நரசிங்கம்பட்டி - நம்ம வரலாறு


நம்ம வரலாறு 2வது நிகழ்வு இந்த முறை மேலூர் அருகே உள்ள நரசிங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்றது. நம்ம வரலாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. கான்சா சாதிக் அவர்கள் நிகழ்வை ஒருங்கிணைக்க, ஓவியர் திரு. சுகுமாரன் அவர்களும்,  நரசிங்கம்பட்டி ஊரை சேர்ந்த எழுத்தாளர் திரு. இளங்கோ கல்லணை அவர்களும் வழி நடத்தினார்கள்.
ஒளிப்படம் - திரு. மு. பிரசன்னா

நரசிங்கம்பட்டி:
மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் செல்லும் வழியில் உள்ளது நரசிங்கம்பட்டி கிராமம். மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி கிராமங்களுக்கு இடையில், மதுரையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள அழகிய கிராமம் நரசிங்கம்பட்டி. துணை மின் நிலையம் ஒன்றும் நரசிங்கம்பட்டி ஊராட்சியில் இயங்கி வருகிறது. பாதுகாக்கபட்ட காட்டு பகுதியான பெருமாள் மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள மேட்டு பகுதி நரசிங்கம்பட்டி. நாயக்கர் ஆட்சிக்கு முன்பு நரசிங்கம்பட்டி கிராமம் பழையூர் என்று அழைக்கபெற்றதாக கூறுகிறார் எழுத்தாளர் திரு. இளங்கோ கல்லணை. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய ஈமக்காடு, 17ஆம் நூற்றாண்டை சேர்ந்த சித்திர சாவடி, பெருமாள் கோவில் என பாரம்பரிய பெருமைகளோடு திகழ்கிறது நரசிங்கம்பட்டி கிராமம்.

ஒளிப்படம் - திரு. மு. பிரசன்னா

ஈமக்காடு:
பெருமாள் மலை அடிவாரத்தில் அடர்ந்த புதர்காட்டுக்குள் அமைந்துள்ளது பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ஈமக்காடு. அங்காங்கே தொடர்ச்சியாக புதையுண்டு கிடக்கும் சப்பட்டையான நீள வடிவிலான பல நடுகற்களை, ஆதி மனித சமூகம் வாழ்ந்த எச்சங்களை, முதுமக்கள் தாழியை இன்றும் அங்கு காணலாம்.   அங்கு ஒரு பெரிய இச்சி மரத்தை சுற்றி பெரும் கற்குவியல்கள் குவிந்து கிடக்கிறது. அவ்விடத்தை ஏமக்கோவில் என்று அழைக்கின்றனர். "ஏமக்கோவிலில் உருவ வழிபாடு கிடையாது. அது வணங்குகிற சாமி கிடையாது மக்கள் அஞ்சுகிற சாமி. சிவராத்திரி அன்று மலையை சுற்றி வந்து, மலையில் இருந்து 3 கல் எடுத்து ஏமக்கோவிலில் வைப்பது அந்த கோவிலின் சடங்கு. இந்த சடங்கு மலையிலிருந்து வடிகிற மழைநீரை தேக்கி வைக்க பயனபட்டு இருக்கலாம்" என்று விளக்கினார் எழுத்தாளர் இளங்கோ கல்லனை. நரசிங்கம்பட்டி கிராமத்தில் தொல்லியல் ஆய்வாளர்கள் சமீபத்தில் நடத்திய ஆய்வில் பண்டைய கால ஈமக்காடு கண்டுபிடிக்கப்பட்டது. 


ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்
ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்


