திருமணிமுத்தாறு கரையோரக் கோயில்கள்

ஆற்றூர் அருகே ஓடும் ஆறு எது?
-----------------------------
கடந்த வாரம் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், எரிச்சி மலம்பட்டி அருகே உடன்பட்டி கிராமத்தில் உள்ள ஆத்தூர் கண்மாய் சிதிலமடைந்த பழங்கால கோயில் ஒன்று இருப்பதாக அறிந்து, அவ்விடத்தில் உள்ள முட்புதர்களை நீக்கி, புதையுண்டு கிடந்த கோயில் தெரியும் வண்ணம் மணலை அகற்றி உள்ளூரைச் சேர்ந்த ரஞ்சித், பிரபு மற்றும் நண்பர்கள் இணைந்து கோயில் இருக்குமிடத்தை தூய்மை செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சிற்பத்துறை ஆய்வாளர் தேவி, தொல்லியல் ஆய்வாளர் அறிவுச் செல்வம்‌ ஆகியோர் இந்த கோயிலை ஆய்வு செய்தனர். பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த உதயகுமார், முத்துப்பாண்டி, முருகன்‌ ஆகியோர் படி எடுத்தனர். இந்த கல்வெட்டை முழுவதுமாக வாசித்து அக்கல்வெட்டு விவரத்தை தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் அவர்கள் வழங்கினார். கல்வெட்டில் உள்ள செய்திகளின்படி அக்கோயில் அமைந்த ஊரின் பெயர் ஆற்றூர் என்றும் கோயிலின் பெயர் தென்னவன் ஈஸ்வரம் என்றும் தெரிகிறது.



தென்னவனீஸ்வரம் கோயிலை காண வேண்டுமென்கிற ஆவலில்  மலம்பட்டி ஊராட்சியில் உள்ள உடன்பட்டிக்கு சென்று இருந்தேன். இக்கோயில் வெளிவர காரணமாயிருந்த உள்ளூரைச் சேர்ந்த திரு. ரஞ்சித் மற்றும் பிரபு என்னை கொங்கம்பட்டியில் உள்ள பாழடைந்த கோயிலுக்கு அழைத்து சென்றனர். சமூக அக்கறை கொண்ட பொறுப்பான இளைஞர்கள். செல்லும் வழியில் கொங்கம்பட்டியில் பழமையான விநாயகர் கோயிலை காட்டினார்கள். திருமணிமுத்தாறின் கிழக்குக்கரையில் இருந்து மேற்குக்கரைக்கு ஆற்று நீரில் இறங்கி கடந்து சென்றோம். ஆற்றின் மேற்கு கரையை ஒட்டியே முட்புதர்கள் நிறைந்த பகுதியில் சிதைந்த நிலையில் கோயில் உள்ளது. வெளியில் இருந்து பார்த்தால் கோயிலின் கட்டுமானங்கள் எதுவும் தெரியாத அளவுக்கு புதர்கள் மண்டிக்கிடக்கும். கொஞ்சம் கொஞ்சமாக புதர்களை அகற்றி கோயிலை அடைந்தோம். தென்னவனீஸ்வரம் கோயிலும் இக்கோயிலும் ஒரே காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். கோயிலின் அதிட்டான பகுதியில் கல்வெட்டுகள் இருப்பதை ரஞ்சித்திடம் தெரிவித்தேன்.

