மனைவி என்றொரு கைதி


--- மனைவி என்றொரு கைதி ----

வெட்டுக்கிளி நிமிர்ந்தால் கூட
தலைத்தட்டும் சிறு கூண்டில்
பச்சை கிளி படும்பாட்டை கண்டு
பச்சாதாபம் அடைந்தேன்.

உயிர் முடியும்வரை
உடன் வாழ
விலைகொடுத்து விடுவித்து
வீட்டிற்குள் கூட்டிவந்தேன்
விதறும் கிளியை.

ஒருசேர விரித்தால்
இரு சிறகுகளும்
நீலவானம் வரை
நீண்டுபோகும்.

காதல் வர
காரணம்
கிளியின்
கிழியாத
அந்த
அழகிய சிறகுகள்தான்.

விவஸ்தையும்
விசுவாசமும்
அறிந்த கிளிக்கு
விடுதலை ஒரு
அந்நிய கனவு.

என் மாட மாளிகைக்குள்
மனம்திறந்து அதை பறக்க
செய்தேன்.

இதுவரை கிளி காணாத
அதிக அகலமுடைய
பெரிய சிறை இது.

காலம் தன்
காலை சற்று
ஆகட்டி வைத்தது.

கண்ணுக்கு தென்படாத
கலாச்சாரத்தின் கைகள் ரெண்டு
என் கழுத்தை நெரிக்க நெரிக்க

வாசலைத் தாண்டாதே !
வண்டுகளோடு பேசாதே !
வரையருத்தேன் கிளியின்
வசமிருந்த சுதந்திரத்தை...

நடுங்கி பயந்து
நடந்து
கிளி
என் அருகில் வந்ததும்
அன்பாய் சொன்னேன்

"என் கட்டுபாட்டுக்குள்
உனக்கு எல்லா சுதந்திரமும் உண்டு"


-- தமிழ்தாசன் --

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?