் நிலங்கள் அழிக்கும் எந்த திட்டத்தையும் அனுமதிக்கதே! • டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக கொள்கை முடிவெடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்று! • முல்லை பெரியார் - வைகை பாசனம் பெரும் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திடு! • மதுரை மாவட்டத்தை தமிழர் பண்பாட்டு நகரமாக அறிவித்திடு!


டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து:

மேலூர் பகுதி மக்கள், அரசியல் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், சூழலியல் இயக்கங்கள் களத்தில் இறங்கி போராடினார். முல்லைப்பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கம் மற்றும் டங்ஸ்டன் சுரங்கத் திட்ட எதிப்பு மக்கள் கூட்டமைப்பு முன்னணியில் நின்று போராடினார்கள். லட்சக்கணக்கான மக்களின் தீவிரமான போராட்டத்தால்  டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை 23.01.2025 அன்று ரத்து செய்தது ஒன்றிய அரசு. இது போராடிய மக்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் கிடைத்த வரலாற்றுபூர்வமான வெற்றி.

தகவல் உதவி:
---------------
- அரிட்டாபட்டி பல்லுயிரிய மரபு தளம் - உயிர் பதிப்பகம் & மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை வெளியீடு
- MECL Summary of the Nayakkarpatti Tungsten Mineral Block
- மதுரை மாவட்ட தொல்லியல் கையேடு - த.ந. தொல்லியல்துறை வெளியீடு 2005 - Mangulam Excavation 2007 - TNARCH 2008
- New Indian Express 8th Nov 2024
- Geology and Minerals Resource of TN & Pondicherry, GSI Report 2006
- Indian Minerals Yearbook 2019 Part I 58th Edition, State Reviews (Tamil Nadu), Ministry of Mines - March 2021
- District Survey Report for Rough Stone - Madurai District, Dept of Geology and Mining 2019
- India: Periyar Vaigai Irrigation Project (Tamil Nadu), South Asia Project Dept, 19.05.1977
-https://timesofindia.indiatimes.com/city/madurai/farmers-urge-government-for-water-release-in-single-crop-areas/articleshow/112415527.cms (TOI 10.08.2024)
- Madura Country Manual J H Nelson Gazettee 1868

- தமிழ்தாசன்
26.11.2024











டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் அமைய ஏலம் விடப்பட்ட 5000 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வரலாற்று சின்னங்கள், இயற்கை வளங்கள், கோயில்கள், திருவிழாக்கள் குறித்த அறக்கலகம் யூடியூப் சமூக காட்சி ஊடகத்திற்கு நான் அளித்த நேர்காணல்  https://www.youtube.com/watch?v=X_5FcFEVp5I

டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 09.12.2024 அன்று நடைபெற்ற டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்ட களத்தில் இருந்து தந்தி தொலைக்காட்சிக்கு இக்கூட்டமைப்பு சார்பாக நான் அளித்த பேட்டி https://youtu.be/vrx23m86LKg?si=4dFoeFgJ1fKc3gSe

டங்ஸ்டன் சுரங்க திட்ட எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக 09.12.2024 அன்று நடைபெற்ற  டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரை: https://youtu.be/ERZ5Bo8N720?si=Kqn9aVM_PsDoA66o&t=1852

புதியதலைமுறையில் 29.01.2025 அன்று வெளியான நிகழ்ச்சி  https://youtu.be/p-ripzOsyO4?si=ilv6mgjEAKlUb6f0 

அஞ்சனா தமிழ் வாய்ஸ் வலைக்காட்சிக்கு நான் வழங்கிய நேர்காணல் 3 பகுதிகளாக 
https://www.youtube.com/watch?v=x2YAZKvzP6g
https://www.youtube.com/watch?v=zq0UgYVdnNw&t=2s
https://www.youtube.com/watch?v=J0kUeKPHwdA&t=23s

https://dt.avahan.net/Home/ShareImage?Pictureid=10128a4ebfc0



Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?