உன்னைப் பற்றி
நிலவே
நீ தரை வந்த
துயரம் தாளாமல்
காதல் தோல்வியில்
வானம்
இட்டுக்கொண்ட
சிகரெட் சூடுகள்
நட்ச்சத்திரங்கள்.
உன் கைகளை
அலங்கரிக்காத
மருதாணி இலைகளெல்லாம்
கருவேப்பிலையாகவே
கருதப்படுகிறது.
\" மகரந்த சேர்கையில்
மலர்கள் எப்படி
மனுசியாக முடியும்?\"
உனை கண்டு அதிசயத்த
வண்டுகளும் தேனிகளும்
வட்ட மேஜை மாநாட்டில்
வைத்த கேள்வி இதுதான்.
புதிதாய் வாங்கிய
மிதிவண்டியில் நீ
கல்லூரி போக
உன் கால்தடத்தை
பறிகொடுத்த கவலையில்
சகாராவாகிப் போனது
சாலைகள்.
உன் இயல்புகளை
இழைத்து இழைத்துத்தான்
கம்பன்
சீதைப் பாத்திரத்தை
சித்தரித்திருப்பானோ?
சனிப் பிண
இறுதி ஊர்வலத்தில்
தொங்கவிடப்படும்
கோழியைப் போல
நீ சாலை கடக்க
சம்மந்தமில்லாமல்
என் உயிர் ஊசலாடுகிறது.
உயிரோடு பொசுக்கும்
சுபாவம் உடையது
உன் விழிகள்.
ஓ...
கொள்ளிக்கட்டைக்கும்
உன் கண்களுக்கும்
கொள்கை வேறுபாடுகள்
உண்டோ?
உன் பார்வை தோட்டாக்களுக்கு
பலியாகிவிடாமல் தப்பி
பத்திரபடுத்தி வைத்திருக்கிறேன்
பாதி உயிரை.
தனியாக
கரும்பு சக்கையை
தூக்கிச் செல்லும்
எறும்பைப் போல
உன் முகப் பிம்பத்தை
மூளை சுமந்து கொண்டிருக்கிறது.
சதா அழும் குழந்தையடி
என் மனசு.
நீ மிளகாய் நீட்டினால் கூட
மிட்டாய் என்றெண்ணி
சாப்பிட்டுவிடும்.
இப்படி
உன்னைப் பற்றிய
ஒரு அழகிய கவிதையை
பிரசவிக்கத்தானா?
இத்தனை நாட்களாக
வாந்தியெடுத்தது
வந்தது
என் பேனா?
---- தமிழ்தாசன்----
Comments
Post a Comment