மழையில் நனையும் மதுரையின் கவனத்திற்கு


எதிர்பாராத விதமாக இந்த கோடை காலத்தில் கொட்டி தீர்க்கிறது மழை. இன்று (30.4.2014) பெய்த மழையால் மதுரை வலைவீசி தெப்பம் நிறைந்திருக்கனும், கிருஷ்ணராயர் தெப்பம் நிறைந்திருக்கனும், சம்பக்குளம் ஊரணி நிறைந்திருக்கனும். ஆனால் மதுரையின் சாபக்கேடு வலைவீசி தெப்பம் பெரியார் பேருந்து நிலையமாகவும், கிருஷ்ணராயர் தெப்பம் ஞாயிறு சந்தையாகவும், சம்பக்குளம் ஊரணி காவல்த்துறை கண்காணிப்பாளர் அலுவலகமாகவும் மாறி நெடுநாள் ஆகிவிட்டது. மாவட்ட நீதிமன்றம் எங்கே இருக்கிறது? செங்குளம் கண்மாயில் இருக்கிறது. மதுரை மாநகராட்சி அலுவலகம் எங்கே இருக்கிறது? தல்லாகுளம் கண்மாயில் இருக்கிறது. இப்போ சொல்லுங்க.. தண்ணீருக்கு தெரு தெருவாக அலைகிற நாம எங்கே இருக்கிறோம்? வேறெங்கே நடு ரோட்டில் இருக்கிறோம். இப்படியாக நாம் இழந்த நீர்நிலைகள் மதுரையில் மட்டும் 20துக்கும் அதிகம். அதன் விளைவு நிலத்தடி நீர் 1000 அடிக்கும் கீழாக சென்றுவிட்டது. மாதம் ரூபாய் 1000 முதல் 3000 வரை தண்ணீருக்கே செலவழிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் உள்ளது நடுத்தர குடும்பங்கள். தண்ணீருக்கு பணம் செலவழிக்க இயலாத குடும்பங்கள் ஊரை காலி செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. நாமும் நம்மை ஆளும் வர்க்கமும் இணைந்து, பணம் உள்ளவன்தான் உயிர் வாழ முடியும் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறோம். கொஞ்சம் யோசித்து பாருங்கள். நீங்களும் நானும் பொது சொத்தாக கருதுகிற தண்ணீர், பூமியில் இருந்துதான் கிடைக்கிறது? அப்படியிருக்க நமக்கு கிடைக்காத பொது சொத்தான தண்ணீர், பல லாரிகளை வைத்திருக்கும் முதலாளிகளுக்கு எப்படி கிடைக்கிறது. தண்ணீரை கொண்டு ஒரு மிகப்பெரிய சந்தையை உருவாக்கி விட்டார்கள். நீங்களும் நானும் இனி தண்ணீரை காசுக்கு வாங்கித்தான் ஆக வேண்டும். பணம் கொடுத்து தண்ணீரை வாங்க வேண்டும் என்று தீர்மானிப்பது நீங்களோ நானோ இல்லை. யாரோ ஒரு கொழுத்த முதலாளி என்பதுதான் இங்கு வேடிக்கை.


மதுரையின் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க வல்ல மழைநீரோ வழிந்தோடி கலக்க இடமின்றி சாலையில் அனாதையாக தேங்கிக் கிடக்கும் அவலத்தை கண்கூட பார்த்து இருப்பீர்கள். சொல்லப்போனால் இத்தனை நாட்கள் நாம் வெறிக் கொண்டு உறிந்து குடித்த நிலத்தடி நீரை மீண்டும் நிரப்புவதற்கு இயற்கை தந்த மழை இது. தண்ணீர் தட்டுப்பாட்டை தகர்க்க வந்த மழை இது. ஆனால் சிமெண்ட்டு சாலைகளும், தார் சாலைகளும் மண்ணுக்கும் மழைக்குமான உறவை சீரழித்து விட்டன. இயற்கை நமக்கு உதவ முன் வருகிறது. ஆனால் உதவி பெற தகுதியற்றவர்களாக நாம் மாறிவிட்டோம் நண்பர்களே!



ஒளிப்படம் - திரு. இரா. பிரபாகரன்

தஞ்சம் கொள்ள இடமின்றி, இறுதியாக பாதாளச் சாக்கடைக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்ட மழையின் வலியை, என்னைப் போல் விழித்தெழு மதுரை அமைப்பில் சமூக பணியாற்றி நண்பர்களும் இயற்கை ஆர்வலர்களும் உணர்ந்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன்.

