அழகர்மலை

அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா பண்பாட்டு மானுடவியல் நோக்கில் மிக முக்கியமான திருவிழாவாகும். அழகர் ஆற்றிலிறங்கிக் காட்சி தரும் சித்திரைத் திருவிழா பல வகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகளையும் ஒரிடத்தில் காணமுடியும். சித்திரைத் திருவிழாவினைக் காணும் ஒருவன், பலதரப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மண்டைத்தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, காரைக்கயிற்றுத்தாலி, பஞ்சாரத்தாலி, பார்ப்பாரத்தாலி எனப் பல்வேறு வகையான தாலிகளை அணிந்த தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதிய பெண்களை இத்திருவிழாவில் காணலாம். தலையில் பூச்சூடாமல் தாலியில் பூச்சூட்டும் வழக்கமுடையவர்களையும் காணலாம். புடவைக் கட்டிலிருந்து தலை முடியினை அள்ளிச்செருகுவது வரை பல்வேறு வகையான மக்களைக் காணலாம். இவர்கள் அனைவரும் நாட்டுப் புறங்களைச் சேர்ந்த மக்களே. எனவே இத்திருவிழாவினைக் காணுவதால் தமிழ்நாட்டின் தென்பகுதிக் கிராமங்களைச் சுற்றிப்பார்ந்த அனுபவத்தை ஒருவர் பெற இயலும் என பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப குறிப்பிடுவார்.   

பண்பாட்டுச் சூழலியல் நோக்கிலும் அழகர்மலையை ஆய்வு செய்ய வேண்டும். 


கிழக்குத் தொடர்ச்சிமலை: 

இந்தியாவின் வடக்கே மேற்கு வங்காளத்தில் தொடங்கி ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு வரை நீண்டு கிடக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் ஒரு அங்கம்தான் அழகர்மலை. மேற்குத் தொடர்ச்சி மலைகளை போன்று தொடர்ச்சியாக இல்லாமல், கிழக்கு தொடர்ச்சி மலைகள் பகுதி பகுதியாக சிதறி நீண்டு கிடக்கும். கிழக்குத் தொடர் மலைகளின் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டதற்கான காரணம் தீபகற்பத்தின் பேராறுகளான கோதாவரி, மகாநதி, கிருஷ்ணா, காவிரி போன்ற இம்மலைத் தொடரின் ஊடாகப் பாய்ந்து ஏற்படுத்திய மண் அரிப்பு ஓர் முக்கிய காரணமாகும்.   கிழக்கு தொடர்ச்சி மலைகள், மேற்கு தொடர்ச்சி மலைகளைக் காட்டிலும் பழமை வாய்ந்தவையாகும். ஜவ்வாது மலை, செஞ்சி, சேர்வராயன், கல்வராயன், ஏற்காடு, கொல்லிமலை, பச்சைமலை, அழகர்மலை, சிறுமலை உள்ளிட்ட மலைகள் தமிழ்நாட்டில் காணப்படும் மேற்குத்தொடர் மலைகளாகும். செய்யாறு, அகரமாறு, திருமணிமுத்தாறு, வெள்ளாறு, கோமுகி, சரபங்கா ஆறு, ஐயாறு, கல்லாறு, சுவேதா ஆறு, பொன்னையாறு, பாம்பாறு, பாலாறு, சாத்தையாறு, சந்தானவர்தினி ஆறு, சிலம்பாறு, உப்பாறு உள்ளிட்ட பல ஆறுகள் தமிழ்நாட்டில் உள்ள கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றுகின்றன. 



அழகர்மலை:

மதுரை - திண்டுக்கல் மாவட்ட எல்லைகளில் சுமார் 17,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது அழகர்மலை. அதில் 16,832.27 ஏக்கர் (6811.78 Ha) பரப்பளவு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக விளங்குகிறது. இவை திண்டுக்கல் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.  அழகர்மலையின் தென்கிழக்கு அடிவாரத்தில் அழகர் கோயில், மலையின் மேலே பழமுதிர்சோலை முருகன் கோயில், ராக்காயி தீர்த்தொட்டி அமைந்துள்ளது. இவை மதுரை மாவட்ட அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. 



இலக்கியத்தில் அழகர்மலை: 

சங்க இலக்கியமான பரிபாடல் இம்மலையை இருங்குகுன்றம், மாலிருங்குன்றம், சீர்க்கெழுத் திருவின் சோலை என்று சிறப்பித்து பாடுகிறது. அழகர்மலை என்று மக்களால் அழைக்கப்படும் இம்மலையை திருமால்குன்றம் என சிலப்பதிகாரமும், இருஞ்சோலை, மாலிருஞ்சோலை, திருமாலிருஞ்சோலை, சோலைமலை, என பக்தி இலக்கியங்களும், விடைமலை என அழகரந்தாதியும் குறிப்பிடுகின்றன. 


