மதுரை நகருக்குள் இருந்த பழைய சுங்கச்சாவடி
மதுரை வைகையாற்றங்கரையில் சுங்கச்சாவடி தொடர்பான கல்வெட்டு ஆவணம் செய்யப்பட்டது
வைகையின் தென்கரையில் மதுரை நெல்பேட்டை அருகே சுங்கம் பள்ளிவாசல் முன்புறம் இரண்டடி உயரம் ஒரு அடி நீளம் அரை அடி அகலம் கொண்ட செவ்வக தனி துண்டு கல்லில் ஐந்து வரிகளில் கொண்ட கல்வெட்டு கண்டறியப்பட்டது. ''சுங்கச்சாவடி சந்து வெளிவீதி 1836" என்று அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக இப்பகுதியில் 200 ஆண்டுகளுக்கு முன்புவரை சுங்கச்சாவடி ஒன்று இயங்கி வந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. இப்பகுதியில் அமைந்த பள்ளிவாசல் சுங்கம் பள்ளிவாசல் என்று அழைக்கப்பட்டது. வைகையின் வடகரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்திற்கு நேர் எதிரே இந்த சுங்கச்சாவடி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வைகையாற்றின் வடகரையில் திண்டுக்கல் மாவட்ட குன்னுவாரன்கோட்டை வணிக பெருவழியில் சுங்கவரி வசூல் மையம் இருந்துள்ளதை அங்கிருக்கும் சிவன் கோயிலில் காணப்படும் கிபி 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. அதில் ஒரு புது காசு சிவன் கோயிலுக்கும் அரை காசு பெருமாள் கோயிலுக்கும் கொடுத்துள்ளதாக அங்கு இருக்கும் கல்வெட்டு தெரிவிக்கிறது.
சுங்கம் பள்ளிவாசல் தலைவர் திரு. ராஜ்கபூர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடந்த 02.04.2025 அன்று காலை கோயில் கட்டடக்கலை மற்றும் சிற்பத்துறை ஆய்வாளர் பேரா தேவி அறிவு செல்வம், மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன் ஆய்வு செய்தனர். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் திரு. ரா.உதயகுமார் மற்றும் தி.முத்துப்பாண்டி ஆகியோர் இக்கல்வெட்டைப் மைப்படி எடுத்தனர். இவ்வாய்வு மையத்தின் செயலர் தொல்லியல் அறிஞர் திரு. சாந்தலிங்கம் இக்கல்வெட்டைப் படித்து அறிய உதவினார்.
மதுரை நெல்பேட்டை சுங்கம் கல்வெட்டு விவரம்:
1. சுங்கச் சா
2. வடிச் சந்து
3. வெளிவீதி
4. .........௲௮ள
5. ௩ய௬ (1836)
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
Comments
Post a Comment