தமிழ்நாட்டு இசுலாமியார்

 மேலகொடுமலூர் முருகன் கோயிலில் இசுலாமிய புலவருக்கு சிலை:

பரமக்குடி அருகில் உள்ள எமனேஸ்வரம் எனும் சிற்றூரில் 1745-ம் ஆண்டு பிறந்தவர் முகம்மது மீர் ஜவ்வாது புலவர். இவர் முகைதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ், நாகைக் கலம்பகம், மதீனத் தந்தாதி, ராஜராஜேஸ்வரி பஞ்சரத்ன மாலை, வண்ணக் கவிகள், சீட்டுக் கவிகள், சித்திரக் கவிகள், மாலை மாற்றுகள், குமரையா பதிகங்களைப் பாடியுள்ளார். மேலும் ரகுநாத சேதுபதி, பிரம்பூர் ஆனந்த ரங்கதுரை, முத்துகிருஷ்ணன், கச்சி செல்லப்பன் உள்ளிட்ட வள்ளல்களையும் பாடிச் சிறப்பு செய்துள்ளார். ஜவ்வாது புலவரின் முகைதீன் ஆண்டகை பிள்ளைத் தமிழ் இன்றளவும் தமிழக முஸ்லிம் களின் தாலாட்டுப் பாடல்களாக வாய்மொழியாகப் பாடப்பட்டு வருகின்றன. பழமையான மேலக்கொடுமலூர் முருகன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது இசுலாமியரான ஜவ்வாது புலவரை கவுரவிக்கும் விதமாக அவர் பாடிய குமரையா பதிகத்தை மதில் சுவரில் கல்வெட்டாகப் பதித்து கோயிலின் விமானத்தின் தெற்குப் பகுதியில் ஜவ்வாது புலவரின் உருவத்தைச் சுதை வடிவில் கோயில் நிர்வாகம் அமைத்தது. 


ஆதாரம்: இந்து தமிழ் நாளிதழ் 22.10.2016 https://www.hindutamil.in/news/tamilnadu/84649-.html


சோமேஸ்வர் மகாதேவ் கோயில் கட்ட 
அவுரங்சிப் மன்னன் கொடுத்த நிலம்: 

வரலாற்று ஆய்வாளரான பிரதீப் கேசரிவானி என்பவர் 2015 ம் ஆண்டு ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். உத்திர பிரதேசத்தின் அரைல் பகுதியில் திரிவேணி சங்கம கரையில் அமைந்துள்ள சோமேஸ்வர் மகாதேவ் ஆலயம் கட்டுவதற்கு நில வழங்கியவர் முகலாய மன்னர் அவுரங்கசீப் தான். அந்த கோவில் கட்டுவதற்கு அவர் பணம் மற்றும் நிலத்தை நன்கொடையாக அளித்துள்ளதற்கான சான்று, அந்த கோவிலில் அனுமன் சிலைக்கு அருகில் உள்ள தூண் ஒன்றில் 15 வரியில் சமஸ்கிருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.


ஆதாரம்: https://tamil.samayam.com/religion/hinduism/do-you-know-this-facts-mughal-kings-donate-land-to-built-hindu-temples/articleshow/107057013.cms?story=3



திருச்செந்தூர் முருகன் கோவில் மேல கோபுரம் கட்ட உதவிய வள்ளல் சீதக்காதி:



திருச்செந்தூர் முருகன் கோயில், முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது என போற்றப்படும் புனிதத் தலமாகும். இத்தலத்தில் அமைந்துள்ள மேலைக் கோபுரம் அதன் சிறப்புகளில் முக்கியமானது. இந்த கோபுர திருப்பணியில் ஏற்பட்ட ஒரு விசித்திரமான சம்பவம், கோயில் வரலாற்றில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலைக் கோபுரத்தின் கட்டிட வேலைகளை திருவாடுதுறை ஆதீன ஒடுக்கத்து தம்பிரான் தேசிக மூர்த்தி சுவாமிகள் முன்னிலை வகித்தார். ஒன்பது நிலைகளைக் கொண்டதாக திட்டமிடப்பட்ட கோபுரம், ஆறு நிலைகள் கட்டிய பிறகு பொருள் பற்றாக்குறை காரணமாக வேலை நின்றுவிட்டது. இதனால், தேசிக மூர்த்தி சுவாமிகள் மிகுந்த கவலையடைந்தார்.