கல்வெட்டின்படி பழைய ஊரின் பெயர் ஆற்றூர் என்றால் அங்கே ஓடும் ஆறு எது? அதன் பெயர் என்ன? என்கிற கேள்வி எழும்தானே? வைகை மற்றும் பாம்பாறு வடிநில கோட்டத்திற்கு உட்பட்ட ஐந்து சிற்றாறுகள் மேலூர் வட்டத்தில் ஓடுகின்றன. முல்லைப்பெரியார் - வைகை பாசன கால்வாய்கள் வருவதற்கு முன்பு பாண்டியர் ஆட்சி காலத்தில் சிற்றாறுகள் வழியே எரிப் பாசனம் விரிவாக்கம் செய்யப்பட்டு மேலூர் பகுதி புஞ்சை நஞ்சை பயிர்கள் விளையும் பூமியாக இருந்தது என்பதனை அருவிமலை, கருங்காலக்குடி பிற்பாண்டியர் கால கோயில் கல்வெட்டுகள் நமக்கு தெரிவிக்கின்றன.
தென்னவனீஸ்வரம் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் ஆற்றூர் இன்று கொங்கம்பட்டி உடன்பட்டிக்கு இடையில் குடியிருப்புகளற்ற வயல்வெளிகளாகவும், தோப்புகளாவும் மாறியிருக்கிறது. உடன்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு கண்மாய்க்கு பெயர் ஆற்றூர் கண்மாய். இன்றும் மக்களால் ஆற்றூர் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது. ஆற்றூர் கண்மாய் கரையில் தான் தென்னவனீஸ்வரம் கோயில் அமைந்துள்ளது. ஆற்றூர் என்ற பெயர் வர காரணமாயிருக்கும் ஆற்றின் பெயர் திருமணிமுத்தாறு. திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலையில் தோன்றும் திருமணிமுத்தாறு கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, எரிச்சிமலம்பட்டி வழியாக ஓடி மருந்தீஸ்வர மலை கடந்து பாம்பாறு என்று பெயர் பெறுகிறது.
இந்த ஆற்றங்கரையில் என்னென்ன மரங்கள், தாவரங்கள் இருந்தன என்பதனை அதன் இரு கரைகளிலும் உள்ள சில ஊர் பெயர்கள் வழியாக அறியலாம். உதாரணமாக வஞ்சிப்பட்டி (வஞ்சி), கருங்காலக்குடி(கருங்காலி), வஞ்சி நகரம், காயாம்பட்டி (காயா), கொங்கம்பட்டி (கோங்கம்), மாம்பட்டி (மா) கருவேல்குறிச்சி (கருவேலம்) என இருகரைகளிலும் உள்ள ஊரின் பெயர்கள் இந்த ஆற்றின் பசுமைக்கு சான்று பகிர்கின்றன. ஆனால் இந்த ஆற்றின் கரைகளில் இன்று பழமையான மரங்கள் எதுவும் இல்லை. சொல்லப்போனால் இப்படி ஒரு ஆறு இருக்கிறதென்று பலருக்கும் தெரியவதில்லை. வைகை தவிர்த்து மதுரை மாவட்டத்தில் பாயும் 20க்கும் மேற்பட்ட ஆறுகளின் நிலையும் இதுதான்.
இருபது ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றில் மணல் குவாரிகள் இயங்கி வந்து இருக்கின்றன. ஆற்று மணலும், அதன் மீது நாணற்புற்களையும், ஓடும் நீரில் உழுவை, அயிரை மீன்களையும், வெண்கொக்கு, செந்நாரை, சாம்பல் நாரை மீன்கொத்தி பறவைகளையும் இந்த ஆற்றில் நான் ஆவணம் செய்து இருக்கிறேன்.
திருமணிமுத்தாறு ஆற்றின் கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஊர்களும் பிற்பாண்டியர் கால கோயில்களும் அமைந்துள்ளன. 5000 ஆண்டுகள் பழமையான குன்னங்குடிபட்டி, வஞ்சிநகரம் பெருங்கற்கால சின்னங்கள் இவ்வாற்றின் கரையில் காணப்படுகிறது. 800 - 700 ஆண்டுகள் பழமைய வாய்ந்த பிற்கால பாண்டியர் கோயில்களான கருங்காலக்குடி அழகம்பெருமாள் விண்ணகரம், கள்ளங்காடு அகளங்காஈஸ்வரம், உடன்பட்டி தென்னவனீஸ்வரம் என பல கோயில்கள் இந்த ஆற்றின் கரையில் உள்ளது. திருமணிமுத்தாறின் கரையில் அமைந்த ஊர்களான கொங்கம்பட்டி, கரையிபட்டி, காயாம்பட்டி, கொடுக்கம்பட்டி பகுதியில் சிதிலமடைந்த கோயில்கள் காணப்படுகிறது.




கொங்கம்பட்டியை அடுத்துள்ள கரையிபட்டியில் காணப்படும் பழமையான  சிவன் கோயில், தேனீஸ்வரார் கோயில் என்ற பெயரில் மீண்டும் புதிதாக கட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இதற்கு முன்பு ஆவணம் செய்யப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கவில்லை. 

சில படங்களை எடுத்துவிட்டு வெளியே வந்துவிட்டோம். இக்கோயில் குறித்து கொங்கம்பட்டி ஊர் பெரியவர்களிடம் விசாரிக்கிற போது 1975ஆம் ஆண்டு புலவர் வெ. அ. முத்துக்கண்ணன் அவர்கள் தமிழரசு இதழில் அரிட்டாபட்டி பிற்பாண்டியர் கால சிவன் கோயில், கிளாதரி சிவன் கோயில், கரையிபட்டி சிவன்கோயில், உடன்பட்டி சிவன்கோயில், கொங்கம்பட்டி பிரம்மா கோயில் பற்றியெல்லாம் குறிப்பிட்டு எழுதிய கட்டுரை கிடைத்தது. இதில் கெங்கம்பட்டி பிரம்மா கோயில், கரையிபட்டி கல்வெட்டுகள் வெளிக்கொணரப்படவில்லை என தெரிகிறது.






