அன்றே என் பிறந்தவம்

------அன்றே என் பிறந்தவம்-----

சாதி மதம் ஒழிந்துவிட்டால்
நீதி நிதம் நிலைத்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

முச்சந்தியில் எச்சிலை பொறுக்கும் முதியவருக்கு 
சமபந்தியில் உணவு சரிசமமாய் கிடைத்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

வேலை செல்லும் எல்லா குழந்தைகளும்
காலை பள்ளிக்கு சென்றால்
அன்றே என் பிறந்தவம்.

போட்டியில் தோல்வி கண்டவனை பாராட்டி
பேட்டி காணும் நிருபர்கள் வந்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

பிழைக்க பிச்சையெடுக்கும் கூட்டம்
உழைக்க கற்று கொண்டால்
அன்றே என் பிறந்தவம்.

நித்தம் கழிவு நீரோடைகளை
சுத்தம் செய்யும் கைகளுக்கு
முத்தமிடும் சமூகம் முளைத்துவிடால்
அன்றே என் பிறந்தவம்.

சிறு சிறையில் சிக்கி தவிக்கும் ஜோசிய கிளிகள்
மர கிளையில் சுதந்திரமாய் சுற்றி திரிந்தால்
அன்றே என் பிறந்தவம்.

வீட்டில் வளர்க்கும்  நாய்கள் போலே
ரோட்டில் கிடக்கும் நாய்களின் வயிறும் நிரம்பியிருந்தால்
அன்றே என் பிறந்தவம்.

வழி தடவும் பார்வையற்றோருக்கு
விழி கிடைத்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

நம்மை தினம் வாழவைக்கும் இறைவன்
இம்மை தனில் அவன் பெயர் உழவன்
இந்த சாசனம் எழுதிவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

ஏறும் விலைவாசி குறைந்துவிட்டால்
நானும் மலைவாசியும் 
ஒரு இனமென கலந்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

என் திருநங்கைகள் உயர உதவுங்கள்
என்றும் அவர்கள் நம் தொப்புள்கொடி உறவுகள்
என்பது எல்லோர் மனதிலும் நின்றுவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

நடுங்கும் குளிரில் சாலையோரம் 
உறங்கும் மனிதன்
படுக்க குடிசை கிடைத்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.


நெற்றி காசு போதாது - வெட்டியானுக்கு
வெள்ளி காசு சம்பளமாகிவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகள்
எமனை வென்றுவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

கயிற்றில் நடக்கும்,
சவுக்கால் தன்னைத்தானே அடிக்கும்
பாவ மனிதர் கூட்டம்
பணக்காரர் ஆகிவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

செருப்பு தைக்கும் கைகளும்
நெருப்பு வைக்கும் - உடல் 
உறுப்பு  தானம் செய்துவிட்டால்
உன் பெயர் நிலைத்து நிற்கும்.

மனநோய் குழந்தைகளுக்கும்
அனாதை செல்வங்களுக்கும் - நான்
அப்பாவாகும் தகுதி வந்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.

ஆலிகால ஆங்கில விஷம் தவிர்த்துவிட்டால்
அள்ளி அள்ளி தேன்தமிழ்  குடித்துவிட்டால்
அன்றே என் பிறந்தவம்.


(என் பிறந்தநாள் கவிதை)

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?