வண்டியூர் கண்மாய் என்னும் பல்லுயிரிய பண்பாட்டு ஈரநிலம்
வண்டியூர் கண்மாய் என்னும் பல்லுயிரிய பெருக்கமுள்ள பண்பாட்டு ஈரநிலம்
---------------------------------------------------------------ஈரநிலங்கள் (Wetlands):
சதுப்புநிலங்கள், ஈரமான புல்வெளிகள், கழிமுகங்கள், அலையாத்திக்காடுகள், உப்பளங்கள், பவளப்பாறைகள், டெல்டாக்கள், ஆறுகள் மற்றும் அவற்றின் வெள்ளச் சமவெளிகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், நெல்-வயல்கள் மற்றும் நீர் சுத்திகரிப்பிற்காக உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் ஆகியவை ஈரநிலங்கள் ஆகும். இயற்கையாக அமைந்த ஈரநிலங்கள் மற்றும் மனிதனால் உருவாக்கப்பட்ட ஈரநிலங்கள் அனைத்தும் ஈரநிலங்களில் அடங்கும்.
நிலவாழ் சூழல் மண்டலத்திற்கும் நீர்வாழ் சூழல் மண்டலத்திற்கும் இடையே அமைந்துள்ள ஈரநிலங்கள் இயற்கை சுத்திகரிப்பு நிலையங்களாக விளங்குகின்றன. உலகில் மொத்தம் 6 சதவீதமே ஈரநிலங்கள் உள்ளன. ஆனாலும் உலகில் 40 சதவீத உயிரினங்களுக்கு வாழிடமாக ஈரநிலங்கள் விளங்குகின்றன. வெள்ளப்பெருக்கின் போது நுரைப்பஞ்சு போல செயல்பட்டு அதிகப்படியான வெள்ளநீரை உறிஞ்சி பாதிப்பை குறைப்பதில் ஈரநிலங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 50 ஆண்டுகளில் 35 சதவீத ஈரநிலங்கள் அழிந்துள்ளன. அழிந்து வரும் ஈரநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு கடந்த 1971 ஆம் ஆண்டு 172 நாடுகள் சேர்ந்து ஈரநிலங்களை பாதுகாக்கும் ஒப்பந்தத்தை ராம்சார் நகரில் ஏற்றுக் கொண்டது. அது ராம்சார் ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு இந்தியாவும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த 80க்கும் மேற்பட்ட ஈரநிலங்கள் ராம்சார் தளமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் கோடியக்கரை வன உயிரின சரணாலயமும் 2002 ஆம் ஆண்டு ராம்சார் தளமாக அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் முயற்சியால் 2022 - 2024 ஆண்டில் தமிழ்நாட்டில் மேலும் 15 புதிய ராம்சார் தளங்களைப் பெற்றது.
தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம்:
காலநிலை மாற்றத்தின் விளைவுவால் ஏற்படும் இடர்பாடுகளை தணித்தல், பல்லுயிரிய வகைமையை பாதுகாத்தல், வலசை வரும் பறவைகளின் வாழ்வாதாரமாக விளங்குதல், வடிகட்டியாக செயல்பட்டு நீரை தூய்மைபடுத்துதல், நீர் சுழற்சி, கார்பன் சுழற்சி, நைட்ரஜன் சுழற்சியை தொடர்ந்து இயங்க செய்தல், மண் அரிப்பை தடுத்தல், உணவு சங்கிலியை உறுதி செய்தல் என சுற்றுச்சூழலில் முக்கிய பாத்திரமாக விளங்கும் ஈரநிலங்களை பாதுகாக்க ''தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம்'' தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆண்டு துவங்கப்பட்டது. தமிழ்நாட்டில் சூழல் முக்கியத்துவம் வாய்ந்த 100 ஈரநிலங்களை தேர்வு செய்து பாதுகாக்கும் நடவடிக்கையை தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கம் வாயிலாக தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. அவ்வகையில் மதுரை மாவட்டத்தில் பல்லுயிரிய பெருக்கமுள்ள ஈரநிலங்களாக வண்டியூர் கண்மாய், குன்னத்தூர் கண்மாய், தேனூர் பெரியகுளம் கண்மாய், உரப்பனூர் கண்மாய் உள்ளிட்ட 4 கண்மாய்கள் தமிழ்நாடு ஈரநிலங்கள் இயக்கத்தின் கீழ் சேர்க்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மதுரையும் மாயமாகும் ஈரநிலங்களும்:
2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மொத்த ஈரநிலங்களின் பரப்பளவு 6.92 சதவீதம். அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ஈரநிலங்களின் பரப்பளவு 18.05 சதவீதம் என்றும், மதுரை மாவட்டத்தின் ஈரநிலங்களின் பரப்பளவு 6.58 சதவீதம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்ட ஈரநிலங்களின் பரப்பளவு - 24614 ஹெக்டேர் (60,822.5 ஏக்கர்) என புவியியல் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றன.
