மரணத்திற்கு பின்


‎------- மரணத்திற்கு பின் --------

நான் இறந்த பிறகு
எனக்கு சவப்பெட்டி செய்யும்
பணத்தில்
கூரையில் பொத்தல் விழுந்த
குளியலறைக்கு
கதவுகள் செய்து கொடுங்கள்.

பெண்ணின் மானத்தைவிட
ஒரு பிணத்தின் மரியாதை
அவசியமற்றது.

என் இறுதி ஊர்வலத்தில்
எந்த மலரும்
நசுக்கப்படாதுயென
நம்புகிறேன்.

பூக்களை பறிக்காதீர்கள் !
வேரோடு நகத்தை பிடுங்கினால்
நமக்கு உண்டாகும் வேதனைதான்
செடிக்கும் இருக்கும்.

தோழர்களே !
என் முடிவுக்குப்பின்
முடங்கிவிடாதீர்கள்
முன்னேறாமல்
அடங்கிவிடாதீர்கள்.

மரண செய்தி கேட்டு
விரைந்து வரும்
வீரிய தோழர்களே!
என் கருவிழிகள் இரண்டும்
பார்வையற்றவருக்கு
பொருத்தப்பட்டதா என்று
பரிசோதித்து கொள்ளுங்கள்.

அடித்தட்டு மக்கள் நலனுக்காக
அறவழியில் போராட
என் பிணம் தேவைப்பட்டால்
போக்குவரத்துக்கு இடையுரின்றி
போராடுங்கள் தோழர்களே !

என் சவத்தை வைத்து
சாலை மறியல்
செய்து விடாதீர்கள்.

மருத்துவமனையை நோக்கி
கர்ப்பிணி தாய் ஒருத்தி
போய் கொண்டிருக்கலாம்
போராளியை பிரசவிக்க....

---- தமிழ்தாசன் ----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?