கண்ணகி கோயில்
கண்ணகி கோயில்
நெடுவேள் குன்றம்:
மதுரையை எறித்த கண்ணகி, வைகையின் ஒரு கரையில் நடந்து சென்று சேர நாட்டில் உள்ள நெடுவேல் குன்றம் மலைமீது ஏறி வேங்கை மரத்தடியில் வருந்தி நின்ற காட்சியையும், பதினான்கு நாட்களுக்குப் பிறகு, கோவலன் விண்ணுலக தேவர்களுடன் புஷ்பக விமானத்தில் வந்து, கண்ணகிக்கு மீண்டும் மங்கல நாண் கட்டி, அழைத்துச் செல்கிறான் என்று இளங்கோவடிகள் பாடுகிறார்.
உரவு நீர் வையை ஒரு கரை கொண்டு ஆங்கு
அவல என்னாள் அவலித்து இழிதலின்
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின்
கடல் வயிறு கிழித்து மலை நெஞ்சு பிளந்து ஆங்கு
அவுணரை கடந்த சுடர் இலை நெடு வேல்
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர்
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின்
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஏத்த
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ
- சிலம்பு மதுரை காண்டம் 23 185 - 199)
இளங்கோவடிகள் குறிப்பிடும் நெடுவேல் குன்றம், கண்ணகி கோயில் அமைந்துள்ள வண்ணத்திப்பாறை வேங்கைகானல் என்று அறிஞர்கள் பலரும் கருதிகின்றனர்.
அம்மலை யானைமுகம் போன்ற அமைப்புக் கொண்ட தனிக்குன்றாக இருந்திருக்கிறது. அந்த யானைக் குன்றின் பிடரி போன்ற பகுதியில் வேங்கை மரக் கானல்கள் நிறைந்த மூன்று சோலைகள் இருந்தன. அவற்றில் நடுவிலுள்ள சோலையில் வேங்கை மர நிழலில் வந்து கண்ணகி தங்குகிறாள். பின் அம்மலைவாழ் மக்கள் காண, அவர்கள் வியக்க, உயிர்துறந்து தெய்வமாகிறாள். கண்ணகி தெய்வமானதைக் கண்ட குன்றக்குறவர்கள் சேரன் செங்குட்டுவனிடம் இச்செய்தியை கூறுகிறார்கள்.
கண்ணகி கோயில் குறித்து சிலப்பதிகாரம்:
இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் கிபி 2ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என பல அறிஞர்கள் கருதுகின்றனர். அக்காலத்தை சேர்ந்த சேரன் செங்குட்டுவன் இமயத்தில் இருந்து கல் எடுத்து வந்து கண்ணகிக்கு கோயில் எழுப்பினான் என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வஞ்சி காண்டத்தில் பாடுகிறார்.
வில் தலைக் கொண்ட வியன் பேர் இமயத்து ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின்
-(சிலம்பு 25: 183-184, வஞ்சி காண்டம் 3)
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின்
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு
- (சிலம்பு 26: 151-153)
பல் வேல் தானை படை பல ஏவி
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என்
- (சிலம்பு, வஞ்சி காண்டம் 26: 252-254)
நங்கை தன்னை நீர்ப்படுத்தி
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி
வஞ்சி மா நகர் புகுந்து
நில அரசர் நீள் முடியால்
பலர் தொழு படிமம் காட்டி
தட முலை பூசல் ஆட்டியை
கடவுள் மங்கலம் செய்த பின் நாள்
கண்ணகி தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி
அலம்வந்த மதி முகத்தில்
- (சிலம்பு, வஞ்சி காண்டம் 29: 30-39)
மங்கலாதேவி கோட்டம் என்னும் கண்ணகி கோயில்:
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில்
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய 55
அணி கயம் பல உள ஆங்கு அவை இடையது
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும்
இடி_கலப்பு அன்ன இழைந்து உகு நீரும்
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர்
- (சிலம்பு , வஞ்சி 30: 53 - 59)
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண்
அங்கு உறை மறையோனாக தோன்றி
- (சிலம்பு , வஞ்சி 30: 88 - 89)
சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்காக சேரன் எடுத்த கோயில் மங்கல மடந்தை கோட்டம் என்கிறது. இன்றைக்கும் கண்ணகி கோயில், மங்கலாதேவி கோயில் என்றே மக்களால் அழைக்கப்படுகிறது. மலையை சுற்றி வாழும் மக்களிடமும் இது மங்கலாதேவி கோட்டம், மங்கலாதேவி கோயில், கண்ணகி கோயில் என்றே அழைக்கப்படுகிறது.
