பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள்
பால்குடி கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியம், கச்சிராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பால்குடி என்னும் கிராமத்தில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் ஆவணம் செய்யப்பட்டது. அருவிமலை அடிவாரத்தில் அமைந்துள்ள பால்குடி கிராமம் பல வரலாற்று சிறப்புகளை கொண்டது. அருவிமலையின் உச்சியில் கிபி 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரபாண்டியர் கால சிவன் கோயில் காணப்படுகிறது. இக்கோயிலின் அதிட்டான பகுதி, இக்கோயில் அருகேயுள்ள பாறை, கோயில் செல்லும் மலைப்பாதையில் உள்ள படிக்கட்டு, போன்றவற்றில் தமிழ்க் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கல்வெட்டு விவரங்களை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை 2005 ஆம் ஆண்டு வெளியிட்ட மதுரை மாவட்டக் கல்வெட்டு தொகுதி (முதல் தொகுதி) நூலில் வெளிவந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து இக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவனுக்குத் 'திருமேலழகிய பாண்டிய நாயனார், 'திருமேலாழி நாயனார்', 'திருமேலாழி அண்டார்', 'திருமேலாழியாண்ட நாயனார்' என்று பெயர்கள் வழங்கி வந்திருப்பதையும், ஊர்ப்பகுதிக்குப்...