மதுரை நகரில் இதுவரை 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள், ஏரிகள், தெப்பக்குளங்கள் நகரமயமாக்களுக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது. பெரியார் பேருந்து நிலையம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், மாவட்ட நீதிமன்றம், உயர்நீதிமன்றம், உலக தமிழ் சங்கம், பாண்டிக்கோயில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட கட்டடங்கள் அனைத்தும் நீர்நிலைகளை அழித்து கட்டப்பட்டவையாகும். இந்த நிலையில் சாலை விரிவாக்கத்திற்க்காக மதுரை தென்கால் கண்மாயும், வண்டியூர் கண்மாயும் இன்றும் கூட ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வரும் பாதிப்புகள் பற்றிய படிப்பினைகளை ஆளும் அரசுகள் கவனிப்பதில்லை என்பதையே இது காட்டுகிறது.
வண்டியூர் கண்மாய் பரப்பளவும் ஆக்கிரமிப்பும்:
வண்டியூர் கண்மாய் 687.36 ஏக்கர் பரப்பில் இருந்தபோது, 107.03 மில்லியன் கன அடிவரை தண்ணீர் தேக்கப்பட்டது. இதன் மூலம் 963 ஏக்கர் பாசன வசதி பெற்றன. மாட்டுத்தாவணி அரசு மற்றும் தனியார் பேருந்து நிலையம், பூ மார்க்கெட், தனியார் மருத்துவமனை வளாகம் ஆக்கிரமிப்புகள் போக தற்போது வண்டியூர் கண்மாய் 576.36 ஏக்கர் பரப்பளவு மட்டுமே எஞ்சியுள்ளது. இவை போக தனியார் நிறுவனங்கள், குடியிருப்புகள் வண்டியூர் கண்மாயை ஆக்கிரமித்துள்ளன. இப்போது சாலை விரிவாக்கம் என்ற பெயரில் வண்டியூர் கண்மாய் மேலும் ஆக்கிரமிக்கபடுகிறது. மிகப்பெரிய ஏரி ஒரு குட்டையாக மாறி கிடக்கிறது. தென்மேற்கு முனையில் அமைந்துள்ள கழுங்கடி பாண்டி கோயில் துவங்கி கோமதிபுரம் முதல் தெரு வரையுள்ள பரப்பை மேலமடை கண்மாய் என்று அழைக்கும் வழக்கும் முன்பு இருந்துள்ளது. இப்போது மொத்த பரப்பும் வண்டியூர் கண்மாய் என்றே அழைக்கப்படுகிறது.
வண்டியூர் கண்மாய் நீர்வளத்துறை விவரம்:
கண்மாயின் நீர்ப்பிடிப்பு பகுதி: 687.360 ஏக்கர் கண்மாயின் கொள்ளளவு: 107.03 மி.கனஅடி கண்மாயின் பதிவு பெற்ற பாசன பரப்பு: 390.17 ஹெக்டேர் கண்மாயின் கரை நீளம்: 2077 மீட்டர் கலிங்குகளின் எண்ணிக்கை: 2 கண்மாய் உபரி நீர் வெளியேற்றும் திறன்: 4059 கன அடி / வினாடி கண்மாயின் முழு கொள்ளளவு மட்டம்: 128.920 மீட்டர் அதிக பட்சம் கொள்ளளவு மட்டம்: 129.460 மீட்டர் கண்மாய் கரை கொள்ளளவு மட்டம்: 130.980 மீட்டர்
வண்டியூர் கண்மாயும் மக்கள் புழக்கமும்:
வண்டியூர் கண்மாய் வறண்டு கிடந்தாலும் நீர் நிறைந்து இருந்தாலும் கண்மாயை சுற்றியுள்ள மக்கள் கண்மாயோடு மரபார்ந்த உற்பத்தி உறவை கொண்டு இருந்தனர். வேளாண் சமூக மக்களுக்கு வண்டியூர் கண்மாய் பாசன நீரை வழங்கியது. மீன்பிடிக்கும் சமூக மக்களுக்கு இன்று வரை வாழ்வாதாரமாக வண்டியூர் கண்மாய் விளங்கி வருகிறது.
