உழவர்களைத் தேடி - ஏன்?

ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி

 இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபட்டு வரும் 11 உழவர்களை மேடை ஏற்றி கௌரவிக்கும் "உழவர்களைத் தேடி" 2வது நிகழ்வு அண்மையில் 20.04.2014 அன்று மதுரை, திருமங்கலம் வட்டத்தில் உள்ள பெரிய பொக்கமபட்டி கிராமத்தில்  நடைபெற்றது.   நாணல் நண்பர்கள் குழு மாதந்தோறும் நடத்தி வரும் உழவர்களைத் தேடி நிகழ்வு என்ன நோக்கத்திற்காக நடத்தப்படுகிறது?" என்று உழவர்களைத் தேடி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. இரா. பூபாளன் அவர்களிடம் கேள்வியை தோழமை இயக்கத்தை சேர்ந்த நண்பர்கள் எழுப்பினார்கள்.  அதற்க்கு அவர் "இந்திய வேளாண் கொள்கைகளையோ, அரசியல் மாற்றத்தையோ "உழவர்களைத் தேடி" என்கிற இந்த நிகழ்வு உடனடியாக மாற்றப் போவதில்லை. எனில் எதற்காக இப்படியொரு வீண் செயல் என நீங்கள் கேட்பது காதில் விழுகிறது. ஐயா நம்மாழ்வார் மறைவு நமக்கு நிறைய பொறுப்புகளை விட்டுச் சென்று இருக்கிறது. ஐயாவின் மாணவனாக உழவர்களைத் தேடி நிகழ்வை கட்டியமைத்திருக்கிறோம். உழவர்களைத் தேடி என்கிற இந்நிகழ்வு இயற்கை வழி வேளாண்மையை பரப்பும் தொடர் இயக்கமாக மக்களிடையே பரப்பும் பணியை மேற்கொள்ளும். அதன் நோக்கம் என்னவென்று பட்டியலிடுகிறேன் கேளுங்கள்.

1. இயற்கை வழி வேளாண்மை கருத்தியல்களை மதுரையின் ஒவ்வொரு உழவர்களிடமும் கொண்டு சேர்க்க,

2. இயற்கை வேளாண் பயிற்சி முகாம்களை நடத்தி, இயற்கை வழி வேளாண்மையை பரவுபட்ட வேளாண் முறையாக மாற்ற,

3. ஒட்டு மொத்த உழவர்களுக்கு மத்தியில் இயற்கை வழி வேளாண்மையில் ஈடுப்படும் இயற்கை உழவர்களை தனியாக அடையாளபடுத்த,

4. இயற்கை உழவர்களை கௌரவிப்பதன் மூலம் அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உயர்த்த,

5. இயற்கை வேளாண்மைதான் ஆகச் சிறந்த உற்பத்தி முறை என்பதை உழவர்கள் மத்தியில் முன்னிறுத்த,

6. ஏகதிபத்திய அரசு கொணர்ந்த பசுமை புரட்சியின் கோர முகத்திரையை கிழித்தெறிய,

7. கடன்பட்டு சாகும் உழவர்களுக்கு செலவில்லாத வேளாண் முறை நமது பாரம்பரிய இயற்கை வேளாண்மை என்பதை பறைசாற்ற,

8. இரசாயன வேளாண் உற்பத்தி உணவு பொருட்களின் கொடிய நச்சு விசத்தை, மக்களுக்கும் உழவர்களுக்கும் படம்பிடித்து காட்ட

9. நஞ்சில்லா உணவை ஒவ்வொரு மனிதனும் உட்கொள்ள, ஆரோக்கியமான சமூகத்தை படைக்க,

10. தலைவர்களை கொண்டாடி பழக்கப்பட்ட நம் சமூகத்திற்கு உழவர்களை கொண்டாட ஒரு தளத்தை உருவாக்க,

11. பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய வேளாண்மையை விழுங்குவதற்க்குள் உழவர்களின் உரிமையாக வேளாண்மையை மாற்ற,

