நம்ம வரலாறு - நாட்டார் தெய்வங்கள்
நாணல் நண்பர்கள் குழு ஒருங்கிணைக்கும் 3வது
"நம்ம வரலாறு" நிகழ்வு கடந்த 15.06.2014 ஞாயிறு, மாலை 4.30 மணிக்கு மதுரை
பாண்டி முனீஸ்வரன் கோவிலில் நடந்தது. இம்முறை நம்ம வரலாறு நிகழ்வில்
"நாட்டார் தெய்வங்கள்" குறித்து எடுத்துரைக்கபட்டது.
நம்ம வரலாறு
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் திரு. சா. கான்சா சாதிக் மற்றும் சே. ஸ்ரீதர்
நெடுஞ்செழியன் மிகவும் நேர்த்தியாக திட்டமிட்டு நிகழ்வை
ஒருங்கிணைத்திருந்தார்கள். நாட்டார் தெய்வமான பாண்டிக் முனீஸ்வரன் கோவில்
இடத்தை நாட்டார் தெய்வங்கள் குறித்து பேச தேர்வு செய்ததில் இருந்தே
புரிந்துக் கொள்ளலாம். நாற்பது வருடங்களாக நாட்டார் வழக்குகள், நாட்டுபுற
இசை, தமிழிசை ஆராய்ச்சிக்கென தன் வாழ்வை அர்பணித்த தமிழிசை அறிஞர் திரு.
மம்மது அவர்களை நிகழ்வின் சிறப்பு பேச்சாளாராக அழைத்து கூடுதல் சிறப்பு.
தாது மணல் கொள்ளை, அணு உலைக்கு எதிராக போராடி வரும் தோழர். முகிலன்,
வானகத்தில் இருந்து வெற்றிமாறன், மே 17 இயக்கத்தை சேர்ந்த கார்த்திகேயன்,
இயற்கை ஆர்வலர் திரு. சுந்தர கிருஷ்ணன், சுற்றுலா வழிகாட்டி திரு. சிவ
குருநாதன், சமூக ஆர்வலர்கள் திரு. விக்கி, சரவணன், அருணாச்சலம், வாகப்
ஷாஜகான், ரகுநாத், இளஞ்செழியன் கதிர் மற்றும் ஒளிப்பட கலைஞர் திரு. குணா
அமுதன், பாபு ஆகியோர்கள் உட்பட சுமார் 50 பேர் இந்நிகழ்வில் கலந்து
கொண்டனர். அதில் சரிபாதி பள்ளிக்கூட சிறார்கள்.
நாட்டார் தெய்வங்கள் இந்த மண்ணின்
மைந்தர்கள். இந்த மண்ணில் வாழ்ந்து மடிந்த சக மனித உயிர்கள். நம் மண்ணின்
கருணைக்கு, வீரத்திற்கு, அவலத்திற்கு, அறத்திருக்குமான சாட்சிகள். எனவே நம்
மண்ணில் சிலைகளாக, நடுகல்லாக இருக்கிற சாமிகளின் வரலாறை அறிந்து கொள்ளுதல்
பாரம்பரிய தேடலில் மிக மிக அவசியமாகிறது. எழுத்தாளர் திரு.ச.தமிழ்
செல்வனின் "சாமிகளின் பிறப்பும் இறப்பும்" நூல் வழியே நம் நாட்டார்
தெய்வங்களின் தனி சிறப்புகளை இப்பதிவில் எடுத்து வைக்கிறோம். சாமிகளை
இரண்டாக பிரித்து கொள்வோம். பணக்கார சாமிகள் (சிவன், விஸ்ணு, ஏசு,
அல்லா...) மற்றும் நாட்டார் சாமிகள் (காளி, பாண்டி, முனி, சுடலைமாடன்...).
ஒவ்வொரு நாட்டார் தெய்வங்களும் இடத்திற்கு இடம் மாறுபட்டவை.
பணக்கார
சாமி வழிப்பாட்டில் பகவத் கீதை, சைவத் திருமறைகள், விவிலியம், குரான்
போன்ற வேத நூல்கள் உள்ளன. ஆனால் நட்டார் தெய்வங்களுக்கு எந்த வேத நூலும்
வேத மந்திரமும் கிடையாது. ஊர் பாதுகாப்பிற்காக உயர் நீத்தவர்கள் அல்லது
அநியாமாக கொலை செய்யப்பட்டவர்கள், தற்கொலை செய்து கொண்ட எளிய மனிதர்கள்
அப்படியே சாமி ஆனார்கள். அவர்கள் இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள்.
