--- கன்னியின் காதல் வலி ---

‎--- கன்னியின் காதல் வலி --- 

எனக்கு கோவில் கட்டி கொண்டாட 
எண்ணிய உன்னை 
சாரயாக்கடை வாசலில் 
சந்திக்க நேருகிறது.

நீ நாற்பதை கடந்த செய்தி 
நரைத்த முடி நவில்கிறது.

என்னை நீ
மறக்கமுடியாமல் திணறுவதை 
மதுவருந்திய உன் 
முக சுருக்கங்கள் 
மடை திறக்கிறது.

ஒரு அட்டைப்பூச்சியாக 
நம் பருவ காதல் 
உன் உயிர் உறிஞ்சுவதை 
உணர முடிகிறது.

செழித்த தாடி சொல்கிறது 
உன் ஒவ்வொரு செல்களிலும் 
என் நினைவுகள் 
செரிக்காமல் இருப்பதை.

உன் அழுக்கு சட்டை 
அடித்து சொல்கிறது 
என் திருமனத்திற்கு பின் 
உன் சுப வாழ்க்கை 
சுழலாமல் 
நொண்டியடித்து கொண்டிருப்பதை...

விழிநீர் 
வழித்தடங்கள் 
உப்பு படிந்த 
அந்த வெள்ளை கோடுகள் 
உன் கண்ணீர் பஞ்ச 
கதை பேசுகிறது.

பட்டாம்பூச்சிப் போல் 
உன் இட மார்பில் 
படுத்திருக்கும் 
பச்சைகுத்திய என் பெயர் 
நீ திருமணம் செய்து கொள்ளாததை 
நிச்சியமாக நிரூபித்து கொள்கிறது.

உன் பிரிவுக்கு பின் 
பிளக்காத பாறையாகிப்போன 
என் இதயம் 
இப்போது 
பாதரச கண்ணாடியாக 
உடைந்து நொறுங்குகிறது...

சருகாக கண்களிலிருந்து 
சறுக்கி கண்ணீர் 
விழுகிறது.

ஏமாற்றுக்காரி என்ற பட்டம் 
எனக்கு நீ தந்த 
காதல் கௌரவம்.

உன் தற்கொலையை கூட 
நீயே தீர்மானிக்கிற போது 

என் தலையெழுத்தை
யார் யாரோ 
எழுதி வைத்திருகிறார்கள்.

நீ மதுபானம் அருந்தி
காதலை 
மறக்க துடித்த போது

உன் நினைவுகள் 
கரும்புசாறு எந்திரம் போல் 
உயிர் பிழிய 
சக்கையாகி கொண்டிருந்தேன்.

விண்வெளிக்கு போக 
உன் கால்களின் 
விருப்பத்திற்கே விடபடுகிறது.

சிறைகளுக்குள்தான் 
ஒரு பெண்ணின் சிறகு 
வளர்க்கபடுகிறது...

அன்பே!
உனக்கும் எனக்கும் 
உள்ள வித்தியாசம். 
உனக்கு தாடி முளைத்திருக்கிறது.
எனக்கு தாலி ஏறியிருக்கிறது.

காதல் பிரிவு 
உன்னைப் போல் எனக்கும் 
மரண வலி தருகிற 
மையான உணர்வுதான்....

---தமிழ்தாசன்--- 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?