சலவை தொழில் செய்யும் மக்களுக்கும், மேய்ச்சல் சமூக மக்களின் கால்நடை வளர்ப்புக்கும் தேவையான நீரை வண்டியூர் கண்மாய் வழங்கியது. வண்டியூர் கண்மாயில் இருந்து மடை வழியாக மேலமடை ஊரணிக்கு திறந்துவிடப்பட்ட தண்ணீர் குடிநீராகவும் பயன்பட்டது. ஊரணிக்கு திறந்துவிடப்படும் மடைக்கு, மேலமடை என்று பெயர். அதுவே இக்கண்மாய் கரையில் உள்ள ஊருக்கும் பெயராகவும் அமைந்தது. கிணற்று ஊற்றுநீர் பெருகவும், நிலத்தடி நீர் பெருகவும் வண்டியூர் கண்மாய் காரணமாக இருந்து வருகிறது. இக்கண்மாயின் அருகில் நிலத்தடிநீரை உறிஞ்சும் பல்வேறு தனியார் குடிநீர் நிறுவனங்கள் அமைந்துள்ளன.
வறண்டு கிடக்கும் வண்டியூர் கண்மாயானது நிலமற்ற சமூக மக்கள் வெள்ளரி, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிடும் நிலமாக விளங்கியது. பட்டியலின மக்கள் பன்றி வளர்ப்பு கூடாரமாகவும் வண்டியூர் கண்மாய் புதர்களை பயன்படுத்தி வந்தனர். பயிரிடும் நிலங்களை வளப்படுத்த வேளாண்குடிகளால் கண்மாயில் உள்ள வண்டல் மண் எடுத்து பயன்படுத்தப்பட்டது. ஜல்லிக்கட்டு நடத்தும் திடலாகவும், இளைஞர்களின் விளையாட்டு மைதானமாவும் விளங்கியது. நீர் இருந்தாலும் வறண்டு கிடந்தாலும் கண்மாயோடு மக்கள் கொண்டிருக்கிற மரபார்ந்த தொழில்படும் உறவு நீடித்தே வந்திருக்கிறது என்பதே வண்டியூர் கண்மாயின் சிறப்பாகும்.
வண்டியூர் கண்மாய் பண்பாட்டு தடங்கள்:
கழுங்கடி பாண்டி கோயில், விநாயகர் கோயில், புளியமரத்து பெருமாள் கோயில், ஜன்னத்துல் மசூதி, அமலோற்பவ மாதா சிற்றாலயம், கல்கத்தா காளி கோயில், பொன்னர் சங்கர் கோயில், நடுகாட்டம்மன் கோயில், பாண்டி கோயில் உள்ளிட்ட கோயில்கள் வண்டியூர் கண்மாய் கரையில் அமைந்துள்ளன. கரைகளை சீரமைக்கும் முயற்சியின் போது பொதுப்பணித்துறையால் வண்டியூர் கண்மாய் படித்துரையும், பழமையான புளியமரம் 15 ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்டது. கடந்த மே மாதம் வண்டியூர் கண்மாய் கரையில் வழிப்போக்கர்களின் அடைக்கலமாக விளங்கிய 120 ஆண்டுகள் பழமையான மேலமடை பொது சாவடி சாலை விரிவாக்கத்திற்க்காக இடிக்கப்பட்டது. 30க்கும் மேற்பட்ட கரையோர மரங்கள் அகற்றப்பட்டது.