அவரது கவலைக்குத் தீர்வு தரும்படி முருகப்பெருமான் அவருடைய கனவில் தோன்றி, வள்ளல் சீதக்காதி அவரிடம் செல்லும்படி உத்தரவிட்டார்.


சீதக்காதியின் பொன் கொடை:

தேசிகர் முருகப்பெருமானின் திருவுளப்படி வள்ளல் சீதக்காதி (ஷெய்க் அப்துல் காதர் மரைக்காயர்) அவரைச் சந்திக்க காயல்பட்டினம் சென்றார். அங்கு, சீதக்காதி அவர்களின் வரலாற்றை கேட்டதும், உடனடியாக ஒரு மூட்டை உப்பை வழங்கி, “இதை கோயிலில் சென்று அவிழ்த்துப் பாருங்கள்” எனக் கூறினார்.

தேசிகர் திருச்செந்தூர் திரும்பி, கோயிலில் அந்த உப்பு மூட்டையை அவிழ்த்தார். அப்போது அதிலிருந்து ஏராளமான தங்கக் காசுகள் வெளிவந்தன. அவற்றைப் பயன்படுத்தி, மேலைக் கோபுரத்தின் முழுமையான திருப்பணியும் வெற்றிகரமாக முடிந்தது.

இச்சம்பவம், முருகப்பெருமானின் திருவருளையும், மத நல்லிணக்கத்தின் உண்மைப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும் ஒரு மிகப்பெரிய உதாரணமாக கருதப்படுகிறது. முருகப் பக்தர்களும், இசுலாமிய சமூகத்தினரும், தெய்வ நம்பிக்கையோடு ஒன்றிணைந்து கோயிலின் மேலைக் கோபுரத்திற்காக உதவியிருக்கிறார்கள் என்பது வரலாற்றில் ஒரு சிறப்பு குறிப்பாகும்.

இச்சுவாரஸ்யமான வரலாற்றுத் தகவல் திருச்செந்தூர் தேவஸ்தானத்தினால் வெளியிடப்பட்ட “திருச்செந்தூர் கோயில் வரலாறு” என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(ஆதாரம்: “திருச்செந்தூர் கோயில் வரலாறு” – திருச்செந்தூர் தேவஸ்தான வெளியீடு, பக்: 8)


திருச்செந்தூர் முருகன் கோவிலின் மூலவர் சிலையை மீட்க உதவிய முஸ்லிம்கள்: 

விஜய நகர மன்னர்கள் தென் தமிழ்நாட்டில் சுமார் இருநூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அம்மன்னர்களின்  பிரதிநிதிகளாக நாயக்க மன்னர்கள் கி.பி. 1529 முதல் 1736 வரை  தென்பாண்டிய நாட்டினை நிர்வகித்தனர்.

போர்த்துக்கீசியர் தமிழ் நாட்டில் வியாபாரத் திற்காக கடற்கரை நெடுகிலும் கொத்த ளங்களை நிறுவினர் அவர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் வியாபார நிமித்தமாக வந்தனர். இரு நாட்டவரும் கிறிஸ்தவர்கள் என்றாலும் வியாபாரப் போட்டியோடு இருவரும் கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ் டான்டெனும் இரு பிரிவுகளைச் சார்ந்தவர்கள்.