வரலாற்றில் அழகர்மலை: 

அழகர்மலையில் பழங்கால மனிதர்கள் வாழ்ந்த குகைத்தளமும், அதில் வேட்டைச் சமூகத்தின் வாழ்வியலை வெளிப்படுத்தும் சிகப்பு நிற பாறை ஓவியங்களும் காணப்படுகின்றன. அக்குகைத்ததளத்தில் கி.மு இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழிக் கல்வெட்டுகளும், இருபதுக்கும் மேற்பட்ட கற்படுக்கைகளும் காணப்படுகின்றன. கிபி 9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பமும், அதன் அருகே வட்டெழுத்துக் கல்வெட்டும் அக்குகைத்தளத்தில் செதுக்கப்பட்டுள்ளது. அழகர் கோயில் கட்டுமானங்கள் ஆயிரமாண்டுகளுக்கு மேல் பழமையானது. இக்கோயிலில் கிடைக்கும் கல்வெட்டுகளில் இராஜராஜ சோழன் காலத்து கல்வெட்டுகளே பழமையானதாகும். ஜடாவர்மன் முதலாம் குலசேகரன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட பிற்கால பாண்டிய மன்னர்கள் துவங்கி வாணாதிராயர், போசள அரசர்கள், விஜயநகர பேரரசு, நாயக்கர் கால மன்னர்கள் வரையிலான கல்வெட்டுகள் அழகர் கோயிலில் படித்தறியப்பட்டுள்ளது.  



அழகர்மலை ஆறுகள்


கிழக்குத் தொடர்ச்சிமலையான அழகர்மலையில் தோன்றுகிற சிலம்பாறும், மேற்குத்தொடர்ச்சி மலையான வெள்ளிமலையில் தோன்றுகிற வைகையாறும் அழகரின் வழியாக சித்திரைத் திருவிழாவில் சந்தித்து கொள்கின்றன. ஆற்றுத் திருவிழா, நீர்த்திருவிழா என சூழலியல் நோக்கில் அடையாளப்படுத்த இச்சித்திரைத் திருவிழா நமக்கு இடமளிக்கிறது. 


சிலம்பாறு, உப்பாறு, வீராறு, தெற்காறு உள்ளிட்ட ஆறுகள் அழகர்மலையில் தோன்றுகின்றன. அழகர்மலையில் தோன்றும் சிலம்பாறு குறித்து பரிபாடலும், சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. அழகர்மலையில் தோன்றும் உப்பாறு குறித்து அருவிமலை பிற்கால பாண்டியர் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. நாட்டுப்புற பாடலில் வீராறு குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கியத்திலும், பாண்டியர் கல்வெட்டுகளிலும், நாட்டுப்புற பாடல்களிலும் ஓடுகின்ற சிலம்பாறு, உப்பாறு, வீராறு இன்று மதுரையில் எங்கே ஓடுகின்றன? அதன் நிலை என்ன? வைகையின் நிலையை அறிவதற்கே ஆளில்லை என்கிற போது, இச்சிற்றாறுகள் குறித்து கவலைப்பட யார் இருக்கிறார்கள்? 


சிலம்பு ஆர்க்க வந்து தெய்வ மகளிர்கள் ஆடும் சீர்

சிலம்பாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே (பெரியாழ்வார் - திருமொழி 338)


தேனாறு பாயும் தென் திருமாலிருஞ்சோலையே (பெரியாழ்வார் - திருமொழி 341)


மருத பொழில் அணி மாலிருஞ்சோலை மலை (பெரியாழ்வார் - திருமொழி 348) 


கஞ்சனும் காளியனும் களிறும் மருதும் எருதும்

வஞ்சனையில் மடிய வளர்ந்த மணிவண்ணன் மலை

நஞ்சு உமிழ் நாகம் எழுந்து அணவி நளிர் மா மதியை

செம் சுடர் நா வளைக்கும் திருமாலிருஞ்சோலை  (பெரியாழ்வார் - திருமொழி 350) 


புன்னை செருந்தியொடு புன வேங்கையும் கோங்கும் நின்று

பொன்னரி மாலைகள் சூழ் பொழில் மாலிருஞ்சோலை (பெரியாழ்வார் - திருமொழி 351)


அலங்காரன் மலை

குல மலை கோல மலை குளிர் மா மலை கொற்ற மலை

நில மலை நீண்ட மலை திருமாலிருஞ்சோலை (353) 


பாண் தகு வண்டு இனங்கள் பண்கள் பாடி மது பருக

தோண்டல் உடைய மலை தொல்லை மாலிருஞ்சோலை (354)


தண் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை (357)


