கொட்டாம்பட்டி மலைகள்
புறக்கூடுமலை, பொக்கிசமலை, வெள்ளூத்து மலை, பறையன்மலை, பச்சைநாச்சி மலை, பெரியமலை, மண்டபத்துமலை உள்ளிட்ட பல மலைக்குன்றுகள் மதுரையில் குவாரி பணிகளால் காணாமல் போயிருக்கிறது. கொண்டையம்பட்டி வண்ணாத்திக்கரடு, ராஜாக்கள்பட்டி சங்குச்சுனைமலை, சத்திரவெள்ளாளப்பட்டி பெருமலை என பல மலைகள் நம் கண்முன்னே இன்று வெட்டி அழிக்கப்படுகின்றது. பெருங்கற்கால பாறை ஓவியங்கள், சங்ககால தமிழிக் கல்வெட்டுகள், குடைவரைக் கோயில்கள், மன்னர்களின் கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள், பல சமய வழிபாட்டு தளங்கள் என மதுரையின் வரலாற்று அடையாளங்களை இம்மலைகளும், குன்றுகளும் தான் தாங்கி நிற்கின்றன. இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் மதுரை கம்பூர் அருகே வீரக்குறிச்சி மலையில் 800 ஆண்டுகள் தொன்மையான மூன்று பிற்பாண்டியர்கள் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்புதான் மதுரை புலிமலை மற்றும் கிழவிக்குளம் மலையில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டது. மதுரையில் உள்ள ஒவ்வொரு மலைகளும் குன்றுகளும் இன்னும் நாம் கண்டறியாத பல வரலாற்றை தன்னுள் வைத்துள்ளது. சிற்ப நகரம், கிரானைட் குவாரி, டங்ஸ்டன் சுரங்கத் திட...