கி.பி.1645-ம்ஆண்டு டச்சுக் காரர்கள் காயல்பட்டினத்தில் வியா பாரக் கிடங்குகளை அமைத்தனர்.போர்த்துக் கீசியர் தூண்டுதலால் நாயக்க மன்னர் டச்சுக்காரர்களை இலங்கைக்கு  விரட்டினர்.

கி.பி.1649-ம் ஆண்டு 436 டச்சுக்காரர்கள் 180 சிங்களர் களோடு மணப்பாட்டில் எதிரில் வந்தனர். அங்கிருந்து வீரபாண்டிய பட்டணத் துக்கும்,திருச்செந்தூருக்குமிடையே இறங்கினர். நாயக்கர் மன்னர் சார்பாக காயல்பட்டினம் பிரமுகர் வந்து இக்கோயிலை விட்டு டச்சுப்படை காலி செய்ய வேண்டினர். அவர்கள் மறுக்கவே ஊரில் உள்ள மக்களும் நாயக்கர் பட்டாளமும் டச்சுக்காரர் களோடு சண்டையிட இதில் 300 பேர் இறந்தனர்.

நாயக்கர் மன்னர் நஷ்ட ஈடு தந்தால் மூல விக்ரகம் உட்பட கோயிலில் உள்ள மற்ற விக்ரகங்களை தருவதாகவும் இல்லா விடில் நஷ்ட ஈட்டிற்கு பணமாக இலங்கைக்கு எடுத்துச்செல் வதாக சொல்லிக் கொண்டு சென்றனர். இதனால் திருச் செந்தூரில் 1649-ம் ஆண்டு முதல் 1651-ம் ஆண்டு வரை இக்கோயிலில் நாள் வழிபாடும்,  திருவிழாவும் நடை பெறவில்லை.

கி.பி.1650-ம் ஆண்டு வட மலையப்ப பிள்ளையன் டச்சுக்காரர்களிடமிருந்து விக்ரகங்களை திரும்ப பெற காயல் நகரத்து  நான்கு  பிரமுகர்களை இலங்கையில் உள்ள டச்சசுக்கார்களிடம் அனுப்ப காயல் நகர அதிகாரிகளை வேண்டினர்.காயல் நகர பிரமுகர்கள் முயற்சியால் கி.பி.1651-ம் ஆண்டு டச்சுக்காரர்கள் விக்ரகங்களை காயல் நகருக்கு அனுப்பினர்.

அவை திருச்செந்தூரில் ஒப்படைக்கப்பட்ட பின் கி.பி.1653-ம் ஆண்டு கும்பா பிஷேகம் நடத்தப்பட்டது.

முனைவர் கல்யாணசுந்தரம் 
(திருச்செந்தூர் முருகன் கோவில் வரலாறு முனைவர் பட்ட ஆய்வு நூல்)


முருகனை இராவுத்தன் என பக்தியோடு அழைக்கிறார் அருணகிரிநாதர்:


கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை
மொண்டுண் டயர்கினும் வேன்மற வேன்முது கூளித்திரள்
டுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடுடு டுண்டுடுண்டு
டிண்டிண் டெனக்கொட்டி 
ட வெஞ்சூர்க்கொன்ற ராவுத்தனே! (37) - பக்கம் 7 

படிக்கும் திருப்புகழ் போற்றுவன்; கூற்றுவன் பாசத்தினால்
பிடிக்கும் பொழுது வந்து அஞ்சல் என்பாய்; பாம்பில் நின்று
நடிக்கும் பிரான் மருகா! கொடும் சூரன் நடுங்க வெற்பை
இடிக்கும் கலாபத் தனிமயில் ஏறும் இராவுத்தனே! (50) - பக்கம் 9 


ஆதாரம்:

ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிய கந்தரலங்காரம் 

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்துத் தலைவர் அவர்கள் ஸ்ரீலஸ்ரீ காசிவாசி அருள்நந்தித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவுளபாங்கின்படி, ஸ்ரீலஸ்ரீ காசிவாசி சாமிநாத சுவாமிகள் செந்தமிழ்க் கல்லூரி தலைவர் வித்துவான் K.M வேங்கடராமையா M.A., B.O.L., அவர்களால் 1949  ஆம் ஆண்டு வெளியிடப்பெற்றது.


