காடுப் பெருவெளி
காட்டுப் பெருவெளி:
குறைந்த மற்றும் நிலையற்ற மழைப்பொழிவு, கரடுமுரடான நிலப்பரப்பு, மோசமான வடிநில நீர்பரப்பு அல்லது மிக அதிகமான வெப்பநிலை, மண்ணின் தன்மை போன்ற இயற்கைக் காரணங்களால் பயிர்ச் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாத நிலப்பகுதிகள் காட்டுப் பெருவெளி நிலங்கள் (Rangelands) எனப்படுகின்றன. சுதந்திரமாக மேயும் உள்ளூர் மற்றும் வீட்டு கால்நடை விலங்கௌகளுக்குத் தீவன ஆதாரமாக விளங்குவதுடன், மரப் பொருட்கள், நீர் மற்றும் காட்டுயிர்களுக்கு வாழிடமாகவும் திகழ்கின்றன. இப்பகுதிகள் பாரம்பரியமாக கால்நடை மேய்த்தல் மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழிலுக்குப் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
வறண்ட பகுதிகளில் காணப்படும் காட்டுப் பெருவெளி நிலங்கள் (Rangelands) பொதுவாகத் தீவிரமான காலநிலை மாற்றங்கள், குறைந்த அளவிலும் சீரற்ற முறையிலும் பெய்யும் மழைப்பொழிவு, அதிக மாறுபாடுகளைக் கொண்ட மண் வகைகள், மண்ணில் அடிக்கடி காணப்படும் உப்புத்தன்மை, பல்வேறு நிலத்தோற்றங்கள் மற்றும் பொதுவாகக் குறைவான தாவரப் போர்வை ஆகிய பண்புகளைக் கொண்டுள்ளன. இத்தகைய தாழ்நிலப் பகுதிகளில் புற்கள், புதர்கள், சிறு புதர்ச்செடிகள், சிறிய மரங்கள் மற்றும் தாவரங்கள் அற்ற வெற்று நிலங்கள் காணப்படுகின்றன. மேலும், இப்பகுதிகளில் மேற்பரப்பு நீரின் அளவு குறைவாக இருப்பதுடன், பூர்வகுடி கால்நடை மேய்ச்சல் சமூகத்தினர் வாழும் நிரந்தர கிராமப்புறக் குடியிருப்புகளும் காணப்படுகின்றன.
காட்டுப் பெருவெளி நிலங்களில் வேளாண் பயிர்களோ அல்லது அடர்ந்த காடுகளோ ஆதிக்கம் செலுத்துவதில்லை. மாறாக, இயற்கையாக வளரும் புற்கள், புல்லைப் போன்ற தாவரங்கள், புதர்கள் மற்றும் அகன்ற இலைகளைக் கொண்ட சிறிய மூலிகைத் தாவரங்கள் (Forbs) ஆகியவையே இந்நிலங்களின் முக்கியத் தாவரங்களாக உள்ளன. வறண்ட காலநிலை நிலவுவதால், இங்குள்ள தாவரங்கள் பொதுவாகக் குறைவான அடர்த்தியுடன் காணப்படுகின்றன. மேலும், குறைந்த அளவு நீரைக் கொண்டே உயிர்வாழும் வகையில் அவை தகவமைந்துள்ளன.
காட்டுப் பெருவெளி நிலங்கள் பெரும்பாலும் பரந்த, திறந்தவெளிப் பகுதிகளாகக் காணப்படுகின்றன. இந்நிலங்களில் வளரும் தாவரங்கள் கால்நடைகள் மேய்வதற்கு ஏற்றவையாக உள்ளன. இயற்கையாக வளரும் உயரமற்ற வறண்ட சூழலலை எதிர்கொள்ளும் தாவரங்கள் இங்கு காணப்படுவதால் வேளாண் நிலங்களிலிருந்தும் காடுகளிலிருந்தும் காட்டுப் பெருவெளி நிலங்கள் வேறுபடுகின்றன.
காட்டு பெருவெளி மண்ணில் அதிக உப்புத்தன்மை மற்றும் குறைந்த வளத்தன்மையால், இந்நிலங்கள் தீவிர வேளாண்மைக்கு ஏற்றதாக இருப்பதில்லை. குறிப்பாக, வறண்ட மற்றும் மித வறண்ட பகுதிகளில் மண்ணிலுள்ள ஊட்டச்சத்துகளின் அளவு, தாவரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் முக்கியக் காரணியாக விளங்குகிறது.
மேலும், காட்டு பெருவெளி நிலங்களில் காணப்படும் மண்ணானது காற்று மற்றும் நீரினால் ஏற்படும் அரிப்புக்கு எளிதில் உள்ளாகக்கூடியது. அளவுக்கு அதிகமான கால்நடை மேய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற காரணிகள் இம்மண் அரிப்பை மேலும் தீவிரப்படுத்துகின்றன. கடுமையான வறண்ட சூழ்நிலைகள் காரணமாக, இப்பகுதிகளில் மண் உருவாக்கும் செயல்முறைகள் மெதுவாக நடைபெறுகின்றன.
காட்டு பெருவெளி நிலங்கள் அவற்றின் காலநிலைப் பண்புகள், தாவர வகைகள் மற்றும் மண் தன்மைகள் ஆகியவற்றின் அடிப்படையில் பெருமளவில் வேறுபடுகின்றன. மண்ணை போர்த்திக் கிடக்கும் தாவரங்களின் பரவலும், நீர் ஊடுருவும் திறன் அதிகமுள்ள மண்ணையும் கொண்ட காட்டு பெருவெளி நிலங்கள், காற்று மற்றும் நீரினால் ஏற்படும் மண் அரிப்பைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன. எனவே தாவரப் பரப்பை பாதுகாத்தல் மற்றும் அதன் பரப்பளவை அதிகரிக்கும் நடைமுறைகளைப் பின்பற்றுதல் ஆகியவை, மேய்ச்சல் நில மண்ணில் கரிமப் பொருட்களின் சேர்க்கையை அதிகரிக்க உதவுகின்றன. அதேசமயம், போர்வை போன்று மண்ணை மூடியுள்ள தாவரங்களின் பரப்பு மண்ணின் காற்றோட்ட செயல்பாட்டைக் (Soil Respiration) குறைக்கின்றன. இதனால் மண்ணில் கார்பனைச் சேமிக்கும் செயல்முறையான கார்பன் உள்ளீர்ப்பு அல்லது கார்பன் சேமிப்பு (Carbon Sequestration) அதிகரிக்கிறது. (Dr. Mahdi Egie, Mohammed Sherif, Abdirezak Ahmed, Fundamentals of Rangeland Health, Somali Region Livestock and Agricultural Research Institute, Dec 2025)
காட்டுப் பெருவெளி என்பவை புல்வெளிகளை மட்டும் உள்ளடக்கியவை அல்ல; பாலைவனங்கள், புதர்க்காடுகள், புதர்வெளிகள் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் காணப்படும் தரையுடன் ஒட்டி வளரும் பாசிகள், கோரைப்புற்கள், புற்கள் மற்றும் புதர்கள் போன்ற தாழ்வாக வளரும் தாவரங்கள் நிறைந்த புல் ஆதிக்கம் இல்லாத பிற சூழலமைப்புகளையும் உள்ளடக்கியவை.
Comments
Post a Comment