ஆறுகளைத் தேடி - சிலம்பாறு
ஆறுகளைத் தேடி
- சிலம்பாறு
பசுமையான வணக்கம்.
நாம் அனுபவித்த, ரசித்த, பார்த்த இந்த பூவுலகை அடுத்த தலைமுறைக்கு அறிமுகபடுத்தும் பொறுப்போடும், நிகழும் இயற்கை பேரழிப்புக்கு எதிராக மக்களை விழிப்படைய செய்து போராடவும் நாணல் நண்பர்கள் இயக்கம் கடமைபட்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஆறுகளைத் தேடி என்கிற நிகழ்வை 22.03.2015, ஞாயிறு உலக தண்ணீர் தினத்தன்று
ஒரு பயணமாக துவங்கி இருக்கிறது. மதுரையில் நீர்நிலைகளும் ஆறுகளும் சிதைக்கப்பட்டு வரும் சூழலில் இந்த பயணம் மிக முக்கியமானதாக கருதுகிறோம். மதுரையில் வையை (வைகை) ஆறு மட்டுமே உள்ளது என்கிற சிந்தனை போக்கை மாற்றவும், சிற்றாறுகள், காட்டாறுகள், கிளையாறுகள் போன்ற நீராதாரங்கள் மீது கவனம் கொள்ளவும், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை பரப்பவும் இந்த பயணம் உதவுமென
பெரிதும் நம்புகிறோம்.
ஆறு:
ஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. ஆற்றின் இருபுறமும் உள்ள நிலப்பகுதி கரை என அழைக்கப்படுகிறது. ஆறுகள் பொதுவாக மற்றொரு ஆற்றிலோ, ஏரிகளிலோ அல்லது கடலிலோ இணைகின்றன. இயற்கையாக உற்பத்தியாகி நதியில் கலக்கும் ஆறு துணையாறு. ஒரு நதியில் இருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளையாறு ஆகும். இயற்கையாக உற்பத்தியாகி சிறு தொலைவிலேயே ஆவியாகி அல்லது வறண்டு போகும் ஆறு சிற்றாறு. மழை காலத்தில் திடீரென ஒருசில நாட்கள் மட்டும் ஓடும் ஆறு காட்டாறு ஆகும். ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர் நிலையை அடைய முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு.
பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்று சிறையவை சிற்றாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது.
ஆறு நீர் வட்டத்தின் ஒரு கூறு ஆகும். ஆற்றில் இருக்கும் நீர் பொதுவாக மழை வீழ்ச்சி போன்றவற்றிலிருந்து பெறப்படுகிறது. புவி மேற்பரப்பில் வழிந்து ஓடுவதன் மூலமும், நிலத்தடி நீரை மீள்விப்பதன் மூலமும், இயற்கையான நீர் நிலைகள் நிரம்புவதன் மூலமும் மழை நீர் ஆற்றை அடைகின்றது.
ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, பனியாறுகள் உருவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். பொதுவாக ஆறுகளுடன் வேறு ஆறுகள் பிரிவதுமுண்டு வந்து இணைவதும் உண்டு. இத்தகைய ஆறுகள் கிளையாறுகள் அல்லது துணையாறுகள் என அழைக்கப்படுகின்றன. ஆற்றில் கொண்டு செல்லப்படும் நீரின் அளவு. ஆற்றில் மேற்பரப்பில் செல்லும் நீரும், கண்ணுக்குத் தெரியாமல் நிலத்துக்குக் கீழ் செல்லும் நீரும் சேர்ந்தது ஆகும். (Wikipidea)

சிலம்பாறு:
பழமுதிர்ச்சோலை, அழகர் கோவில், ராக்காயி அம்மன் தீர்த்தம், கோம்பை கோவில் அமைந்துள்ள மதுரை அழகர்மலைக் காடுகளில் உற்பத்தியாகிறது சிலம்பாறு. மழை காலங்களில் மட்டுமே நீர் ஓடும் சிலம்பாறு ஒரு சிற்றாறு ஆகும். காட்டெருமை, மான், குரங்கு, நரி, பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள் என பல்லுயிர் பெருக்கமுள்ள அழகர் மலையில் சித்தருவி, பெரிய அருவி, தண்ணிக்கல்லு அருவி, கொரக்கொண்ட அருவி, வண்ணான் அருவி, பேப்புலாக் கொடை, வாழக்கவியூத்து, வாவூத்து, பச்சகாச்சி ஊத்து, தாழையூத்து, எருதுமேடு ஊத்து,
கருடர் தீர்த்தம், ராக்காயி தீர்த்தம், கேட தீர்த்தம், அனுமார் தீர்த்தம் என பல்வேறு ஊற்றுகளும் நீரோடைகளும் காட்டில் உள்ளன. அழகர் மலையில் பெய்யும் மழைநீரும், நீர் ஊற்றுகளும் ஓடையாக கலந்து ஓடி, சிலம்பாற்றை உற்பத்தி செய்கிறது. திருமாலிருஞ்சோலை, திருமால் குன்றம், மாலிருங்குன்றம் என்ற பல பெயர்களால் சுட்டப்படும் வைணவத் தலமான அழகர் கோவிலின் மேற்கு மதிலை ஒட்டி வந்து, கன்னிமார் கோவிலை கடந்து வெளிப்புற கோட்டைக்கு மேற்கில் உள்ள ஆராமத்துக்குளம் கண்மாயில் ஒரு சிறு ஓடையாக போய் நிரம்புகிறது. (ஆராமம் என்பது சங்காராமம் - பௌத்த பிட்சுகள் வசிக்கும் இடம்) பின் அங்கிருந்து நாயக்கன் குளம், பொய்கைக்கரைப்பட்டி என வரிசையாக தொடர் நீர்நிலைகளை நிரப்பி இறுதியாக வைகையில் கலந்தாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். சிலம்பாறு வைகையில் கலப்பதற்கான எந்த சான்றும் இப்போதில்லை.

இலக்கியத்தில் சிலம்பாறு:
"அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய,
சிலம்பாறு அணிந்த, சீர் கெழு திருவின்
சோலையடு தொடர் மொழி மாலிருங்குன்றம்" (பரிபாடல் 15)
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது,
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து,
வந்தனை மும் முறை மலை வலம் செய்தால்,
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்தலை (சிலப்பதிகாரம்)
கடை சங்க காலத்தை சேர்ந்த மன்னன் இளம்பெருவழுதி எழுதிய பரிபாடலில் சிலம்பாறு குறித்து வருகிறது. "இம்மலையில் பிறக்கும் சிலம்பாற்றினை பரிபாடலும் சிலப்பதிகாரமும் 'சிலம்பாறு' என்றே குறிக்கின்றன. இதே பொருளில் இப்பெயர் 'நூபுரகங்கை' எனவும் வழங்கப்படுகிறது. மஞ்சீரனதி எனவும் இந்நதியினை குறிப்பிடுகின்றது. அழகர் கோவில் தலபுராணமோ இன்னும் மூன்று பெயர்களை இந்நதிக்கு இட்டு அப்பெயர்களை விளக்கவும் செய்கிறது. பவகாரணி, இட்டசித்தி, புண்ணிய சரவணம் எனும் பெயருடன் இம்மலையில் மூன்று பொய்கைகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறும். ஆழ்வார்களின் பாசுரங்களிலோ சிற்றிலிக்கியங்களிலோ இச்செய்தி காணப்படவில்லை. எனவே தலபுராண ஆசிரியர் இப்பெயர் வழக்குகளை சிலப்பதிகார சிலம்பாறு என்பதில் இருந்தே பெற்றிருக்கக் கூடம்" என்கிறார் பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்கள்.
தமிழ்தாசன்
9543663443
Comments
Post a Comment