திருப்பெருந்துறைப் புராணம்:

திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாக இருந்த ஸ்ரீ சாஸ்திரம் சாமிநாத முனிவரென்பவரால் இயற்றப் பெற்ற பழைய திருப்பெருந்துறைப் புராணத்தில் மாணிக்க வாசகர் பொருட்டுச் சிவபிரான் குதிரைவீரராக வந்த செய்தி அமைந்துள்ள,

"கோட்டமில்லா மாணிக்கவாசகர் முன்
குதிரை ராவுத்தனாய் நின்று
வாட்ட மில்லாத்தன் கருணையா ரமுதம்
வளர்பெருந் துறையரன் புரிந்து"

என்னும் ஒரு செய்யுள் காணப்படுகிறது. இதன் கண்ணும் குதிரை ராவுத்தன் என்ற சொல் வந்துளது. இவ்வரலாற்றிற்கு அறிகுறியாகத் திருப்பெருந்துறைச் சிவாலயத்தில் குதிரை சுவாமி மண்டபம், அல்லது குதிரை ராவுத்தர் மண்டபம் என ஒரு மண்டபம் உள்ளது. அங்கே சிவபிரான் ராவுத்தர் வீரராக உள்ள திருவுருவம் ஒன்று விளங்குகிறது.


சோழ நாட்டில் இசுலாமியர்:

ஆய்வாளர் முனைவர். சுடலைமுத்து பழனியப்பன் எழுதிய கட்டுரை Print தளத்தில் ஆங்கிலச் செய்தியாக வந்துள்ளது. அதில் அவர் சோழ தேசத்தில் சோனகர் சாவூர் பரஞ்சோதி என்னும் இசுலாமிய அதிகாரி குறித்து வரலாற்று ஆதாரங்களோடு கூறும் கருத்துகள் முக்கியமானவை. 

11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திர சோழனின் அரசவையில் ஒரு முக்கிய அதிகாரியாக "சோனஹன் சாவூர் பரஞ்சோதி" இருந்தார். சோனஹன் சாவூர் பரஞ்சோதி என்கிற இசுலாமியர்தான் தஞ்சை பெரியகொவிலில், கோயிலில் நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களை மேற்பார்வை செய்துள்ளார். பெருவுடையார் கோவிலில் இருந்த முதலாம் இராஜராஜனின் 29ஆம் ஆண்டு – 1014 CE – கல்வெட்டில் இவர் தஞ்சாவூருக்கு வெளியே உள்ள “ராஜவித்யாதர பெரிய தெருவில்” வசிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சோனகர் சேவூர் பரஞ்சோதியின் கலைத் தகுதி, முதலாம் ராஜேந்திரனின் கல்வெட்டுகளில் ‘கந்திருவப் பேரரையாண்’ என்ற பட்டத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது, இதன் பொருள் ‘பாரம்பரிய  இசையின் மாபெரும் அரசன். முதலாம் இராஜேந்திரனின் புதிய சோழ  தலைநகரான கங்கைகொண்டசோழபுரத்தில் வசிக்க வந்த பரஞ்சோதியை அரச ஆவணங்களின் கண்காணிப்பாளராக ஆக்கியுள்ளார்.


