வைகை பெருவழியின் இறங்குதுறை

பெருவழியின் இறங்குதுறை: 

தமிழ்நாட்டில் பெருவழிகள் பெரும்பாலும் ஆறுகளை ஒட்டியே சென்றன. கண்ணகி வையைக்கரை வழியாக சென்றாள் என்ற சிலப்பதிகாரக் கூற்று இதை உறுதிப்படுத்தும். தற்கால நெடுஞ்சாலைகளை அக்கால பெருவழிகளோடு பொருத்தி பார்க்கலாம். அக்காலத்தில் பொருள்களை கொண்டு செல்லும் தேவைகளுக்கு ஏற்ப பெருவழிகள் விரிந்து இருந்தன. பழங்காலத்தில் நகரங்களையும், ஊர்களையும் இணைக்கும் பெருஞ்சாலைகள் பெருவழி என கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.  பெருவழிகளின் அருகே ஊர்களின் தூரங்களைக் குறிப்பிடும் நெடுவழிக் கற்களும் தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை வணிகர்கள் தங்கள் வணிகப் பொருட்களைக் கொண்டு செல்லவும், மக்களின் போக்குவரத்திற்காகவும், போர் படைகள் அணிவகுத்து செல்லவும் பயன்படுத்தப்பட்டன.


இவ்வாறாக ஆற்றை இறங்கி கடக்கும் பெருவழிகள் இறங்குதுறை என்று அழைத்தனர். இறங்குதுறைகளை ஆற்றைக் கடக்க உதவும் பாலம் போன்று நினைத்து கொள்ளுங்கள். அக்காலத்தில் தரைப் பாலமாக அமைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது பரிசல் வழியாக ஆற்றை கடந்து இருக்கலாம். 


தேனி மாவட்டம் கண்டமனூரில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் தேவதானப்பட்டி வழியாக கொடைக்கானல் செல்லும் பழைய வணிக பாதைகள் வைகையாற்றை கடந்து செல்லும் இறங்குதுறை வைகை அணை அமைந்துள்ள பகுதிக்குள் வரலாம். 


தென்காசி - திருவில்லிபுத்தூர் - பேரையூர் - உசிலம்பட்டி - உத்தப்பநாயக்கனூர் வழியாக வைகையாற்றில் இறங்கி வத்தலகுண்டு வழியாக கொங்கு மண்டலத்தை இணைக்கும் பெருவழிக்கான இறங்குதுறை செக்கப்பட்டி - கண்ணாபட்டி இடையில் இருந்திருக்க வேண்டும். வைகையாற்றை கடக்கும் கண்ணாபட்டி - செக்காபட்டி பாலம் கண்ணகி பாலம் என்று அழைக்கப்படுகிறது. குன்னுவரன்கோட்டையில் சுங்கச்சாவடி ஒன்று செயல்பட்டு இருந்ததற்கான கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கின்றன. 


உத்தப்பநாயக்கனூர் கிழக்கில் கல்லூத்து வழியாக வைகையாற்றில் இறங்கி அணைப்பட்டி வழியாக நிலக்கோட்டை கடந்து திண்டுக்கல் - சிறுமலை செல்லும் வணிக பாதை இருந்திருக்க வேண்டும்.  


அணைப்பட்டிக்கு தென்கிழக்கில் குருவித்துறைக்கும் மட்டப்பாறைக்கும் இடையில் ஒரு இறங்குதுறை இருந்திருக்க வேண்டும். குறுகியதுறை என்பது குருவித்துறையாக மருவி இருக்கலாம். 


சோழவந்தான் - தென்கரை இடையில் பழமையான இறங்குதுறை ஆற்றில் இருந்தது. கருமாத்தூர் - விக்கிரமங்கலம் - சோழவந்தான் வழியாக திண்டுக்கல் சிறுமலை செல்லும் பழைய பாதை இருந்துள்ளது. 


மதுரை நகருக்குள் மூன்று இடங்களில் இறங்குதுறை இருந்துள்ளது. மதுரை நகரை வந்தடைந்தவர்கள் ஆற்றை கடப்பதற்கு ஆரப்பாளையம் - தத்தனேரி வழியாகவும், செல்லூர் - யானைக்கால் வழியாகவும் மதிச்சியம் - சந்தைப்பேட்டை வழியாகவும் வைகையாற்றை கடக்கும் இறங்குதுறைகள் இருந்துள்ளது. 


இராமேஸ்வரத்தில் இருந்து திருப்புவனம் வழியாக வைகையாற்றில் இறங்கி திருவாதவூர், மேலூர் ஆகிய ஊர்களை இணைக்கும் பழைய பாதை ஒன்று இருந்துள்ளது. 


கமுதி - அபிராமம் - மானாமதுரை வழியாக வைகையாற்றில் இறங்கி கல்குறிச்சி சிவகங்கை வழியாக செல்லும் பெருவழியோடு இணையும் இராமேஸ்வரம் - கமுதி பெருவழிகளுக்கான இறங்குதுறை மானாமதுரையில் இருந்துள்ளது. 


சாயல்குடி - கடுகுசந்தை - முதுகுளத்தூர்  வழியே இளையான்குடி - காளையார்கோயில் ஆகிய ஊர்களை இணைக்கும் பெருவழிகளுக்கான இறங்குதுறை பரமக்குடியில் இருந்துள்ளது.  

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?