அழகர்மலை
அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரைத் திருவிழா பண்பாட்டு மானுடவியல் நோக்கில் மிக முக்கியமான திருவிழாவாகும். அழகர் ஆற்றிலிறங்கிக் காட்சி தரும் சித்திரைத் திருவிழா பல வகைப்பட்ட பண்பாட்டுக் கூறுகளையும் ஒரிடத்தில் காணமுடியும். சித்திரைத் திருவிழாவினைக் காணும் ஒருவன், பலதரப்பட்ட மக்களின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக மண்டைத்தாலி, பொட்டுத்தாலி, சிறுதாலி, காரைக்கயிற்றுத்தாலி, பஞ்சாரத்தாலி, பார்ப்பாரத்தாலி எனப் பல்வேறு வகையான தாலிகளை அணிந்த தென்மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதிய பெண்களை இத்திருவிழாவில் காணலாம். தலையில் பூச்சூடாமல் தாலியில் பூச்சூட்டும் வழக்கமுடையவர்களையும் காணலாம். புடவைக் கட்டிலிருந்து தலை முடியினை அள்ளிச்செருகுவது வரை பல்வேறு வகையான மக்களைக் காணலாம். இவர்கள் அனைவரும் நாட்டுப் புறங்களைச் சேர்ந்த மக்களே. எனவே இத்திருவிழாவினைக் காணுவதால் தமிழ்நாட்டின் தென்பகுதிக் கிராமங்களைச் சுற்றிப்பார்ந்த அனுபவத்தை ஒருவர் பெற இயலும் என பண்பாட்டு ஆய்வாளர் தொ.ப குறிப்பிடுவார். பண்பாட்டுச் சூழலியல் நோக்கிலும் அழகர்மலையை ஆய்வு செய்ய வேண்டும்....