சோனஹன் சாவூர் பரஞ்சோதி தஞ்சை கோயிலுக்கு கொடுத்த கொடை: 

தஞ்சாவூர் கோவில் கல்வெட்டில், சாவூர் பரஞ்சோதி மூன்று இடையர்களுக்கு, மொத்தம் 96 ஆடுகளை (பெண் ஆடுகளை) நன்கொடையாகக் கொடுத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆடுகள் மூலம் கிடைக்கும் நெய் அவர்கள் கோயிலுக்கு விளக்குகளுக்கு எரிக்க பயன்பட்டது. கோயிலில் காணப்படும் சேதமடைந்த மற்றொரு கல்வெட்டு, சோனகர் சாவூர் பரஞ்சோதி அளித்த மற்றொரு நன்கொடையைக் குறிக்கிறது. இந்தக் கல்வெட்டின் ஆசிரியரான ராய் பகதூர் வி. வெங்கய்யாவின் கூற்றுப்படி, “கல்வெட்டானது, கோவிலுக்கு அளித்த பணம் வைப்புத்தொகையைப் பற்றி பதிவு செய்கிறது. அதன் வட்டியை இருபத்தி நான்கு திருவிழா நாட்களில் பத்து சிவயோகிகளுக்கு உணவளிக்கப் பயன்படுத்த வேண்டும் என கூறுகிறது”. 

சோழ மன்னனின் ஆட்சியில் இசுலாமிய அலுவலர்:

அன்றைய காலத்தில் அரசன் மானியத்திற்கான ஆணையை வாய்மொழியாக வழங்கியபோது, பனை ஓலையில் ஆணை தயாரிப்பது திருமந்திர ஓலை (அரச எழுத்தர்) என்ற அதிகாரியின் கடமையாகும். அந்த இலைகள் திருமந்திர ஓலை நாயகம் (அரச எழுத்துகளின் கண்காணிப்பாளர்) என்று அழைக்கப்படுகிறார். அந்த ஆவணமானது பின்பு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அரச அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்படும். இராஜேந்திரா சோழருக்கு இவ்வாறு நான்கு அதிகாரிகள் இருந்தனர். இந்த பணிக்கு வெளிப்படையாக நேர்மை மற்றும் நிர்வாக நிபுணத்துவம் கொண்ட நபராகவும், அரசனின் மிகவும் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருக்க வேண்டும். அன்று செல்வாக்கு மிக்க பிராமணரான கிருஷ்ணன் ராமன், சோழப் படைத் தளபதியாகவும் மற்றும் அவரது மகன்கள் நீண்ட காலம் அரச எழுத்துகளின் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தனர். அதே போல அவர் சோழ பேரரசின் கோவில்களுக்கு மானியங்கள் முறையாக வழங்கப்படுவதை உறுதி செய்யும் அதிகாரியாக  சோனகர் சாவூர் பரஞ்சோதி இருந்துள்ளார். 


கர்நாடகா மாநிலம் கோலாரில் உள்ள பிடாரியார் தேவியின் கோவில், விழுப்புரம் எசாலத்தில் ராஜேந்திரனின் ராஜகுரு சர்வசிவ பண்டிதர் கட்டிய சிவன் கோவில் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் மன்னார்கோவிலில் உள்ள விஷ்ணு கோவில் உள்ளிட்ட பல கோயில்களுக்கு முதலாம் இராஜேந்திரன் சோழன் நன்கொடை அளித்துள்ளார். மேற்சொன்ன கோயில் கல்வெட்டுகளில் மானியத்தின் உள்ளடக்கங்களை பரஞ்சோதி அதிகாரியாக இருந்து சரிபார்த்துள்ளார் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. சோனகர் சாவூர் பரஞ்சோதி குறைந்தபட்சம் கிபி 1023 முதல் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய கண்காணிப்பாளராக இருந்ததாக முதலாம் இராஜேந்திரனின் கல்வெட்டுகள் வாயிலாக அறியலாம்.


சோழ மன்னர்களின் ஆட்சியில் இசுலாமியரான சோனகர் சேவூர் பரஞ்சோதி என்பவர் கோயில் பணிகளை கண்காணிக்கும் அதிகாரியாக இருந்தார் என்பதும், அரசனின் கோயில் நன்கொடைகளை சரிபார்க்கும் திருமந்திர ஓலை நாயகமாக இருந்தார் என்பதும், இசுலாமியரான அவர் சிவன் கோயிலான தஞ்சை கோவிலுக்கு நன்கொடைகளை வழங்கினார் என்பதும், தமிழ்நிலத்தின் நல்லிணக்கத்திற்கு ஒரு வரலாற்று சான்றாகும்.


