மதுரை அருவிமலை குகைத்தளத்தில் சமணர் கற்படுகைகள் கண்டறியப்பட்டது
மதுரை மாவட்டத்தில் 16 மலைக்குன்றுகளில் இதுவரை சமணர் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. அதில் 8 மலைக்குன்றுகள் தமிழ்நாடு தொல்லியல்துறையாலும் 6 மலைக்குன்றுகள் இந்திய தொல்லியல்துறையாலும் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை அருவிமலையில் உள்ள குகைத்தளத்தில் 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் கொண்ட குகைத்தளம் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினரால் கடந்த 29.09.2024 அன்று கண்டறியப்பட்டது. அருவிமலையை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.10.24) மனு கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி என்னும் கிராமத்தில் 1.7 கி.மீ நீளமும், சுமார் 170 ஏக்கர் பரப்பளவும் உள்ள அருவிமலை அமைந்துள்ளது. இம்மலையின் உச்சியில் கி.பி. 13 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர் மாறவர்மன் குலசேகரன் காலத்தில் கட்டப்பட்ட கோயில் ஒன்று உள்ளது. இக்கோயிலின் அதிட்டான பகுதி, இக்கோயில் அருகேயுள்ள பாறை, கோயில் செல்லும் மலைப்பாதையில் உள்ள படிக்கட்டு, போன்றவற்றில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு விவரங்களை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதி (முதல் தொகுதி) நூலில் வெளிவந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் 'திருமேலழகிய பாண்டிய நாயனார், 'திருமேலாழி நாயனார்', 'திருமேலாழி அண்டார்', 'திருமேலாழியாண்ட நாயனார்' என்று பெயர்கள் வழங்கி வந்திருப்பதையும், ஊர்ப்பகுதிக்குப் பாக்குடி என்ற பெயர் வழங்கி வந்திருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாக்குடி, வட பறப்பு நாட்டுப் பகுதியிலமைந்திருக்கிறது. “அருவிக்குடி' என்ற ஊர்ப் பெயரும் கல்வெட்டில் காணப்படுகிறது. இக்கோயிலுக்கு நிலக்கொடை கொடுத்த சான்றுகளான இரண்டு சூழக்கல்லும் கண்டறியப்பட்டது.
இம்மலையில் சிவன் கோயிலுக்கு செல்லும் வழியில் மேற்குச் சரிவில் சுமார் 30 பேர் தங்குமளவில் குகைத்தளம் ஒன்று மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை குழுவினரால் கடந்த 29.09.2024 அன்று கண்டறியப்பட்டது. தொல்லியல் ஆய்வாளர் அறிவு செல்வம் மற்றும் கட்டடக்கலை, சிற்பத்துறை ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் நேரில் சென்று ஆய்வு செய்து அருவிமலை கற்படுகைகளை உறுதி செய்தனர். அருவிமலை குகைத்தளத்தில் 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகள் வெட்டப்பட்டுள்ளன. கற்படுக்கைகள் காலம் குறித்து வெளிப்படுத்தும் கல்வெட்டுகள் தேடிய வரை கிடைக்கவில்லை. இவை 2000 வருடங்களுக்கு முன்பான சங்க காலத்தைச் சார்ந்ததாக இருக்கலாம். இம்மலையின் ஒரு பகுதியில் மலையை உடைத்து கிட்டத்தட்ட 5 அடி நீளம் ஒரு அடி அகலம் கொண்ட 12க்கும் மேற்பட்ட கற்படுக்கைகளை வரிசையாக சரிவாக செதுக்கியிருக்கிறார்கள். மலையை துண்டாக்கி செதுக்கியிருக்கிறார்கள். வெட்டுப்பட்ட மலையின் பகுதிகள் படுக்கை முன்புறம் கிடக்கின்றன. பாறையின் தரைப்பகுதியில் இரண்டு அடுக்கு கொண்ட உரல் மற்றும் விளக்கு எரிப்பதற்கான விளக்கு போன்ற 5 குழிகள் பாறையின் தரைப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத்தளம் மணல்மேவி பராமரிப்பின்றி இருக்கிறது. மேலும் சிவன் கோயில் கடந்து மலை மேல் உள்ள முனீஸ்வரன் கோயில் செல்லும் வழியில் இருப்பாறை சந்திக்கும் இடுக்கு பகுதியை "பள்ளிக்கூடம்" என்று இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இப்பாறை இடுக்கு அருகில் தரையில் கல்வெட்டுகள் இருந்தது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை தொல்லியல் துறை கண்டறிய வேண்டும். மேலும் அருவிமலை சிவன் கோயில் முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. கல்வெட்டுகள் காணப்படும் அதிட்டானம், கற்தூண் அங்குமிங்குமாக சிதறிக்கிடக்கிறது. அருவிமலை வரலாற்று சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மதுரை மாவட்டத்தில் மீனாட்சிபுரம், அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி, திருப்பரங்குன்றம், யானைமலை, கீழக்குயில்குடி, திருவாதவூர், கீழவளவு, கருங்காலக்குடி, கொங்கர்புளியங்குளம், முத்துப்பட்டி, மேட்டுப்பட்டி, குன்னத்தூர், முதலைக்குளம், பனிமலைக்குட்டு, புத்தூர் மலை உள்ளிட்ட 16 மலைக்குனின்றுகளில் சமணர் கற்படுக்கைகள் கண்டறியப்பட்டுள்ளது. சமணர் படுகை, சமணர் பள்ளி, பிற்கால பாண்டியர் கோயில் உள்ளிட்ட தொல்லியல் மற்றும் வரலாற்று நினைவு சின்னங்களை கொண்ட அருவிமலை 'தமிழ்நாடு பழங்கால & வரலாற்று சின்னங்கள் & தொல்லியல் தளங்கள் மற்றும் இதர சின்னங்கள் பாதுகாப்பு சட்டம் 1966' 'இன் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று (14.10.2024) மனு கொடுத்துள்ளோம். மனு இரசீது: 15488 மனு எண்: TN/TOURCUL/MDU/A/COLLMGDP/14OCT24/10334128 மனு நாள்: 14.10.24 -தமிழ்தாசன் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை 14.10.2024

Comments
Post a Comment