நரசிங்கம்பட்டி பெருங்கற்கால சின்னங்களும் பல்லுயிரிய மரபு தளமும்
நரசிங்கம்பட்டி பெருங்கற்கால சின்னங்களை கொண்ட ஈமக்காடு பகுதியை அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளத்தோடு இணைத்து பல்லுயிரிய மரபு தளத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்
=============================
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருமாள்மலை அடிவாரத்தில் நரசிங்கம்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. வனத்துறையின் கீழ் பாதுகாப்பட்ட வனப்பகுதியாக விளங்கும் பெருமாள்மலையின் தெற்குச் சரிவில் நரசிங்கம்பட்டி கிராமமும் வடக்குச் சரிவில் அரிட்டாபட்டி கிராமமும் அமைந்துள்ளது.
நரசிங்கம்பட்டி ஊரில் சுமார் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள், இராமாயண கதைகளை விளக்கும் வண்ண சுவரோவியங்கள் கொண்ட 300 ஆண்டுகள் பழமையான சித்திரச்சாவடி கட்டடம், மலைக்கோயில் திருவிழா, கொண்டைக்கல் கார்த்திகை தீபம், நரசிங்கம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பூசாரிப்பட்டி தொன்மையான பாறை ஓவியங்கள் என பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கொண்டுள்ளது நரசிங்கம்பட்டி ஊராட்சி.
பெரிய பெரிய கற்களைக் கொண்டு ஈமச்சின்னங்களை அமைத்து மக்கள் வாழ்ந்த காலத்தைப் பெருங்கற்காலம் என வரலாற்று ஆசிரியர்கள் வரையறை செய்துள்ளனர். இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவர்களது எலும்புகளைப் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஈமச்சின்னங்கள் பெருங்கற்படைச் சின்னங்கள் என்பர். தமிழ்நாட்டில் இப்பண்பாடு கி.மு 2000 முதல் கி.மு 5 ஆம் நூற்றாண்டு வரை பல்வேறு பண்பாட்டு படிநிலைகளை கடந்து வந்து பின்னர் கி.மு 5 ஆம் நூற்றாண்டில் வரலாற்றுக் காலத்தில் நுழைந்தது எனலாம். வரலாற்று காலமான சங்ககாலம் கோலோச்சிய பின்னரும் இச்சின்னங்களை எழுப்பும் வழக்கம் கி.பி முதலாம் நூற்றாண்டு வரை தொடர்ந்து வந்திருப்பதைத் தமிழ்நாட்டில் அண்மையில் கிடைத்த பல்வேறு அகழாய்வுச் சான்றுகள் புலப்படுத்துகின்றன.
தீபகற்ப இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பெருங்கற்படைச் சின்னங்களாக கீழ்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1. தாழிகள் (Urns)
2. ஈமப்பேழைகள் (Sacrophagus)
3. கற்பதுக்கைகள் (Cists)
4. கற்திட்டைகள் (Dolmens)
5. குத்துக்கற்கள் / நெடுங்கற்கள் (Menhirs)
6. மனித உருவ குத்துக்கற்கள் (Anthropomorphic)
7. கல்வட்டங்கள் (Stone Circle)
8. கற்குவை வட்டங்கள் (Cairn Circle)
9. குத்துக்கல் வரிசை (Stone Alignment)
10. இரட்டைக்கல் வரிசை (Stone Avenue)
11. தொப்பிக்கல் / குடைக்கல் (Cap Stone)
12. பாறைக்குடைவுப் பதுக்கை (Rock Cut Cave Cist)
(தரவு: வைகைவெளி தொல்லியல் - பாவெல் பாரதி: 2021)
இவற்றில் தாழிகள், கற்பதுக்கைகள், கற்திட்டைகள், குத்துக்கற்கள், கல்வட்டம், கற்குவை வட்டங்கள், குத்துக்கல் வரிசை உள்ளிட்ட ஏழு வகை பெருங்கற்கால சின்னங்கள் நரசிங்கம்பட்டி ஏமக்கோவில் பகுதியில் உள்ள ஈமாக்காட்டில் காணப்படுகிறது. பெருங்கற்கால சின்னங்களை கொண்ட நரசிங்கமபட்டி ஈமாக்காடு வனப்பகுதிக்குட்பட்ட இடத்திலும், வருவாய்துறைக்குட்பட்ட இடத்திலும் என சுமார் முப்பது ஏக்கர் பரப்பளவில் காணப்படுகிறது.