கண்மாய் பெருக மழை வேண்டி வேளாண்குடி மக்கள் நிகழ்த்தும் கனிமாற்று சடங்கு புளியமரத்து பெருமாள் கோயிலில் நடைபெற்று வந்து இருக்கிறது. கழுங்கடி பாண்டிச்சாமியை வழிபட்டு கண்மாய் மடையில் இருந்து நீர் திறக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். மதுரையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் பாண்டி கோயில் வண்டியூர் கண்மாய் வடகிழக்கு எல்லையில் தான் அமைந்துள்ளது.
வண்டியூர் கண்மாயில் இரு இடங்களில் குமிழி தூம்பு தூண்கள் அமைந்துள்ளன. அவை 1000 ஆண்டுகள் முதல் 500 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கலாம் என்கிறார் கோயில் கட்டடக்கலை ஆய்வாளர் பேரா. தேவி அறிவு செல்வம் அவர்கள்.
வண்டியூர் கண்மாய் வரத்து கால்வாய்:
சாத்தியார் அணையின் கால்வாய் தான் வண்டியூர் கண்மாயின் முதன்மை நீர் வரத்து கால்வாயாகும். வைகை - பெரியார் பிரதான கால்வாய் நீரும் வண்டியூர் கண்மாயின் வரத்து கால்வாயாக உள்ளது.
சிறுமலையில் உற்பத்தியாகும் சாத்தியார் அணையின் கடைமடை பாசனம் பெரும் கண்மாயாக வண்டியூர் கண்மாய் விளங்குகிறது. வண்டியூர் கண்மாய்க்கு வரும் சாத்தியார் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. சாத்தியார் அணையின் பாசனம் பெரும் தொடர் கண்மாய்களில் ஒன்றான ஆத்திக்குளம் கண்மாய் மறுகால் ஓடையும் வண்டியூர் கண்மாய்க்கு வரத்து கால்வாயாக உள்ளது.
கருப்பாயூரணி - பாண்டிகோயில் வழியாக செல்லும் வைகை - பெரியார் கால்வாயின் கிளை கால்வாய் நீர் வண்டியூர் கண்மாய்க்கு கிடைக்கிறது.
வண்டியூர் கண்மாய்க்குள் கழிவு நீர்:
கே.கே நகர் பகுதியின் கழிவு நீர் வண்டியூர் நடையாளர் கழக பூங்கா வழியாக கண்மாய்க்குள் விடுப்படுகிறது. பூ மார்க்கெட் ஒட்டி செல்லும் ஆதிக்குளம் மறுகால் ஓடையிலும், மாட்டுத்தாவணி ஆம்னி பேருந்து நிலையம் ஒட்டி செல்லும் சாத்தியார் கால்வாயிலும் மதுரை நகரின் கழிவு நீரும் வண்டியூர் கண்மாயில் கலக்கிறது. வண்டியூர் கண்மாயை சுற்றியுள்ள மருத்துவமனை கழிவு நீரும் வண்டியூர் கண்மாய்களில் விடப்படுகிறது. வண்டியூர் கண்மாய் இன்று கழிவு நீர் குட்டையாக மாறிவிட்டது.
கண்மாயின் நன்னீர் மீன்கள்:
கெண்டை, வெளிச்சி, கெளுத்தி உள்ளிட்ட நன்னீர் மீன்கள் பெருகி கிடந்த வண்டியூர் கண்மாயில் இப்போது சிலேபி, ரோகு, மிர்கால், தேளி, கொசு மீன் உள்ளிட்ட அயல் மீன்களே பெருகி கிடக்கிறது. கழிவு நீர் பெருக்கத்தாலும், வளர்ப்பு மீன்கள் பெருக்கத்தாலும் வண்டியூர் கண்மாயின் இயல்பான நீர் வாழ் உயிரினங்கள் அற்றுப் போய்விட்டது. கடந்தாண்டு மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை நிகழ்த்திய நன்னீர் மீன்கள் கணக்கெடுப்பில் 20 வகை நன்னீர் மீன் இனங்கள் ஆவணம் செய்யப்பட்டது. அதில் 11 வகை மீன் இனங்கள் அயல் மற்றும் வளர்ப்பு மீன் இனங்கள் ஆகும். இயல் மீன் இனங்களை விட அயல் மீன் இனங்களே வண்டியூர் கண்மாயில் பரவலாக காணப்படுகிறது.