ஆயிரம் ஆறுகளும் சுனைகள் பல ஆயிரமும்

ஆயிரம் பூம் பொழிலும் உடை மாலிருஞ்சோலை (358)


போர் களிறு பொரும் மாலிருஞ்சோலை அம் பூம் புறவில்

தார் கொடி முல்லைகளும் தவள நகை காட்டுகின்ற (ஆண்டாள் – நாச்சியார் திருமொழி 588)


கருவிளை ஒண் மலர்காள் காயா மலர்காள் திருமால்

உரு ஒளி காட்டுகின்றீர் எனக்கு (ஆண்டாள் – நாச்சியார் திருமொழி 589)


துங்க மலர் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை (591)

நாறு நறும் பொழில் மாலிருஞ்சோலை (592)

தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை (593)

கோங்கு அலரும் பொழில் மாலிருஞ்சோலையில் கொன்றைகள் மேல் (595)

சந்தொடு கார் அகிலும் சுமந்து தடங்கள் பொருது

வந்து இழியும் சிலம்பாறு உடை மாலிருஞ்சோலை (596)


மயல் மிகு பொழில் சூழ் மாலிருஞ்சோலை (நம்மாழ்வார் திருவாய்மொழி 214)

மழ களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை (நம்மாழ்வார் திருவாய்மொழி 220)

மாதுறு மயில் சேர் மாலிருஞ்சோலை (நம்மாழ்வார் திருவாய்மொழி 221)



விரை மலர் குறிஞ்சியின் நறுந்தேன் 

வண்டமர் சாரல் மாலிருஞ்சோலை (திருமங்கையாழ்வார் திருமொழி 872)


கார் மலி வேங்கை கோங்கலர் புறவில்

கடி மலர்க் குறிஞ்சியின் நறுந்தேன் 

வார் புனல் சூழ் தண் மாலிருஞ்சோலை (திருமங்கையாழ்வார் திருமொழி 874) 


பெரிய அருவி, சித்தருவி, தண்ணிக்கல்லு அருவி, கொரக்கொண்ட அருவி, வண்ணான் அருவி, பேப்புலாக் கொடை, வாழக்கவியூத்து, வாவூத்து, பச்சகாச்சி ஊத்து, தாழையூத்து, எருதுமேடு ஊத்து,  கருடர் தீர்த்தம், ராக்காயி தீர்த்தம், கேட தீர்த்தம், அனுமார் தீர்த்தம் என பல்வேறு ஊற்றுகளும், நீரோடைகளும் அழகர்மலையில் உள்ளன. 


திருமாலிருஞ்சோலையில் இன்று நூபுரகங்கை என்று அழைக்கப்படும் சிலம்பாற்றின் தலையருவிக்கரையிலே ஐப்பசி மாதம் அழகர் தைலமிட்டு நீராடி எழுந்தருளுகின்றார். இறைவன் தேவியரின்றித் தனித்துச் சென்று நீராடுகிறார். இதனை தலையருவித் திருவிழா அல்லது தொட்டித் திருவிழா என்று அழைக்கிறார்கள். இந்நிகழ்ச்சியின் போது கலந்துகொள்ளும் மக்களுக்கும் தேய்ந்து நீராடத் தைலம் வழங்கப்படுகிறது. 



புலவர்கள் போற்றிப்பாடிய நெடுங்குன்றங்கள் பல இருந்தாலும், இந்த பூவுலகிற்கு பல்வேறு பயன்களை என்றும் தந்து நிலைத்து நிற்பது வெகு சில மலைகள்தாம். அந்த வெகுசில மலைகளில் தெய்வங்கள் விரும்பும் மலர்களையும், அகன்ற மார்பை போன்ற பரந்த பரப்பையும், மேகங்கள் உரசிச் செல்லும் மலையுச்சி முகடுகளையும் கொண்ட குலமலைகள் வெகு சிலவே. அந்த குலமலைகளில் சிறந்தது ஓங்கி நிற்கும் இந்த இருக்குன்றமே என்று பரிபாடல் அழகர்மலையை போற்றுகிறது. அழகர்மலையின் முகடுகளிலும் அகன்ற மார்பைக் போன்ற பரந்த மலைப்பரப்பிலும் இருந்த சூழல் என்ன, தெய்வங்கள் விரும்பும் மலர்கள் எவை என்று பரிபாடல் 15ஆம் பாடலில் நாம் அறிந்து கொள்ள முடியும். மரா (கடம்பு), வேங்கை, அசோகம், செயலை உள்ளிட்ட மரங்களும், அருவி போல விழும் சிலம்பாறும், நீல மலர்கள் பூத்திருக்கும் சுனையும், அச்சுனையை சுற்றிலும் மலர்ந்தும் கனிந்தும் நிற்கும் செயலை மரங்களும், இறுகப்பற்றிக்கொண்ட குட்டிகளுடன் மலை முகடுகளில் தாவும் மந்திகளும், மரக்கிளைகளில் அகவும் மயில்களும், குருக்கத்தி இலைகள் உதிரும் வண்ணம் கூவும் குயில்களும் என அழகர்மலையின் அழகிய பல்லுயிரியச் சூழலை பரிபாடல் விவரிக்கிறது. பவகாரணி, இட்டசித்தி, புண்ணிய சரவணம் எனும் பெயருடன் திருமால் குன்றத்தில் மூன்று பொய்கைகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. 