தென்னவனீஸ்வரம் கோயிலுக்கும் கொங்கம்பட்டி (பிரம்மா?) கோயிலுக்கும் இடையில் நீலியம்மன் என்ற பெயரில் ஒரு அம்மன் சிலை வழிபாட்டில் உள்ளது. தலைப்பகுதியில் அக்னிமகுடத்துடன் விரிந்த ஜடா பாரம், காதுகளில் பத்திர குண்டலங்கள், கழுத்தில் ஆபரணம் 8 கரங்களுடன் கைகளில் ஆயுதத்தோடு காட்சியளிக்கிறது. வலது காலை குத்த வைத்தும், இடது காலில் நிசும்பன் என்ற அரக்கனை மிதித்தபடியும் சிற்பம் உள்ளது. இச்சிலையினை நிசம்பசூதனி என்கிறார் ஆய்வாளர் ராஜவேல். அண்மையில் கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நிசம்பசூதனி சிலை மதுரை திருமங்கலம் பகுதியில் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தால் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. பொதுவாக சோழநாட்டு பகுதிகளில் நிசும்பசூதனி சிற்பத்தின் காலடியில் சும்பன், நிசும்பன் என 2 அசுரர்களின் உருவம் காணப்படும். ஆனால் பாண்டிய நாட்டு பகுதியில் நிசும்பசூதனி சிற்பத்தின் காலடியில் நிசும்பனின் உருவம் மட்டுமே உள்ளது. இது சிற்பம் பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததாக கருதலாம் என்பர்.

திருமணிமுத்தாறில் வெள்ளம் வந்தபோது நீலியம்மன் சிலை அடித்து வரப்பட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். கொங்கம்பட்டி நீலியம்மன் சிலை பற்றியும் புலவர் முத்துக்கண்ணன் அவர்கள் அக்கட்டுரையில் குறிப்பிடுகிறார். இப்பகுதியில் காணப்படும் கொங்கம்பட்டி நீலியம்மன், பேய்ப்பனையம்பட்டி பட்டத்தரசி அம்மன், கரையிபட்டி வடக்குவாச்செல்வி அம்மன் என வெவ்வேறு பெயர்களில் வழிபடும் அம்மன் சிலைகள் மூன்றும் ஒரே தோற்றத்தில் இருப்பதை குறிப்பிடுகிறார். கள்ளங்காடு அழகுநாச்சியம்மன் சிலையும் அதே தோற்றத்தில் அமைந்துள்ளது.

மேலும் கொங்கம்பட்டி வெளத்து கண்மாய் கரையில் இரண்டு பழமையான கோயில்கள் சிதிலமடைந்து கிடக்கிறது என்று ஊர் பெரியவர்கள் தெரிவித்தார்கள். அதில் தணக்கம் மரத்தடியில் காணப்படும் கோயிலின் அதிட்டான பகுதியில் தமிழ் கல்வெட்டுகள் காணப்படுகிறது. அங்கே அய்யனார் சிலையும், இன்னும் நான்கு சிலைகளும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. இக்கோயிலும் பிற்பாண்டியர் காலத்தை சேர்ந்த கோயிலாக இருக்கலாம்.
கொங்கம்பட்டியை அடுத்துள்ள கரையிபட்டியில் காணப்படும் பழமையான சிவன் கோயில், தேனீஸ்வரார் கோயில் என்ற பெயரில் மீண்டும் புதிதாக எடுத்துக் கட்டும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் இதற்கு முன்பு ஆவணம் செய்யப்பட்டதாக குறிப்புகள் கிடைக்கவில்லை.
எனவே தொல்லியல்துறை அதிகாரிகள் கொங்கம்பட்டி திருமணிமுத்தாறு கரையில் உள்ள கோயில் கல்வெட்டுகளையும், வெளத்து கண்மாய் கரையில் உள்ள கல்வெட்டுகளையும், கரையிபட்டி சிவன் கோயில் கல்வெட்டுகளையும் ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். திருமணிமுத்தாறு ஆற்றின் சமூக வளர்ச்சி குறித்தும், நாகரீகம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.









தமிழ்தாசன்

12.06.2025

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?