கோயில் அமைப்பு:
கிபி 1 - 2 நூற்றாண்டில் சேரன் செங்குட்டுவனால் எழுப்பபட்ட கோயில் கண்ணகியின் நடுகல் கோயிலாக இருந்தது. சேரன் அமைத்த கோவிலுக்குப் பிற்காலத்தில் பலரும் திருப்பணி செய்திருக்கிறார்கள். இராஜராஜ சோழனும் பாண்டியர்களும் நாயக்கர்களும் பின்னால் வந்த பூஞ்சையாத்துத் தம்பிரான் போன்ற கேரள மன்னர்களும் சாத்து என்ற வணிகக் கூட்டத்தினரும் அவரவர் காலத்தில் இக்கோவிலுக்கு திருப்பணி செய்து வந்திருக்கிறார்கள். அக்கருத்திற்கு வலு சேர்க்கும் வகையில் கல்வெட்டு சான்றுகளும் கோயிலில் உள்ளது. கோயிலின் கட்டடக் கலை அமைப்பை பொறுத்தவரை 10ஆம் நூற்றாண்டு சோழர்களின் அமைப்போடு பொருந்தி போகிறது. கோயிலின் ஒவ்வொரு அங்கமும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. வடக்கு நோக்கிய இராஜ கோபுரம் கடந்து சென்றால் கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவராக லிங்க வடிவில் சிவனும், அதற்கு அடுத்து தெற்கு நோக்கிய சன்னதியில் உடனுறையாக பூரணியும் வீற்று இருக்கின்றனர். கண்ணகிக்கு வழங்கப்படும் பல்வேறு பெயர்களில் ஒன்று பூரணி. கண்ணகி சன்னதிக்கு அடுத்து, அதிட்டானம் மட்டும் எஞ்சியிருக்கும் பகுதியில் உடைந்த சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அச்சிலையே கண்ணகியின் பழைய சிலை என்பர். இவைனைத்தும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிவனுடைய கருவறையே பெரியதாக இருக்கிறது. இராஜ கோபுரம் முழுமையற்ற நிலையில் அல்லது சிதைந்து காணப்படுகிறது.
அதற்கு அடுத்து கிழக்கு நோக்கிய சன்னதியில் துர்கையும், சன்னதியின் வடபுறம் சிதைந்த அதிட்டானம் பகுதியில் பிள்ளையார் சிலையும் உள்ளது. இந்த இரு சிலைகளும் கேரள அரசால் அண்மையில் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. துர்கை என்றும் பகவதி என்றும் சன்னதிக்கு எதிரே சிலைகளற்ற ஒரு சிறிய சன்னதி ஒன்றுள்ளது. இவை அனைத்தும் கேரள அரசின் கட்டுபாட்டில் உள்ளது. கோயில் சுற்றுச்சுவர் சிதைந்து காணப்படுகிறது.
கண்ணகி கோயில் கல்வெட்டுகள் தரும் செய்தி:
இக்கோயிலில் மொத்தம் 9 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்த கல்வெட்டுகளில் சோழர் கல்வெட்டு இரண்டும், பாண்டியர் கல்வெட்டுகள் ஏழும் உள்ளன. ஒன்றிய தொல்லியல்துறையின் கல்வெட்டு ஆய்வாளர் கே.ஜி. கிருஷ்ணன் 1966ஆம் ஆண்டில் இக்கல்வெட்டைப் படியெடுத்து (ARN 277 & 284 of 1966) பதிவு செய்துள்ளார்.
