பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள்

 பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் 


மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி என்னும் கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் ஆவணம் செய்யப்பட்டது. அருவிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால்குடி கிராமம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. அருவிமலையின் உச்சியில் கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபாண்டியர் கால சிவன் கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் அதிட்டான பகுதி, இக்கோயில் அருகேயுள்ள பாறை,  கோயில் செல்லும் மலைப்பாதையில் உள்ள படிக்கட்டு, போன்றவற்றில் தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு விவரங்களை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதி (முதல் தொகுதி) நூலில் வெளிவந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் 'திருமேலழகிய பாண்டிய நாயனார், 'திருமேலாழி நாயனார்', 'திருமேலாழி அண்டார்', 'திருமேலாழியாண்ட நாயனார்' என்று பெயர்கள் வழங்கி வந்திருப்பதையும், ஊர்ப்பகுதிக்குப் பாக்குடி என்ற பெயர் வழங்கி வந்திருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறது. இந்தப் பாக்குடி தான் பால்குடி என்று அழைக்கப்படுகிறது. 3000 ஆண்டுகளாக இப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பதற்கான வரலாற்று சான்றுகள் பல காலகட்டங்களில் இங்கே கிடைக்கிறது. மேலும் அருவிமலையில் சமணர் கற்படுகைகளும் காணப்படுகிறது. 


இந்நிலையில் அருவிமலை சிவன் கோயிலை பராமரித்து வரும் பால்குடி கிராமத்தை சேர்ந்த திரு. கதிரேசன் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மதுரை இயற்கை பண்பாட்டு குழுவினர் பால்குடி கிராமத்தில் காணப்படும்  கற்திட்டை, கற்பதுக்கை, கல்வட்டம் உள்ளிட்ட பெருங்கற்கால சின்னங்களை ஆவணம் செய்தோம். இரும்புக்காலத்தில் நீத்தார் நினைவாக எழுப்பட்ட நினைவுச் சின்னங்கள் மிகப் பெரிய கற்களைக் கொண்டு அமைக்கப்பட்டதால் அதனை பெருங்கற்படைக்காலம் என்றும் அழைக்கின்றனர். 







மதலை கருப்பு, அய்யனார், ஏழுப்பறையன் உள்ளிட்ட தெய்வங்களாக பெருங்கற்கால சின்னங்களை இவ்வூரில் உள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். அருவிக்குளம், சின்ன அருவிக்குளம் நீர்நிலைகளில், வயல்வெளிகளில் மதலை, அய்யனார் கோயில் பகுதிகளில் என பால்குடி கிராமத்தின் பல பகுதிகளில் பெருங்கற்கால சின்னங்கள் பால்குடி கிராமத்தில் விரவி கிடக்கிறது. வேளாண்மைக்கு இடையூறாக இருப்பதால் பல பெருகற்கால சின்னங்களை மக்கள் அகற்றி விட்டனர். எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த பெருங்கற்கால சின்னங்களை மதுரை மாவட்ட நிர்வாகமும், தொல்லியல் துறையும் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். 


தமிழ்தாசன் 

16.12.2024



Dinamalar 2024


Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?