அழகர்மலை தாவரங்கள்: 

கடம்பு, வேங்கை, அசோகம், செயலை உள்ளிட்ட மரங்களையும், குருக்கத்தி செடியும் பரிபாடல் குறிப்பிடுகிறது. நெடுநாரி (capparis divaricata) என்றழைக்கப்படும் மரம் தான் சங்க இலக்கியம் குறிப்பிடும் செயலை மரம் என பி.எல். சாமி குறிப்பிடுகிறார். அழகர் கோயிலுக்கு நான்கு யுகங்களிலும் நான்கு தலவிருட்சங்கள் இருந்ததென்று கிள்ளைவிடு தூதும், இரு குறவஞ்சி

நூல்களும் குறிக்கின்றன. ஆலம், அரசம், சோதி (capparis divaricata - காட்டுக்கத்தாரி), கூவிளம் (வில்வம்) ஆகிய மரங்கள் இக்கோயிலின் தலமரங்கள் என அவை கூறுகின்றன. கடுக்காய் (terminalia chebula), உடை மரம் (Vachellia planifrons), பாலை உள்ளிட்ட மரங்களும், அழகர்மலையின் பெரியருவி பள்ளத்தாக்கு பகுதியில் மூங்கில் மரங்கள் (bambusa arundinacea & Dendrocalamus strictus) பரவலாக இருந்தது என்றும், மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட மகோகனி மரங்கள் 1888ஆம் ஆண்டில் அழகர்மலை தீர்த்தத்தொட்டி அருகில் ஆங்கிலேயர்களால் வளர்க்கப்பட்டது என்றும் அரசு ஆவணங்கள் (MADRAS DISTRICT GAZETTEERS – MADURA  by Dr B.S. BALLIGA in 1960 - Page 181) தெரிவிக்கிறது. இளங்கன்றுகள், மரங்கள், விலங்குகள் என காட்டுயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அழகர்மலையில் காட்டுத்தீ ஏற்பட்டது என அரசின் ஆவணம் குறிப்பிடுகிறது. மதுரை நீர்முள்ளி (Hygrophila madurensis) என்கிற தாவரம் அழகர்மலையில் மட்டுமே காணப்படும் அகணிய தாவரம் என்று 2009ஆம் ஆண்டு வெளியான ஆய்விதழ் (Karthikeyan and Moorthy - Fl. Pl. India: vol.22 in 2009) குறிப்பிடுகிறது.  


பயிர்கள்: 

மா, பலா, வாழை, கரும்பு, தென்னை, கமுகு உள்ளிட்ட மரங்களும், மஞ்சள், இஞ்சி, செங்கழுநீர், பருத்தி, ஆமணக்கு உள்ளிட்ட செடிகளும் பயிரிடப்பட்ட நிலத்தை இறையிலியாக கொடுக்கப்பட்ட செய்தியினை அழகர் கோயில் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது. (அழகர் கோயில் கல்வெட்டுகள் பக்கம் 100-101) 

 





திருவிழாக்கள் காட்டும் பல்லுயிரியச் சூழல்:



மண்டூகமுனிவரது சாபவிமோசனத்தின் நிமித்தமாகவும், சுந்தரத்தோளுடையான் என்று ஸ்ரீ ஆண்டாள் மங்களாசாசனம் செய்த சுந்தரத்தோள்களுக்கு வருடம் ஒருமுறை ஆண்டாள் சாற்றிக்கொண்ட திருமாலையை எதிர்கொள்ளும் பொருட்டும் ஸ்ரீ சுந்தரராஜான் கள்ளர் திருக்கோலத்துடன் மதுரைக்கு எழுந்தருள்கிறார்.  


மதுரைக்காஞ்சி கூறுவதைப் போலவே, குதிரைகள் கடல்வழியாகத் தமிழகம் வந்ததைக் கீழ்க்காணும் பட்டினப்பாலை வரிகளும் உறுதிசெய்கின்றன. 




நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் - பட். 185



இப்பாடலில் வரும் நிமிர்பரிப் புரவி என்பது உயரமான குதிரைவகையினைக் குறிப்பதாகும்.  



 

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?