மதுரையில் காணப்படும் மகாவீரர் சிலைகள்
குகைத்ததளத்தில் காணப்படும் தமிழிக் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும், சமணத்துறவிகளின் புடைப்பு சிற்பங்களும் வேறெந்த மாவட்டங்களை காட்டிலும் மதுரையில் அதிகளவில் காண முடிகிறது. அழகர்மலை, கருங்காலக்குடி, மீனாட்சிபுரம் (மாங்குளம்), அரிட்டாபட்டி, கீழவளவு, குன்னத்தூர், திருவாதவூர், திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, முதலைக்குளம், சித்தர்மலை உள்ளிட்ட மலைக்குன்றுகளில் காணப்படும் சமணத் தளங்கள் இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறையால் பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள், பொதுமக்கள் மேற்சொன்ன தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.
மேற்சொன்ன மலைகள் தவிர்த்து குப்பல்நத்தம் பொய்கைமலை, உசிலம்பட்டி புத்தூர்மலையில் மகாவீரர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகிறது. அதனை நாட்டார் தெய்வமாக மக்கள் வழிபடுகின்றனர். கரைக்கேணி அருகே செங்கமேடு பகுதியிலும் வேளாம்பூர் பகுதியிலும் மகாவீரர் சிற்பங்களை ஆய்வாளர் முனீஸ்வரன் அவர்கள் கண்டறிந்துள்ளார்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் வடுகப்பட்டி ஊரில் கிபி 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரரின் சிற்பம் ஒன்றை த.நா தொல்லியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். அதில் இரண்டு கல்வெட்டுகளும் காணப்பட்டன. இப்போது இத்திருவுருவம் திருமலை நாயக்கர் அரண்மனை அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
மகாவீரரின் சிலை ஒன்று முத்துப்பட்டி குகைத்தளத்தில் காணப்படுகிறது. இவை போக மகாவீரரின் சிலைகள் மதுரை மாவட்டத்தில் காரைக்கேணி, கவசக்கோட்டை, மேல உப்பிலிக்குண்டு ஆகிய பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டு மக்களின் வழிபாட்டில் உள்ளது. இப்பகுதிகளில் மகாவீரரை சவுணர் (சமணர்) என்று மக்கள் அழைக்கின்றனர்.
--- தமிழ்தாசன்
10.04.2025
Comments
Post a Comment