இராஜராஜ சோழனுடைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இரண்டும் கி.பி. 989ஆம் ஆண்டைச் சேர்ந்தவை. ராசராச சோழன் கல்வெட்டிலும்.குலசேகரப் பாண்டியன் கல்வெட்டிலும் கடவுளின் பெயர் இடம் பெற்றுள்ளது. கி.பி.989ல் ராசராசன் சேர நாட்டை வென்று மேலை மலையைக் கடந்து வெற்றிப்படையுடன் வரும் வழியில் இக்குன்றின் மீதிருந்த கோயிலுக்குச் சென்று இத்தெய்வத்தை வழிபட்டு கோயில் படிப்புறமாக அற நிபந்தங்கள் செய்தான். அக்கல்வெட்டில் அத்தெய்வம் ஸ்ரீ பூரணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கோயிலின் வடக்குப் பகுதி பெரு வாயிலுக்கு உட்புறமாகப் பிற்காலப் பாண்டியருள் ஒருவரான ஸ்ரீகுலசேகரப் பாண்டியனின் (1268-1308AD) 29 ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இம்மலை 'பூரணகிரி 'என்றும் இத்தெய்வம் ஸ்ரீ பூரணகிரி ஆளுடைய நாச்சியார்' என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
பிற்கால பாண்டிய சோழ அரசர்கள் பெருங்கோயில்களில் முதன்மைக் கடவுள்களுக்கு இணையாக தேவி தெய்வங்களுக்கு கோவில் அமைத்த பொழுது சைவக் கோவில்களில் அம்மன் சன்னதிகளும் வைணவக்கோவில்களில் தாயார் சன்னதிகளும் அமைத்த பொழுது அவர்களுக்கு நாச்சியார் என்றே பெயரிட்டனர். அம்மன்கள் நாச்சியார் என்ற பெயரில் மேல் நிலையாக்கம் செய்யப்பட்ட அக்காலங்களில் பாண்டிய சோழப் பேரரசர்களால் மங்கல மடந்தை கோட்டம் புணரமைப்பு செய்யப்படும் பொழுது மங்கலதேவி நாச்சியார், பூரணி என்று கல்வெட்டுகளில் மேல்நிலையாக்கம் செய்து இடம்பெறச் செய்திருக்க வேண்டும்.
ஆனால் சோழ, பாண்டியர்களைப் போல பேரரசுகளாக இல்லாத மக்களோடு நெருக்கமாக இருந்த பூஞ்சையாற்று மன்னர்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மக்களின் வழக்கிலே இருந்த 'மங்கலதேவி அம்மன் என்றே குறிப்பிடப் பட்டிருக்கிறது என்பதையும் காண்கிறோம்.
கூடலூர் அழகர்சாமி கோயிலில் கிபி 1658 சேர குலசேகர நாயனார் ஆட்சியில் மங்கலாதேவி கோயிலுக்கு வழங்கப்பட்ட நிலதானம் குறித்த செய்தி காணப்படுகிறது. இக்கோயில் குறித்த பல கட்டுரைகளில் குறிப்பிடப்படுவதைப் போல நேரடியாக 'கண்ணகி' எனும் பெயர் கல்வெட்டுகள் எதிலும் இடம்பெறவில்லை. சங்க இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும், சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள நிலவியல் அடிப்படையிலும், உள்ளூர் மக்களின் வழிபாட்டு முறைகள் மற்றும் நாட்டார் வழிபாடு, கதைகளின் மூலமும் இது கண்ணகி கோயில் என்று ஆய்வாளர்களால் உறுதி செய்யப்படுகிறது.
ஆக மேற்கண்ட விவரங்களின் அடிப்படையில் வேங்கைக் கானலில் அமைந்துள்ள பூரணி, ஆளுடைய நாச்சியாள், காவிதிப்பெண் ஆளுடைய நாச்சியாள், மங்கலதேவி அம்மன் என அழைக்கப்படும் தெய்வம் கண்ணகியே என முடிவுக்கு வரமுடியும்.
