அணைபூதம் (எ) புத்தர்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், எல்லப்பட்டியில் சுருளியாற்றின் குறுக்கே வெள்ளையர்கள் (John Pennycuick) காலத்தில் கட்டப்பட்ட தடுப்பணை ஒன்று உள்ளது. அணையின் மேற்கு கரையில் மரத்தடியில் ஏழு கன்னிமார் கோயிலும், ஆற்றினுள்ளே தலையில்லா புத்தர் சிலையும் காணப்படுகிறது.
சமண தீர்த்தங்கர் மகாவீரர் சிலையும், புத்தர் சிலையும் தியான நிலை தோற்றத்தில் ஒரே போன்று இருப்பதை காணலாம். மகாவீரர் சிலைகள் ஆடைகளற்ற நிலையில் (திகம்பரர் பாணி) சித்தரிக்கப்படுகின்றன மற்றும் மார்பின் மையத்தில் 'ஸ்ரீவத்ச' முத்திரை இருக்கும். மகாவீரர் தனது துறவறத்தின் அடையாளமாக தனது தலைமுடியைப் பிய்த்து எறிந்ததாக (Lochas) சமணக் கதைகள் கூறுகின்றன. எனவே, அவரது சிலைகள் பெரும்பாலும் மொட்டையாக, தியான நிலையில், யோக முத்திரையுடன் (அர்த்த பரியங்க ஆசனம்), தலைக்கு மேல் முக்குடையுடன் வடிவமைக்கப்படுகின்றன. சில சமயம், நீண்ட தியானம் காரணமாக வெயிலில் இருந்து காக்க அவர் தலையில் முடி இருந்தது போன்று கலைப்படைப்புகளில் மகாவீரர் தலைமுடியுடன் இருந்தது போன்றும் சித்தரிக்கப்படுகிறார்.
புத்தரின் தலையின் உச்சியில் ஒரு சிறிய மேடு அல்லது முடிச்சு போன்ற அமைப்பு இருக்கும். அதனை உஷ்னிஷா (Ushnisha) என்று அழைக்கின்றனர். புத்தர் ஞானம் பெற்றபோது அடைந்த "விரிவடைந்த அறிவு" (Expanded Wisdom) அல்லது உயர்ந்த ஞானத்தை குறிக்கிறது. இரு புருவங்களுக்கும் இடையே ஒரு சிறிய பொட்டு அல்லது சுழி போன்ற அடையாளம் காணப்படும். அதனை உர்ணா (Urna) என்பர். தீர்த்தங்கரர் சிலைகள் (குறிப்பாகத் திகம்பரர் பாணி) ஆடையின்றி இருக்கும். ஆனால், புத்தர் சிலைகள் எப்போதும் ஒரு மெல்லிய துறவற ஆடை அணிந்திருப்பது போலவே செதுக்கப்படும். சமணத் தீர்த்தங்கரர் சிலைகளின் மார்பில் இருக்கும் 'ஸ்ரீவத்ச' முத்திரை புத்தர் சிலைகளில் பெரும்பாலும் இருக்காது.
புத்தர் சிலை ஆடை:
புத்தர் சிலைகளில் காணப்படும் ஆடைகள் பொதுவாக சீவரம் (Civara) அல்லது கஷாயம் (Kasaya) என்று அழைக்கப்படுகின்றன. இவை பௌத்தத் துறவிகள் அணியும் மஞ்சள், காவி அல்லது செம்மஞ்சள் நிற ஆடைகளாகும்.
- சங்காதி (Saṃghati): இது புத்தர் சிலைகளில் பெரும்பாலும் காணப்படும் தோள் துண்டை போன்ற சால்வை ஆகும்.
- உத்தராசங்கம் (Uttarāsaṅga): இது உடலை மறைக்கும் போர்வை போன்ற மேலாடை ஆகும்.
- அந்தர்வாசம் (Antarvāsa): இது இடுப்புக்குக் கீழே அணியப்படும் வேட்டி போன்ற கீழ் ஆடை.
எல்லப்பட்டி சுருளியாற்றின் நடுவில் தலையற்ற சிலையின் இடது தோளில் சால்வை போன்ற ஆடை காட்டப்பட்டிப்பது புத்தர் சிலை என்பதை உறுதி செய்கிறது.
கருங்கல்லில் வடிக்கப்பட்ட 3 அடி உயரமுள்ள புத்தர் சிலையின் இடது மார்பில் சங்காதி மேலாடையுடன், இரு கால்களையும் மடக்கி தியான முத்திரையில் அர்த்தபத்மாசனத்தில், அமர்ந்த நிலையில் உள்ளார். கருங்கல்லால் செய்யப்பட்ட இப்புத்தர் சிலை கிபி 10-11 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.
Comments
Post a Comment