ஆதாரம்: 

  • https://theprint.in/opinion/ponniyin-selvans-chola-king-didnt-see-islam-as-foreign-even-made-a-muslim-the-temple-manager/1225480/
  • https://heritager.in/sonahar-paranjothi-chola

யாரிந்த சோனகர்கள்: 

இலங்கைச் சோனர்கள்: 
இலங்கையில் வாழும் இசுலாமியர்களை ஆங்கிலத்தில் "மூர்" (Moor) என்றும், சிங்களத்தில் 'யோன' என்றும் தமிழில் 'சோனகர்' என்றும் அழைக்கப்படுகிறார்கள். போர்த்துக்கீசர் ஐபீரியாவில் தாம் சந்தித்த முசுலிம் மூர்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைச் சோனகர்களை மூர்கள் என அழைத்தனர். என டென்னிஸ் கருதுகிறார். 
ஆதாரம்: 
Arabs, Moors and Muslims: Sri Lankan Muslim ethnicity in regional perspective - Dennis B. McGilvray (https://journals.sagepub.com/doi/abs/10.1177/006996679803200213)

சோனகர் என்ற தமிழ்ச் சொல்லும், யோனக்கா என்ற சிங்களச் சொல்லும் யவனர் அல்லது யோனா என்ற சொல்லில் இருந்து பிறந்ததாகவும் கொள்ளப்படுகிறது. யவனர் என்ற இச்சொல் கிரேக்கர்களைக் குறித்தாலும், சில வேளைகளில் அரபுக்களையும் குறிப்பிடுகிறது. இலங்கைச் சோனகர் தென்னிந்தியாவில் உள்ள மரைக்காயர், மாப்பிளமார்கள், மேமன்கள், பத்தான்கள் ஆகியோரின் வழித்தோன்றல்கள் என கருத்தைப் பல ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். இவர்கள் 8 முதல் 15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது. நாட்டின் மக்கள் தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.  

ஆதாரம்: முனைவர் எஸ்.எம் கமால் அவர்கள் எழுதி இசுலாமிய ஆய்வு பண்பாட்டு மையம் - 1990 வெளியிட்ட  முஸ்லிமும் தமிழகமும் நூல் (பக் 38) 



கல்வெட்டில் சோனகர்: 
திரு. பூ. சுப்பிரமணியம் அவர்கள் எழுதி தமிழாராய்ச்சி நிறுவனம் 1983 ஆம் ஆண்டில் வெளியிட்ட ''மெய்க்கீர்த்திகள் நூலில்" கல்வெட்டு தொகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தமிழ்நாட்டு மன்னர்களின் மெய்க்கீர்த்திகள் பல நாட்டவர்களில் ஒருவராக, சோனகர் சொல்லப்பட்டு இருக்கின்றனர். அதில் சோனகர் பெயர் வரும் மெய்க்கீர்த்திகளை கீழே கொடுத்துள்ளேன்.  


குலோத்துங்கன் II. (கி. பி 1133 - 1150 ) - 2  
அங்கர் வத்தவர் அவந்தியர் மத்திரர்
கங்கர் சோனகர் கைகயர் சீனரென்று (பக் 125)


சடையவர்மன் சுந்தர பாண்டியன் (1252 - 1271) மெய்க்கீர்த்திகளில், 
குச்சரரும் ஆரியரும் கோசலரும் கொங்கணரும்
வச்சிரரும் காசியரும் மாகதரும்
அருமணரும் சோனகரும் அவந்தியரு முதலாய (பக் 252-253) 

மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1215 - 1239) மெய்க்கீர்த்தி 
கலிங்கம் ஈழங் கடாரங் கவுடம்
தெலிங்கஞ் சோனகஞ் சீனக முதலா (பக் 238)

சடையவர்மன் வீரபாண்டியன் (1253 - 1268) மெய்க்கீர்த்தி 

கங்கங் கவுடம் கடாரம் காசிபம்
கொங்கங் குதிரம் கோசலம் மாளுவம்
அருமனம் சோனகம் சீனம் வந்தி
திருநடம் ஈழம் கலிங்கம் தெலிங்கம் (பக் 260)  

ஆதாரம்: மெய்க்கீர்த்திகள் நூல் -  பூ. சுப்ரமணியன் - உலக தமிழாராய்ச்சி நிறுவனம் 1983 வெளியீடு 

சோனகர்  துருக்கர் பற்றி 13 ஆம் நூற்றாண்டில் (கிபி 1180–1250) எழுதப்பட்ட கம்பராமாயணத்தில்: 

பப்பரர் யவனர் சீனர் சோனகர் முதல பல்லோர்  (பால-மிகை:11 16/1)
சோனகேசர் துருக்கர் குருக்களே (பால:21 47/4)
சோலையில் துவசர் இல்லில் சோனகர் மனையில் தூய (சுந்:2 110/2)
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த (பால:15 13/2)
தோடு அவிழ் மலர் முடி துருக்கர் சொல்லினர் (அயோ-மிகை:1 8/4)


மாலிக் கபூர் படையெடுப்பின் போது பாண்டிய மன்னன் பக்கம் நின்று மாலிக் கபூரை எதிர்த்து போரிட்ட மடிந்த அடாதெல்லா ராவுத்தர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம், அவிரியூரில் சிவன் கோவில் அருகே பலகை கல்லில் செய்யப்பட்ட நடுகல்லுடன் கூடிய சதிக்கல் ஒன்று கடந்த 2024 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. கில்ஜி வம்ச மன்னன் அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட வாரிசுரிமை போட்டியின் போது சுந்தர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க தமிழ்நாட்டின் மீது படை எடுத்து வந்தபோது, அதனை எதிர்த்து சண்டையிட்டு இறந்த இசுலாமிய வீரன் ஒருவன் நினைவாக எடுக்கப்பட்ட நடுகல் இது என்பதை இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.  கல்வெட்டில் பிற்கால பாண்டிய மன்னன் வீரபாண்டியனின் 14-ஆவது (பொதுஆண்டு-1311) ஆட்சி ஆண்டில் துலுக்கர் (துருக்கியர்) சண்டையில் அடாதெல்லா ராவுத்தர் என்பவர் இறந்ததையும், இதனால் இவருடைய மனைவி மல்லண தேவி என்பவர் இவ்வூரில் தீப்பாய்ந்து இறந்தார் என்பதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பலகை கல்தூணின் மேல் பகுதியில் சூரியன், சந்திரன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இடதுபுறம் அடா தெல்லார் நின்ற நிலையில் வலது கையில் நீண்ட வாளை வைத்துள்ளார், இடது கை தொங்கவிட்டவாறு உள்ளது. வலதுபுறம் அவரது மனைவி மல்லண தேவி வலது கையை தொங்கவிட்ட வாரும் இடது கையை மேலே தூக்கிய நிலையிலும் உள்ளார். 

