இதுவே கதி


‎----இதுவே கதி----

எந்த நிலையிலும் உங்களுக்காக
எழுந்து நிற்பதே
என் கொள்கையாக்கி கொண்டேன்.

என்னை கீழே விழ வைப்பதே
நீங்களாகத்தான் இருக்கும்
என்கிற நிச்சயத்தில்....

அகிம்சை போதிப்பதையும்
அறவழி நடப்பதையும்
தேர்ந்தெடுத்து விட்டேன்

அடிக்கடி அவமானங்களை
அள்ளி அள்ளி கொடுப்பீர்கள்
என்கிற அனுமானத்தில்.

உங்கள் உண்மை மகிழ்ச்சியை
உள்ளூர ரசிப்பதே
உயிர் வாழ்வதன் இலட்சியமாக்கி கொண்டேன்.

கண்ணீர் சிந்தி கதறும் அளவிற்கு
காயங்களை எனக்கு
தருவீர்கள்
என்கிற நம்பிக்கையில்.

தேசத்தின் பிரிவினைகளை எதிர்த்து
போராடப் போகிறேன்.

நாளை எப்படியும் என்னை
மதத்தலைவராய்
மாற்றிவிடுவீர்கள்
என்கிற அச்சத்தில்.

அனைவரும் ஒன்றுபடுங்கள் என்று
அறைக்கூவல் விடப்போகிறேன்.

அனாதைப் பிணமாய் என்னை
ஆக்கிவிடுவீர்கள் என்ற சத்தியத்தில்

நான் யாரென்றே
நாடு மறந்து போனபிறகு
உலகெல்லாம்
நல்லவர் விருதுக்கு
என்னை பரிந்துரைப்பீர்கள்
என்கிற பரவசத்தில்.

இப்படி
இந்த தேசத்தின் ஒவ்வொரு
இக்கட்டான காலகட்டத்திலும்
பல ஆதங்கத்தோடு
ஒரு ஆத்மா புறபட்டு இருக்கிறது
இந்த தேசத்திற்காக போராட...


--- தமிழ்தாசன் ---

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?