பணக்கார
சாமிகளுக்கு மடப்பள்ளியில் பூசாரிகளால் தயாரிக்கப்பட்ட வகை வகையான
தீட்டில்லாத சைவச் சாப்பாடுகள் படைக்க வேண்டும். நாட்டார் தெய்வங்களுக்கு
கத்திரிக்காய் முதல் கறிச்சாப்பாடு வரை எளிய மக்கள் என்ன உண்பார்களோ அதையே
படைப்பார்கள். பீடி, சுருட்டு சாராயமென எளிய மக்களிடம் என்ன இருக்கிறதோ
அதையே ஏற்றுக் கொள்கிறது நாட்டார் சாமி. அதற்க்கு தீட்டு என்று எதுவும்
கிடையாது. நாட்டார் தெய்வங்களுக்கு மக்கள் அனைவரும் சமம்.
பணக்கார சாமிகளுக்கான வழிப்பாடுகளை மக்கள் நேரடியாக செய்ய முடியாது. வேத மந்திரங்கள், வேத வசனம் பயிற்சிக்கபட்ட ஒரு புரோகிதர் அல்லது பாதிரியார் நடுவில் இருந்து தலைமை ஏற்று வழி நடத்துவார். பெண்கள் உட்பட விவசாயம், மேய்ச்சல் போன்ற வேலை செய்யும் எளிய மக்கள்தான் நாட்டார் தெய்வங்களின் பூசாரிகள்.
பணக்கார சாமிகளுக்கான வழிப்பாடுகளை மக்கள் நேரடியாக செய்ய முடியாது. வேத மந்திரங்கள், வேத வசனம் பயிற்சிக்கபட்ட ஒரு புரோகிதர் அல்லது பாதிரியார் நடுவில் இருந்து தலைமை ஏற்று வழி நடத்துவார். பெண்கள் உட்பட விவசாயம், மேய்ச்சல் போன்ற வேலை செய்யும் எளிய மக்கள்தான் நாட்டார் தெய்வங்களின் பூசாரிகள்.
அம்மன், காளி, முனி, கருப்பு, அய்யனார்,
பாண்டி, சுடலை மாடன் போன்ற நாட்டார் தெய்வங்களுக்கு விரதம் இருந்து
வணங்குகிற மனிதர்கள் உடம்பில் இறங்கி, சாமி வந்து பேசும். ஆனால் பணக்கார
சாமிகள் மக்களோடு பேசாது, கல்லாக இருக்கும்.
பணக்கார
சாமிகளின் கோவில்கள் கட்டுவதற்கும் சிலைகள் வடிப்பதற்கும் ஆகம விதிகள்
போன்ற கட்டுமான விதிகள் உண்டு. ஆனால் நாட்டார் தெய்வங்களுக்கு வெறும் மண்ணை
குழைத்து பீடமாக கட்டுவார்கள் அவ்வவளவுதான். நம் நாட்டார் தெய்வங்களோ
நடுகல்லாக, சிலையாக எளிய மக்களை போல வெயிலிலும் மழையிலும் கம்பீரமாக
நிற்கும்.
நிகழ்வின்
ஒருங்கிணைப்பாளர் திரு. சாதிக், பாண்டிக் கோவில் சம்மந்தமான தகவல்களை
பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில் "கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில்
முத்தரையர் வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்புக்காக மதுரை வந்து,
இப்போது பாண்டிக் கோவில் என்ற சொல்லபடுகிற இடத்தில் மண்ணை தோண்டுகிற போது
ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை
வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத்
தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது.
வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த
காட்டுப்பகுதியாக- நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற
ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம்.
நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி
வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே கோவில்
பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட- திட்டங்களைப்
போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால்
வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு
சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட கோவிலாக பாண்டிக்க்கோவில் மாறியது.
வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து
வந்தனர். பூசாரி வம்சாவழியில் பாண்டி என்பவர் இந்தக் கோவிலில் பூசாரி யாக
இருந்தபோது 'பாண்டி பூசாரி கோவில்' என அழைக்கப்பட்டு, நாளடைவில்
ஜடாமுனீஸ்வரர் என்பது மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது என்று கோவில்
தரப்பில் சொல்லப்படுகிறத"என்றார். மேலும் அவர் பேசுகையில் "மதுரை பாண்டி
முனீஸ்வரர் கோவிலில் இருக்கிற பாண்டி முனி என்பது சமணத் தீர்த்தங்கரர்
சிற்பம் என்று தொல்லியல் துறை ஆய்வு சொல்கிறது. அதே சமயம் இந்த இரண்டு
கருத்துகளையும் மறுத்து, இந்த சிலை மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனின் சிற்பமாக
இருக்கலாம். இதை சமண தீர்ந்தங்கார் என்று அறுதியிட்டு சொல்ல முழுமையான
ஆய்வு இல்லை என்றும் தமிழ் அறிஞர் சிலர் கூறுகின்றனர். ஒன்றை இங்கு
வலியுறுத்த விரும்புகிறேன். பகுத்தறிந்து வாழுங்கள்" என்றார்.
"கிடா
வெட்டுக்கு பிரசத்தி பெற்ற பாண்டிமுனி ஒரு சைவச்சாமி. பாண்டி- ஆண்டி-
சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கிறது. பாண்டிக்குக் கட்டுப்
பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள்.
ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய
கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள்
கெடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல்,
நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி
பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார்
பாண்டி. லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக
வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக் கடன்
செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள்
என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக்
கடந்து பலதரப்பட்ட மக்கள் பாண்டிக் கோவில் வந்து செல்கின்றன." என்றார்
பாண்டிக் கோவில் பரம்பரை அறங்காவலர் திரு.க. சிவாஜி அவர்கள்.
தமிழிசை
அறிஞர் திரு. மம்மது அவர்கள் பேசுகையில் "சைவம், வைணவம், வைதீகம், சமணம்,
பௌத்தம், தோன்றுவதற்கு முன்பு தமிழர்களுக்கு சமயங்கள் இல்லை. ஆனால்
கொற்றவை,
அணங்கு, முருகு, போன்ற நாட்டார் தெய்வ வழிபாடு சங்க இலக்கியங்களில்
குறிப்பிடப்படுகின்றன. சிவன், விஷ்ணு போன்ற பணக்கார சாமிகளை பெரும்
தெய்வங்கள் என்றும்... காளி, அம்மன், பாண்டி, கருப்பு, சுடலை மாடன், சமயன்
போன்ற நமது நாட்டார் தெய்வங்களை சிறு தெய்வம் என்றும் அழைத்து வந்தனர்.
வரலாற்று உண்மை மிகுந்த நமது தெய்வங்களை "நாட்டார் தெய்வம்" என்ற வழக்கை
மாற்றியது திருநெல்வேலியை சேர்ந்த திரு சிவா சுப்பிரமணியன் அவர்கள்தான்.
அக்காலத்தில் போரில் வீர மரணம் அடைந்தவர்களை புதைத்து நடுகல் நட்டு
தெய்வமாக வழிப்படும் வழக்கம் தமிழ் சமூகத்தில் இருந்தது. ஊரை காலி செய்து
வெளியூர் போகும் குடும்பத்தார்கள் தங்கள் குலத் தவத்தின் பிடி மண்ணை
எடுத்து குழைத்து புதிதாக குடியேறும் ஊரில் சிலை வடித்தோ, கோவில் கட்டியோ
வழிபடுவார்கள். பணக்கார தெய்வங்கள் போல் அல்லாமல் அவர்களுக்கு இரண்டு
கால்கள், இரண்டு கைகள் என நம்மை போன்றே உருவம் இருக்கும். நம் நாட்டார்
தெய்வங்களில் பெண் தெய்வங்கள் அதிகம். எல்லோரம் ரத்தமும் சதையுமாக நம்முடன்
வாழ்ந்தவர்கள்.
நாட்டார்
தெய்வங்கள் வரிசையில் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் கோவில் சுவர் எழுப்பி
ஒரு "பனை மரம்" தெய்வமாக வணக்கப்படுகிறது. மூத்த பழங்குடி சமூகத்தின்
எச்சமாக மரங்களை தெய்வமாக வழிப்படுகிற வழக்கம் இன்றும் நம்மிடையே எஞ்சி
நிற்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் புனித
சின்னப்பர் குருசடி கிறித்துவாலயம் இருக்கிறது. இங்கே மக்கள் வண்டி கட்டிக்
கொண்டு வந்து கிடாய் வெட்டிப் பொங்கல் வைத்து மொட்டை போட்டு சப்பரம்
தூக்கி கொண்டாடுவார்கள். அதே போல புளியம்பட்டி அந்தோனியார் கோவிலும்
மிகவும் புகழ் பெற்றது. உண்மையில் அது ஒரு பாதிரியார் அடக்கம் செய்யபட்ட
இடமாகும்.