ஆதாரம்: அ. உமர் பாரூக், அழநாடு, பக் 76-77
இருப்பிடம்:
தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டம், கம்பம் வட்டம், வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் உள்ள வேங்கை கானலில் அமைந்துள்ளது. இம்மலை தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் எல்லைப் பகுதியாக உள்ளது. இம்மலையும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதியும் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இம்மலையை 'வண்ணாத்திப்பாறை' (விண்ணேற்றிப்பாறை), மங்கலாதேவி மலை என்று மக்கள் அழைக்கின்றனர். இம்மலையின் பெயர் 'பூரணகிரி' என்று கண்ணகி கோயில் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சிலப்பதிகாரம் 'நெடுவேள்குன்றம்' என்கிறது. மலையுச்சியில் உள்ள கண்ணகி கோயில் கடல் மட்டத்திலிருந்து 1337 மீட்டர் (4,386 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. கண்ணகி கோயில் GPS: 9.597951, 77.222046
கோயிலை அடையும் வழிகள்:
ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு, கேரளா ஆகிய இரண்டு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் பல்லாயிர கணக்கான மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்கின்றனர். அன்று மட்டுமே பொது மக்கள் வனத்துறையால் அனுமதிக்கப்படுகின்றனர்,
வழித்தடம் 1:
தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டம், கம்பம் வட்டம், கூடலூர் அருகேயுள்ள பளியங்குடி ஊருக்கு வந்து சேர வேண்டும். மலை அடிவாரத்தில் இருந்து மலையுச்சியில் உள்ள கோயில் 6.6 கிமீ என்று வனத்துறை அறிவிப்பு பலகைகள் கூறுகின்றன. பளியங்குடியில் இருந்து கூடலூர் வனப்பகுதி வழியாக மலையேறி 9 கி.மீ மலைப்பாதையை கடந்து சென்றால் கண்ணகி கோயிலை அடையலாம். இம்மலைப் பாதை வழியே நடந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
வழித்தடம் 2:
கேரளம் மாநிலம, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம், தேக்கடி, தாமரைக்கண்டம் வந்து சேர வேண்டும். அங்கிருந்து அடர்ந்த வனப்பகுதி வழியே சுமார் 10 கி.மீ மலைப்பாதையை கடந்து சென்றால் கண்ணகி கோயிலை அடையலாம். இம்மலைப் பாதை வழியே நடந்தும் செல்லலாம். கேரளா அரசு அனுமதிக்கிற ஜீப் சவாரி மூலமும் கண்ணகி கோயிலை அடையலாம். ஜீப்பில் செல்வோர் நீண்ட வரிசையில் நெடுநேரம் காத்திருந்து நபருக்கு 150 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தனிப்பட்ட வகையில் ஜீப் உரிமையாளர்களை இருநாள் முன்னதாக தொடர்பு கொண்டு ஜீப் உரிமையாளர் கேட்கும் தொகைக்கு உடன்பட்டு முன்பதிவு செய்வோர், ஜீப் வருகைக்காக காத்திருக்காமல் காலை 6 மணிக்கு கண்ணகி கோயில் பயணத்தை தொடங்குகின்றனர். ஆறு பேர் அமரக்கூடிய ஜீப்பிற்கு நாங்கள் 7,000 ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்தோம்.
மலையேற்ற குறிப்புகள்:
மலையடிவாரத்தில் அல்லது பயணம் துவங்குமிடத்தில் மற்றும் கண்ணகி கோயில் அருகே தமிழ்நாடு மற்றும் கேரள வனத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை முகாம் அமைத்து கண்ணகி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு, பயணிகளுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுக்கிறது. கண்ணகி கோயில் அருகில் உணவு, குடிநீர் தன்னார்வலர்களால் அன்னதானமாக வழங்கப்படுகிறது. வனப்பகுதிக்குள் Use and through பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. தொழில்பட்ட ஒளிப்பட கருவிகள் (Professional Camera) எடுத்த செல்லவும் அனுமதி இல்லை. கைபேசிகள் கொண்டு செல்லலாம். மலையேறுவதற்கு ஏற்ற காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். கால்களால் மலையேறினால் கண்ணகி கோயிலை அடைய குறைந்தது மூன்று மணி நேரம் ஆகலாம். நடந்து மலையேறலாம் என எண்ணுபவர்கள் சுமைகளை குறைத்துக் கொண்டு, நல்ல உடல் தகுதியோடு மலையேற வேண்டும். சித்திரை வெயில் வாட்டுவதில் இருந்து விடுபட அதிகாலை 5.30 மணிக்குள் மலையேற்றம் துவங்கும் பகுதிக்கு வந்துவிட வேண்டும். காலை 6 மணிக்கு அனைவரும் வனப்பகுதிக்குள் அனுமதிக்கப்படுவர். பகல் 1.30 மணிக்கு மேல் மலையேற தடைவிதிக்கப்படும். மாலை 4 மணிக்கு மலையேறிய அனைவரும் கீழிறங்க வேண்டும். மலைப்பாதையில் ஆங்காங்கே வனத்துறை மற்றும் காவல்துறை அலுவலர்கள் காவல் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
Comments
Post a Comment