---- ஒரு ரத்தத்தின் வியர்வை -----

---- ஒரு ரத்தத்தின் வியர்வை -----

பசுமை நிலை பிரதிபலிக்கும்
பாரத கோடி பறக்கும்
பச்சை நிறம் என்றீர்கள்

பசியில் உயிர்நுனி வரை செத்தோம்
அரைஞான் கயிறுவரை விற்றோம்.
பிச்சை எடுக்கவும் வைத்தீர்கள்.

உற்றுப் பார்த்தால்
உழவன் உடம்பு
காச நோய்க்கு அறிகுறி.

வையகத்தின் வயிற்றை
நிறைத்தவனுக்கு
மிச்ச்மிருந்ததோ எலிக்கறி.

கால்நடைக்கு தீவனமில்லை
கட்டுவதற்கு கோவணமில்லை .

விளை நிலங்களெல்லாம்
விலை நிலமாக்கி
விற்றுவிட்டீர்கள்.

தாசியைப் போல்
தானியங்களையெல்லாம்
பண்ணை வீடுகளில்
பதுக்கிவிட்டீர்கள்.

புரதசத்துக்களை புறக்கணிக்கும்
துரித உணவுகளை
தூளிதமாக்கிவிட்டீர்கள்.

கேவலம் இறைச்சிக்காக
ஏர்பூட்டிய மாடுகளையும்
ஏற்றுமதி செய்துவிட்டீர்கள்.

செல்லும் வழியில்
செயலிழந்துவிடும்
செயற்கைகோளுக்கு
செலவளித்தீர்கள்.

கல்லும் முள்ளில்
நிற்கும் எங்களுக்கு
செருப்பில்லையென்று
எங்கே கவனித்தீர்கள் ?

இவர்கள் இந்தியாவின்
முதுகெலும்பாட்டம் என்று
பரிசளித்தீர்கள்.

முதுக்கு பின் நின்று
கைநாட்டு கூட்டம் என்றே
பரிகசித்தீர்கள்.

செரிமானிக்க ஏதுமின்றி
செயலிழந்த வயிற்றுக்கு மேல்
சுரக்கும் காம்புகளையும்
சுரண்டி ரத்தம் குடித்தீர்கள்.

வரப்போரங்களில்
வளர்ந்து நிற்கும்
மரங்களையும் வெட்டிவிடாதீர்கள்
நாங்கள்
நாண்டுகிட்டு சாக
நம்பியிருக்கும்
ஒரே சொத்து அதுதான்.

----தமிழ்தாசன்----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?