தஞ்சாவூர்
அரசு மருத்துவமனைக்குள் இஸ்மாயில் ஷா
பள்ளிவாசல் இருக்கிறது. திருடர்களிடம் இருந்து ஒரு பெண்ணை காப்பாற்ற உயிரை
நீத்த பக்கீர் ஒருவர் புதைக்கபட்ட இடம் அது. மக்கள் அவரை தெய்வமாக
வழிபாட்டு, அவருக்கு அசைவ சாப்பாடு படைக்கிறார்கள். நாகபட்டினத்தில் உள்ள
நாகூர் ஆண்டவரும் எளிய மக்கள் வழிபாட்டு ஒரு ஆதாரம். மேலே குறிப்பிட்ட
அனைத்தும் நாட்டார் தெய்வ வழிபாடாகவே திகழ்கிறது. எந்த மதமானாலும் எளிய
மக்களுக்கு ஒன்றுதான்" எந்த நாட்டார் தெய்வமும் நாந்தான் இந்த பிரபஞ்சத்தை
படைத்தேன் என்று சொல்வதில்லை. உயர்வு தாழ்வு கற்பிப்பதில்லை. நாட்டார்
தெய்வங்கள்தான் உயர்ந்தது" என்றார்.
நிகழ்வு
முடிந்ததும் எல்லோரும் கோவிலை சுற்றி பார்த்து கலைந்தனர். மரியாதை
நிமித்தமாக ஐயா மம்மது அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பாக பாண்டி
முனிக்கு சாத்திய மாலை எடுத்து அணிவிக்கப்பட்டது.
நாட்டார் தெய்வம் என்பது நம் முன்னோர்களை வணங்கும் முறைதான். மூடநம்பிக்கைகள் எதில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும். என்னை பொருத்தவரை நான் ஆணித்தனமாக அடித்து கூறுவேன் கடவுள் என்பது இல்லை. தற்சார்பு, தன்னம்பிக்கை, தன்மானம் இழக்காத வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.
நன்றி...
ஒளிப்படங்கள் - திரு. குணா அமுதன், திரு. இரா.பிரபாகரன் & திரு. பாடுவாசி
நாட்டார் தெய்வம் என்பது நம் முன்னோர்களை வணங்கும் முறைதான். மூடநம்பிக்கைகள் எதில் இருந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டும். என்னை பொருத்தவரை நான் ஆணித்தனமாக அடித்து கூறுவேன் கடவுள் என்பது இல்லை. தற்சார்பு, தன்னம்பிக்கை, தன்மானம் இழக்காத வாழ்வை அமைத்து கொள்ள வேண்டும்.
நன்றி...
ஒளிப்படங்கள் - திரு. குணா அமுதன், திரு. இரா.பிரபாகரன் & திரு. பாடுவாசி
மதுரையில் மிக முக்கிய வரலாற்றுப் பேராசிரியர் வெங்கட்ராமன் தனது நண்பரான ஜெர்மன் அறிஞருடன் மதுரையின் அடையாளங்களில் ஒன்றான பாண்டி கோவிலுக்குள் 1970 களில் நுழைந்த போது பாண்டி முனியின் உச்சந்தலையில் உள்ள உஷ்னிஷா என்ற கொண்டை போன்ற அடையாளத்தைக் கண்டதும் (Oh My God he is Buddha ) கடவுளே ! அவர் புத்தர் ! எனக் கூறியதைப் பேராசிரியர் வெங்கட்ராமன் பலக் கூட்டங்களில் கூறியதை மதுரையினர் கேட்டதுண்டு. மறைந்த பேராசிரியர் பாண்டி முனியின் மீசை குறித்தும் கூறியுள்ளார் . வழக்கறிஞர் லஜபதிராய், திருப்பரங்குன்றம் - சிக்கந்தர் மலை சர்ச்சை தொடர்பான கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் (07.02.2025)
தமிழ்தாசன்
நாணல் நண்பர்கள் குழு
மதுரை
9543663443
நம்ம வரலாறு நிகழ்வில் கலந்து கொண்டது போன்ற உணர்வைத் தருகிறது உங்களது கட்டுரை. நல்ல நம்பிக்கையோ, மூடநம்பிக்கையோ மனிதனுக்கு நிம்மதி கிடைச்சா சந்தோஷந்தான்.
ReplyDelete