உன் வீட்டிலும் ஒருத்தி
---- உன் வீட்டிலும் ஒருத்தி -----
தீப்பட்டி பட்டாசு தொழிற்சாலை
பஞ்சர் ஓட்டும் ஊதிய வேலை
தீயெரியும் செங்கச்சுவளை
டீக்கடை எச்சில் குவளை
கடற்கரை சுண்டல் விற்பனை
கரம் நீட்டும் யாசக சுழ்நிலை
குப்பை தூக்கும் வனவாசம்
தட்டு கழுவும் உணவகம்
இந்தியாவின் நாளைய தூண்களெல்லாம்
மந்தை ஆடுகளாக மாறக் கண்டேன்.
இந்தநிலையை இன்றோடு வேரறுக்க
சிந்தையில் வீரிய சினம் கொண்டேன்.
நெஞ்சு பொறுக்காமல்
நெருப்பைப் போல் எழுந்து நின்றேன்.
பிஞ்சு வயிறை பிழியும்
பிசாசுகளை பொசுக்கு என்றேன்.
ஊரை திருத்த
உத்தேசிக்கும் போதுதான்
உள்புத்திக்கு ஒன்று
நினைவுக்கு வந்தது.
ஆணையிட்டால்
அடிபணிய
அடுப்படியே
கதியென
பிராண உடல் உயிர் வருத்தி
குழந்தை தொழிலாளி ஒருத்தி
என் வீட்டிலும் இருக்கிறாள்.
ஆசையாசையாய்
நான்
அம்மா என்று
அழைப்பதற்கு.
---- தமிழ்தாசன் ----

Comments
Post a Comment