நரசிங்கம்பட்டி பெருமாள்மலையின் மேலே ரெட்டைக்கல் என்ற இடத்தில் காணப்படும் தமிழ்க் கல்வெட்டில் கிபி 12ஆம் நூற்றாண்டில் சிவன் கோயில் ஒன்றுக்கு நிலக்கொடை அளித்த செய்தியும், அந்த நிலத்திற்கு எல்லையை குறிக்கும் விதமாக முத்தலை சூலம் ஒன்றையும் கல்வெட்டின் கீழே செதுக்கியுள்ளனர்.
வனப்பகுதியான பெருமாள் மலை அடிவாரம் என்பதால் புள்ளிமான்கள், மிளா, கேளையாடு, தேவாங்கு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பாலூட்டி வகை காட்டுயிர்கள் இங்கே வாழ்கின்றன. கழுகு, பருந்து, வல்லூறு, மரங்கொத்தி, பூங்குயில், நாகணவாய், தேன்சிட்டு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பறவைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன. புதிய மனையடி விற்பனை மற்றும் இதர செயல்பாடுகளால் நரசிங்கம்பட்டி பெருங்கற்கால சின்னங்களான கற்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் சிதைக்கப்பட்டுள்ளன. வரலாற்று நோக்கிலும், பல்லுயிரிய நோக்கிலும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான நரசிங்கம்பட்டி ஈமக்காடு பகுதியை மதுரை மாவட்ட நிர்வாகம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நரசிங்கம்பட்டி சர்வே எண்கள் - S.NO.653 extension 40 cent, S.NO.654 extension 10 cents ஏமக்கோவில் பகுதியை ஒட்டி பெருங்கற்கால சின்னங்கள் அமைந்துள்ள வருவாய்த்துறை சர்வே எண்கள் இவைகள் ஆகும். மேலும் இதே போல வனத்துறையும் பெருங்கற்கால சின்னங்கள் அமைந்துள்ள பகுதியிலும் அமைந்துள்ளது. நரசிங்கம்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட பெருமாள்மலை அடிவாரத்தில் பெருங்கற்கால சின்னங்கள் அமைந்துள்ள 30 ஏக்கர் பரப்பளவு நிலத்தை வனத்துறையும், வருவாய்த்துறையும் முறையாக ஆய்வு செய்து நிலஅளவீடு செய்து உயிரிய பல்வகைமை சட்டத்தின் கீழ் (Biodiversity Heritage Site under Biological Diversity Act of 2002) பல்லுயிரிய மரபு தளமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
477.4 ஏக்கர் பரப்பளவுள்ள அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் பல்லுயிரிய மரபு தளத்தோடு 30 ஏக்கர் பரப்பளவுள்ள நரசிங்கம்பட்டி ஈமக்காடும் இணைக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். மாணவர்கள், பொதுமக்கள் பெருங்கற்கால சின்னங்கள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் வசதிகள் செய்து தர வேண்டும்.
நரசிங்கம்பட்டியில் பெருங்கற்கால சின்னங்களை கொண்ட ஈமக்காடு பகுதி பல்லுயிரிய மரபு தலமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 02.10.24 அன்று நடைபெற்ற நரசிங்கம்பட்டி கிராம சபை கூட்டத்தில் ஊர் மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கிராமசபை தீர்மானம் நகல் இம்மனுவோடு இணைக்கப்பட்டுள்ளது.
மனு இரசீது: 15555
மனு எண்: TN/REV/MDU/A/COLLMGDP/14OCT24/10334188
மனு நாள்: 14.10.24
- தமிழ்தாசன்
Comments
Post a Comment