உன் வருகைக்காக

என் வளரிளம்பருவம்
கரையும் வரை
காத்திருக்கிறேன்
உன் தெரு முனையில்
 

நீ கடந்து போகிற
சில நொடிக்காக.....

ஊசி பாசி வாங்க
ஆளில்லாத உன் தெருவில்
குழந்தையை காட்டி
பிச்சையெடுக்கிறாள்
ஒரு குறத்தி...

வீட்டு வேலை முடித்து
இடுப்பில் இருத்தி
தன் குழந்தையை
முத்தமிட்டபடியே
என்னை கடந்து போகிற
வேலைக்காரி மீது
பினாயில் வாடை...

முத்த கடன்
முழுவதையும்
திருப்பி தருகிறது குழந்தை
சிறிதும் முகம் சுழிக்காமல்....

கூடையை கீழ் இறக்கி
மீன்களுக்கு இடையில் கிடந்த
மீனவனின் சதையை
தூக்கியெறிந்துவிட்டு...
எடை போடுகிறாள்
ஒரு மீன்காரி....

சாக்கடை குழியிலிருந்து
எழும்பி மேல் வந்து..
பழைய சோற்றில்
கை நனைக்கிறார்
ஒரு ஐயா..
தொட்டு கொள்ள
பாதாள சாக்கடை வாசனை...

மீசை மழிக்ககூட
மிசின் வந்துவிட்ட
தொழில்நுட்ப யுகத்தில்
"சானை பிடிக்கலையோ சானை"
சந்திடுக்குகளில் சத்தமிடுகிறார்
ஒரு அண்ணன்.

மிதிவண்டியை உருட்டியபடி
"உப்...போய்....."
தொண்டை கிழிய கத்துகிற
உப்புக்காரரின்
உடலெங்கும்
உதிர்ந்தன உப்-பூ.

வெறிச்சோடி கிடந்த
உன் தெருவில்
இங்குமங்குமாய்
அலைகிறது...
ஒரு சிறு பறவை
இளைப்பாற மரங்களை தேடி...

மாடுகளின் வாயிலிருந்து பிடுங்கிய
பிளாஸ்டிக் பையை
சாக்கில் திணிக்கிறார்
குப்பை பொறுக்கும்
முதுகு வளைந்த
முதியவர் ஒருவர்...

பிசா கொணர்ந்த சிறுவன்
ஒரு வீட்டின் கதவை
தட்டுகிற போது...
என்னிடம்
கையேந்துகிறாள்
கிழவி ஒருத்தி
பழக்கூடையை சுமந்தப்படி

கொடுப்பதா..?
மறுப்பதா..?
என் பையில் இருப்பதோ
சித்தாள் வேலை பார்த்து
சிறுக சிறுக சேமித்த
சில்லறை காசு...

நான் சாய்ந்திருந்த
குட்டி சுவற்றில்
ஒரு சுவரொட்டி...
அதில்
குண்டுகள் துளைத்த
மார்பை கொண்ட
ஒரு பாலகனின் உருவப்படம்...

இதையெல்லாம்
எதிர்த்து யார் போற்றாடுவது? என்ற
கேள்வி எழாத வண்ணம்..
என் சிந்தனை முழுவதும்
உன் வருகை மீதே
குவிக்கப்பட்டிருந்தது...



----- தமிழ்தாசன் -----

Comments

Popular posts from this blog

தமிழரின் ஆறும் நீர்நிலைகளும்

தொன்மதுரையின் தொல்குடிகள்:

திருப்பரங்குன்றம் சத்தியகிரி மலையா? சிக்கந்தர் மலையா?