வண்டியூர் கண்மாய் பறவைகள்:
வண்டியூர் கண்மாயில் இதுவரை 125 வகை பறவை இனங்கள் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. அதில் பூநாரை, கூழைக்கடா, நீலச்சிறகி, நெடுங்கால் உள்ளான், மீசை ஆலா, சங்குவளை நாரை உள்ளிட்ட 31 வகை பறவை இனங்கள் வலசை வருபவையாகும். வெண்கழுத்து நாரை, பாம்புத்தாரா, கூழைக்கடா, கருந்தலை அன்றில், பட்டைவால் மூக்கன் உள்ளிட்ட 5 பறவை இனங்கள் அழிவை சந்திக்கும் அச்சுறுத்தல் பட்டியலில் உள்ள பறவைகள் வண்டியூர் கண்மாயில் ஆவணம் செய்யப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டு குடியிருப்பு சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள் அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியர் திரு. சுப்பிரமணியன் தலைமையில் வண்டியூர் கண்மாயை தூர்வாரி, வண்டியூர் கண்மாய் நடுவில் தீவு ஒன்றை அமைத்தனர். அதில் நாட்டு கருவேல மரங்கள் வைத்து பறவைகள் இளைப்பாறும் இடமாக மாற்றம் முயற்சிகளை செய்தனர். தீவு அமைத்ததோடு பணிகள் நின்று போனது. இப்போது அத்தீவில் சீமை கருவேல மரங்கள் அடர்ந்துள்ளது. பறவைகள் எண்ணிக்கை மேம்பட வண்டியூர் கண்மாயில் உள்ள தீவில் கருவேலம், பனை, ஆலம் உள்ளிட்ட நாட்டு மரங்கள் நட்டு வளர்க்க வேண்டும்.
வண்டியூர் கண்மாய் பாசனத்திற்கும், நிலத்தடி நீர் பெருக்கத்திற்கு மட்டும் உரிய கண்மாய் அல்ல. 125 வகை பறவை இனங்கள்; ஆலமரம், அரசமரம், புளியமரம், வெள்வேலம், கருவேலம், இலந்தை, வாகை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மரங்கள்; குரவை, விரால், உழுவை, அயிரை, கெண்டை பொடி உள்ளிட்ட 20 வகை நன்னீர் மீன் இனங்கள், தண்ணீர் பாம்பு, பசும்நீர் பாம்பு, சாரை உள்ளிட்ட 15 வகையான பாம்பு இனங்கள்; காட்டுப்பூனை, சாம்பல் நிற கீரி, காட்டு முயல், இந்திய அணில், வெள்ளெலி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட பாலூட்டி வகை உயிரினங்களின் வாழிடமாக வண்டியூர் கண்மாய் விளங்குகிறது.
பல்லுயிரிய பெருக்கமுள்ள வண்டியூர் கண்மாய் அதன் சூழலியல் முக்கியத்தை கணக்கில் கொண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
- தமிழ்தாசன்
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை (MNCF)
11.06.2024
ஒளிப்படம்: இரா. பிரபாகரன், அவேதா ஸ்டுடியோ
இடிக்கப்படும் 120 ஆண்டுகள் பழமையான மேலமடை பொதுச் சாவடி:
1. தமிழ் லோக்கல் செய்தி 01.06.2024
2. தி ஹிந்து நாளிதழ் 02.06.2024
3. காமத்தேனு இதழ் - இந்து தமிழ் 02.06.2024
வண்டியூர் கண்மாய் பறவைகள் சரணாலயம்:
4. இந்து தமிழ் நாளிதழ் 03.06.2024
வெட்டப்படும் வண்டியூர் கண்மாய் கரையோர மரங்கள்:
5. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் 07.06.2024
6. டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் 07.06.2024
வண்டியூர் கண்மாய் பறவைகள் சரணாலயம்:
7. தினமலர் நாளிதழ் 11.06.2024
8. டைம்ஸ் ஆப் இந்திய நாளிதழ் 10.06.2024
கட்டுரைக்கு துணை புரிந்த ஆதாரங்கள்:
1. https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr050623_1105.pdf
2. https://tnswa.org/projects
3. தினமணி நாளிதழ் 08.08.2022 ஈரநிலங்கள் சிறப்பு கட்டுரை
செய்தியின் இணையதள இணைப்புகள் பின்னூட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment