புது காதல் செய்வோம்


‎---புது காதல் செய்வோம்---

குளிரூட்டப்பட்ட
பழமுதிர்ச்சோலை கூடத்தில்
கும்மிருட்டு இருக்கைகள் ஓரத்தில்
கனிச்சாறு அருந்தும்
காதல் நமக்கு வேண்டாம்
கண்ணே...

குறுக்கு வளைந்த போதும்
கூடை சுமந்து போகும்
பழம் விற்கும் கிழவியிடம்
கனிகள்
வாங்கி திண்போம்.

உழைக்கும் சாதி நாமென்று
உணர செய்யும் மூதாட்டியை
வணங்கி செல்வோம்.

புனித காதல் புரிய
பூங்கா புதர்களை
தேடித் திரியும்
தேகக் காதல்
வேண்டாம் நமக்கு.

கதவைத் தாண்டும் போது
கற்போடு திரும்புவோமென்று
கனவைக் கண்டு
நம்பும் பெற்றோர்கள்
நமக்கும் உண்டு.

நீ கட்டியிருக்கும் சேலையில்
நம் கலாச்சாரம்
ஒட்டியிருப்பதை மறந்துவிடாதே !

காம இச்சைகளை
கடத்தும் கருவியாக
கடவுள் உன்னை
படைக்கவில்லையென
நான் நம்புகிறேன்
நீ நம்புகிறாயா?

என் குற்றங்களை சகித்து கொள்ளும்
குணவதியாக இருந்துவிடாதே !
மதுரையை எரித்த தமிழ் பெண்ணை
மறந்துவிடாதே!

திரும்பிப் பார்த்தால் யாருமற்ற
திரையரங்கு இருட்டுகளில்
திணறி கொண்டிருக்கும்
திருட்டு காதல்
வேண்டாம் நமக்கு.

வாடி என்னோடு
இரு கை கோர்த்து
பொடிநடையாய்
அனாதை இல்லம்வரை
போய் வருவோம்.

எனக்கு நீ
உனக்கு நானென்று
எதிலும் சுருங்கி கிடப்பதில்
என்ன இன்பம் இருக்கிறது?
அந்த பிள்ளைகளுக்கும்
அன்பை
பகிர்ந்தளிப்போம்
பரிமளிப்போம்.

காதல் தோல்வித் தாளாமல்
கதை முடிக்கும்
கை நாடி கிழிக்கும்
கோழைக் காதல்
வேண்டாம் நமக்கு

ஆறுமாதத்திற்கு ஒருமுறையேனும்
ஆண்டவன் ஆகா முடியுமே!
இரத்ததானம் செய்வதால் நாமும்
இரட்ச்சகரின் தேக வடிவமே!

என் பிறந்தநாளுக்கு
வாழ்த்துமடல்
வாங்கும் நேரத்தில்
நூலகம் சென்று
நுழைந்து வா.

உதட்டு சாயம்
வாங்கியது போதும்.
உலக ஞானம்
உனக்கும் வேண்டும்.

நீ என் அன்னையென்று
அடிக்கடி
நான் சொல்லும்
அழுக்கு பொய்களை நம்பிவிடாதே..
இந்த வார்த்தை மட்டுமே
ஒரு தாயின் இடத்தை நிரப்பிவிடாதே...

கழிவு நீரோடையில்
கவிழ்ந்துவிழுந்த
நாய்க்குட்டியை
காப்பாற்றும் முனைப்பில்
கையில் ஏந்தி
கறைபட்டு உன் முகம்
அழுக்காகிட
அழகிய தேவதையென்று
உன்னை அழைப்பதற்கும்
அர்த்தமிருக்கிறது
அன்பே...

முட்டிமோதும் முத்தத்திற்கு
கட்டிப் பிடிக்கும் யுத்தத்திற்கு
கட்டில் உடையும் சத்தத்திற்கு
இந்த
அற்ப சுகங்களை
அனுபவிக்க
நாம் காதலிக்கவில்லை.

வெறும்
வேதியில் மாற்றமல்லடி
காதல்.

ஜாதிமதங்களை ஒழிக்க
பாதி தலைவர்கள்
ஆவியிழந்த
அகிம்சை போராட்டமடி
அதை
காதல் என்ற பெயரில்
கையில் எடுத்து கொண்டோம்.

மின்னல் இடியுடன் மழை பொழியலாம்
எனினும் மண் சாகதே!
இன்னல்கள் இனியும் ஆயிரம் வரலாம்
பெண்ணே பின்வாங்காதே!

--- தமிழ்தாசன் ---
 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?