இந்தியாவில் குறைந்த மழை பெய்யும் மாநிலத்தில் ராஜஸ்தானுக்கு அடுத்தபடியாக தமிழகம் உள்ளது. இதை அறிந்த நம் முன்னோர்கள் எதிர்கால தலைமுறையின் வாழ்வை கருத்தில் கொண்டு, பாசனத்திற்கும் நிலத்தடி நீர் ஊருவதற்க்கும் பல்வேறு வடிவிலான நீர்நிலைகளை தொலை நோக்கு பார்வையோடு ஏற்படுத்தி நமக்கு விட்டு சென்றனர். மதுரையில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் கி.பி 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பே பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டுவிட்டது. இந்த மண்ணில் தண்ணீர் வறட்சியால் ஒரு உயிரும் இனி இறக்க கூடாது என்ற உயரிய சிந்தனையில் அவன் அன்று கட்டிய நீர்நிலைகளின் இன்றைய நிலைமையை நான் சொல்லி அறிய வேண்டியதில்லை. நீர்நிலைகளை வெள்ளைக்காரன் அழிக்கவில்லை நம்மை ஆளும் கொள்ளைக்கார்கள்தான் அழித்துவிட்டார்கள். 


மதுரையில் முதுமக்கள் தாழிகள் புதைக்கப்பட்ட இடங்கள் அருகில் உள்ள 50 சங்ககால ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த ஏரிகள் சங்ககாலம் முதல் இன்று வரை இரண்டாயிர ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளன. கடல், ஆழி, ஆறு, நதி, மழை, மாரி, அருவி, வெள்ளம், நீர், தண்ணீர், புனல், கொண்டால், துளி, திவலை, குமிழி, தூம்பு, கரை, கொரம்பு, புதவு, ஆற்றுக்கால், நாற்றங்கால், வாய்க்கால், ஓடை, கால்வாய், கண்மாய், குளம், குட்டை, ஏரி, ஏந்தல், தாங்கள், பொய்கை, ஊரணி, தெப்பம், ஊற்று, சுனை, கயம், காயல், கழிமுகம், தடாகம், இலஞ்சி,
கிணறு, கேணி, வாவி, துரவு, கோட்டகம், மலங்கன், மடு, சலந்தரம், நளினி, அணை, கற்சிறை, அணைக்கட்டு, தேக்கம், மடை, தூம்பு என சங்க காலம் தொட்டு இன்று வரை இயற்கை நீராதரங்களுக்கும், நீர்நிலை கட்டுமானங்களுக்கும் பல்வேறு விதமான பெயர்ச் சொற்கள் தமிழில் உள்ளன. தமிழகத்தில் பல்வேறு ஊர்களின் பெயர்கள் குளம், ஏரி, ஏந்தல், தாங்கள், ஊரணி, மடை, ஓடை என்று முடிவதை இன்றும் காணலாம். இவை அனைத்தும் நாம் நீர்நிலைகளை போற்றி பாதுகாக்கும் மரபு வழி வந்தவர்கள் என்பதை வரலாறு தெளிவுபடுத்துகிறது. 


1993 ஆம் ஆண்டுக் உலக வங்கியின் நிதி உதவியுடன் வைகை கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் 68 மில்லியன் லிட்டர் நீர்த் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. மதுரையில் தற்போது செயல்படுத்தப்படும் அனைத்து குடிநீர்த் திட்டங்களும் வரும் 2020ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டே தீட்டப்படுகின்றன. இதனடிப்படையில் பார்த்தால் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு தேவையான நீரின் அளவு 110 லிட்டராகும். இதன்படி 2020இல் ஒரு நாளையின் மொத்த நீர்த் தேவை 185.3 மில்லியன் லிட்டராகும். ஆனால் இன்று நான்கு நாளுக்கு ஒருமுறை தான் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும் என்ற நிலையில் விழி பிதுங்கி நிற்கிறது நமது மாநகராட்சி.

கவனியுங்கள் மதுரையின் சராசரி மழை அளவு 85 செண்டிமீட்டர். இந்த மழைநீரை மதுரையின் நிலப்பரப்போடு பெருக்கி, பின் அதை மதுரையின் மக்கள் தொகையோடும், 365 நாட்களோடும் வகுத்தல்..., ஒரு நபருக்கு நாள் ஒன்றுக்கு 121 லிட்டர் தண்ணீர் கிடைக்கும். அரசாங்கம் தர இயலாத தண்ணீரை இயற்கை நமக்கு தருகிறது. அரை மணி நேரம் பெய்கிற மழையை ஒரு செண்டு அளவு உள்ள வீட்டு மாடியில் சேமித்தாலே 3000 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும். இந்த நீர் 5 பேர் கொண்ட குடும்பத்தின் 6 மாத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்துவிடும். வெறும் அரை மணி நேரம் சேகரிக்கும் மழைநீரே ஒரு குடும்பத்தின் 6 மாதக்கால தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியுமென்றால், தேசத்தின் வறட்சியை விரட்ட மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை சிந்தியுங்கள். மகிழ்வோடு மழையில் நனையும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அறிவியல் அவசியம் இது. 


வண்டியூர் கண்மாய் - ஒளிப்படம்  திரு. அசோக் இராமச்சந்திரன்


பசித்தால் உணவையும், தாகம் எடுத்தால் தண்ணீரையும் ஒரு போதும் கம்பியூட்டரால் தர முடியாது. இயற்கைதான் தந்தாக வேண்டும். நம் பிள்ளைகள் வாழ பணத்தை விட மிக முக்கியமானது பரிசுத்தமான பூமி. 


தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் ழுழு
9543663443

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

ஒரு நாட்டுப்புற காதல் கவிதை

நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்