யாசககாரியின்

யாசககாரியின்
மாராப்பு தொட்டிலில்
கதறி அழும்
குழந்தையின் இரைச்சல்
காதில் விழாதபோது

உன் சமிக்கை எழுப்பும்
வாக்கியம்
எளிய நடையில்
எழுதப்பட்டு இருக்கிறது.

கொடுத்த முதல் முத்தம்
உன் அடுத்த
மாதவிலக்கு
அத்தனையும் அத்துபடி எனக்கு
தேதி முன்பின் இருக்கும்
வயது, வருடம் ஞாபகமில்லை
தாயின் பிறந்தநாள்.

பனி குடில்
குற்றால குமிழி
தீர்த்த திவலை
உன் முகப்பருவென
எழுதிய கவிதை...

அப்பாவின்
நெஞ்சு மயிரிலிருந்து 
குழி வயிற்றுக்கிறங்கும்
வியர்வை விற்று
வாங்கிய பேனா.

நீ பேசாத நாட்களின்
ரணம்
உயிர் குடிக்க
சவர கூரத்தகடு எடுத்து 
சதை கிழிக்க சொன்னது
இதயவலி.....

மறந்து போனது....
நான் என்ற நபர்
ஒரு தாயின்
பிரசவ வலி.

உடுப்புகடை விளம்பர பலகை
இடுப்பு தொடை தெரிய
நடிகை அணிந்த சேலை
உற்றுப்பார்க்கும் ஊர் விழிகள்.

அதே நிலை
அழுக்கு உடம்பு
கிழிந்த சேலை
அணிந்துகிடக்கிற அக்கா 
அருவருக்கும் ஊர் விழிகள்.


 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?