புதியதோர் கவிஞன் செய்வோம்

------புதியதோர் கவிஞன் செய்வோம்-----

பூமியின் புழுதிகளை
புது கவிதைகளால்
சலவை செய்வோம்.
புதியதோர் புதியதோர்
கவிஞன் செய்வோம்.

உலக எழுத்தாளன் எல்லாம்
போகட்டும்
உன் மையை கடன் வாங்கி.
புரிய வை பூமிக்கு
உன் பேனா
ஒரு பேசும் பீரங்கி.

நீ
பாட்டெழுதும் வீரன்
பாரதியின் பேரன்.

மெய் வருத்தி நீ எழுது
அதுதான் மெய் எழுத்து.
உற்றோர்க்கு உயிர் கொடுக்கும்
உன் எழுத்து உயிரெழுத்து.
ஆயுதம் அற்றோர்க்கு
அதுவே அதுவே ஆயுதெழுத்து.

நல்ல காதலும்
பாடு பாடு......

ஏழைகளுக்காக
வாடு வாடு.......

உனை நம்புதடா
நாடு நாடு.......

இந்த நாடே
உன் வீடு வீடு.......

எதிர்ப்பது எமனாயினும்
ஒருமுறை
மோதி பார்க்கணும்.
சாகும் வரை
உன் இனத்திற்க்கென
எழுதி தீர்க்கணும்.

தலைவனை உருவாக்கியது போதும்
தலைமுறையை உருவாக்கு.
நல்ல கொள்கைகளால்
இளைஞர்களை அழகாக்கு.

நெருப்பு வரிகளால்
சமூகத்தின் இருட்டுக்குள்
தீயை மூட்டனும்.
வார்த்தையில் ஊசி வைத்து
சாகுனிகளின்
வாயை பூட்டனும்.

போதுமட உன் மக்கள்
அழுது அழுது....

போனதட
பொழுது பொழுது....

எடு பேனா
எழுது எழுது...

வரும் தானா
விருது விருது....

தன்னம்பிக்கையோடு
----தமிழ்தாசன்---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?