கொட்டாம்பட்டி மலைகள்

புறக்கூடுமலை, பொக்கிசமலை, வெள்ளூத்து மலை, பறையன்மலை, பச்சைநாச்சி மலை, பெரியமலை, மண்டபத்துமலை உள்ளிட்ட பல மலைக்குன்றுகள் மதுரையில் குவாரி பணிகளால் காணாமல் போயிருக்கிறது. கொண்டையம்பட்டி வண்ணாத்திக்கரடு, ராஜாக்கள்பட்டி சங்குச்சுனைமலை, சத்திரவெள்ளாளப்பட்டி பெருமலை என பல மலைகள் நம் கண்முன்னே இன்று வெட்டி அழிக்கப்படுகின்றது.


பெருங்கற்கால பாறை ஓவியங்கள், சங்ககால தமிழிக் கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், மன்னர்களின் கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள், பல சமய வழிபாட்டு தளங்கள் என மதுரையின் வரலாற்று அடையாளங்களை இம்மலைகளும், குன்றுகளும் தான் தாங்கி நிற்கின்றன.


இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் மதுரை கம்பூர் அருகே வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான மூன்று பிற்பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் மதுரை புலிமலை மற்றும் கிழவிக்குளம் மலையில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டது. மதுரையில் உள்ள ஒவ்வொரு மலைகளும் குன்றுகளும் இன்னும் நாம் கண்டறியாத பல வரலாற்றை தன்னுள் வைத்துள்ளது.

சிற்ப நகரம், கிரானைட் குவாரி, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் என பல பேரழிப்பு திட்டங்களை எதிர்கொண்டு மக்களின் போராட்டத்தால் பல மலைகள் உயிர்பிழைத்து நிற்கின்றன. இம்மலைகள் வரலாற்று சின்னங்கள் மட்டுமல்ல பாசன ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாக விளங்குகின்றன. மேய்ச்சல் நிலமாகவும் இருக்கின்றன. இம்மலைகள் மாந்த சமூகத்தின் வாழ்வாதாரமாக மட்டுமல்ல பல்லுயிரிய வகைமையின் வாழிடமாகவும் விளங்குகின்றன.

மொட்டைப்பாறை, பயனற்ற தரிசு என்று சொல்லி கிரானைட் குவாரிக்காக கையகப்படுத்தப்பட்ட அரிட்டாபட்டி - மீனாட்சிபுரம் மலைகள்தான் பின்னாளில் 150க்கும் மேற்பட்ட தாவரங்கள், 200க்கும் மேற்பட்ட பறவையினங்கள் வாழும் தமிழ்நாட்டின் முதல் பல்லுயிரிய மரபு தளமாக 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் வருவாய்துறையின் பதிவேட்டில் தரிசு, கரடு, பாறை என வகைப்படுத்தப்பட்ட மலைக்குன்றுகள் வரலாற்று மற்றும் சூழலியல் நோக்கில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு மறுவரையரை செய்யப்பட வேண்டும்.

பரங்குன்றம், பசுமலை, நாகமலை, சிறுமலை, அழகர்மலை, யானைமலை, முன்னமலை, ஓவாமலை, திருமலை என குன்றுகளும், மலைகளும் சூழ் நகராக மதுரை விளங்கியது. பெரியபுராணம், நாலடியார், தக்கயாகப்பரணி மதுரையை சூழ்ந்த எட்டு பெருங்குன்றம் பற்றி கூறுகிறது. மலையூர், மலைப்பட்டி, குன்றூர், குன்னத்தூர், குன்னம்பட்டி, கரடிக்கல், பாறைப்பட்டி, கரட்டுப்பட்டி என மலைகள், குன்றுகள், பாறைகள் பெயர் தாங்கிய ஊர்களை மதுரையில் காண முடியும். மலைகள் மதுரையின் அடையாளம். அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

2022 - 2025 ஆண்டுக்கு இடையில் தமிழ்நாட்டில் வருவாய்துறையின் கீழ் இருந்த பல்வேறு மலைக்காடுகள், குன்றுகள் வனத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. அதில் மதுரை கொட்டாம்பட்டி அருகே பள்ளப்பட்டி பகுதியில் 9.84 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட கள்ளிக்குட்டு, 28.04 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட தல்லாக்க குட்டு, 140.50 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட மாமலை (விரிவாக்கம்), மதுரை உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூர் பகுதியில் 7.56 ஹெக்டேரும், கல்லூத்து பகுதியில் 20.23 ஹெக்டேரும் பரப்பளவு கொண்ட வெள்ளமலையும் மதுரை மாவட்டத்தில் பாதுகாக்கப்பட்ட புதிய வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு வனத்துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று (22.06.2025) பண்பாட்டுச் சூழல் நடையாக கொட்டாம்பட்டி அருகேயுள்ள வெள்ளிமலை அடிவார பகுதிக்கு சென்று இருந்தோம். கொட்டமப்பட்டி - சூரபட்டி தேசிய நெடுஞ்சாலையின் மேற்கில் கருமலை, சீத்தாமலை, தேனீமலை, பக்குருட்டி மலை, வெள்ளிமலை, நெடுமலை, தல்லக்காக்குட்டு, கள்ளிக்குட்டு, வெள்ளமலை ஆகிய மலைகளும்; கிழக்கில் செங்கணாமலை, பெரியமலை, மணலிக்கரடு, மாமலை, தரகாமலை, சும்மாடுகுட்டு, பறையங்குட்டு, கண்ணபிரான்குட்டு, மேன்மலை, பிரான்மலை ஆகிய மலைகளும் இருப்பதை ஆவணம் செய்தோம். செங்கணாமலை, மணலிக்கரடு, சும்மாடுகுட்டு, பறையங்குட்டு ஆகிய நான்கு மலைகள் பாதுகாக்கப்பட்ட பகுதியாக (Reserve Land) அறிவிக்கப்பட்டுள்ளது. வரும்காலத்தில் இவை நான்கும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக (Reserve Forest) அறிவிக்கப்படலாம். கண்ணபிரான்குட்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக (RL) அறிவிக்க தேவையான நடவடிக்கைகளை மதுரை மாவட்ட வனத்துறை பணிகளை மேற்கொள்வதாக அறிகிறேன். இவை தவிர்த்து மேற்குறிப்பிட்ட இதர மலைகள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இம்மலைகள் அனைத்தும் கொட்டாம்பட்டி வழியே பாயும் பாலாறு என்னும் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியாகவும் விளங்குகிறது. வில்லியார் கோயில்காடு, சுண்டக்காரன் அய்யனர் கோயில்காடு உள்ளிட்ட இயற்கையான முல்லை நில புதர்காடுகள் அமையவும் இம்மலைகள் காரணமாக இருக்கிறது.

நம்மை சுற்றியிருக்கும் மலைகளை பாதுகாப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையில் முதல்படி அம்மலைகளின் பெயர்களை அறிந்து கொள்வதில் இருந்தே துவங்குகிறது.

-- தமிழ்தாசன்
26.06.2025


கண்ணபிரான்குட்டு 

தரகாமலை 

தேனீமலை 

சும்மாடு குட்டு (படத்தில் முன்னிருக்கும் சிறிய குட்டு) படத்தில் பின்னிருக்கும் மலை மாமலையாகும்.

செங்கணாமலை 

சீத்தாமலை 

வெள்ளிமலை

கள்ளிக்குட்டு

பாலாறு


தேனீமலை

நெடுமலை

தல்லக்கா குட்டு

பக்குருட்டிமலை

பெரியமலை

பீக்குட்டு 

மேன்மலை 



Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?