ஆதாரம்:  https://www.bbc.com/tamil/articles/c033dxg2w39o

மார்க்கோ போலோ:
வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ என்பவன் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் (கி.பி. 1251 - 1271) பாண்டி நாட்டுக்கு வந்து சுற்றுப்பயணம் செய்து, தன் நூலில் அந்நாட்டைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்துள்ளான். பாண்டிய நாடு இந்தியாவிலேயே மிகச் சிறந்த நாடு என்றும், அது பண்பும் மாண்பும் வாய்ந்ததென்றும், அந்நாட்டை ஐந்து பாண்டியர்கள் அரசாண்டு வந்தனர் என்றும், அவர்களுள் ஒருவன் சொண்டர் பாண்டிடாவர் (சுந்தரபாண்டி தேவர்) என்பவன் முடிசூடிய மன்னன் என்றும், பாண்டி நாட்டில் மிகப்பெரிய வனப்பு மிக்க முத்துகள் கிடைத்தன என்றும், தாமிரவருணியின் கூடல் முகத்தில் இருக்கும் காயல்பட்டினம் மிகப்பெரிய நகரம் என்றும், ஹார்மோஸ், கிரீஸ், ஏடன், அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து குதிரைகளையும், வேறு பல பண்டங்களையும் ஏற்றிக் கொண்டு வந்த மரக்கலங்கள் அனைத்தும் காயலுக்கு வந்துதான் போகின்றன என்றும், காயல்பட்டினத்தில் வாணிபம் செழித்தோங்கி நடைபெற்று வந்தது என்றும், பாண்டிய மன்னனிடம் அளவு கடந்த பொன்னும் மணியும் குவிந்து கிடந்தன என்றும், அவன் அயல்நாட்டு வாணிகரிடம் மிகுதியும் கண்ணோட்டம் உடையவன் என்றும் மார்க்கோ போலோ கூறுகின்றார். 

வாசாப் (Wassaf):

வாசாப் என்பார் பாரசீக நாட்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் ஆவார். இவரும் முதலாம் சடையவர்மன் குலசேகரபாண்டியன் (கிபி 1268–1308) ஆட்சியின் போது பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தவர் ஆவார். இவர் தரும் செய்திகள் மிகவும் சிறப்பானவை. அவர் கூறுவதாவது: “மலைகள் போன்ற மிகப் பெருங்கப்பல்கள் கடல் மேல் காற்றெனும் சிறகுகளை விரித்து, பாண்டி நாட்டுக்கு வந்துகொண்டே இருக்கின்றன. இவை சீனம், கான்டன், இந்து, சிந்து ஆகிய இடங்களிலிருந்து அரிய பண்டங்களை ஏற்றிக்கொண்டு வந்து குவிக்கின்றன; பாரசீக வளைகுடாவின் மேல் உள்ள தீவுகள், துருக்கி, ஈராக், குராசான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றில் காணப்படும் செல்வங்கள், பாண்டி நாட்டினின்றும் பெற்றவையாம். காலேஸ் தேவருடைய (மாறவர்மன் குலசேகரபாண்டியன்) ஆட்சியும், நாட்டு வளமும் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்துள்ளன. இவ்வாட்சிக் காலத்தில் அந்நிய நாட்டு மன்னரின் படையெடுப்பு ஒன்றேனும் நிகழ்ந்ததில்லை. பாண்டிய மன்னனும் ஒரு முறையேனும் நோய்வாய்ப்பட்டிலன். மதுரை அரசு பண்டாரத்தில் ஆயிரத்து இருநூறு கோடி பொன் சேர்ப்புக் கட்டி வைக்கப்பட்டுள்ளது. அஃதன்றி முத்து, மாணிக்கம், நீலம், பச்சை போன்ற நவரத்தினங்கள் அங்குக் குவிந்து கிடக்கின்றன. மேலும் விளக்குவதற்குச் சொற்கள் இல”.

பாண்டிய மன்னன் ஒருவனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்தனர் என்றும், சுங்க அமைச்சர் பொறுப்பு அப்துல் ரஹிமான் என்ற இஸ்லாமியர் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்ததென்றும் முஸ்லீம் வரலாறுகள் கூறுகின்றன. 

ஆதாரம்: https://www.tamilvu.org/courses/degree/a031/a0313/html/a0313116.htm

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

டங்ஸ்டன் சுரங்கமும் தமிழரின் தொன்மை சின்னங்களும்