12. இயற்கை உழவர்களை ஒரு அணியில் திரட்டி, அரசியல்படுத்தி ஒரு  அமைப்பாக உருவாக்க,

13. வேளாண் கொள்கை மற்றும் அரசியல் மாற்றத்திற்கு அவ்வமைப்பை கொண்டு முன் நகர்த்த என "உழவர்களைத் தேடி" நிகழ்வு தொடர்ந்து ஒவ்வொரு கிராமங்களிலும் பணியாற்ற வேண்டிய மிகப்பெரும் பொறுப்பை கையில் எடுத்து இருக்கிறது" என்றார்.
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி
உழவர்களைத் தேடி நிகழ்வு தங்களாச்சேரி கிராம சிறுவர்களின் கலை நிகழ்ச்சியோடு துவங்கியது. முதலில் பேசிய இயற்கை உழவர் திரு. ஆ.கருணாகரன் சேதுபதி அவர்கள் "இன்னைக்கு நீங்க என்ன மதிக்காம இருக்குறத பத்தி எனக்கு கவலயில்ல. இரசாயனம் போட்டு போட்டு இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம உணவு விசமாகிடும். அப்ப எங்கிட்டதான் நீங்க வந்தாகனும். அன்னைக்கு நான் சொல்றதுதான் வெல. 1 கிலோ குதிரவாளி 400 ரூபான்னு சொல்லுவேன். வாங்கி சாப்ட்டா சாப்புடு, இல்ல சாகு" என்று கோபத்தின் உச்சியில் நின்று கொதித்து பேசினார்.
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி
அடுத்து பேசிய  ஐயா திரு. மாசாணம் அவர்கள். "நம்மை காப்பாற்ற அரசு இருக்குன்னு நம்பி சாகிற முட்டாள்தனத்த முதல்ல தொலைக்கனும். சாதாரண ஒரு தேள், அத யாரவது சீண்டுனா எவ்வளோ பெரிய ஆளா இருந்தாலும் உடனே எதிர்த்து கொடுக்க தூக்கி நிக்கும். தேளுக்கு தெரியும் நம்மள காப்பாத்த யாரும் வரமாட்டங்கன்னு. ஒரு அறிவு படச்ச தேளுக்கு உள்ள தற்காப்பு புத்தி, ஆறறிவு படச்ச நமக்கு இல்லையே. ஒடுக்கபடுகிற ஒவ்வொரு உழவனுக்கு தற்காப்பு - இயற்கை வேளாண்மைதாயா" என விழி பிதுங்கி இருந்த விவசாயிகளை விழிப்படையும்படி உணர்வுபூர்வமாக உரை நிகழ்த்தினார்.
ஒளிப்படங்கள் - திரு. பாடுவாசி
இயற்கை உழவர்களுக்கு பச்சை பொன்னாடை போர்த்தி, பாராட்டு இதழ் வழங்கி பேச தொடங்கினர் இயற்கை வேளாண் வல்லுநர் திரு. பாமயன் அவர்கள். "விழிப்படைந்த படித்தவர்கள், பன்னாட்டு தொழில்நுட்ப பூங்காவில் பணிபுரிபவர்கள் என இயற்கை வேளாண்மை நோக்கி பெருங்கூட்டம் படையெடுத்து வருகிறது. ஆனால் நாமோ வேளாண்மையின் சிறப்பு தெரியாமல் சலிப்போடு நின்று கொண்டு இருக்கிறோம்" என்று வேளாண்மையில் உள்ள பல்வேறு அரசியல்களை பேசினார்.

சந்தைபடுத்துதல் குறித்து திரு. காளிமுத்து அவர்கள் பேசினார். மேடையேறிய 11 உழவர்களும் இயற்கை வேளாண்மை பக்கம் திரும்ப அரும்பாடுபட்டவர். துடிப்புமிக்க் இளைஞரான திரு.காளிமுத்து ஒவ்வொரு கிராமங்களிலும் கூட்டம் நடத்தி, பயிற்சி வகுப்பு நடத்தி, உழவர்களை இயற்கை வேளாண் நோக்கி திருப்பும் அரும்பணியை நீண்ட நாட்களாக செய்து வருகிறார். 

"உயிரோசை" இதழ் சூன் 2014

தினசரி நாம் உண்ணுகிற உணவில் 15 விதமான இரசாயன நச்சு பொருட்கள் உள்ளது. அதில் 12 விதமான நச்சு பொருட்கள் உலக அளவில் தடை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் கு.சிவராமன் குறிப்பிடுகிறார். அப்பேற்பட்ட ஈவிரக்கமற்ற தாக்குதலை உணவு வழியாக உலக நாடுகள் நம்மை அனுதினம் தாக்கி கொண்டே இருக்கிறது. நாம் தாக்கபடுகிறோம் என்பது கூட தெரியாமல் சுற்றி வருகிறோம். அவனுடைய முதல் இலக்கு இந்த தேசத்தின் உழவனும் உழவும்தான். இதை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு உழவனும் இயற்கை பக்கம் திரும்ப வேண்டும்.

இந்த உலக அரசியலை புரிந்து கொண்ட ஒரு சில விவசாயிகள் விவசாயத்தில் எவ்வளவு இழப்பு வந்தாலும் இனி என் மக்களுக்கு நஞ்சை நான் கொடுக்க மாட்டேன் என்று உறுதியேற்று இயற்கை பக்கம் திரும்புகின்றனர். பன்னாட்டு கொலை லாப வெறி நிறுவங்களுக்கு எதிராக இயற்கை வழி வேளாண்மையில் ஈடுபடும் உழவர்களுக்கு ஆதரவாக நின்று, அவர்களை தேடிச் சென்று அவர்களின் சொந்த ஊரில் வைத்தே, மரியாதை செய்து கொண்டாடுகிற  நிகழ்வுதான் "உழவர்களைத் தேடி".

நஞ்சில்லா உணவை நமக்களிக்கும் இயற்கை உழவர்களை கொண்டாடுவோம்.


தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
9543663443

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்