இறந்தவர்களை முறையாக அடக்கம் செய்ய பயன்படுத்தப்பட்ட இந்த ஈமக்காடு சுமார் 5000 ஆண்டுகள் பழமைவாய்ந்ததெனவும், பண்டைய மக்கள், முதுமக்கள் தாழியைப் பயண்படுத்தியதற்கும் முந்தைய நாகரீகம் இதுவெனவும் தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இக்கல்லறைகள் கி.மு.1000க்கும் கி.பி.,300க்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை. இந்த ஈமக்காட்டை தொல்லியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தும் நிலையில் தமிழர்களின் நாகரீகம் பற்றிய பல்வேறு அரிய செய்திகள் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். எரிக்கும் வழக்கமுடையதை சுடுகாடு என்றும், புதைக்கும் வழக்கமுடையதை ஈமக்காடு என்றும் கூறுவர். வரலாறு கொட்டிக் கிடக்கிற இவ்விடத்தை  தொல்லியல் துறையின் கீழ் கொண்டு வந்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்
ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்
சித்திரச் சாவடி:
நரசிங்கம்பட்டியில் உள்ள சித்திர சாவடியில் வரையப்பட்ட 17 ம் நூற்றாண்டை சேர்ந்த இராமாயண ஓவியங்கள் சிதைந்த நிலையிலும் நம்மை ஈர்த்தது, அந்த ஓவியத்தின் பெருமையையும், அந்த ஓவியத்தில் இருக்கிற வண்ணங்களின் சிறப்பையும், அந்த ஓவியத்தில் இருக்கிற நுணுக்கங்களையும் அழகாக விளக்கினார் பாரம்பரிய ஓவிய கலை நிபுணர் சுகுமாரன். அழகர்கோவில் தேரோட்டத்தில், முக்கியத்துவம் தரப்படும் "நாடு"களான வல்லாளபட்டி, தெற்குத்தெரு, பாளையபட்டு ஆகியவற்றுடன், நரசிங்கம்பட்டியும் ஒன்று. இப்பகுதியைச் சேர்ந்த கிராமங்களின் பிரச்னைகளை பேசித் தீர்க்க (பஞ்சாயத்து), 17ம் நூற்றாண்டில், சாவடி கட்டப்பட்டது. "சித்திரச் சாவடி' என, அழைக்கப்படும் இங்கு, ஏராளமான ராமாயண காட்சிகள், இயற்கை ஓவியங்களாக மூலிகை வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளன. அழகர்கோவில் மண்டபம், ராமநாதபுரம் அரண்மனைகளில் காணப்படும் ஓவியங்களை, இவை ஒத்திருக்கின்றன. காலப்போக்கில், முக்கியத்துவம் இழந்த சாவடி, சிதைந்து வருகிறது; பாதி மேற்கூரை பெயர்ந்து விட்டது; அதற்கு கீழ் இருந்த ஓவியங்கள், முழுவதும் அழிந்து விட்டன. கூரை பெயராத இடத்தில் மட்டும், சிதைந்த நிலையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. "சிதலமடைந்து இருக்கும் இந்த சாவடியில்  வரையப்பட்டுள்ள ஒரு உருவத்தை வரைய குறைந்தது ஒரு வாரம் காலம் ஆகும். அப்படியானால் இந்த ஓவியங்களை வரைந்து முடிக்க எத்தனை நாட்கள் ஆகியிருக்கும் என்று யோசித்து பாருங்கள். அத்தனை சிரமத்துடனும் தொழில் நுட்பத்துடனும் கலையுணர்வுடனும் வரையப்பட்ட ஓவியங்கள் இவை. பல்வேறு நாடுகள் தங்கள் அடையாளங்களை பாதுகாக்க எவ்வாறெல்லாம் முயற்சி மேற்கொள்கிறதென்று வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியத்தை பார்த்தால் நமக்கு தெளிவாக புலப்படும். விழிப்புணர்வு இல்லாமல் ஒரு வரலாற்று பொக்கிசத்தை கண்முன்னே நாம் இழந்து விட்டோம். இப்போதிருக்கிற இந்த சித்திரங்களையாவது நாம் பாதுகாக்க வேண்டும். சில இலட்ச்சங்களை நிதியாக அரசு ஒதுக்கினால் போதும் இந்த ஓவிய கூடத்தை இருக்கும் நிலையில் அப்படியே பத்திரப்படுத்தலாம்." என்கிறார் ஓவியர் சுகுமாரன்.

ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்

ஒளிப்படம் - திரு. ஸ்ரீராம் ஜனக்



பழம் பெரும் வரலாறு சிறப்பு மிக்க சொந்த ஊரின் வரலாறு நம் எத்தனை  பேருக்கு தெரியும். தாய்லாந்து நாட்டின் தலைநகர் தெரியாமல் இருப்பது மடமை என்றால், தாய் மண்ணின் வரலாறை அறியாமல் இருப்பது நமக்கு தலை குனிவு இல்லையா? தாய் மண்ணின் வளத்தையும் வரலாற்றையும் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் உணர்வு மிக்க பொறுப்பை முந்தைய தலைமுறை நம் கைகளில் விட்டு சென்று இருக்கிறது. இத்தருணத்தில் அண்ணன் பிரபாகரன் சொன்னது நினைவுக்கு வருகிறது.

"வரலாறு படிக்காத யாரும்
வரலாறு படைக்க முடியாது" 





தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு 
9543663443

Comments

  1. எழுத்தாளர் இளங்கோ கல்லாணை தெளிபடித்தியுள்ளது அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது .உண்மை. வள்ளாலபட்டி ,தெற்குக்தெரு, பாளையப்பட்டு உள்ளடங்கிய விசயத்தில், சாதி, மரியாதை, பட்டம், பரிவட்டம் அடங்கிய தகவல் பெற விரும்புகிறேன் ,எனவே ,அதற்கான தொகுப்பு எதுவும் இருக்கிறதா?

    ReplyDelete
  2. அருமை... 5000 ஆண்கள் பழமையான ஈமக்காடு 17ம் நூற்றாண்டு சித்திரச்சாவடி பிரமிக்க வைக்கிறது. ஆனால் பேணிகாக்க வேண்டியதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது...

    ReplyDelete
  3. அருமை... 5000 ஆண்கள் பழமையான ஈமக்காடு 17ம் நூற்றாண்டு சித்திரச்சாவடி பிரமிக்க வைக்கிறது. ஆனால் பேணிகாக்க வேண்டியதை கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்